Saturday, August 11, 2012

விடுதலை ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்வியல் சிந்தனைகள் - ஒரு பார்வை


வாழ்வு வளம்பெற வழிகாட்டும் வாழ்வியல் சிந்தனைகள்
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் விடுதலை நாளிதழில் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.
முதல் பாகம் ஈகையால் வரும் புகழையும், பகிர்ந்துண்ணுவதால் பெறும் பயன்களையும், கோபத்தால் விளையும் பேராபத்தையும், அன்றாடச் சிக்கல்களைத் தீர்க்கும் வழிவகைகளையும், மருந்துகளால் வரும் தீங்கு களையும், அறிவியல் சிந்தனைகளால் நிகழும் அதிசயங் களையும் கூறிடும் அரிய களஞ்சியமாகும்.
இரண்டாம் பாகம் முதிர்ச்சியின் இலக்கணத்தையும், புகைப்பழக்கத்தால் வரும் கேடுகளையும், குழந்தை வளர்ப்பு முறைகளையும், கூடி வாழும் கோட்பாடுகளையும், சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்திகளையும், மருந்துக்கு மாற்றான மாமருந்தையும், நயத்தக்க நாகரிகத்தையும், பொல்லாத நோய்பற்றிச் சொல்லாத உண்மைகளையும் கொண்ட அரிய களஞ்சியமாகும்.
மூன்றாம் பாகம் அறிவியல் கொடையையும், மரங்களால் மலர்ந்த மனிதத்தையும், சீனத்துப் பெரியாரின் சீலங் களையும், அன்பெனும் பிடியுள் அகப்படும் மாமலையையும், பிணமேடையாகும் மணமேடையைத் தவிர்க்கச் சில யோசனைகளையும், மனத்தின் செயல்தான் எல்லாமென்ப தையும் உணர்த்திடும் உயரிய நூல்.
நான்காம் பாகத்தில் அறியாமையைப் போக்கும் முறைகளும், மன அழுத்தத்திற்கான மாற்றுப் பாதையும், சிரிப்பால் வரும் பயன்களும், மருத்துவப் பரிசோதனையின் அவசியமும், முதுமை உணர்த்தும் எச்சரிக்கைகளும், பண்பால் மலரும் பாசங்களும், அறிவார்ந்தவர்களின் அடக்கங்களும், உள்ளத்தை உருக்கும் நோயை மாய்க்கும் முறைகளும் கூறப்பட்டுள்ளன.
அய்ந்தாம் பாகம் உயர்ந்த மனிதராக உன்னத வழிகளையும், சோதிடத்தை வெல்லும் மனோதிடத்தையும், தற்கொலைச் சிந்தனையைத் தவிர்க்கும் முறைகளையும், சில நேரங்களில் சில மனிதர்களையும் பற்றி எடுத்துரைக்கிறது.
ஆறாம் பாகம் தொலைக்காட்சியின் தொல்லைகளைத் தவிர்க்கச் சில யோசனைகளையும், ஆசிரியர் - மாணவர்களின் உறவுப் பாலத்தையும், வளர் இளம் பருவத்தில் எழும் சிக்கல்களுக்குத் தீர்வுகளையும், இதயம் காக்கும் முறைகளையும், நாளும் சிந்திக்க நல்ல வழிகளையும், நல்வாழ்வுக்கு உரியவைகளையும்  கூறுகிறது.
ஏழாம் பாகத்தில் நடைப்பயிற்சியின் லாபங்களைப் பற்றியும், காலை உணவே நமது காவலனாக உள்ளதை விளக்கியும், தூக்கம் என்பது எவ்வாறு மருந்தாக விளங்கு கிறது என்பதையும் விளக்குகிறது. மற்றும், அண்ணா அவர்களைப்பற்றி அரிய தகவல்களைக் கொண்டுள்ள சில நூல்களைப் பற்றியும், கிரேக்கத் தத்துவ ஞானியான சாக்ரட்டீஸ் அவர்களைப் பற்றிய தகவல்களும் குறிப்பிடப் பட்டுள்ளன. மேற்கண்ட ஏழு தொகுதிகளும் ஏராளமான பதிப்புகள் வெளிவந்து சாதனை படைத்து வருகின்றன.
தொடர்ந்து ஆதரவளிக்கும் வாசக பெருமக்களுக்குப் பதிப்பகத்தாரின் நன்றிகள்! தற்போது, ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுதலையின் ஆசிரியர் பொறுப்பேற்று 50 ஆண்டு நிறைவு பெறும் (10.08.2012) மகிழ்வான நிலையில், அவரது 80 வயதினைக் (02.12.2012) குறிக்கும் வகையில், அவரால் விடுதலையில் எழுதப்பட்ட வாழ்வியல் சிந்தனைகளின் எண்பது கட்டுரை களைத் தொகுத்து எட்டாம் பாகமாக வெளிவந்துள்ளது.
இத்தொகுதியில் மாரடைப்பு வருமுன் காக்க எளிய வழியைப்பற்றியும், உண்டபின் வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் பலன் பற்றியும், ஓய்வறியா உழைப்பாளியாய் நம் உடலில் இயங்கும் இதயத்தைக் காக்கும் வழிகளைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன. மற்றும், சிங்கப்பூர் புத்தக விழா உள்ளிட்ட தகவல்களும், கன்பூசியஸ், அலெக்சாண்டர், அரிஸ்டாட்டில், எழுத்தாளர் சின்னக்குத்தூசி ஆகியோர் பற்றிய அரிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன.
அறிஞர்கள் பார்வையில் வாழ்வியல் சிந்தனைகள்
நல்ல படைப்பு.
உங்களுக்கு என் வாழ்த்துகள்.
- டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்
மேதகு இந்திய குடியரசுத் தலைவர் (புதுடில்லி- 21.4.2004)
தமிழர் தலைவரால் உருவாக்கப்பட்ட இந் நூல், சமூகப் பார்வையோடு, சாதாரண பள்ளி மாணவர் படித்தாலும் புரிந்து கொண்டு செயல்படும் வகையில் எழுதப்பட்ட சிறப்பான நூல் இது. இங்குள்ள தமிழர்கள் அனைவரும் தங்கள் இல்லத்தில் இந்த நூலின் பிரதிகளைப் பெற்றுப் பயனடைய வேண்டும்.
- நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன்
உச்ச நீதிமன்ற நீதிபதி, (புதுடில்லி - 8.4.2004)
ஆசிரியர் வீரமணி அவர்களால் எழுதப்பட்ட இந் நூல், ஞானப் பெட்டகம் - அறிவுக் களஞ்சியமாகும். இந் நூலைப் படித்ததில் மன நிறைவைப் பெற்றேன். துன்பமயமான வாழ்வை இன்பமயமானதாக மாற்றி  அமைப்பது எப்படி என்பதுதான் இந்த நூலின் அடி நாதமாகும். பள்ளம் இருக்கிறதா பயப்படாதே! அதனைப் பதுங்கு குழியாக மாற்று என்கிறார் ஆசிரியர் வீரமணி அவர்கள். உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் அவரவர் மொழியிலே படிக்க வேண்டிய நூல் வாழ்வியல் சிந்தனைகளாகும்.
- குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளார்
(திருச்சி - 28.3.2004)
வாழ்வியல் சிந்தனைகள்  நல்லதொரு வெளியீடாக வந்துள்ளது. தந்தை பெரியார் எந்த மனித நேயத்தை விரும்பினாரோ, அதை நூல்கள் வாயிலாக, பிரச்சாரத்தின் வாயிலாக நம் ஆசிரியர் வீரமணி பரப்பிக் கொண்டிருக்கிறார். இந் நூல் சிந்தனை மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையாக உருவாக்கப்பட்டிருக்கின்றது.
- இரா. செழியன் (சென்னை-5.3.2004)
வாழ்வியல் சிந்தனைகள் நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் பலவற்றை நாங்கள் விடுதலையில் முன்பே படித்தவை எனினும் மீண்டும் படிப்பது பயனுள்ளதாகவே அமையும். பல அலுவல்களுக்கு இடையே இப்படிப்பட்ட பங்களிப்புக்கும் நேரம் ஒதுக்க முடிந்தது பாராட்டத்தக்கது.
- டாக்டர் வா.செ. குழந்தைசாமி (சென்னை-28.3.2004)
இந் நூலில் சாப்பிட்ட தட்டைக் கழுவுவதிலிருந்து ஃபோனில் பேசுவது வரை வீரமணி அவர்கள் எழுதி இருக்கின்றார். நெல்சன் மண்டேலாவிலிருந்து அய்ன்ஸ் டீன் உள்ளிட்டு புஷ் வரை எழுதி இருக்கிறார். இந்த இயக்கத்தைச் சார்ந்தவர்கள், மற்றவர்களுக்கு முன் மாதிரியாக, வழி காட்டிகளாகத் திகழ வேண்டும். பேசுவதில், விமர்சிப்பதில், ஊக்கப்படுத்துவதில், பாராட்டுவதில், என்னென்ன சீரிய பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்கலாம்; அவ்வாறு கடைப்பிடிக்க ஒரு சமூகப்படை உருவாகுமானால் அவற்றிற்கு இவை தேவைப்படும்.
- தா.பாண்டியன் மாநிலக் குழு உறுப்பினர்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.  (தஞ்சாவூர் - 24.3.2004)
இந்த நூலில் எனக்குப் பிடித்தது எதையும் எளிமையாக எழுதியதுதான். டி.வி., போன்ற சாதனங்கள் ஏற்படுத்திய கேடுகள் - மாணவர்களாக இருக்கட்டும், புகழ் போதையில் புரள்பவர்களாக இருக்கட்டும். அனைவருக்குமே இந்த நூல் பயன்படும். அந்த வகையில் டில்லித் தமிழ்ச் சங்கத்தில் இந்த நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
- ஜி. பாலச்சந்திரன் அய்.ஏ.எஸ்.,டில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர், மத்திய அரசுத்துறை செயலாளர்  (புதுடில்லி - 8.4.2004)
நண்பர் வீரமணி எழுதிய இந்த நூல் சுத்தமான அறிவு, சுத்தமான அனுபவம் இவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. நெடி ஏதும் இல்லாதது - எல்லாத் தரப்பினரும் படிக்க வேண்டிய நூல் இது.
- த.ஜெயகாந்தன் (மதுரை - 11.4.2004)
தலைவர் வீரமணி அவர்கள் எழுதிய வாழ்வியல் கருத்துகள் புடம் போட்ட தங்கமாக ஒளிர்கிறது. அறிவியல் அடிப்படையில் எவரும் பின்பற்றக்கூடிய அளவில் இந் நூலை எழுதி இருக்கிறார்.
- மணவை முஸ்தபா (சென்னை - 5.3.2004)
ஒரே நாளில் தங்கள் சிந்தனைகள் முழுவதையும் படித்துப் பேரானந்தம் கொண்டேன். தங்கள் பாசமலர் இன்னொரு விவிலியமாக எனக்குத் தெரிகிறது. மிகச்சிறந்த நூல். என் உளமாரப் பாராட்டுகள்.
- டாக்டர் கே. வெங்கடசுப்பிரமணியன் மத்திய திட்டக்குழு உறுப்பினர் (புதுடில்லி - 12.4.2004)
படிக்க - திரும்பத் திரும்ப ஆழ்ந்த - அடிகோடிட்டுக் கொள்ள - விவாதிக்க - விடைபெறும் நண்பர்களுக்கு இன்னொரு நண்பனாய் அறிமுகப்படுத்த,வாழ்வியல் சிந்தனைகள் உகந்ததாக இருந்தன. - ரா. பார்த்திபன்
திரைக் கலைஞன் (சென்னை - 25.4.2004)
இந்நூல் பல்கலைக் கழகங்களில் பாடத்திட்டத்தில் வைக்கப்பட வேண்டும்.
- பேராசிரியர் கே. நிலாவுதீன் (திருச்சி - 28.3.2004)
முதலில் வாழ்வியல் சிந்தனைகள் என்ற தலைப்பிற்குப் பாராட்டுகள். அடுத்து, குற்றால அருவிபோல எழுத்து நடை சலசலவென்னும் கருத்துகள் ஓட்டம். சிலுசிலுவென்றும் படிக்க, ரசிக்க, ஆனந்தமாக இருக்கிறது. ஆயிரக்கணக்கான மேடைகளில் பேசியும், பல ஆண்டுகளாக எழுதியுள்ள எண்ணற்ற மனிதர்களையும் சந்தித்தவர் அல்லவா? மீன் குஞ்சுக்கு நீந்தவா கற்றுத்தர வேண்டும்?
- அ. ராஜ்மோகன் அய்.பி.எஸ்., (ஓய்வு)  முன்னாள் காவல்துறைத் தலைவர்  (சென்னை - 7.3.2004)
மன அழுத்த நோயால் பலரும் அவதிப்படுகின்றனர். சிலர் தற்கொலையும் செய்து கொள்கிறார்கள். பிரச்சினைகளுக்குத் தீர்வு தற்கொலையாக இருக்க முடியாது - இத்தகைய மனச் சோர்வுகளுக்கு மா மருந்தாக இந் நூல் பயன்படும்.
- பேராசிரியர் அருணன் (மதுரை - 11.4.2004)
வாழ்வியில் சிந்தனைகள்  நூல் ஆசிரியர் வீரமணி அவர்களின் சமுதாயப் பணியில் பிறிதொரு அத்தியாயம். வாழ்க்கையில் முன்னேற முனைகின்ற ஒவ்வொருவரும் தங்கள் கையில் வைத்துக் கொள்ள வேண்டிய புத்தகம் இது. ஒவ்வோர் அத்தியாயமும் மருத்துவர்கள் முதற்கொண்டு பாமர மக்கள் வரை அவரவர்களின் வாழ்க்கையை - தொழிலை முறைப்படி செம்மையாக வெற்றி நோக்கி அழைத்துச் செல்லக் கூடிய வழிகாட்டியாக அமைந்த நூல். தாம் இன்புறுவது உலகு இன்புறக்கண்டு காமுறுவர் கற்றறிந்தார் என்ற ஆசிரியர் வீரமணி அவர்களின் உயர்ந்த பண்பினைப் போற்றுகின்றேன்.
- டாக்டர் நா. மோகன்தாஸ்
தலைமை சிறுநீரக மருத்துவர் (தஞ்சாவூர்  - 24.3.2004)
இந் நூல் ஒவ்வோர் இல்லத்திலும் இருக்க வேண்டிய நூல். தங்களின் எழுத்திற்கு இது ஒரு மணி மகுடம். இது வெறும் வார்த்தை இல்லை. உள்ளத்து உணர்வு.
- டாக்டர் ராஜு எம்.டி., (சேலம் - 23.4.2004)
மனிதனுக்கு வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உதவும் உன்னதமான சொல் விளக்காக (தீபமாக) அமைந்திருந்தது. 100 விதமான சிந்தனைகளையும் படித்துவிட்டு, அவன் அப்படியே நடந்துவிட்டால், அவனுக்கு அதுவே வசந்த காலமாக அமையும் என்பது உண்மையே!
- கவிஞர் சூரியன் (வத்தலக்குண்டு - 4.5.2004)
இந்த நூலை நிச்சயமாக ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும். உலகம் முழுவதும் இந்த நூல் பரவ வேண்டும். அந்தப் பணியை தமிழர் தலைவர் அனுமதித்தால், விரும் பினால் இந்த நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்பதை பணிவுடன் கூறிக் கொள்கிறேன். சிறந்த இலக்கியத்திற்கு நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. வாழ்வியல் சிந்தனை ஒரு தலைசிறந்த இலக்கியம்.
இந்த நூல் நோபல் பரிசு பெறவேண்டும். அந்தக் காலம் வரும். வந்தே தீரும்.
- முன்னாள் நீதியரசர் பெ.வேணுகோபால், சென்னை உயர்நீதிமன்றம் (சென்னை - 29.6.2005)
படிக்கின்ற ஒவ்வொரு கட்டுரையிலும் பாடம் இருக்கும். ஆசிரியர் சிறப்பாகப் பணியாற்றக்கூடியவர். அவரை வடமொழிச் சொல்லில் சொல்ல வேண்டு மானால், அஷ்டாவதானி என்று சொல்லுவார்கள். ஏனென்றால் அவர் சொல்லாத விசயமே இல்லை.
இன்னொரு தரம் இந்த நூலைப் படிக்கும்பொழுது வேறு மாதிரியான கருத்துகள் தோன்றுகின்றன. எனக்கு நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் படிப்பது வழக்கம்.
- வருமான வரியியல் அறிஞர் ச.இராசரத்தினம்(சென்னை - 29.6.2005)
அய்யா அவர்களுடைய நூல் எப்படி இருக்கின்றது என்று சொன்னால், இனிமை தருகின்ற நூல். இன்பம் தருகின்ற நூல்.
பல நூல்களைப் படித்து தன்னுடைய வாழ்க்கை அனுபவத் தையும் இணைத்து ஒரு தேனடையாக இந்த வாழ்வியல் சிந்தனைகள் நூலைக் கொடுத்திருக்கின்றார். இனிமை ஒரு பக்கம்; எளிமை ஒரு பக்கம்; கருத்தருமை ஒரு பக்கம். இந்த மூன்றும் இணைந்த ஒரு நூலாக அய்யா வீரமணி அவர்களுடைய இந்த நூல் வெளி வந்திருக்கிறது. வாழ்வியல் சிந்தனைகள் நூலின் மொழிநடை எளிமையான மொழிநடை.
- பேராசிரியர் சுப.திண்ணப்பன், சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம் (சென்னை - 29.6.2005)
ஆசிரியரைப் பொறுத்த அளவில் அவர் ஓர் அற்புதமான சுரங்கம். ஆசிரியர் அவர்கள், குடும்பத்திற்குத் தேவையான கருத்துகளை இந்த நூலில் சொல்லியிருக்கின்றார். மேலும் இந்த கருத்துகளெல்லாம் எனக்காக எழுதியிருக்கிறேன் என கூறியுள்ளார்கள். இந்தக் கருத்துகளெல்லாம் திராவிடர் கழகத்துக்காரர் களுக்கு மட்டும் சொந்தமல்ல. சிறுவர் முதல் பெரியவர் வரை, பாமரர் முதல் படித்தவர் வரை, மாணவன் முதல் ஆசிரியர் வரை, தொழிலாளி முதல் முதலாளி வரை, நோயாளி முதல் மருத்துவர் வரை, சமுதாயத்திலிருக்கின்ற அத்தனை பேரும் படித்துப் பயன் பெறத்தக்க வகையில் சிறப்பாக எழுதியிருக்கின்றார்.
தமிழின உணர்வுக்கு இங்கே கருத்து உள்ளது. தமிழின விழிப்புக்கு கருத்து இருக்கிறது. தமிழர்கள் வாழ்க்கைக்கு கருத்து இருக்கிறது. உளவியல் ரீதியாக, அத்தனைக்கும் இந்நூலில் கருத்துகள் இடம் பெற்றுள்ளன.
- முனைவர் ஏ.இராமசாமி, அழகப்பா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர்(காரைக்குடி - 29.7.2005)
ஒவ்வொரு சிந்தனைக்கும் முத்தாய்ப்பாக தலைப்புக் கொடுத்து இருக்கிறார் அல்லவா? அந்த ஒவ்வொரு தலைப்பும் கட்டுரையும் அவ்வளவு பொருத்தமானது. அவ்வளவு அழகானது. அவ்வளவு ஈர்ப்புக் கொண்டது. ஆகவே, இந்த தலையங்கங்களை வைத்துக் கொண்டே உள்ளே இருக்கின்ற விஷயங்கள் எவ்வளவு ஆழமானது என்று நாம் புரிந்து கொள்ள முடியும்.
இந்த சிந்தனைகளெல்லாம் நம் ஆசிரியருடைய மனதிலே எப்படி வந்தது என்றால், ஒவ்வொரு சிந்தனையும் அவருக்கு முன்னதாக நூற்றுக்கணக்கிலே நின்று கொண்டு என்னைப் பற்றி எழுது, என்னைப் பற்றி எழுது, என்னைப்  பற்றி எழுது என்று கெஞ்சி இருக்க வேண்டும். இவர் தான் பொறுத் திருங்கள்,
முதல் வருடத்தில் நூறு பேரைப் பயன்படுத்தினேன். அடுத்த வருடத்தில் நூறு பேரைப் பற்றி பேசுகிறேன் என்று தேர்ந்தெடுத்து எழுதுகின்ற அளவிற்கு ஆற்றல் படைத்த, ஞானம் படைத்த ஒரு பெரிய மனிதராக நம்மிடத்திலே இருக்கின்றார்.
- ஜார்ஜ் அடிகளார் நிறுவனர், திருச்சி கலைக்காவிரி(திருச்சி - 23.7.2005)
ஆசிரியரின் சிந்தனை என்பது கடல் போன்றது. அந்தக் கடலிலிருந்து 200 முத்துகள் எடுத்து இரண்டு மாலைகளாக கட்டியுள்ளார்.
அய்யா வீரமணி அவர்கள் வாழ்வியல் சிந்தனைகள் எழுதியதோடு மட்டுமல்லாமல், வாழ்க்கையாக வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கின்றார்.
மனத்தை உழுதுதான் வாழ்க்கையைச் செம்மைப்படுத்த வேண்டும். அந்த உழவிற்கான அரிய கருவி அறிவுக் கருவூல நூலிலிருந்து சிறந்த முறையில் பெருமைப்பட, பாராட்டுப்பட ஏராளமான கருத்துகளை எழுதி உள்ளார்கள். இந்த வாழ்வியல் சிந்தனைகள் அத்தனையும் நமக்கு அறிவுக் கருவூலங்கள்.
- டாக்டர் வீகேயென் கண்ணப்பன்(திருச்சி - 23.7.2005)
உளவியல்தான் எவ்வளவு பெரிய படிப்பு. அவர் ஓர் ஒரேசியஸ் ரீடர். அவர் புத்தகப் பிரியராக இருக்கவில்லை. புத்தக வெறியராக இருந்து இருக்கிறார். அந்த அளவிற்கு ஆழ்ந்த ஈடுபாட்டோடு படித்த எல்லாவற்றையும் தந்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தோடு இந் நூலைப் படைத்து இருக்கிறார்.
ஒரு பக்கத்தில் தமிழ்ப் பண்பாட்டு வரலாறு. மறு பக்கத்திலே உலக வரலாறு. இன்னொரு பக்கத்திலே சமூகவியல் அடிப்படையை நோக்கியே அறிவியல் வரலாறு ஆக, எல்லாவற்றையும் கொண்டு, ஆனால், தேவையற்ற ஒரு சொல்கூட இல்லை என்பது மிக முக்கியமானது.
- டாக்டர் மன்சூர்துணை முதல்வர், திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி(திருச்சி - 23.7.2005)
ஆசிரியர் எழுதியிருக்கின்றார். ஒரு மனிதனுடைய உடம்பில் இரத்த ஓட்டம் இருக்கும்“Blood Pressure” இருக்க வேண்டும். அது 120/90 ஆக இருக்க வேண்டும். பிளட் பிரஷர் ஏறினாலும் (High Pressure) கஷ்டம். அது லோ பிரஷர் (Low Pressure) ஆனாலும் கஷ்டம். அதுபோல பணம் அதிகமாக இருந்தால் அது ஹை பிரஷர். பணம் குறைவாக இருந்தால் அது லோ பிரஷர். நார்மலாக இருப்பதுதான் ஆரோக்கியம் என்று சொல்லியிருக்கின்றார். அய்யா இதை எந்த பல்கலைக் கழகப் பேராசிரியரும் கற்றுத் தரவில்லை, உங்களைத் தவிர.
இந்த வாழ்வியல் சிந்தனைகள் நூலைப் படித்தவுடன் எனக்கு உலகத்தைச் சுற்றி வந்த அனுபவம் ஏற்பட்டது.
எப்படி இவற்றை ஆசிரியர் பெருந்தகை அவர்கள் படித்தார்கள்? அதுவும் கம்ப்யூட்டர் வந்த பிறகு பார்க்கின்ற பழக்கம் உண்டே தவிர, படிக்கின்ற பழக்கம் கிடையாது.
- பேராசிரியர் டாக்டர் தி.இராசகோபாலன்(சென்னை - 29.6.2005)
இதழ்கள் பார்வையில் வாழ்வியல் சிந்தனைகள்
அடிப்படையான மகிழ்ச்சி எது என்பது தொடங்கி நமக்குள் உள்ள தடைகளும், நலம் காணவேண்டிய விடைகளும் 100 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள சுய முன்னேற்றக் கட்டுரைகளின் தொகுப்பு. (குமுதம் - தீராநதி மே, 2004)
வாழ்வியல் சிந்தனைகள் நூல் வீரமணி அவர்களுடைய கொள்கையை ஏற்றுக்கொண்டவர்களும், உடன்படாதவர்களும் கூட விரும்பிப் படிக்கத்தக்க ஓர் அருமையான அறிவார்ந்த நூல்... எல்லாக் குடும்ப விழாக்களிலும் இந் நூலை அன்பளிப்பாக வழங்கி மகிழலாம்.
(தமிழ் போஸ்ட் வாரஇதழ் (மும்பை) மார்ச் 27, 2004)
சுய முன்னேற்ற நூல்களில் காணக் கிடைக்கும் கருத்துகளிலே இந் நூலிலும் கிடைக்கின்றன. கட்டுரைகளின் எளிமை படிக்கத் தூண்டும்.
(இந்தியா டுடே 21.4.2004)
வாழ்வியல் சிந்தனைகள் - நூலிலிருந்து....
இந்த செல் நாகரிகம் மிகவும் கொடுமையானது, பொது நிகழ்ச்சிகளுக்கு வருவோர் செல்போன்களைக் குறிப்பிட்ட நேரத்திற்கு அதை நிறுத்தி-விடுவதுதான் பண்பு, அது இல்லையே! மேடையில் அலறுகிறது அருகில் அமர்ந்து வி.வி.அய்.பி. அதைக் காதில் வைத்து, சிலர் ஒரு தனி பிரசங்கம் நிகழ்த்துகிறார். கூட்டங்களில் முன்பெல்லாம் குழந்தைகள் அழும். அது வெகுவாகக் குறைந்துவிட்டது. அந்த இடத்தை அலறும் செல்போன்கள் அல்லவா பிடித்து அருவருப்பான நிலையை உருவாக்கி வருகின்றன! செல் சென்று பேசித்திரும்புக என்று ஒவ்வொரு கூட்ட அரங்குகளில், மண்டபங்களில், மேடைகளில் புகைக்குத் தடைபோல செல்லுக்கும் தடைபோட வேண்டிய நிலை வேகமாக வளர்ந்து வருகிறது!
(தினமணி 8.3.2004.)
மனமே ரிலாக்ஸ் ப்ளீஸ் போன்ற நூல்களை மதவாதிகளே எழுதுவதிலிருந்து கடவுள் நம்பிக்கையோடு, தனி மனித மனப்பயிற்சியும் அவசியம் என்று அவர்களே நம்புவதாகத் தெரிகிறது. அப்படியெனில், பகுத்தறிவுவாதி களும் தங்கள் கண்ணோட்டத்திலிருந்து இத்தகைய நூல்களை எழுதுவது நல்லது. தி.க., தலைவர் வீரமணி அவர்கள் இந்த வகையில் ஒரு நல்ல தொடக்கத்தைத் தந்து இருக்கிறார். வாழ்வியல் சிந்தனைகள் என்கிற அவரின் நூல், வாழ்வை எதிர்கொள்ளும் மனத்தெம்பையும் உளவியல் நுணுக்கங்களையும் கூறுகிறது.
(செம்மலர் ஏப்ரல் 2004)
நன்கு உலர்த்தப்பட்ட நான்கு அத்திப்பழங்களை நாள்தோறும் உண்டு வந்தால், அது இரும்புச் சத்தின்மையைப் போக்கி, ரத்தச் சோகையைத் தடுக்கும் தாதுக்களைக் கொடுத்துக் காப்பாற்றிவிடும்! போன்ற மருத்துவ டிப்ஸ்களை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் இருந்து யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. வாழ்வியலுக்குத் தேவை யானவற்றைத் தன் வாழ்க்கையில் இருந்தே உதாரணமாக எடுத்து, எளிமையாகப் புரியும் விதத்தில் சொல்லியிருக்கும் விதம் மிக அருமை. பழங்களின் மேன்மையை சொல்லிக் கொண்டே வருபவர், தொண்டு செய்து பழுத்த பழம் என்று பெரியாரையும் இணைத்துக் கொள்கையையும் விளக்குவது ரசிக்கத் தக்கது.
(ஆனந்தவிகடன், 18.9.2005)
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எழுதிய 100 கட்டுரைகள் கொண்ட நூல். இது திராவிடர் கழகத்தின் பிரசார புத்தகம் அல்ல. வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவர் களுக்கு வழிகாட்டும் கட்டுரைகளும், பிரச்சினைக்குத் தீர்வு காண உதவும் கட்டுரைகளும், சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளும் இதில் இடம் பெற்றுள்ளன. சீன மருத்துவம் பற்றிய கட்டுரையும் உண்டு!
(தினத்தந்தி - 3.8.2005)
பகுத்தறிவுக் கருத்துகளை பேச்சாலும் எழுத்தாலும் பரப்பி, தமிழ்ச் சமூக மக்களின் விழிப்புணர்வுக்குப் பாடுபட்டு வரும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சிறந்த உளவியல் கட்டுரையாளராகவும் பரிணமிக்கிறார்.
தக்க உவமைகளுடனும், துணுக்குகளுடனும் கட்டுரை களைச் செழுமைப்படுத்தியிருக்கிறார்.
உடலைப் பேணுவது குறித்தும் சளியைத் தடுக்க சீன மருத்துவம் ஒன்றையும், சர்க்கரை நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்தும் மிக இயல்பான நடையோட்டத்தில் கருத்துகளைச் சொல்லியிருப்பது அருமை.
(புத்தகம் பேசுது - செப்டம்பர் 2005)
சமூகப் பிரச்சினைகளைப் பற்றி மட்டும் பேசுவது ஒரு தலைவரின் கடமையல்ல; தனி மனிதனின் தன்னம்பிக்கை யையும், ஆளுமையையும் உயர்த்துவதும் கடமைதான் என்று வாழ்வியல் சிந்தனைகள் மூலம் உணர்த்தியிருக்கிறார்.
நூலிலிருந்து ஒரு பொன்மொழி: குற்றம் குறையில்லா நண்பனைத் தேடி அலைபவன் நண்பனில்லா வாழ்க்கையைத் தான் வாழ்ந்து தீரவேண்டும்.
(த சண்டே இண்டியன் 30 அக்.- 5 நவ. 2006)


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...