Wednesday, August 1, 2012

முகலாய மன்னர்களின் நீதி


பாபர் தனது மகன் ஹுமாயூனுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அது பாரசீக மொழியில் எழுதப்பட்டுள்ளது. போபால் அரசு நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவர் எழுதியதாவது:-
ஓ என் மகனே! இந்தியாவில் பல மதங்களைப் பின்பற்றுவோர் வாழ்கிறார்கள். இந்த நாட்டின் அரசாங்கம் உன்னிடம் ஒப்படைக்கப் பட்டிருப்பதற்கு ராசாக்களின் ராசாவாகிய கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும். கீழ்வரும் கடமைகளை நீ நிறைவேற்ற வேண்டும்.
1. மத உணர்வுக்கு உரிய மதிப்புக் கொடு.  மத மாச்சரியங்களுக்கு உனது மனது ஆட்பட அனுமதிக்காதே. சார்பற்ற நீதி வழங்கு.
2. பசுக்களைக் கொல்வதைத் தவிர்த்துவிடு. இது இந்திய மக்களின் இதயங்களில் இடம் பிடிக்க உனக்கு உதவும். இதன் மூலம் நன்றிக் கடனாய் நீ இந்த மக்களுடன் பிணைக்கப்படுவாய்.
3. எந்த ஒரு சமூகத்தின் வழிபாட்டுத் தலத்தையும் நீ சிதைக்கக் கூடாது.
எப்போதுமே நீதியை நேசிப்பவனாக இரு.
அது ராசாவுக்கும் மக்களுக்கும் இடையே நல்லுறவைப் பராமரிக்கும்.
அதன்மூலம் பூமியில் அமைதியும் திருப்தியும் நிலவும்.
4. இஸ்லாமைப் பரப்பும் பணியை ஒடுக்குமுறை வாளால் செய்வதைவிட அன்பு வாளால் செய்வது நல்லது.
5. ஷியாக்களுக்கும் சன்னிகளுக்கும் இடையிலான வேறுபாடுகளைப் புறக்கணித்திடு. இல்லையெனில் அது இஸ்லாமிற்கு பலவீனத்தைத் தரும்.
6. உனது குடிமக்களிடம் உள்ள பல்வேறுபட்ட தனித்தன்மைகளை ஓராண்டில் வரும் பல்வேறு பருவங்களாகப் பார். அதுவே அரசு நிர்வாகத்தில் வியாதியைக் கொண்டு வராது.
இவ்வறிவுரை ஹுமாயூனுக்கு மட்டுமல்ல. அவர் வழிவந்தவர்களும் அவுரங்கசீப்பின் ஆரம்ப நாட்கள் வரை கடைப்பிடிக்கப் பட்டிருப்பது வரலாறு. இந்தக் காலங்களில் கோயில்கள் இடிக்கப்படவில்லை. பசுவதை தவிர்க்கப்பட்டுள்ளது.(338)
ஷெர்ஷா:
குறுகிய கால _ அய்ந்து ஆண்டுகள் மட்டுமே - ஆட்சிதான். அரச வம்சம்கூட இல்லை. ஆனால் ஆட்சிமுறை, நிர்வாகம், நீதி வழங்கல், வரிவசூல் முதலியனவும்  இவற்றிலான சீர்திருத்தங்கள் இவற்றை எல்லாம் நோக்க பல வரலாற்று அறிஞர்கள் வானளாவப் போற்றுகின்றனர். மக்கள் நலனை முன்னிறுத்தி ஆட்சி செய்தவர் என்கின்றனர்.
இவருக்கு உவமையாக பிரான்சை ஆண்ட 14அம் லூயி, இரசியாவை ஆண்ட மகா பீட்டர், பிரசியாவை ஆண்ட மகா பிரடரிக் முதலியவர்களைக் கூறுகின்றனர்.
நான்கு நெடுந்தொலைவு சாலைகளை அமைத்தவர் இவரே. 1. வங்காள சோர்கானிலிருந்து மேற்கே சிந்து நதி வரை 1500 மைல் நீளம். 2. ஆக்ராவிலிருந்து பிரகான்பூர் வரை மட்டுமல்ல. சாலைகள் அத்தனையிலும் 1700 சத்திரங்களைக் கட்டி இந்து முஸ்லீம்களுக்குத் தனித்தனி தங்கும் விடுதிகளும் சத்திரத்தின் வாயிலில் குடிநீர் பானைகளும் இந்துக்களுக்கு உணவளிக்க பார்ப்பன சமையற்காரர்களையும் ஏற்பாடு செய்திருந்தார். (எஸ்.ஆர். சர்மா தரும் தகவல்) (345)
நீதி வழங்குவதில் கண்டிப்பானவர். அதிகார வர்க்கத்தையும் பெருஞ் செல்வர்களையும் (இந்திய அரசு போல் அல்லாது) குற்றத்திலிருந்து தப்பிச் செல்லவிட மாட்டார். ஏழைகளுக்கு நீதி எளிதில் கிடைக்கச் செய்தார். உறவினர், உயர்ந்தோர் என்பதற்காக நீதியைச் சாய்க்காமல் அவர்களைத்தான் அதிகம் தண்டிப்பார். ஏழை வேளாளனுக்கு மேலான நீதி கிடைத்தது.
தப்காதி அக்பரி (Tabagat-i-Akbari) என்னும் நூலில் நைசாமுதீன் அகமது என்பவர் ஷெர்ஷாவின் ஆட்சியில் வணிகர்கள் தங்கள் பொருட்களை யாரும் கொள்ளையடித்து விடுவார்களோ என்ற பயமின்றி எங்கும் பயணம் செய்யலாம். பாலைவனத்திலும் தூங்கலாம். ஷெர்ஷாவின் தண்டனைக்குப் பயந்தும், நீதியைக் காக்க வேண்டுமென்ற பற்றுக்கொண்டும் திருடர்களே வணிகர்களின் பொருட்களுக்குக் காவலிருப்பார்கள் என்கிறார். (இன்றைய இந்திய ஊழல் ஆட்சியை எண்ணிப் பாருங்கள். யாருக்கும் வெட்கமில்லை!) _ இந்திய வரலாறு 3ஆம் தொகுதி _ பேரா.கோ.தங்கவேலு எழுதியது. பழனியப்பா பிரதர்ஸ் வெளியிடு _ 2002 பதிப்பு.
ஷெர்ஷாவின் ஆட்சிக் காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை வரலாற்றாளர் எர்ஸ்கின் விவரிக்கிறார். (344, 345)
ஷெர்ஷாவின் மூத்த மகன் அதல்கான் ஒரு நாள் யானை மீதேறி ஆக்ரா வீதிகளில் போய்க் கொண்டிருந்தபோது ஒரு கடைக்காரர் வீடு - சிதிலமடை மடை நிலை _ உரிய மறைப்புகள் இல்லாது கடைக்காரன் மனைவி ஆடையின்றி குளித்துக் கொண்டிருந்தவளைப் பார்த்த இளவரசன் அவள் அழகில் மயங்கி சிறிது நேரம் நின்று பார்த்ததோடு அவள்மீது ஒரு பீடாவை எறிந்துவிட்டுப் போய் விட்டான்.
அதிர்ந்து போன அப்பெண் கணவன் வந்ததும் தகவலைக் கூறித் தனக்கு மானபங்கம் ஏற்பட்டு விட்டதாகவும் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் கூறி அழுது ஆர்ப்பரித்தாள். கணவன் நேரே ஷெர்ஷாவிடம் சென்று புகார் கூறினான். ஷெர்ஷா என்ன செய்தான்? இஸ்லாம் சட்டவிதிகளின்படி தன் மகனுக்குத் தண்டனை தர வேண்டும் என்றான். அதாவது பதிலுக்கு பதில் (கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பது போல்) இளவரசனின் மனைவி ஆடையின்றி குளிக்க அதை அந்தக் கடைக்காரன் யானை மீதிருந்து பார்த்து அவள் மீது பீடாவை வீச வேண்டும் என்றான். (மனு நீதி கொன்ற சோழன் கதைபோல)
இதைக்கேட்டு அனைவரும் திடுக்கிட்டனர். பல பிரபுக்கள் சொல்லிப் பார்த்தும் ஷெர்ஷா இந்த முடிவிலிருந்து மாற மறுத்துவிட்டார். மன்னரின் நேர்மையைக் கண்டு அசந்துபோன கடைக்காரரே இறுதியில் புகாரைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்.
இவ்வாறு நீதி வழங்குவதிலும் வரி வசூல் முறையில் செய்த சீர்திருத்தங்களையும் ஆங்கிலேயர் ஆட்சியிலும் கடைப்பிடித்தனர்.  எனவேதான் வின்சண்ட் ஸ்மித் என்ற வரலாற்று அறிஞர்.
“No government not even the British government has shown so wisdom as this great pathan” என்று எழுதியிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
மேலும் தனது சொந்த குடிமக் களுக்கு எதிராக ஜிகாத் (புனிதப் போர்) தொடுத்ததில்லை. (346)
எத்தனை உயர்ந்த உள்ளம். மண்ணின் மைந்தர்களை அடியோடு அழிக்கப் போர் செய்த வந்தேறிகளுக்குத் துணைபோன _ இன்னும் ஆதரவுக் கரம் நீட்டும் இந்திய அரசை எண்ணிப் பாருங்கள். எத்தனை கொடுமை இது. எளிய ஷெர்ஷாவின் உயர்வும் முனைவர்களின் இழிவும் புரியும்.
மக்களுக்காக இலக்கியம் படைத்த கபீர்
சமஸ்கிருதம் கிணற்று நீர் என்றால்
மக்களின் மொழி ஓடு நதி என்றார்(197)
அமர்தாசு சீக்கிய மதப் பிரச்சாரத்தை மக்கள் பேசும் மொழியில் செய்தார். அதைக் கேட்ட பார்ப்பனர்கள் இவர் ஏன் சமஸ்கிருதத்தைக் கைவிட்டார்? என்று கேட்டனர். அதற்கு பதிலுரையாக அமர்தாசு கூறினார்.
கிணற்று நீரைப் பக்கத்து நிலத்திற்குத்தான் பாய்ச்ச முடியும். ஆனால் மழைநீர் கொண்டு உலகம் முழுவதிலும் விவசாயம் செய்யலாம் என்றார் (484)
கபீர் கூறியவை:
நீங்கள் உங்கள் இதயத்தைச் சிரைக்கவில்லை
உங்களது முடியை ஏன் சிரைக்கிறீர்கள்?
மனிதனின் பாவங்கள் அவனது இதயத்தின் வேலை
தலையைச் சிரைத்து என்ன பயன்?

புத்தகங்கள் ஒரு சிறை
அதன் கதவுகளில் இப்படி எழுதப்பட்டுள்ளது
கற்கள் உலகை மூழ்கடித்து விட்டன
பண்டிதர்கள் வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் (192)

கற்களைக் கும்பிடுவதன் மூலம்
கடவுளைக் காணமுடியும் என்றால்
நான் மலையைக் கும்பிடுவேன் (196)

பெற்றோர்கள் உயிரோடு இருந்தபோது
அவர்கள் பேச்சைக் கேட்கவில்லை
இறந்ததும் அவர்களுக்கு விருந்து படைக்கிறார்கள்
எலிகளும் நாய்களும் சாப்பிடுவது எப்படி அந்தப்
பரிதாபமான பெற்றோர்களுக்குப் போய்ச் சேரும்.  (186)

ஆதாரம் :- காலந்தோறும் பிராமணியம் பாகங்கள் 1 மற்றும் 2 :  அருணன் எழுதிய நூலிலிருந்து.

- ம.கிருஃச்ணமூர்த்தி

JULY 16-31


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...