Monday, July 16, 2012

மதுப் பழக்கத்தால் வரும் கல்லீரல் இறுக்கிநோய்


இன்னும் சில ஆண்டுகளில் தமிழகத்தில் எங்கும் பரவலாகக் காணப்படப்போகின்ற நோய் கல்லீரல் இறுக்கி நோய். இப்போதே ஆங்காங்கே தலை தூக்கத் தொடங்கியுள்ளது. இப்போது விளம்பரமாகவில்லை. ஆனால் இன்னும் சில ஆண்டுகளில் கல்லீரல் இறுக்கி நோய் என்பதே பேச்சு எனும் சொல் கேட்கலாம்.
இதற்கு முதன்மைக் காரணம் தமிழக அரசுதான். மது அரக்கன்தான். மருத்துவம் பயிலுபவர்கள் கல்லீரல்துறையைத் தேர்ந் தெடுத்தால் போதும், ஒவ்வொரு மருத்துவரும் கோடீசுவரர் ஆகும் வகையில் நோயாளிகள் குவிவார்கள். மது அரக்கனால் விளையும் கொடுமையின் விளைவு இது.
கல்லீரல் இறுக்கி நோய் ஏற்படுவதற்கு மிகவும் முதன்மையான காரணங்களில் ஒன்று மது. தொடர்ந்து குடிக்கையில் அது கல் லீரலைப் பாதிக்கிறது. இதனால் கல்லீரல் செல்கள் நலிந்து கல்லீரல் இறுக்கி நோய் ஏற்படுகிறது.
அதிகமாக மதுவைக் குடிக்கையில் கல் லீரலில் அது முதலில் கொழுப்புகளைப் படிய வைக்கும். அந்நிலையில் மது அருந்துவதை நிறுத்திவிட்டாலும் கூடப் பயன் கிட்டலாம். ஆனால், அதற்குப் பிறகும் தொடர்ந்து குடிக்கும்போது பெரிதும் பாதித்துக் கல்லீரல் இறுக்கி நோயை ஏற்படுத்தி விடுகிறது.
கல்லீரல் இறுக்கி நோயில் கல்லீரல் செல்கள் பல்வேறு காரணங்களால் பாதிப்படைந்து தன் இயல்புத் தன்மையை இழந்துவிடும். இதனை ஈடு செய்ய அங்கே புதிய கல்லீரல் செல்கள் உருவாகும். சிதைந்த பகுதியைச் சுற்றி இணைப்புத் திசுக்களில் இருந்து நார்ப் பொருள்கள் மிகுந்து கல்லீரலை அழுத்தும். இதனால் கல்லீரல் செயல்பாடு தடைப்படும். கல்லீரலுக்கு வரும் இரத்தக் குழாய்களில் செல்லும் இரத்த ஓட்டத்தில் மாறுதல்கள் ஏற்படும்.
கல்லீரல் இறுக்கி நோய் ஆண்களுக்கு மட்டு மல்லாமல் பெண்களுக்கும் ஏற்படும். நீண்ட காலமாகப் பித்தநீர் வடியாமல் தடை ஏற்பட் டால் கல்லீரல் இறுக்கி நோய் பெண்களுக்கு ஏற்படும். இவ்வகை பெண்களுக்கே உரியது ஆகும். கல்லீரல் இறுக்கி நோய் மதுவினால் மட்டுமல்லாது வேறு காரணங்களாலும் ஏற் படும்.
கல்லீரல் இறுக்கி நோயை வைரஸ் கிருமிகளும், அதாவது கல்லீரல் அழற்சி வைரஸ் கிருமிகளான பி, சி, டி வகை வைரஸ்களும் கல்லீரல் இறுக்கி நோயை ஏற்படுத்தும்.
கல்லீரல் அழற்சி வைரஸ்கள் ஏ, பி, சி, டி, ஈ ஆகியவை முதன்மையானவை. ஏ, ஈ வைரஸ்கள் கல்லீரலைப் பாதித்த போதும் நீண்ட நாட்கள் கல்லீரலில் இருப்பதில்லை. இவற்றால் ஏற்படும் அழற்சி ஜலதோஷம் போன்று தானே சரியாகிவிடும். இவை தூய்மையில்லாத உணவு விடுதிகளில் சாப்பிடுகிறவர்களுக்கு தூய்மையற்ற நீரைக் குடிப்பவர்களுக்கு ஏற்படுகின்றன.
ஆனால் பி, சி வகை கல்லீரல் அழற்சி வைரஸ் கிருமிகள் கல்லீரலைப் பாதிப்பதோடு அங்கேயே தங்கிக் குடி இருக்கின்றன. இதனால் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு கல்லீரல் இறுக்கி நோய் ஏற்பட்டுவிடும். இவை ஒரு முறை நுழைந்தால், எய்ட்ஸ் கிருமிகள் போல உடலை விட்டு அகலாது இரத்தத்தில் தொடர்ந்து காணப்படும்.
மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டால் எந்த வைரஸ் கிருமிகளால் ஏற்பட்ட பாதிப்பு என்று கண்டறியவேண்டும். பி, சி வகை வைரசுகளால் ஏற்பட்ட பாதிப்பு என்றால் கல்லீரல் இறுக்கி நோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே அடிக்கடி பரிசோதிப்பது மிகவும் இன்றியமையாதது. ஏனென்றால் இதனால் கல்லீரல் இறுக்கி நோய் மட்டுமல்லாது, கல்லீரல் புற்று நோயும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
மதுவினால், மஞ்சள் காமாலை நோயினால் மட்டுமல்லாது பல்வேறு பிறவிக் கோளாறு களினாலும் கல்லீரல் இறுக்கி நோய் ஏற்படும்.
உணவில் புரதத் சத்துக் குறைபாடும் காரணம் ஆகின்றனது. மெத்தியோனிஸ், கோலின் குறை பாடு, கொழுப்புச் சத்து மிகுதி ஆகியனவும் காரணமாதலை மருத்துவ ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.
மலேரியா, வயிற்றுக் கடுப்பு ஆகிய தொல்லைகளாலும், சிஸ்டோ சோமா வகைப் புழுக்களினாலும் கல்லீரல் இறுக்கி நோய் ஏற்படலாம். அஃல்பாடாக்கின் நச்சுப் பொருள்கள் கல்லீரலில் பாதிப்பு ஏற்படுத்திக் கல்லீரல் இறுக்கி நோயை ஏற்படுத்துகின்றன.
இந்நோயின் அறிகுறிகளாக வயிற்றுப் பகுதியில் நீர் தங்கும், காலில் வீக்கம் ஏற்படும், இரத்த வாந்தியும் ஏற்படலாம்.
இதனால் கைப்பகுதி, தோல் ஆகியவற்றில் இரத்த நாளங்களின் புடைப்பு வெளியே தெரியும்.
ஆண்களுக்குப் பெண்களைப் போல் மார்பகம் பெரிதாகும். விதைப்பை சிறிதாக அமுங்கும்.
சிலருக்கு மண்ணீரல் வீக்கமும், தலைமுடி கொட்டுதலும் ஏற்படும்.
கல்லீரல் சிரை இரத்தக் குழாயின் அழுத்தம் மிகுதியாகும்.
கல்லீரல் பாதிப்பினால் மூளை பாதிப்பு, துளை விழுதல், காச நோய், நிமோனியா ஆகிய தோற்று நோய்களின் பாதிப்பு ஆகியன ஏற்படக்கூடும்.
கல்லீரல் இறுக்கி நோய்க்கு இதய நோய்களும் காரணமாகின்றன என்பதும் கூறப்படுகிறது. கல்லீரலில் இரத்தம் முறையாக வெளியேறாமல் தங்கி, அங்குள்ள இணைப்புத் திசுக்களைத் தூண்டிக் கல்லீரல் இறுக்கி நோயாகிறது.
காசநோய் போக்குவதற்கு அய்சோநியாட் எனும் மருந்தும், இரத்த அழுத்தத்திற்கு மித்தேல் மோப்பர், மித்தோ டிரிச்சேட் ஆகிய மருந்துகளும் அளிக்கப்படுகின்றன. இந்த மருந்துகளின் பக்க விளை வாகச் சில வேளைகளில் கல்லீரல் இறுக்கி நோய் ஏற்படும்.
கல்லீரல் இறுக்கி நோய் என்று கண்ட றிந்த பின்னர் வீட்டில் வைத்துச் சிகிச்சை மேற்கொள்ளாமல் மருத்துவ மனையில் சேர்க்க வேண்டும். நல்ல உணவு அளிக்க வேண்டும். நாம் உட்கொள்ளும் உணவில் குறைந்த அளவு 2000 கலோரி சத்து உடலுக்குக் கிடைக்க வேண்டும். கொழுப்பு, கார்போ ஹைட்ரேட் ஆகியன தேவையான அளவு அளிக்க வேண்டும். புரதச் சத்து தினமும் 100 கிராம் அளவில் கொடுக்க வேண்டும்.
வயிற்றுப் பகுதியில் நீர் தங்கி யிருக்கும். ஆகையால் அவ்வாறு தங்கிய நீரை வெளியேற்ற மருத்து வர்கள் ஸ்பைநோலாக்டேன் எனும் மருந்தை அளிப்பர். சிலருக்கு ஸ்டீ ராய்டு வகை மருந்துகளும், உடலின் எதிர்ப்புத் திறனைக் குறைக்கும் மருந்துகளும் அளிப்பர்.
எதனால் இப்பாதிப்பு என்பதைக் கண்டறியவேண்டும். மது அருந்தும் பழக்கம் உள்ளவரானால் மதுப் பழக்கத்தை முழுமையாக நிறுத்தாமல் எவ்வித மருந்தும் மாத்திரையும் பயனளிக்காது.
கல்லீரல் இறுக்கி நோய் பெரிதும் ஆண்களைப் பாதிக்கும் நோய். எனவே கவனமாக இருக்க வேண்டி யது ஆண்களே. எனினும் பெண்கள் ஆண்களை இதிலிருந்து விடுவிக்க அன்பால் அரவணைப்பால் முயல வேண்டும்.

- டாக்டர் ம. தென்றல்


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...