Sunday, August 19, 2012

முதலில் படியுங்கள்!


திராவிடர் இயக்கத்தின் சாதனைகள் என்பவை அடிப்படையானவை - மேலோட்டமாக அதனைப் பார்க்கக் கூடாது. எடுத்துக் காட்டாக கல்லூரிப் படிப்பைப் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றால் சென்னைக்குத் தான் வரவேண்டும் என்ற நிலை.
சென்னைக்கு வந்தால் எங்கே தங்கிப் படிப்பது. விடுதிகள் எல்லாம் பார்ப்பனர்களிடத்தில். பார்ப்பனரல்லாதார் அங்குத் தங்கி உணவருந்த முடியாது. வேண்டுமென்றால் எடுப்புச் சாப்பாடு வாங்கிக் கொள்ளலாம். இந்த நிலையில்தான் டாக்டர் சி. நடேசனார் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிப்பதற்காக திராவிட சங்க விடுதி  (Dravidian Association Hostel)   என்ற பெயரில் விடுதியைத் தொடங்கினார். (1916)
இன்றைக்கு அதன் அருமையை உணர முடியாமல் இருக்கலாம். அந்தக் கால கட்டத்தில் பாலை வனத்தில் ஒரு சோலைவனம் என்றே அதனைச் சொல்ல வேண்டும். டாக்டர் நடேசனார் அன்று தோற்றுவித்த திராவிடர் சங்கம், ஆண்டுதோறும் பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்ற பார்ப்பனர் அல்லாத மாணவர்களை அழைத்துப் பாராட்டியது.
டாக்டர் டி.எம்.நாயர், ஆர்.கே.சண்முகம் போன்றவர்கள் எல்லாம் அத்தகு கூட்டங்களில் பங்கு கொண்டு பார்ப்பனர் அல்லாத மாணவர்களைப் பாராட்டுவார்கள் - ஊக்கப்படுத்துவார்கள்.
டாக்டர் டி.எம். நாயர் ஒரு முறை மாணவர்களைப் பாராட்டியபோது கீழ்க்கண்ட உணர்ச்சி மிகு சொற்களைப் பயன்படுத்தினார்.
“Awake, Arise or  Be For Ever Fallen”
விழித்துக் கொள்ளுங்கள்!  எழுச்சி பெறுங்கள்!! இன்றேல் என்றும் நீவிர் வீழ்ந்து பட்டோராவீர்!!!
என்பதுதான் அந்த எழுச்சியூட்டும் வீரம் செறிந்த வரிகள்.
டாக்டர் நடேசனார் அவர்களால் உண்டாக்கப்பட்ட விடுதியில் படித்த மாணவர்கள்தாம் - பிற்காலத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக வந்த எஸ்.ஜி.மணவாள ராமானுஜம், சென்னை உயர்நீதி மன்ற நீதிபதியாக வந்த சுப்பிரமணிய நாடார் போன்றவர்கள்.
திராவிடர் இயக்கம் என்ன செய்து சாதித்துக் கிழித்தது என்று வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று உளறும் பொறுப்பற்றவர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.
எந்த ஒரு சமூகமும் முன்னேற வேண்டுமானாலும் அந்தச் சமூகத்திற்குக் கல்வி வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அதனைச் செய்து கொடுத்தது திராவிடர் இயக்கம். (சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்கக்கூடாது என்று பார்ப்பனர்கள் சாத்திர மயமாக்கி வைத்திருந்ததை நினைத்துப் பார்க்க வேண்டும்.)
சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) இரு முறை ஆட்சிக்கு வந்த போதும் செய்த முதல் செயல் என்ன? 1937-1939 இல் 2,500 கிராமப் பள்ளிகளை மூடினார் என்றால் அதன் தன்மை என்ன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டாமா?
ஒரு காலத்தில் கல்லூரிகளில் சேர வேண்டும் என்றால் மாணவர்களைத் தேர்வு செய்து சேர அனுமதிக்கும் அதிகாரம், உரிமைகள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் முதல்வர்களுக்குத் தான் உண்டு. அந்தக் கால கட்டத்தில் பார்ப்பனர்கள்தான்  பெரும்பாலான கல்லூரிகளின் முதல்வர்களாக  இருந்ததால் பார்ப்பனர் அல்லாதார் கல்லூரி களுக்குள் கால் பதிக்க முடியாத நிலை இருந்தது.
இந்த ஆதிக்கக் கதவடைப்பிலிருந்து பார்ப்பனர் அல்லாத மாணவர்களை மீட்டெடுக்க கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்குக் குழுக்களை நீதிக்கட்சி ஆட்சி ஏற்படுத்தியது.
பிற்காலத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ராஜாஜி அத்தகைய குழுக்களைக் கலைத்துவிட்டார்.
இப்படி பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் போராட்டக் களமாகத்தான் கல்வித் தளம் அமைந்திருந்தது.
முரசொலி மாறன் அவர்களால் எழுதப்பட்ட திராவிட இயக்க வரலாற்று நூலில் ஏராளமான தகவல்கள் தாராளமாகக் கிடைக்கும்.
தமிழ்த் தேசியம் பேசுவோர் இது போன்ற நூல்களை முதலில் படிக்கட்டும்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...