கேள்வி: தீண்டாமையை அறவே ஒழிக்கும் கிராமங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளாரே!
பதில்: பரிசுத் தொகை உயர்த்தப்படுவதால் கிராமங்களில் தீண்டாமை அறவே ஒழியாது. கிராம அளவில் மக்கள் மனங்களில் மாற்றத்தைக் கொண்டு வரும் வகையில் பொதுவசதிகள் மேம் படுத்தப்பட வேண்டும். தீண்டாமை ஒழிப்புப் பிரச் சாரம் முடுக்கி விடப்பட வேண்டும். கல்வியும் வாழ்க்கைத் தர உயர்வும்தான் தீண்டாமையை ஒழிக்கும்.
(கல்கி 16.9.2012)
நல்ல அறிவுரைதான், அதே நேரத்தில் இந்த வகையில் கல்கியோ, அவர்களின் வட்டாரமோ, அவர்கள் ஏற்றிப் போற்றும் காமகோடி பீடாதிபதி களோ எந்த ஒரு துரும்பைக் கிள்ளிப் போட்டுள் ளனர் என்று தெரிவிக்க முடியுமா?
தீண்டாமை என்பது தனியாக நிற்கிறதா? அது ஜாதியின் கொடிய விளைவு தானே! அந்த ஜாதியின் சின்னமான பூணூலை ஆண்டுதோறும் புதுப்பிக்கும் விழாதானே பார்ப்பனர்கள் நடத்தி வரும் ஆவணி அவிட்டம்?
முதலில் பூணூலை நாங்கள் தரிக்கப் போவதில்லை என்று ஒரே ஒரு வார்த்தையைக் கல்கியில் எழுதச் சொல்லுங்கள் பார்ப்போம்.
தீண்டாமை க்ஷேமகரமானது என்று சொன்ன வர்தானே மறைந்த காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி?
பாலக்கோட்டில் முகாமிட்டிருந்தாரே அந்தச் சங்கராச்சாரியார் - அவரை அங்கு சென்று சந்தித்தவர் சாதாரணமானவரல்லர். மகாத்மா காந்திதான்; தீண்டாமை ஒழிப்பில் பெரிய வாளின் ஆதரவு தேவை என்று எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தாரே! இறங்கி வந்தாரா?
மாறாக என்ன சொன்னார்? ஆலயப் பிரவேச விஷயத்தில் சாஸ்திரங் களையும், பழைய வழக்கங்களையும் நம்பி இருப்ப வர்கள் நாட்டில் பெரும்பாலோர் இருக்கிறார் களென்றும், அவர்களுடைய மனம் நோகும்படி செய்யும் எந்த மாறுதலும் இம்சைக்கு ஒப்பாகு மென்றே நாம் முடிவுக்கு வர வேண்டியிருக்கிற தென்றும் ஸ்வாமிகள் காந்தியடிகளிடம் தெரிவித் தார். (நாள்: 15.10.1927 நூல் தமிழ்நாட்டில் காந்தி பக்கம் 575-576).
இந்த மனிதநேயமற்ற, மனித உரிமையைக் காலில் போட்டு மிதிக்கிற - மனிதனை மனிதன் வெறுக்கின்ற காஞ்சி சங்கராச்சாரியாரின் கூற்றை எதிர்த்து ஒரு வரி எழுதுமா இந்தக் கல்கிக் கூட்டம்?
சங்கராச்சாரியாரின் கவலை எது பற்றியது? சாஸ்திர சம்பிரதாயங்களை மதிக்கின்ற, நம்புகின்றவர்களைப் பற்றித்தான்; இந்த சாஸ்திர சம்பிரதாயங்களின் காரணமாக தீண்டத்தகாதவர் கள் என்று ஒதுக்கப்படுகின்ற கோடானு கோடி மக்களின் மனம் புண்படுவதுபற்றி - பதைப்பது பற்றி கவலை துளியும் இல்லை.
இப்பொழுதுகூட அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்று சொன்னால் ஆகமங் களைக் காட்டி சாத்திர சம்பிரதாயங்களைக் காட்டி, அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லுபவர் களும் பார்ப்பனர்கள் தானே? அதனைக் குறை கூறி ஒரே ஒரு வரி எழுதட்டுமே கல்கி - சவால்விட்டே கேட்கிறோம்.
இப்படி தீண்டாமையை கடவுள், மதம், பக்தி, சாஸ்திரங்களோடு பாதுகாப்பாக சம்பந்தப்படுத்தி முடிச்சுப் போட்டு வைத்துக் கொண்டு சந்தர்ப்ப வாதமாக தீண்டாமை கூடாது என்பது பசப்புவது அசல் பித்தலாட்டம் அல்லவா!
சங்கரமடத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவர் சங்கராச் சாரியாராக வரும் நாளே உண்மையான சுதந்திரம் வந்ததற்கு அடையாளம் என்று காகாகலேல்கர் சொன்னதை ஏற்றுக் கொள்வார்களா?
மாம்பலம், மயிலாப்பூர் பகுதிகளில் பார்ப்பனர் களுக்கு மட்டுமே வீடு வாடகைக்கு விடப்படும் எனும் நிலை இன்றுவரை தொடர்கிறதே!
தீண்டத்தகாதவர்கள் என்று கூறப்படும் மக்கள் வெள்ளமெனப் பொங்கி எழுந்து தீண்டாமையை நம்பும் - கடைப்பிடிக்கும் சக்திகளை மூழ்கடிக்கும் காலம் வராமலா போகப் போகிறது!
எச்சரிக்கை! எச்சரிக்கை!!
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment