Tuesday, July 31, 2012

சுற்றுலாத் துறை சார்பில் அம்மன் கோயில் சுற்றுலாவாம்


தமிழ்நாடு அரசின் சுற்றுலா சார்பில் (ஆடி மாதத்தில்) 108 அம்மன் கோயில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். கடந்த ஆண்டு முதல் அமைச்சர் ஜெயலலிதா அம்மையாரின் சிறப்பு ஆணைப்படி இத்தகைய சுற்றுலா மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம்.
முதலில் ஒன்று தெளிவுபடுத்தப்பட வேண்டும். ஓர் அரசுத் துறை குறிப்பிட்ட மதத்தை முன்னிறுத்தி மதம் தொடர்பான சுற்றுலாவை மேற்கொள்வது சட்டப்படி சரியானதுதானா? மதச் சார்பின்மை  என்பதுதானே ஓர் அரசின் சட்டப்படியான நிலை! அப்படியிருக்கும்பொழுது சட்ட விரோத மாக ஒரு முதலமைச்சரே இத்தகைய ஆணையைப் பிறப்பிக்கலாமா?
இரண்டாவதாக கொள்கை என்று பார்த் தாலும்கூட அண்ணா பெயரைத் தாங்கியுள்ள ஒரு கட்சி - அதன் ஆட்சி இத்தகு செயல் பாடுகளில் இறங்கலாமா? அறிஞர் அண்ணா அவர்களும் முதல் அமைச்சராக இருந்துள் ளார். இதுபோன்ற தவறான வழியைக் காட்டியுள்ளாரா?
மூன்றாவதாக, இந்திய அரச மைப்பு சட்டப்படி மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை உண் டாக்க வேண்டியது (51A(H) ஒவ் வொரு குடிமகனின் கடமை என்கிற போது அதற்கு மாறாக மூடநம் பிக்கைக்கு ஆக்கம் தேடிட அரசு முனையலாமா?
நான்காவதாக இந்த ஆடி சுற்றுலாவால் என்ன பயன்? அம்மன் கோயில்களைச் சுற்றி வருவதால் காவிரி நீர்ப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினைகள் தீர்ந்து விடுமா? தனிப்பட்டவர்களுக்குத் தான் என்ன பலன்?
வீண் செலவு, கால விரயம், புத்தி நாசம் என்பதல்லாமல் வேறு என்னவாம்?
மழை வேண்டி பூஜை கருநாடக மாநிலத்தில்
கருநாடக மாநிலத்தில் பி.எஸ். எடியூரப்பா, சதானந்தகவுடா, இவர் களைத் தொடர்ந்து ஜெகதீஸ் ஷெட்டர் முதல் அமைச்சராக ஆகி இருக்கிறார்.
கருநாடக மாநிலத்தில் கடும் வறட்சி நிலவுகிறதாம். மழை தேவைப் படுகிறதாம். வருண பகவானுக்குப் பூஜை நடத்திட ரூ.17 கோடியை மாநில அரசு ஒதுக்கியுள்ளதாம்.
எடியூரப்பா முதல் அமைச்சராக  வந்தவுடன் இப்படித்தான் ஒரு வேலையைச் செய்தார். இந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ள அனைத்துக் கோயில்களிலும் தனது பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட வேண்டும் என்பதுதான் முதல் சுற்றறிக்கை; இதனை எதிர்த்து பகுத்தறிவாளர்கள் குரல் எழுப்பிய நிலையில் திட்டம் கைவிடப் பட்டது. இருப்பினும் தனிப்பட்ட வகையில் கோயில் கோயிலாகச் சுற்றித் திரிந்தவர்தான் அவர். ஒரு கல்லில் கூட மோதிக் கொண்டார் என்றாலும் விளக்கெண்ணெய்க்குக் கேடாக ஆனதே தவிர பிள்ளை பிழைத்தபாடில்லை.
பிரதமராக இருந்த தேவேகவுடா சுற்றாத கோயிலா? நாமக்கல் சோதி டரை மாதம் தவறாமல் சந்திப்பாரே! - பிள்ளை பிழைத்ததா? இந்த 21ஆம் நூற்றாண்டில் மழை பொழிவதற்குப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நம்புவதும், அதற்காக மக்கள் வரிப் பணத்தை ரூ.17 கோடியை நாசமாக்குவதும் கிரிமினல் குற்றமல்லவா!
எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது புழல் ஏரியில் பிரபல பிடில்வித்வான் குன்னக்குடி வைத்தியநாதன் அய் யரை விட்டு அமிர்தவர்ஷினி ராகம் வாசிக்கச் செய்யப்பட்டதே! ஒரே ஒரு சொட்டு மழை பெய்ததுண்டா?
மழை பொழிவது எப்படி என்று எல்.கே.ஜி. படிக்கும் மாணவனைக் கேட்டால் பளிச் சென்று பதில் சொல்வானே! மெத்தப் படித்த வர்கள் பக்தியால் புத்தியை இழந்து இப்படி மக்கள் வரிப் பணத்தை நாசமாக் குவது தடுக்கப்பட்டாக வேண் டாமா? எந்த இடத்துக்கு வந்தாலும் தந்தை பெரியார்தான் முதலில் நிற்கிறார். பக்தி வந்தால் புத்தி போகும் - புத்தி வந்தால் பக்தி போகும்.


JULY 16-31



No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...