Monday, August 13, 2012

ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க 14 தீர்மானங்கள்


  • ஈழத் தமிழர்கள் தாங்கள் விரும்பும் அரசியலை தாங்களே முடிவு செய்து கொள்ளுவதற்கான முழு உரிமை வழங்கப்பட வேண்டும்!
  • இலங்கைத் தமிழர்களிடம் அய்.நா. மூலம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் 
  • ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க 14 தீர்மானங்கள்
ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் (சென்னை - 12.8.2012)
சென்னை, ஆக.13- ஈழத் தமிழர்கள் தாங்கள் விரும்பும் அரசியலைத் தாங்களே முடிவு செய்து கொள்வதற்கான முழு உரிமை வழங்கப்பட வேண்டும் என்கிற தீர்மானம் உட்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நேற்று (12.8.2012) சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் டெசோ சார்பில் நடைபெற்ற ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
முதல் மூன்று தீர்மானங்களை தி.மு.க. அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. அவர்களும், அடுத்த மூன்று தீர்மானங்களை (4 முதல் 6 வரை) மாநாட்டு வரவேற்புக் குழு செயலாளரும், விழுப்புரம் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் க. பொன்முடியும் 7 முதல் 9 வரையிலான தீர்மானங்களை திராவிடர் கழகப் பொதுச் செயலாளரும்,  மாநாட்டு வரவேற்புக் குழு செயலாளருமான கலி. பூங்குன்றன் அவர்களும் 10 முதல் 12 வரையிலான தீர்மானங்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் மாநாட்டு வரவேற்புக் குழு செயலாளருமான இரவிக்குமார் அவர்களும், 13,14 ஆகிய தீர்மானங்களை மாநாட்டு வரவேற்பு குழுச் செயலாளர் அசன் முகம்மதலி ஜின்னா அவர்களும், முன்மொழிந்தனர்  பலத்த கரவொலிக்கிடையே தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம்  1 :
இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வு செய்து அய்க்கிய நாடுகள் அவையின்  வல்லுனர் குழு, 2011 ஏப்ரல் மாதத்தில் அளித்த அறிக்கையின் அடிப்படையில் அய்.நா. மனித உரிமை ஆணையத் தால் விவாதிக்கப்பட்டு, 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஆதர வாக வாக்களித்த நாடுகளுக்கு இம்மாநாடு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
அத்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளவாறு இலங்கை அரசு நடவடிக்கைகளை உறுதியுடன் மேற்கொள்கிறதா என்பதைக் கண்காணிப்பதற்கு அய்.நா. மனித உரிமை ஆணையம் ஒரு மேற் பார்வைக் குழுவை நியமித்திட வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
போர்க் குற்றங்கள் வெளியுலகுக்கு தெரிந்துவிடாமல் தடயங்களை அழிக்கும் முயற்சி!
தீர்மானம்  2:
2009ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையில் தமிழர்கள் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட் டனர். பாதுகாப்பு வளையங்கள் (ளுயகநவல ஷ்டிநேள) என அறிவிக்கப்பட்ட பகுதிகளிலும், மருத்துவமனை களிலும்கூட, குண்டுகள் வீசப்பட்ட கொடூரம் உலகின் வேறெந்தப் போரிலும் நடை பெற்றிராத அரச பயங்கரவாதம் என்றே கூற வேண்டும். அந்தப் போர்க் குற்றங்கள் வெளியுலகுக்குத் தெரிந்து விடாமல் தடயங்கள் அனைத்தையும் அழிக்கும் முயற்சிகளும் நடைபெற்றுள்ளன.
இத்தகவல்கள் அனைத்தையும், அய்.நா. அவைப் பொதுச்செயலாளர் பான் கீ மூன் அவர்களால் அமைக்கப் பெற்ற, இந்தோனேஷியாவைச் சேர்ந்த தரூஸ்மான் தலைமையிலான மூவர் குழு தன் அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.
2011 ஏப்ரலில் பான் கீ மூன் அந்த அறிக்கையை வெளியிட்டுள் ளார்.
அவ்வறிக்கை வெளியாகி ஓராண்டு கடந்த பின்னரும், அங்கு நடந்த போர்க் குற்றங்களை ஆராய்வதற்குச் சுயேச்சையான சர்வதேசக் குழு அமைக்கப்படவில்லை.
பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்து நிற்கும் உலகத் தமிழினம் உரத்த குரலில் நீதி கோரும் கட்டத்திற்கு இன்று வந்துள்ளது.
அய்.நா. அவையின் மனித உரிமைக் குழுவின் சார்பில் சர்வதேசக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அங்கு நடைபெற்ற போர்க் குற்றங்கள் கண்டறி யப்பட்டு, போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று இம்மாநாடு அய்.நா. அவையை வலியுறுத்துகிறது.
தமிழ் இனத்தின் பண்பாட்டுக் கூறுகளை அழிக்கும் முயற்சியில்  இலங்கை அரசு
தீர்மானம் 3:
தமிழ் இனத்தின் பண்பாட்டுக் கூறுகளை அழித்து, அவற்றின் வேர்களையும் சிதைக்கும் கொடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு, அவர்களுடைய பூகோள அடிப் படையிலான வாழ்க்கை நெறிகளையும் அழிக் கும் முயற்சிகளை வேகப்படுத்தி வரும் இலங்கை அரசின் திட்டங்களில் ஒரு பகுதிதான் சிங்கள மக்களை ஈழப் பகுதிகளில் குடியமர்த்தும் முயற்சியாகும்.
ஈழத் தமிழர்களின் கல்விக் கூடங்கள், பெரும்புகழ் பெற்ற யாழ் நூலகம் ஆகியவை இலங்கை ராணுவத் தினரால் அழிக்கப்பட்டன. ஈழத் தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களான இந்துக் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள்  ஆகியவற்றையும் அழித்து வருவதோடு, தமிழர்களின் மொழி அடையாளமும் சிதைக்கப்பட்டு வருகிறது.
தமிழில் எழுதப்பட்டிருந்த கடைகள், நிறுவனங்கள், மற்றும் சாலைகளின் பெயர்கள் சிங்கள மொழியில் எழுதப் பட்டு வருகின்றன. இப்போக்கின் தொடர்ச்சியாக ஊர்ப் பெயர்களும் சிங்கள மயமாக்கப்படும் சூழல் நிலவுகிறது. இதனைத் தொடர்ந்து சிங்களவர்கள் அங்கு குடியேறுவதற்கேற்ற வகையில் அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கான கட்டமைப்புகளை வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இலங்கை அரசு உருவாக்கி வருகிறது.
ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் தமிழர் தலைவர் சிறப்புரை (சென்னை - 12.8.2012)

இந்தியாவில் இலங்கை இராணுவத்திற்குப் பயிற்சி அளிக்கக்கூடாது!

இதன் மூலம் இலங்கையில் பன்னெடுங் காலமாகத் தங்கள் தனித் தன்மையைப் பாதுகாத்து வாழ்ந்து வந்த தமிழர்களுக்கு ஆங்கிலேய ஏகாதி பத்திய அரசு செய்யத் துணியாத வன்செயலை ஒரு ஜனநாயக அரசு என்று வாய்ப்பறை கொட்டும் இலங்கை அரசு செய்து வருவது கண்டிக்கத்தக்க தும் உலகத்தால் ஏற்றுக் கொள்ள இயலாததும் ஆகும். இலங்கை அரசின் இத்தகைய கொடுஞ் செயல்களை உலக நாடுகளின் பிரதிநிதியாக விளங்கும் அய்.நா.மன்றம் உடனடியாகத் தடுத்து  நிறுத்திட வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. சமத்துவமும் அமைதியும் நிறைந்த  வாழ்வு ஏற்பட இந்திய அரசு முனைந்து செயல்பட வேண்டும்.
ஈழத் தமிழர்களே முடிவு செய்ய வேண்டும்
தீர்மானம் 4 :
அண்டை நாடான இலங்கையில் அமைதியும் சமத்துவமும் நிலவுவதற்கு உரிய பணிகளை மேற்கொள்ள வேண்டிய கடமையும் உரிமையும் பொறுப்பும் இந்தியாவிற்கு உள்ளது.
பல்வேறு தேசிய இனங்கள், மதங்கள், மொழிகள் ஆகியனவற்றை உள்ளடக்கி ஜனநாயக மரபுகளைப் பாதுகாத்துவரும் இந்திய அரசு அண்டை நாடான இலங்கையில் இந்த நிலைக ளுக்கு எதிரிடையாக நடைபெறும் நிகழ்வுகளைக் கண்டும் காணாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி தமிழர் நெஞ்சங்களில் எழுந்துள்ளதை இம்மாநாடு இந்திய அரசுக்குச் சுட்டிக்காட்டுகிறது. எனவே, இலங்கையில் தற்போது நிலவி வரும் சூழ்நிலைகள் மாறி, ஈழத் தமிழ்மக்கள் அரசியல், பொருளாதாரம், பண்பாட்டு உரிமைகளை மீட்டெடுத்து சமத்துவ மும் அமைதியும் நிறைந்த வாழ்வை மேற்கொள்ள இந்திய அரசு முனைந்து, முழுமூச்சுடன் செயல்பட வேண்டும்.
இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வை தாங்களே முடிவு செய்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு முழு உரிமை வழங்குவதற்கு இந்திய அரசு அய்.நா. மன்றத்தில் தீர்மானம் கொண்டுவர  வேண்டு மென இம்மாநாடு  வலியுறுத்துகிறது.
ஈழப் பகுதிகளில் தமிழ் மக்களின் நிலங்கள் வன்பறிப்புக்கு உள்ளாகியுள்ளது
தீர்மானம் 5 :
இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் பெரும்பாலான தமிழ் மக்கள் அடிப்படை வசதிகள் எவையும் இல்லாது மரத்தடியிலும் திறந்த வெளிகளிலும் அவர்கள் உறவினர்களின்  தயவிலும் முடங்கிக் கிடக்கின்றனர். முகாம்களை விட்டு வெளியேற்றப்படும் குடும்பங்களுக்கு அளிக்கப் படும் உதவித் தொகை மிக மிகக் குறைவாக உள்ளது. அக்குடும்பங்கள் அடிப்படைத் தேவைகளுக்கே போராட வேண்டியுள்ளது. செய்வதற்கு வேலை ஏதும் கிடைக்காததால், மறு குடியமர்த்தப்பட்ட தமிழர்கள் வாழ வழியின்றி நரக வேதனை அனுபவிக்கின்றனர்.
ஈழப்பகுதிகளில் தமிழ் மக்களின் நிலங்களும் வீடுகளும் வன்பறிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சம்பூர், மன்னார், வவுனியா போன்ற பகுதிகளில் தமிழர் களுக்கு உரிமையான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன.  இவ்வாறு, வழி வழியாக வாழ்ந்து வந்த பகுதிகளில் தமிழ் ஈழ மக்கள் நிலங்களைப் பறிகொடுத்த நிலையில் சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழும் கொடுமைக்கு முடிவு கட்டும் முயற்சிகளை அய்.நா.
மன்றம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது.
இராணுவ ஆதிக்கம்
தீர்மானம் 6 :
இன்றைய இலங்கையில் ஜனநாயக ஆட்சி முறைக்குப் பதிலாக இராணுவத்தின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. இராணுவம், அதன் நடவடிக்கைகளுக்காக, தமிழர் பகுதிகளில் தமிழர்களுக்குச் சொந்தமான ஏராளமான வீடுகளை கையகப்படுத்திக் கொண்டுள்ளது. காலியாக உள்ள வீடுகளைத் தன் கட்டுப்பாட்டில் மேற்கொள்ளும் இராணுவம், அவற்றைக் காலி செய்ய மறுக்கிறது. இராணுவத்தின் அனுமதியின்றி வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழர்களின் வீடுகளில் எந்த சமூக நிகழ்ச்சிகளும் நடத்த முடியாது.
இலங்கை  ராணுவத்தின் வன்முறையால் தமிழர்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர் இராணுவத் தினரே அங்கு மாவட்ட ஆட்சியராகவும் அரசு நிருவாகிகளாகவும் நியமிக்கப்படுகின்றனர். இன் றையத் தமிழ் ஈழம் ஓர் இராணுவ முகாம் போலக் காட்சியளிக்கிறது.
ஜனநாயக அடிப்படையிலான உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால் அங்குள்ள தமிழர் களுக்குத் தங்களது குறைகளை எடுத்துக் கூறவும், பேசவும், அமைதியான முறையில் போராடவும் வழியில்லை.  அவர்கள் எப்போதும் பெரும் பீதியில் உறைந்து கிடக்கின்றனர். தமிழீழப் பகுதியிலிருந்து  ராணுவத்தை இலங்கை விலக்கிக்கொள்ள அய்.நா. நடவடிக்கை! தமிழ் இளைஞர்கள் பலர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளனர்.
பலர் சித்திர வதை முகாம்களில் சொல்லொணாத வேதனைக்கும், துயரத்துக்கும் ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். தமிழ்ப் பெண்கள், இராணுவப் படையினரால் பாலியல் வன்முறை உள்ளிட்ட பல கொடுமைகளுக்கு ஆளாக் கப்படுகின்றனர்.  தமிழ்க் குழந்தைகள் துப்பாக்கி களைப் பார்த்துக் கொண்டு, இராணுவப் படையினர் கட்டவிழ்த்து விடும் வன்முறையால் பாதிக்கப்பட்டு, முடிவில்லாத அச்சத்துடன் வாழ்கின்றனர்.
போரின் பின் விளைவாக ஏறத்தாழ 90 ஆயிரம் தமிழ்ப் பெண்கள் விதவைகளாக ஆக்கப்பட்டுள் ளனர் என்று இங்கிலாந்து அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் 2011ஆம் ஆண்டு அறிக்கை கூறுகின்றது. இருண்டு கிடக்கும் அவர்களின் எதிர் காலத்தை மேலும் அச்சுறுத்தும் வகையில், அவர் களின் மீது சிங்கள இராணு வத்தினர் பாலியல் வன் முறைகள் உள்ளிட்ட பல் வேறு சித்திரவதைகளைச் செய்து வருகிறார்கள்.
எனவே தமிழீழப் பகுதிகளிலிருந்து உடனடி யாக  இராணுவத்தைச் சிங்கள அரசு விலக்கிக் கொள் வதற்கு அய்க்கிய நாடுகள் அவையும் உலக நாடுகளும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டு மென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. இராணு வத்தைத் திரும்பப் பெறுவதை நேரடியாகக் கண்காணிப்பதற்கு, அய்க்கிய நாடுகள் அவை ஒரு பன்னாட்டுக் குழுவை ஏற்படுத்த வேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
ஈழத் தமிழர்களின்  தொழில், வணிகம் சிங்களவர்களிடம் சிக்கித் தவிக்கிறது
தீர்மானம் 7 :
ஈழத் தமிழர்களின் தொழில், வணிக வாழ்வு முழுமையாகச் சிங்கள தலையீட்டில் சிக்கித் தவிக்கிறது. இராணுவம், குடிமக்கள் வாழ்க்கையில் அனைத்துப் பகுதிகளையும் ஆக்கிரமித்து, மொத்தப் பொருளாதாரத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. வேளாண்மை, காய்கறி விற்பனை, விடுதிகள், உணவகங்கள் மற்றும் முடிதிருத்த கங்கள் கூட இராணுவத்தினரால் நடத்தப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்லும் ஏ-9 நெடுஞ்சாலையில், முன்பு தமிழர்களின் பெட்டிக் கடைகள் பல இருந்தன;
விற்பனை செய்வோரும் இருந்தனர். தற்போது அவை அனைத்தும் சிங்கள முன்னாள் இராணுவப் படைவீரர்களால் ஆக்கிர மிக்கப்பட்டுள்ளன. நல்லூர் கந்தசாமிக் கோயில் உள்ள பகுதிகளில் கூட, சிங்களவர் கடைகள் அமைந்துள்ளன. தமிழீழப் பகுதியில் உள்ள தமிழர் களின் மூலவளங்கள் சுரண்டப்படுகின்றன. வடக்குப் பகுதியில் ஏராளமாகக் கிடைக்கும் சுண்ணாம்புக் கற்களைச் சிங்களர்கள் சுரண்டி எடுத்துச் செல் கின்றனர்.மணல் வளம் மற்றும் வனவளம் அனைத் தும் வடக்கு, கிழக்குப் பகுதிகளி லிருந்து தெற்கு நோக்கிச் செல்கின்றன.
இயற்கை தந்துள்ள கனிமவளங்களின் மீதான மண்ணின் மைந்தர்களின் உரிமைகள் இவ்வாறு மிகக் கடுமையாக மீறப்பட்டு வருகின்றன.
பன்னெடுங்காலமாகத் தமிழ் மீனவர்கள் வாழ்ந்து வந்த வடக்கு, கிழக்குக் கடலோரப் பகுதிகளில் சிங்கள மீனவர்கள் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாகத் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வலிந்து குடிய மர்த்தப்பட்டுள்ள சிங்களர்களை உடனே அப்பகுதி களிலிருந்து திருப்பி அனுப்புவதோடு, மீண்டும் தமிழர்கள் தங்களின் தொழில், வணிக மற்றும் மூலவள ஆதாரங்களின் மீது உரிமை கொண்டோ ராய் அறிவிக்கப்பட வேண்டும். தமிழர்களின் வாழ்வில் இயல்பு நிலை ஏற்படுத்தும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள, அய்.நா. அவை இலங்கை அரசை வலியுறுத்த வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 8 :
ஈழப் பகுதிகளில் நடைபெற்ற இராணுவத்தினரின் கொடூரத் தாக்குதல்களுக்கு அஞ்சி இலங்கையி லிருந்து வெளியேறி, பல்வேறு நாடுகளில் அகதி களாக அல்லலுறும் தமிழர்கள் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் சொந்த நாட்டைவிட்டு வெளியேறியதால் பிறநாடுகளில் கைதிகளாகச் சிறையில் வாடும் ஈழத் தமிழர்களை உடனடியாக, ஐக்கிய நாடுகள் அவையின் அகதிகளுக்கான ஆணையரிடம் (United Nations High Commissioner for Refugees) ஒப்படைப்பதற்குரிய நடவடிக்கை களை அய்.நா. மன்றம் மேற்கொள்ள வேண்டும்.
அவர் களுக்குத் தேவையான பொருளாதார உதவி களையும் பயண உரிம ஆவணங்களைப் பெற்றுத் தரும் பணியினையும் அய்க்கிய நாடுகள் அவையின் அகதிகளுக்கான ஆணையர் (UNHCR) மேற் கொள்ள வேண்டுமெனவும் இம்மாநாடு கேட்டுக் கொள் கிறது.
இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும்
தீர்மானம் 9 :
ஈழத்திலிருந்து வெளியேறி இந்தியாவில் அகதி களாக வாழும் தமிழர்கள் நிம்மதியாக வாழ்வதற்கு ஏதுவாக, மத்திய அரசு அனைத்து இலங்கை அகதிகளுக்கும் இந்தியக் குடியுரிமை அல்லது நிரந்தரமாக இந்தியாவில் வாழ்பவர் என்ற நிலை வழங்க வேண்டும் என்று இம்மாநாடு இந்திய அரசை வலியுறுத்துவதுடன்,  அகதிகள் தொடர் பான அய்க்கிய நாடுகள் மன்றத்தின் ஒப்பந்த ஆணை இந்தியாவில் பின்பற்றப்பட வேண்டும் என்றும் இந்த மாநாடு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 10 :
ஈழப் பகுதியில் வாழும் தமிழ் மக்களுக்கு அனைத்து அடிப்படை வாழ்வுரிமைகளும், ஜன நாயக உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படு வதற்கு முடிவு கட்டாதவரை இலங்கைத் தமிழர் களின் மறுவாழ்வு என்பது வெறும் கண்துடைப் பாகவும், தொலைதூரக் கனவாகவும் இருக்கும் என்று இம்மாநாடு கருதுகிறது. எனவே பின்வரும் செயல்பாடுகளே, ஈழத் தமிழர்களைச் சுயமரியாதை யோடும் உரிமையோடும் வாழவைக்கும் என்று இம்மாநாடு உறுதியாக நம்புகிறது.
இலங்கைத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்
(1) இலங்கைத் தமிழர்களிடம் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மூலம் பொது வாக்கெடுப்பு நடத்தப் பட வேண்டும். அது தெற்காசிய மனித உரிமைகள் பிரச்சினையாக முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்.
(2) கலாச்சாரத்தை இழந்து, எந்த இனமும், மக்களும் வாழவோ, தமது மொழியையும், அடை யாளத்தையும் பாதுகாக்கவோ முடி யாது. இலங்கை அரசு தமிழர் கலாச்சாரமும், மொழியும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும். ஆனால் இலங்கை அரசு, அவற்றை அழிப்பதற்கான அனைத்து முயற்சி களையும் மேற்கொண்டு வருகிறது என்பதே வருந்தத்தக்க உண்மையாகும். ஓர் ஆட்சி மொழிக்கு உரிய தகுதி தரப்படாமல், தமிழ் வலுவிழக்கச் செய்யப்பட்டு வருகிறது. தமிழர் களின் பாரம்பரியத்தை அழிக்க அனைத்து முனை களிலும் நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன.
(3) ஆயிரக்கணக்கான தமிழர்கள் சிறை பிடிக்கப் பட்டு இலங்கைச் சிறைகளில் அடைக் கப்பட் டுள்ளனர். அவர்கள் அனை வரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.
(4) தங்களது நாட்டை விட்டு உயிருக்குப் பயந்து, பாரம்பரியமான தங்களது வாழ்விடங் களை விட்டு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் குடியேறி வாழும் இலங்கைத் தமிழர்கள், தங்களது தாய் நாட்டுக்கு எவ்விதத் தடையுமின்றிப் பாதுகாப்பாக வந்து போக அனுமதிக்கப்பட வேண்டும்.
(5) தமிழ்க் குழந்தைகளின் எதிர்காலம் வளம் பெற; தமிழர் பகுதிகளில் கல்வி அறிவை மேம்படுத் துதல், வடக்கு - கிழக்கு மாவட்டங் களில் முழுமை யாகச் செயல்படக் கூடிய பள்ளிகள் மற்றும் பல் கலைக் கழகங்கள் நிறுவுதல் மற்றும் ஆசிரியர் பணி இடங்களை  நிரப்புதல் ஆகியவை முக்கியத் தேவை களாகும்.
(6) போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு  உயர்தர சேவைகளுடன் சிறப்பு மருத்துவ வசதிகள் உறுதி செய்யப்பட வேண்டும். குறிப் பாக, கண்முன்னே நடந்த போரினாலும்,  குடும்பங்களுக்கு நேர்ந்த இழப்பாலும் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள மனரீதியான அழுத்தங்கள் சரிசெய்யப்பட வேண் டும்.
(7)இலங்கை இராணுவத்தினரின் தாக்குதல் களால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் குடி யிருப்புகள், கடைகள், வணிக வளாகங் கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், சாலைகள் போன்ற வற்றைச் செப்பனி டவும், சீர் செய்யவும் உதவிடும் வகையில் இந்திய அரசு, ஈழத் தமிழர் மறுவாழ்வு நிதியாக வழங்கியுள்ள ரூ.500 கோடி மேற்காணும் பணிகளுக்காக உரிய முறையில் பயன்படுத்தப்பட வேண்டும்.
இத்தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதில் உலக நாடுகளுடன் இணைந்து இந்தியா தன் முதன்மைப் பங்கினை ஆற்ற வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
இலங்கை கடற்படையினால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுகின்றனர்
தீர்மானம் 11 :
இலங்கைத் தமிழர்களுக்கு பாதுகாப்பையும், நிவாரணத்தையும் உறுதிசெய்யும்போது, இலங்கைக் கடற்படையினால் இந்திய மீனவர்கள்மீது தொடுக்கப்படும் கொடுமைகளிலிருந்து அவர் களைப் பாதுகாப்பது நமது இன்றியமையாக் கடமையாகிறது. இலங்கை கடற்படையால் நிராயுதபாணிகளாக இருக்கும் அப்பாவித் தமிழக மீனவர்கள் ஈவிரக்கமின்றித் தாக்கப்படுகின்றனர்; கைது செய்யப்படுகின்றனர்;   சுட்டுக்            கொல்லப் படுகின்றனர்;
அவர்களது மீன்பிடிப் படகுகள் மூழ்கடிக் கப்படுகின்றன; அவர்கள் பிடித்த மீன்கள் கைப் பற்றப்படுகின்றன. தமிழ் மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் மனிதாபிமான மற்ற முறையில் நடத்தப்படுகின்றனர். இந்தியாவின் நிர்வாக எல்லைக்குட்பட்டி ருந்த கச்சத் தீவு இலங்கை அரசு வசம் ஒப்படைக் கப்பட்டதால், மீனவர்கள் அந்தப் பகுதிக்குச் சென்றாலே இலங்கை கடற்படையினர் அவர் கள் மீது தாக்குதல் நடத்தித் துன்புறுத்து கிறார்கள்.
இந்தக் கொடுமைக்கொரு முடிவுகட்ட, கச்சத் தீவை இந்தியா மீண்டும் தனது ஆளுகை யின் கீழ் கொண்டு வருவதோடு  தனுஷ்கோடி அல்லது மண்டபம் முகாமில் இந்தியக் கடற் படைத் தளம் ஒன்றை இந்திய அரசு நிறுவ வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
இலங்கை அரசின் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறது
தீர்மானம் 12 :
இலங்கைத் தமிழர்களைப் பாதிக்கக்கூடிய அளவிற்கு இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பயிற்சி கொடுப்பதை இந்த மாநாடு ஏற்க இயலாது என்பதோடு, இனி அப்படிப் பட்ட பயிற்சிகள் அளிப்பதை அறவே தவிர்க்க வேண்டுமென்றும் மத்திய அரசை இந்த மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 13 :
ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைப் பாதுகாப்புக் காகத் தாய்த் தமிழகத்தில் நடைபெறும் இந்த மாநாட்டினைச் சட்டவிரோதமானது என்றும், இந்த மாநாட்டிலே கலந்து கொள்வதற்காக, இலங்கை யிலிருந்து செல்பவர்கள்மீது கவனம் செலுத்தப்படும் என்றும் இலங்கை அரசின் சார்பில் மிரட்டலாக  அறிவித்துள்ளனர்.  இலங்கை அரசின் இந்த ஜனநாயக எதிர்ப்புத் தன்மையை  இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. அ.தி.மு.க. அரசின் தமிழீழ எதிர்ப்புப் போக்குக்கு கண்டனம்
தீர்மானம் 14 :
இலங்கைத் தமிழர் பிரச்சினையில்  எப்போதுமே  விரோதப் போக்கினைக் கடைப்பிடிக்கும் அ.தி.மு.க. வும்,  அ.தி.மு.க.  ஆட்சியாளர்களும் - அதன் தொடர்ச்சியாக  இப்போதும்  நாம்  நடத்த ஏற்பாடு  செய்த -  ஈழத்  தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்புக் காக  இலங்கை மற்றுமுள்ள  பல்வேறு  நாடுகளைச் சேர்ந்த  தமிழ்  உணர்வாளர்கள்,  ஆர்வலர்கள்  கலந்து கொள்ளும் மாநாட்டை  சென்னையில் நடத்துவ தற்குத் தடையாக பல்வகையானும்  இடையூறு களைச் செய்தனர். மேலும்  காவல் துறையின்  மூலம் அனுமதி மறுத்து,  நீதிமன்றம்  சென்றே  அனுமதி  பெற வேண்டும் என்னும்  நிலையினை உருவாக்கிய  தமிழக அ.தி.மு.க. அரசின்  தமிழீழ  எதிர்ப்புப் போக்கினை  இம்மாநாடு வன்மையாகக் கண்டிக் கிறது.
- இவ்வாறு மாநாட்டில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...