Monday, September 3, 2012

எலி வளை எலிகளுக்கே!


எலி வளை எலிகளுக்கே!
இந்த முழக்கம் மூத்த பெரியார் பெருந் தோண்டர்களுக்கு நினைவில இருக்கலாம், தமிழ்நாடு தமிழருக்கே! என்று தந்தை பெரியார் குரல் கொடுத்த போதுதான் இந்தக் குரலை ஆனந்த விகடன் கொடுத்தது.
ஆமாம்! எலி வளை எலிகளுக்குத்தான் இருக்க வேண்டும்; அது கண்டிப்பாக பாம்பு வளைகளாக ஆகக் கூடாது என்று திருப்பி அடி கொடுத்தது சுயமரியாதை இயக்கம்.
ஆரியம் கொடுக்கும் அடிகளுக்கெல்லாம் வட்டியும் முதலுமாகச் சேர்ந்து கொடுக்கும் வீரனாக இருப்பது திராவிடர் இயக்கமே!
கறுப்புக்கு மறுப்பு என்று எழுதப்பட்ட நேரத்தில் மறுப்புக்குச் செருப்பு என்று அடி கொடுத்ததும் திராவிடர் இயக்க வீரர்கள்தாம்.
1948 இல் சென்னையில் இரசிக ரஞ்சனி சபாவில் கே.எஸ்.இராமசாமி சாஸ்திரி தலைமையில் முற்போக்குப் பார்ப்பனர்கள் மாநாடு நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில் தர்ப்பை ஏந்திய கையால் வாளும் ஏந்துவோம் என்று பார்ப்பனர்கள் முழக்கமிட்ட நேரத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஒரு கவிதையை எழுதினார்.
பார்ப்பனர் இதுவரை வாளினைத் தொட்டறியாத சோதா மக்களா? என்று அடிமடியில் கை வைத்து உலுக்கினார்.
அந்தக் கவிதையில் இன்னொரு இடம் -ஈர்ப்புத் தன்மை கொண்டது.
மாநாட்டுக் கன்வீனர் மணி எனும் ஓர் ஆள்
அவசியம் நேர்ந்தால் அரேபியாவில் யூதர்கள் அரசினர் மீது தொடங்கிய
வேலையை திராவிடர் மீது தொடங்குவோம் என்று கூறினாராம்! நன்று! நன்று!!
குருதி வெறிகொண்டு திரியும் நாய்களை அடித்துப் போடும்  அலுவலைத்
திராவிடர் எடுத்துக் கொள்ளக்கூடும்
தடுத்துக் கொள்ள முடியுமா பிறர்க்கே?
எனப் பாடினார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் (குயில்: 13-.5-.1948)
இப்படி எத்தனை எத்தனையோ உண்டு,
ஏன் இவையெல்லாம்? விவரம் இல்லாமலா? நேற்று ஒரு செய்தி ஏடுகளில (31-8-2012)
சென்னையில் உள்ள புகழ்பெற்ற கஸ்தூரிபா மகப்பேறு மருத்துவமனை யில் எலி கடித்து பிறந்த குழந்தை இறந்த சேதி இரக்கம் உள்ளோரைக் கிறங்கச் செய்தது.
உயர்நீதிமன்றமும் உஷ்ணமாக வார்த்தைகளைக் கொட்டியது. அதன் விளைவு எலி வேட்டையைத் தொடங்கிய சென்னை மாநகராட்சி நிர்வாகம் அனைத்து மருத்துவமனை களிலும் எலி வேட்டையை ஓகோ என்று நடத்தியது . அதன் விளைவாக 7031 எலி வளைகள் கண்டுபிடிக்கப்பட்டன. 240 குழுக்கள் இதற்கான வேலையில் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கின!
வளைகளில் எலிக் கொல்லி மருந்து வைக்கப் பட்டதில் 587எலிகள் செத்துக் கிடந்தனவாம்!
பட்டபின்தான் துயரம் என்ற அவசர கதியில் எலி வேட்டை யாடியது வரவேற்கத் தக்கதுதான்.
ஆனால் இந்த நேரத்தில் ஸ்ரீமான் பாலகங்காதர திலகர் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கொஞ் சம் கற்பனை செய்து பார்க்கும்போது சில பல தகவல்கள் நம்மை நோக்கிச் சிரிப்பை உமிழுகின்றன.
அந்தச் சுவையான துண்டங்களை நமது தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் நூலான காங்கிரஸ் வரலாறு - மறைக் கப்படும் உண்மைகளும் கறைபடிந்த அத்தியா யங்களும் எனும் நூலில் சிறப்பாகக் காணமுடியும்; அந்தத் தகவல்கள் ஆசிரியரின் கற்பனையல்ல; மூல ஆதாரங்களுடன் அதனை விளக்கியுள்ளார்.
தக்காணத்தில் யானைத் தலையை உடைய இக் கடவுள் (விநாயகன்) பிரபலமானதாகப் புனிதத்தன்மை பெற்றிருந்தது. அதோடு, மொகலாய ஆதிக்கத்தோடு போரிட்டு மேற்கு வாயிலில் ஒரு அரசை உண்டாக்கிய மராட்டியர்களின் தலைமை வீரனான சிவாஜியின் வழிபாட்டு மரபுடைய தாகவும் இது இருந்தது. இதில், முன்னதன் வழியாக திலகர், மிகவும் மத அடிப்படையிலான ஒரு விழாவில் சமுதாய, அரசியல் உட்பொருளை உள் நுழைக்க விரும்பினார்.
இது முழுக்க முழுக்க் சாதாரண மான ஒரு பண்டிகை. ஆனால், அந்தச் சாதாரண மதப் பண்டிகையை திலகர், இதுதான் நமக்குச் சமுதாய விழா, தேசிய விழா, இதை மிகவும் பெரிய அளவில் கொண்டாட வேண்டும் என்று தூக்கிப் பிடித்து, இந்துக்களின் மத உணர்ச்சிக்குத் தீனி போட்டார்.
திலகர் முயற்சியால் ’Ganesh Festival’’ (பிள்ளையார் விழா) என்பது ரொம்பவும் தீவிரமாகி, இந்த விழா பெரிய அளவில் நடக்க ஆரம்பித்தது. இப்படிப் பெரிய அளவில் விழா நடத்தும்போது, காலரா, பிளேக் போன்ற நோய்கள் வருவது அந்தக் காலத்தில் மிகவும் சர்வ சாதாரணம். இப்போதுதான் சுகாதார அறிவு வளர்ந்து மருத்துவ வசதிகள் பெருகியிருப்பதால் காலரா, பிளேக் எல்லாம் தடுக்கப்பட்டிருக்கின்றன.
அதுமாதிரி, ஒரு முறை மகாராஷ்டிரத்தில் புனா பக்கத்தில் தீவிரமாகப் பிளேக் நோய் வந்துவிட்டது. பிளேக் என்பது என்ன என்று உங்களுக்குத் தெரியும். எலி செத்து விழுந்து, அந்த செத்த எலிகள் மூலம் இந்த பிளேக் நோய் பரவும், எலிகளைக் கொன்றால்தான் இந்தப் பிளேக் நோயைத் தடுக்க முடியும்.
அந்தக் காலத்தில் வெள்ளைக் காரன் மக்களெல்லாம் பிளேக் நோயில் சாகக் கூடாது என்பதற்காக எலிகளைக் கொல்லும் இயக்கத்தைத் தீவிரப்படுத்தினான்.
உடனே, திலகர், நம்முடைய மதத்தை அழிப்பதற்காக வெள்ளைக் காரன் திட்டமிட்டு இறங்கி விட்டான் என்று எலி ஒழிப்பை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார்.
முட்டாள்தனமாக அவர் சொல்லவில்லை; அயோக்கியத் தனமாகச் சொன்னார். அதுதான் மிகவும் முக்கியமானது.
பிள்ளையாருடைய வாகனம் எலி. அந்தப் பிள்ளையாருடைய வாக னத்தை அழிக்க வேண்டுமென்று வெள்ளைக்காரன் சொன்னான் என்றால் _ நம் கலாச்சாரத்தில், இந்து மதத்தில் கை வைத்துவிட்டான் என்று அர்த்தம்; ஆகவே விடக்கூடாது என்று பிரச்சாரம் பண்ணினார். பிளேக் நோய் பரவுவதைப் பற்றி கவலைப்படவில்லை அவர்.
இதனுடைய விளைவு எப்படி இருந்தது துர்காதாஸ் கூறுகிறார்.
‘’Official anti-Plague Measures in Poona to be considered an outrage on the religious Susceptibilities of
Indians. So L. ciolent indeed was his antipathy of his that he even suffered eighteen months imprisonment to allegedly inciting the murder of two englishmen engaged in combating an outbreak of Plague in Poona District.’’
இதன் தமிழாக்கம்:
புனேயில் பிளேக்கை ஒழிக்கும் அதிகார பூர்வமான நடவடிக்கை களைக்கூட இந்தியர்களுடைய மத இயல்புணர்ச்சியின் மீதான ஒரு சீற்றம் என்று திலகர் கருதினார். ஆகவே வன்முறைக்கு இவருடைய இந்த இயல்பான வெறுப்புணர்ச்சியே உண்மைக் காரணமாகும். இதற்காக, புனே மாவட்டத்தில் திடீரென்று ஏற்பட்ட பிளக் நோயை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு வெள்ளையர்களை கொலைக்கு உள்ளாகும்படி செய்ததாகக் குற்றம்  சாட்டப்பட்டு, பதினெட்டு மாத சிறைத் தண்டனையைக்கூட அனுபவித்தார்.
(காங்கிரஸ் வரலாறு மறைக்கப்படும் உண்மைகளும் கறைபடிந்த அத்தியா யங்களும் -கி.வீரமணி)
வீட்டுக்குள் கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தியை வீதிக்குக் கொண்டு வந்து, இந்து மதவெறி என்னும் நெருப்பு இறக்கையைப் பூட்டி, இந்துத்துவா அடிப்படை வாதத்துக்கு அடிக்கல் நாட்டிய இந்தத் திலகரைப் பற்றி அ.இ.அ.தி.மு.க.வின் அதிகார பூர்வ ஏடான நமது டாக்டர் எம்.ஜி.ஆர். ஏடு சாங்கோ பாங்கமாக பூச்சூட்டி எழுது கிறது.
சந்திரமோகன் அல்லது சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் என்ற நாடகம் அறிஞர் அண்ணா அவர்களால் தீட்டப்பட்ட, புகழ் பெற்ற நாடகமாகும். அந்த நாடகத்தில் காகப் பட்டராக அறிஞர் அண்ணாவே தத்ரூபமாக நடித்தவர்கூட! அந்த நாடகத்தில் சிவாஜி வேடம் தாங்கி நாடக மேடையையே கிடுகிடுக்க வைத்து நடித்தவர்தான் வி.சி. கணேசன்.
சென்னையில் தந்தை பெரியார் தலைமையில் இந்த நாடகம் நடைபெற்றபோதுதான் (15.12.1945) சிவாஜி கணேசன் எனும் நிலைத்த பட்டத்தை தந்தை பெரியார் வழங்கி, கலையுலகில் சிவாஜி கணேசன் என்னும் மங்காச் சுடரொளியாகப் புகழ் பெறும் நிலை ஏற்பட்டது.
சிவாஜி மகாவீரன் சூரன் ஆயினும் வருணசிரமவாதிகளின் வலையில் எப்படி வீழ்கிறான்? வாள் ஏந்தும் கை தர்ப்பைப் புல்லிடம் எப்படி மண்டி யிட்டது? என்ற வரலாற்றைத் தழுவி எழுதப்பட்டதுதான். அண்ணாவின் அந்த நாடகம்.
இந்த அடிப்படை வாசனை சிறிதுமின்றி அண்ணா பெயரை வைத்துள்ள கட்சியின் அதிகார பூர்வ ஏட்டிலும் அதனைத் தலை குப்புறக் கவிழ்க்கும் வகையில் இந்துத்துவ வாதியான திலகருக்கு லாலி பாடுகிறது என்றால் இதன் பொருள் என்ன?
ஆர்.எஸ்.எஸ்.சின் அடிநாதமான ஒருவரை புகழ்வதன் மூலம் திராவிடர் இயக்கத்தின் அடிப்படையை தனக்குத்தானே தாழ்த்திக் கொண்டு விட்டது அ.இ.அ.தி.மு.க. என்பது வெளிப்படை!
இதன் மூலம் அ.இ.அ.தி.மு.க.வின் திராவிட முகமூடி கழன்று விட்டது (அ.இ.அ.தி.மு.க. ஏட்டில் வெளிவந்த கட்டுரை தனிப்பெட்டி செய்தி - காண்க.)
(அ.இ.அ.தி.மு.க. ஏட்டில் வெளிவந்த கட்டுரை தனிப்பெட்டி செய்தி - காண்க.)
சிவாஜி முஸ்லிம் அரசர்களை வென்றான் என்பதை மட்டும் மய்யப்படுத்தி அவனை முஸ்லிம் எதிர்ப்பாளனாக மெருகு கொடுத்து, அவன் பெயரில் சிவ(ஜி) சேனை எனும் அமைப்பை பால்தாக்கரே நடத்துகிறார்.
இதன் பின்னணியில் இவ்வளவு வரலாற்றுத் தகவல்களும், உண்மை களும் குத்திட்டு நிற்க நமது எம்.ஜி.ஆர். ஏடு திலகரைப் புகழ்வதின் நோக்கத்தை சிறுபான்மையினரான முஸ்லிம் மக்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும். அன்று திலகர் தூவிய மதவாத நச்சு விதை காலங் கடந்தும் நச்சு மரமாக வளர்ந்தது.
பிளிட்ஸ் ஏட்டில் வெளிவந்த வேறு ஒரு தகவல் இதோ:
எலி ஒழிப்பில் மதம்!
கேள்வி: சேமிப்பு உணவு தானியங்களை எலிகள் பாழடித்து வருகின்றன. சிலர் பட்டினியால் சாகக் கூடிய நிலை இருந்தும், பம்பாய் தானாபந்தர் பகுதியில் பெரும் வியாபாரிகள், அந்த நகரசபையின் எலி ஒழிப்புத் திட்டத்திற்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பிரதமர்: பம்பாயிலா அப்படி நடக்கிறது?
கேள்வியாளர்: ஆம். பம்பாயில் தான்!
பிரதமர்: எனக்குத் தெரியாது. அதுபற்றி நான் கவனிக்கிறேன். அவர்கள் ஏன் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்?
கேள்வியாளர்: மத உணர்ச்சி அடிப்படையில் எதிர்க்கிறார்கள்.
பிரதமர்: எலி ஒழிப்பிலுமா மத உணர்ச்சி!
கேள்வியாளர்: ஆமாம். எலி ஒழிப்பில்தான் மத உணர்ச்சி. இது அங்கு நிறைய இருக்கிறது. இதை நீங்கள் நன்றாக கவனிக்க வேண்டும்.
பிரதமர்: இது மிகவும் வருத்தத் திற்குரியது. நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. இவர்கள் இப்படி எல்லாம் எதிர்ப்பு தெரிவிப் பதனால் தான் அந்தப் பிரச்சினை களை வெல்ல முடியவில்லை.
பிளிட்ஸ் ஏட்டுக்கு பிரதமர் அளித்த பேட்டி
(26.2.1977ஆம் தேதி இதழிலிருந்து)
இந்த விவரங்களை எல்லாம் தமிழ்நாடு முதல் அமைச்சருக்குத் தெரிந்திருந்தால் எலி வேட்டையைத் தடுத்திருப்பார் என்று நம்பலாம்.
கூடுதலாகத் தகவல்: எலி வேட்டையாடி 587 எலிகளை வேட் டையாடியுள்ளார்கள். விநாயக பகவான் என்ன ஆனான்?
யார் கனவிலாவது வரவில்லையா? மிரட்டவில்லையா? பரிதாபம்! அவர் என்ன செய்வார்? பிடித்து வைக்க ப்பட்ட கொழுக்கட்டையாயிற்றே!
- மின்சாரம்


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
<< முன்புஅடுத்து >>


செப்டம்பர் 01-15-2012

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...