Sunday, August 26, 2012

நாடாளுமன்றம் நடக்கவா - முடக்கவா?

நாடாளுமன்றம் நடக்கவா - முடக்கவா?


நாடாளுமன்றம் நடைபெறுவதற்கு நாள் ஒன்றுக்கு ஆகும் செலவு ரூ.1.7 கோடி!  நாள் ஒன்றுக்கு இவ்வளவு செலவழித்து நடத்தப் படும் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் அன்றாடம் முடக்குவது நியாயமான செயலா?
நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களை பொது மக்கள் தேர்ந்தெடுப்பது - தங்கள் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் பேசுவ தற்காகத் தானே தவிர, பாமரத்தனமான கூச்சல் போடுவதற்கோ, அவையை நடத்தவிடாமல் தடுப்பதற்கோ அல்ல.

எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் பேசித் தீர்க்க வாய்ப்புள்ள இடம்தானே நாடாளு மன்றம்? அப்படி இருக்கும்போது அங்கு விவாதங்களை நடத்த அனுமதிக்காதது ஏன்? நிலக்கரிச் சுரங்கங்களை தனியார் நிறுவ னங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி எதிர்க்கட்சியான பி.ஜே.பி., பிரதமர் பதவி விலக வேண்டும், அதுவரை நாடாளுமன்றத்தை நடத்த விட மாட்டோம் என்பது எந்த வகையில் ஜனநாயக ரீதியான செயல்பாடாகும்.

குற்றச்சாற்றை அவையில் வையுங்கள். அவற்றிற்குப் பதில் சொல்லவும், விவாதம் நடத்தவும் தயார் என்று ஆளும் காங்கிரஸ் தரப்பில் சொன்ன பிறகு அந்தச் சவாலை ஏற்றுக் கொள்ள பி.ஜே.பி.க்கு என்ன தயக்கம்?

தங்கள் கையில் சரக்கு இருக்குமானால் அதனை நாடாளுமன்றத்தில் வைத்து ஆளும் கட்சியைத் திணற அடிக்க வேண்டியதுதானே?

அவையில் நடக்கும் அமளிகளை தொலைக் காட்சி மூலம் மக்கள் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார்கள்.

எதற்கெடுத்தாலும் பதவி விலகச் சொல் லுவதுதான் எதிர்க்கட்சியின் பாணியா? பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்கும் பொழுது குற்றச்சாற்றுகள் அவையில் வைக்கப்பட்ட தில்லையா? அப்பொழுதெல்லாம் எத்தனை முறை பதவி விலகினார்கள்?

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக இருந்த எல்.கே. அத்வானி தானே உள்துறை அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் இருந்தார்!

அந்தக் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்ற முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி போன்றோர் அமைச்சர் பதவிகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இருந்தனரே தவிர, பதவியைத் தூக்கி எறியவில்லையே

அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த வழக்கிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள முயன்றவர்தானே உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி?

இவற்றை எல்லாம் மக்கள் மறந்து இருப் பார்கள் என்ற தைரியத்தில் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்களா?

சபாநாயகர் ஆசனத்தில் இருந்து எழுந்து நின்றால், உறுப்பினர்கள் இருக்கைகளில் அமர வேண்டும் என்ற அவை மரபைக்கூடப் பின் பற்றாத இவர்கள் எப்படி நாடாளுமன்ற நெறிமுறைகளை மதிப்பவர்கள் ஆவார்கள்?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி களே சட்டத்திற்குப் புறம்பாக, அவை மரபு களுக்கு மாறாக நடந்து கொண்டால் வாக் களித்த பொது மக்கள் எப்படி நடந்துகொள் வார்கள்? வழி காட்ட வேண்டியவர்கள் வழி தவறலாமா? வாக்காளர்கள் மத்தியிலும் விழிப் புணர்ச்சி ஏற்பட்டாக வேண்டும். தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் இந்த வகையில் வினாவும் எழுப்ப வேண்டும்.


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...