Thursday, August 2, 2012

உயிரோடு விளையாட வேண்டாம்


டில்லியிலிருந்து சென்னைக்கு வந்து கொண் டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 32  மனித உயிர்கள்  பலியாயின என்ற செய்தி மனித ஈரம் உள்ள ஒவ்வொருவரையும் துடிதுடிக்கச் செய்யக் கூடியதாகும்.
கண்மூடி கண் திறப்பதற்குள் இது நடந்து விட்டதே! எவ்வளவு ஆசைக் கனவுகளோடும், திட்டங்களோடும் பயணித்திருப்பார்கள்! சற்றும் எதிர்பாராவிதமாக இந்தச் சோகவிபத்து நடந்து விட்டதே!
விபத்துக்கு ஆளாகி உயிருக்குப் போராடியவர்கள் குறிப்பிட்ட அந்தக் கால அளவில் மட்டும்தான் துடிதுடித்து இருப்பார்கள். அவர்களின் குடும்பத் தினர்களும், உற்றார் உறவினர்களும், நண்பர்களும் - வாழ்நாள் முழுமையும் அல்லவா நினைத்து நினைத்துக் கண்ணீர் உகுத்துக் கொண்டிருப்பர்.
மின்கசிவா - சதியா என்ற ஆய்வுகள் ஒரு புறம் நடந்து கொண்டு இருக்கும். அதற்கு முன்பாக இது போல விபத்துகள் எதிர்பாரா விதமாக நடக்கும் சந்தர்ப்பத்தில் பயணிகள் எப்படி தப்பிப் பிழைப்பது என்பதுதான் முக்கியம். அதற்கான செயல் விளக்கங்களை, பயிற்சிகளை நாட்டு மக்களுக்கு அளிக்க வேண்டியது ஒரு மக்கள் நல அரசின் அடிப்படைக் கடமையாகும்.
அவசர காலத்தில் வெளியேறும் ஜன்னல் இடம் பெற்றிருக்கிறதே - எத்தனைப் பேருக்கு அதனைப் பயன்படுத்தத் தெரியும்?
விபத்து நடந்த நிலையில் உடனடியாக அவசர உதவிக்கு யாரும் வரவில்லை - மருத்துவக் குழுவும் வரவில்லை என்று தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தவர்கள் தெரிவித்துள்ள தகவல் நம் நெஞ்சை பிளக்கக் கூடியதாகும்.
அண்மைக் காலமாக ரயில் விபத்துகள் ஏராளமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. சாலை வழியில் பயணிப்பதை விட ரயில் மார்க்கம் பாது காப்பானது என்பது பொதுமக்களின் நம்பிக்கை. இப்பொழுது ரயில் பயணமும் ஆபத்தானதுதான் என்ற எண்ணம் பரவலாகிவிட்டதே! இதற்கான பொறுப்பை ரயில்வே அமைச்சகமும், ரயில்வே நிருவாகமும் ஏற்கத்தான் வேண்டும்.
விபத்துகள் நடக்கும்பொழுது அந்த நேரத்தில் மட்டும் மண்ணைக் கயிறாக்கி, விண்ணைப் பம்பரமாக்கிப் பேசும் நிருவாக அமைப்புகள், நாட்கள் நகர நகர அந்தப் பேச்சுகள் சென்ற இடம் தெரியாமல் காலவெள்ளத்தில் கரைந்து போய்விடும்.
முன்பெல்லாம் இது போன்ற விபத்துகள் நடந்தால் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் விபத்துக்குப் பொறுப் பேற்று அமைச்சர் பதவியிலிருந்து விலகிக் கொள் வதாக அறிவிப்பார்கள். அத்தகைய பொறுப் புணர்ச்சி, கடமை உணர்ச்சி எல்லாம் இப்பொழுது பொய்யாய், பழங்கதையாய் அல்லவா போய்விட்டது.
வாணியம்பாடியில் ஒரு ரயில் விபத்து நடந்த போது அதற்குக் காரணம் ரயில்வே வேலையில் இட ஒதுக்கீடு அளிப்பதுதான் (அப்பொழுது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பாபு ஜெகஜீவன்ராம் ரயில்வே அமைச்சர்) என்று வரிந்து கட்டி எழுதிய ஏடுகள் இப்பொழுது கண்டு கொள்வதில்லை. ஆசியாவிலேயே மிகப் பெரிய ரயில்வே துறை இந்தியாவைச் சார்ந்தது. இத்துறை மூலம் இந்திய அரசுக்கு கோடிக்கணக்கில் இலாபமும் வந்து சேர்கிறது. ஆனாலும் ரயில்வே நிதி நிலை அறிக்கையில் ரயில்வே பாதுகாப்புக்கு என்று நான்கரை விழுக்காடு நிதிதான் ஒதுக்கப்படுகிறது.
ரயில்வே பயணிகளுக்குப் போதுமான வசதிகள் அளிக்கப்படுவதில்லை. ரயில் பெட்டிகள் சரிவரப் பராமரிப்பு இல்லாத நிலைதான். மூட்டைப் பூச்சிகளும், வண்டுகளும் சர்வ சாதாரணம். நான்கு பெட்டிகளுக்கு ஒரு காவல் துறை அலுவலர் என்பதும் கூடப் போதுமானதல்ல. பயணிகளுக்குத் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக வந்து கவனிப்பதற்கான ஏற்பாடுகள் இல்லை.
ரயில்வே, தொலைபேசி, மருத்துவம், கல்வி போன்ற துறைகள் பண வரவுக் கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாதவை. மக்கள் நலனுக்கான (Service) இன்றியமையாத துறைகள் என்ற கண்ணோட்டம் தேவை! ஒன்றிலிருந்து பாடம் பெறுவதுதான் புத்திசாலித்தனம். உயிரோடு விளையாட வேண்டாம்!


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...