Saturday, August 11, 2012

ஆசிரியர் அய்ம்பது!


ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு வயது 80. இதில் 50 ஆண்டு என்பது விடுதலை ஆசிரியர் பணி.
தமிழ்நாட்டின் அனைத்து வகை விடுதலைக்கும் விவேகப்போர் புரியும் ஓர் ஏட்டுக்கு அரை நூற்றாண்டு காலம் ஆசிரியர் என்பது  ஆச்சரியந்தான்! அதிசயந் தான்! அரிய சாதனைதான்!
ஒவ்வொரு நாள் விடுதலையும் ஒரு போரின் அணி வகுப்புதான் - தளைகளை - களைகளை - தடைகளைத் தகர்க்கும் போர்ப் பணிதான்.
இந்தப் பணியால் பலன் பெற்றோரிடமிருந்து வரும் நன்றிக்கும் முந்திக்கொண்டு நம் மீது எதிரிகள் அசிங்கங்களையும், ஆபாசங்களையும் ஆத்திரத்தோடு அள்ளி வீசிட முந்திக் கொண்டு நிற்பார்கள். நமது எதிரிகள் அவ்வளவு அகங்காரக்காரர்கள் - ஆணவ நரிகள்!
நன்றியை எதிர்பாராத் தொண்டுதான் - நமது அறிவு ஆசான் நமக்குச் சொல்லிக் கொடுத்த, உயிர் எழுத்துக்களும், மெய் எழுத்துக்களும்.
எத்தனை எத்தனை போராட்டங்கள் - எத்தனை எத்தனைத் தடைகள்! அரசு அதிகாரங்களின் ஆணவ நடவடிக்கைகள் - ஜாமீன் தொகைக் கேட்புகள்!
வெள்ளித் தோட்டாக்களை அள்ளித் தாரீர் என்று விடுதலை ஏடு அறிக்கை வெளியிட்டால் வந்து குவிந்து விடும்! போதும் நிறுத்துக! தேவையான நிதி வந்து சேர்ந்து விட்டது என்று விடுதலையைப் போல அறிக்கை வெளியிட்ட ஏட்டைக் காட்டமுடியுமா?
ஜாதி ஒழிப்பு
மூடநம்பிக்கை ஒழிப்பு
பெண்ணடிமை ஒழிப்பு
இந்தி எதிர்ப்பு
ஆரிய ஆதிக்க எதிர்ப்பு
வடவர் ஆதிக்க எதிர்ப்பு
சுரண்டல் ஒழிப்பு
என்ற அழிப்பு, ஒழிப்புப் பணிகள் மூலம் இந்நாட்டு மக்களுக்கு ஆக்கப் பணி புரிந்த ஆசான் அல்லவா விடுதலை.
சமூக நீதிக் களத்திலே அதன் தோள்கள் எப்படி எல்லாம் விளையாடின? ஒடுக்கப்பட்ட மக்களை ஒரு குடையின் கீழ் அணி செய்ய அப்பப்பா விடுதலை பட்ட பாடு கொஞ்ச நஞ்சமா?
விடுதலையின் தாக்கம் இல்லாத ஒரே ஒரு வெற்றி உண்டா? ஒரே ஒரு உரிமை மீட்பு உண்டா? 69 விழுக் காடு இட ஒதுக்கீடு என்னும் பரந்துபட்ட பாதுகாப்பு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசமைப்புச் சட்ட ரீதியாக இன்று நமக்குக் கிடைத்தது என்றால் அதில் விடுதலை யின் வீறுமிக்க பங்குப் பாகம் அசாதாரணமானதாயிற்றே!
ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கு ஈட்டி முனையாகப் பாடுபட்டதை மறுக்கமுடியுமா?
ஆட்சிகளின் அரவணைப்புகள் பெரும்பாலும் இல்லை. விளம்பர ஒத்தடங்கள் எளிதில் கிடைக்காது.
சினிமாவையும், ராசி பலன்களையும் வைத்து வயிறு வளர்க்கும் மக்கள் சந்தையில் இவற்றைத் தூ என்று தூர வீசியெறிந்துவிட்டு பளபளக்கும் பகுத்தறிவுப் போர் வாளை அல்லவாவிடுதலை சுழற்றுகிறது?
தமிழன் வீடு என்பதற்கு அடையாளம் விடுதலை என்று காவியுடை அடிகளார் கறுப்பு உடை விடுதலைக்கு ஒரு முகப்படாம் தந்தார்.
தமிழர்கள் முற்றும் இதனை உணர்ந்துவிட்டனர் என்று சொல்ல முடியாது. என்றாலும் நமது ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் விடுதலை ஆசிரியர் பொறுப்பேற்று 50 ஆண்டுகள் நிறைவுபெறுகிறது என்பதைக் காரணப்படுத்தி 50 ஆயிரம் சந்தாக்கள் என்னும் வெற்றியை ஈட்டி கட்சி ஏடுகள் நடத்தும் பலரையும் வியக்க வைத்தோம்.
அந்தப் பணியைத் தொடர்ந்து கொண்டே இருக் கிறோம். இது நாம் ஏற்றுக் கொண்ட வாழ்நாள் பணி!!
இதே நாளில் (10-8-1962) வரவேற்கிறேன் என்று தலைப்பிட்டு நமது ஆசான் அய்யா அவர்கள் நமது கடலூர் மானமிகு கி.வீரமணி அவர்களை விடுதலை ஆசிரியர் என்ற ஆசனத்தில் இரு தோள்களையும் அழுத்தி அமர வைத்தார்கள்! அடடே! இந்தப் பெருமையைப் பெற்ற ஒரே தலைவர் நமது ஆசிரியர் அன்றோ! அதனால்தான் தமிழ் நாட்டில் ஆசிரியர் என்றால் அது விடுதலை ஆசிரியரை மட்டுமே குறிக்கும்.
விடுதலையின் வடிவை வனப்பாக்கி, காலத்தின் மாறுபாட்டைக் கணக்கில் கொண்டு, அறிவியல் வளர்ச்சிகளை இதன்பால் ஏற்றி, நான்கு பக்கங்களை எட்டு பக்கங்களாக்கி, திருச்சிராப்பள்ளியில் இன்னொரு பதிப்பை ஏற்படுத்தி, இன்றையதினம் வணிக ஏடுகளை மிஞ்சும் ஏற்றத்துடன், ஏறு நடைபோட வைத்த அத்தனை பெருமையும், சாதனையும் நமது ஆசிரியர் பெருந்தகை மானமிகு கி.வீரமணி அவர்களையே சாரும்!
திராவிடர் இயக்க நூற்றாண்டில் திராவிடர் இயக்க ஏட்டில் அரை நூற்றாண்டு ஆசிரியர் பணி என்பது இவருக்கு மட்டுமே உள்ள தனிச் சிறப்பு.
எல்லைகளைக் கடந்த தமிழர்களும், பகுத்தறி வாளர்களும், மனித நேயர்களும் எத்தனை நன்றிகளைக் குவித்தாலும் விடுதலைக் குழுமம்  தனது சிறப்பு மிக்க நன்றியையும், வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் ஆசிரியர் அவர்களுக்குக் குவிக்கிறது!
வாழ்க விடுதலை ஆசிரியர்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...