Saturday, July 21, 2012

பார்ப்பனர்கள் பார்வையில் ஈழத் தமிழர் பிரச்சினை!


பார்ப்பனர்கள் பார்வையில் ஈழத் தமிழர்கள் பிரச் சினை எப்படி இருக்கிறது என்பதற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் போதுமானவை. ஒன்று கல்கி இதழில் (22.7.2012) வெளிவந்துள்ள ஒரு கேள்வி பதில்:
கேள்வி: இலங்கை விமானப் படையினருக்கு சென்னையில் பயிற்சி அளித்தது குறித்து...
பதில்: பல காலமாகத் தரப்பட்டு வரும் பயிற்சி இது.
இந்நாள் ஜெயலலிதா, கருணாநிதி பிற எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை உணர்ந்து கொண்டு இலங்கை பயிற்சி விமானிகள் பெங்களூருவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் எங்குமே இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கக் கூடாது என்று ஜெ. குரல் கொடுத்திருக்கிறார். இதுபோன்ற எதிர்ப்புகளால் இலங்கைத் தமிழர் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படாது; அந்த இலக்கை அடைவது மேலும் கடினமாகும். தேவை சாணக்கியம் ஆத்திரமல்ல என்று கல்கி எழுதுகிறது.
துக்ளக் (25.7.2012) என்ன எழுதுகிறது?
கேள்வி: இலங்கை விமானப் படையினருக்கு சென்னையில் பயிற்சி அளிப்பதாக எழுந்துள்ள சர்ச்சைபற்றி...?
பதில்: என்னைப் பொறுத்தவரையில் சொல்கிறேன். இலங்கையும், இந்தியாவும் நட்பு நாடுகள்தான் அதுவுமின்றி இரண்டு நாடுகளும் சார்க் அமைப்பில் இடம் பெற்றிருக்கின்றன. அந்த அமைப்பில் ஒரு நாட்டுக்கு இன்னொரு நாடு இந்த மாதிரி பயிற்சிகளில் உதவுவது என்பது வழக்கம் என்று தெளிவாக்கப் பட்டிருக்கிறது. அப்படியிருக்க இலங்கை விமானப் படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்பட்டது என்பது ஆட்சேபத்துக்குரிய விஷயமல்ல என்பது என் கருத்து என்று துக்ளக்கில் திருவாளர் சோ. ராமசாமி எழுதுகிறார்.
இலங்கையும், இந்தியாவின் நட்பு நாடாம், சார்க் அமைப்பில் உள்ள நாடுகளாம்; அதனால் இத்தகைய இராணுவப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றனவாம். நட்பும், சார்க் அமைப்பில் இருக்கிறோம் என்ற உணர்வும் என்ன ஒரு வழிப்பாதை தானா? இந்தியாவுக்கு இருக்கும் அதே உணர்வு. இலங்கைக்கு இருக்க வேண்டாமா? அப்படி ஓர் உணர்வு இலங்கைக்கு இருந்திருக்குமானால் இந்தியாவில் வாழும் தமிழர்களின் தொப்புள் கொடி உறவுக் காரர்களான ஈழத் தமிழர் பிரச்சினையில் இலங்கை மூர்க்கத்தனமாக நடந்து கொள்ளுமா?
பல்லா யிரக்கணக்கான மக்களை நெஞ்சில் ஈரம் சிறிதுமின்றிக் காக்கை குருவிகள் போல சுட்டுத்தான் தள்ளுமா? இலங்கை இராணுவ வீரர்களுக்கு இந்தியா அளிக்கும் பயிற்சி ஈழத் தமிழர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியவை எனத் தெரிந் திருந்தும், கல்கி துக்ளக் கூட்டம் இப்படி எழுதுகின்றன என்றால், அவர்களின் உணர்வு என்பது தமிழினப் பகையைச் சார்ந்தது என்பது விளங்கவில்லையா?
தமிழ்த் தேசியம் என்று பார்ப்பனர்களை மடியில் தூக்கி வைத்துக் கொள்ளும் கும்பல் இதுபற்றி சிந்திக்க வேண்டாமா? உலகில் வேறு எந்த நாடுகளாவது தங்கள் நாட்டு மக்களைக் கொல்லுவதற்கு எதிரி நாட்டுக்கு இராணுவ உதவிகளை வாரி வழங்குமா? ஈழத் தமிழர்கள் பிரச்சினையில், தமிழ்நாட்டு மக்கள்தம் குரலின் நிர்ப்பந்தத்துக்குக் கட்டுப்பட்டு இந்தியா எப்பொழுதாவது குரல் கொடுக்கும் பொழுது துக்ளக் கூறும் அந்த நட்பு நாடு அதனை மதித்ததுண்டா?
ஈழத் தமிழர்ப் பிரச்சினை ஒருபுறம் இருக்கட்டும்; இந்தியாவுக்கு எதிரி நாடாக சிந்திக்கின்ற, செயல்படுகிற சீனாவுக்கு உற்ற தோழனாக இன்னும் சொல்லப் போனால் சீனாவுக்குக் கட்டுப்பட்ட நாடாக இருக்கிறதே இலங்கை - அதைபற்றியெல்லாம் கல்கி துக்ளக் கூட்டத்துக்கு அக்கறை கிடையாதா? மகன் செத்தாலும் பரவாயில்லை, மருமகள் விதவை யாக வேண்டும் என்று கருதுகிற குரூர மனப்பான்மை தான் பார்ப்பனர்களின் குணம் என்பது விளங்கிட வில்லையா!?
ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் எப்பொழுதும் தமிழர்களுக்கு விரோதமான சிந்தனையில் மூழ்கிக் கிடக்கும் இந்தப் பார்ப்பனக் கும்பல், இந்தப் பிரச்சினையில் வேறு விதமாக சிந்திக்கும் என்று எதிர்பார்க்க முடியுமா? செம்மொழியானாலும், தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டானாலும், பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறப்பதானாலும் பார்ப்பனர்களுக்கு வயிறு எரிவதேன்? ஈழத்தில் பத்து பார்ப்பனக் குடும்பம் சுட்டுக் கொல்லப் பட்டு இருந்தால் கல்கி துக்ளக் கூட்டம் இப்படி எழுதுமா? தமிழர்களே, சிந்திப்பீர்!


JULY 16-31


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...