Monday, July 9, 2012

ஜாதி'யின் வேர்ச்சொல் திராவிட மொழியில் இல்லை


-தொ.பரமசிவன்
இராஜ இராஜ சோழன் ஒரு பேராண்மை என்பதால், அவன் காலத்திலே தேட ஆரம்பிக்கிறோம். ஆனால், பல்லவர் காலத்திலேயே பார்ப்பனர்கள் வர ஆரம்பித்துவிட்டார்கள். கிராமம் என்பது கிரமம் என்ற சொல்லிலிருந்து வந்தது.
வேதத்தில் குறைந்த பட்சப் படிப்பு (அதாவது நம்முடைய 10வது, 12வது என்று வைத்துக் கொள்வார்கள்)
வரைக்கும் படித்ததற்கு கிரமம் என்றும் அவர்களுக்குத் தரப்பட்ட ஊரை, அதாவது வேதம் படித்தவர்கள் வாழும் ஊரை கிராமம் என்று அழைத்தார்கள். இது பல்லவர் காலத்திலே தொடங்கிவிட்டது.

இராஜ இராஜ சோழன் காலத்திலே காஷ்மீரிலிருந்து பார்ப்பனர்கள் அதிகமாக வந்தார்கள். அவர்கள் பெரும்பாலானோர் பிருகச்சரணம் என்று சொல்லக் கூடிய பிரிவாக இருந்தார்கள். பிருகச்சரணம் என்றால் பெரிய அளவில் இடம் பெயர்ந்தவர்கள் என்று அர்த்தம்.

நான்கு வேதம் படித்தவர்களை 'சதுர்வேதி' என்று அழைத்தார்கள். மூன்று வேதம் படித்தவர்கள் 'திரிவேதி' என்று அழைக்கப்பட்டார்கள். சோழர்கள் காலத்திலே வேதக் கல்வியை அரசாங்கம் ஊக்குவித்தது.
வேதமுறைகளைக் கற்றுத் தருவதற்கு அரசாங்கம் ஏராளமான மானியம் கொடுத்தது. ஏனென்றால் கோவில் நிர்வாகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு பார்ப்பனியம் தன்னை ஆழமாக நிலைநிறுத்திக் கொண்டது.

சோழர் காலத்துக் கல்வெட்டுகளில் கம்மாணச் சுடுகாடு, பறச் சுடுகாடு என்று சுடுகாட்டில் கூடச் சாதி வேறுபாடு இருந்தது. அதற்குச் சான்று கல்வெட்டுகளில் இருக்கிறது. கோவில் கலாச்சாரம் என்று உருவாகும்போது அதில் சாதி வேறுபாடு வருகிறது. ஏனென்றால் கோவிலுக்குள்ளே குறிப்பிட்ட சாதியினரே அனுமதிக்கப்படுகிறார்கள். சாதியின் பல்வேறு பண்புகளில் ஒன்றாக தீண்டாமை உள்ளது. கோவிலுக்குள்ளேயும், வீட்டுகளுக்குள்ளேயும், புறவெளியிலும் மக்களில் சிலருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஏழாம் நூற்றாண்டில் பல்லவச் செப்பேடுகளில் பார்ப்பன வீடுகளில் பின்புறம் உள்ள தென்னை மரம், பனை மரங்களிலே ஈழவர் மரம் ஏறக் கூடாது என்ற தடை இருந்தது. ஈழவர் என்பவர் வட மாவட்டங்களில் கள் இறக்கும் சாதியினர் ஆவர்.
######
ஜாதி என்ற சொல்லில் உள்ள ஜா என்ற வேர்ச் சொல் எந்த திராவிட மொழியிலும் கிடையாது. அது வடமொழியில் மட்டும் தான் இருந்தது. அதற்கு பிறப்பு என்று அர்த்தம். ஜா என்று சொன்னால் பிறப்பு வழிப்பட்டது. பத்மஜா என்றால் பத்மத்திலே பிறந்தவள். வனஜா என்றால் வனத்திலே பிறந்தவள். கமலஜா என்றால் கமலத்திலே பிறந்தவள். அந்த வேர்ச் சொல்லே தமிழ்ச் சொல்லாக இல்லாதபோது இன்றைக்கு இருக்கிற ஜாதி அமைப்பை நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

இரண்டாவது, சைவம் தான் தமிழ் மதம் என்பதை நிலைநிறுத்தும்போது பெரியார் கூட இருந்த சைவ அறிஞர்கள், குறிப்பாக மறைமலை அடிகள் போன்றோர் பார்ப்பன எதிர்ப்பு என்கிற அம்சத்திலே பெரியாரை ஆதரித்துக் கொண்டு, சைவ மதம் தான் தமிழர்களின் உண்மையான மதம் என்ற நிலை எடுத்தார்கள். 'பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்' என்று மறைமலையடிகள் ஒரு புத்தகமே எழுதினார். இந்தக் கருத்தோட்டத்தை ஆராய்ச்சியாளர்கள் யாருமே ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

உமா கூட தமிழ்ச் சொல் அல்ல. பார்வதியைக் குறிக்கும் இதன் தமிழ் வடிவம் உமை. இந்தச் சொல் ஹிமா என்ற வடசொல்லுடைய தமிழ் வடிவம். ஹிமா என்றால் பனி என்று அர்த்தம். ஹிமாத்திரி என்றால் பனிமலை, இமயமலை என்று அர்த்தம். ஹிமா என்ற சொல் தமிழில் உமா என்று ஆகிவிட்டது. ஹிமாலாய என்பது தான் உமா.
உமா தான் உமை; பார்வதியைக் குறிக்கும் பழைய சொல். பார்வதி என்பவள் இமயபர்வதத்தில் பிறந்தவள். முதலில் சைவ மதத்தின் வேர்கள் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது. அதே நேரத்தில் காஷ்மீரில் ஸ்ரீகண்டர் உருவாக்கிய பாசுபத சைவம் இங்கே வருகிறது. அதை வைத்துக்கொண்டுதான் சைவ தத்துவங்களை உருவாக்குகிறார்கள்.
ராஜ ராஜ சோழனின் குருமார்கள் எல்லாம் காஷ்மீர் சைவப் பண்டிதர்கள்தான். தஞ்சாவூர் கோவில் பாசுபத சைவ அடிப்படையில் கட்டப்பட்டது தான்; சித்தாந்த சைவம் அல்லது தமிழ்ச் சைவம் என்ற அடிப்படையில் கட்டப்படவில்லை. கோயில் உள்ளே போனால் பார்க்கலாம். அகோரம், வாமம், சதாசிவம், ஜாதம், ஈசானம் என்ற 5 மூர்த்தங்கள் இருக்கின்றன?. இதெல்லாம் பாசுபத சைவ நெறிகள்; தமிழ்ச் சைவ நெறிகள் அல்ல.
########
மொழி இனத்திற்கான முதல் அடையாளம். மொழி மட்டுமே இனத்துக்குரிய அடையாளம் ஆக முடியாது. ஒரு நிலப்பரப்பு, ஒரே வகையான பொருளாதார வாழ்க்கை முறை, ஒரே வகையான சடங்குகள், உறவு முறைகள் எல்லாம் சேர்ந்து தான் ஒரு இனத்தை அடையாளம் காட்ட முடியும்.
#########
திராவிடம் என்ற கருத்தாக்கம் உருவாவதற்கு அன்றைக்கு இருந்த அடிப்படையான காரணங்களில் ஒன்று காலனி ஆட்சியிலே ஏற்பட்ட சமூக மாற்றம். அதைவிட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மாநிலங்களுக்கு இடையே அடிப்படையிலே கலாச்சார ஒற்றுமைக் கூறுகள் உண்டு என்பதை மறந்துவிடக்கூடாது.
வட இந்தியர்கள் இந்த நாலு மாநிலத்தவர்களையும் ஒன்றாக 'மதராஸி' என்று குறிப்பிடுவது தற்செயலானதல்ல. தோற்ற அமைப்பில் இருக்கும் ஒற்றுமைதான் இவர்களை ஒரே இனமாக மற்றவர்களைப் பார்க்க வைக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் இந்த சமூகத்தில் எந்த ஜாதியாக இருந்தாலும் சில அடிப்படையான கலாச்சார ஒற்றுமைகள் உண்டு.
எடுத்துக்காட்டாக தாய்மாமன் மரியாதை என்பது இன்றும் நான்கு மாநிலங்களிலும் கடுமையாய் இருக்கிறது. ஆண்கள் மீசை வைத்துக் கொள்வது இந்த நான்கு மாநிலங்களில் மட்டுமே அதிகம் காணப்படுகிறது. அதே மாதிரி இறுதி மரியாதை, சடங்கியல் தகுதிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

பூர்வீகத்திலே அனைவரும் ஒரு மொழி பேசுபவர்களாக இருந்தார்கள் என்று கால்டுவெல் ஏற்கனவே நிருபித்து இருக்கிறார். அது உண்மை தான். ஒரு இனத்துக்காரர்களாய் இருந்தோம். ஏன் பிரிந்தோம் என்று தெரியவில்லை. வரலாற்றுத் தொடர்ச்சியும், காரணங்களும் தெரியவில்லை.

தமிழ்நாட்டில் இக்கருத்தை அரசியல் ரீதியாகவும் (Social Political Phenomenon) முன் வைத்தார்கள். அரசியல் ரீதியாக தோற்றுப்போய்விட்டதால் திராவிடக் கருத்தியலே தோற்றுப் போனது என்று சொல்ல முடியாது.
#########
ஆரியர் என்பது இனம் தான். குறிப்பாக இந்தோ-?ஆரியர் என்று இனமே இருக்கிறது. ஜெர்மனிக்கும் சமஸ்கிருதத்துக்கும் அடிப்படையிலே சில வேர்ச் சொற்களைக் கண்டு கொண்டதன் காரணமாகத்தான் மேக்ஸ்முல்லர் இந்தியாவை தன் பூர்வதேசம் என்று நினைக்கிறார்.
ஜா என்ற வேர்ச்சொல் ஆங்கிலத்தில் ஜி என்றும், சமஸ்கிருதத்தில் ஜாதி என்றும் இருக்கிறது. ஆரியர் உயர்வு வாதத்திற்கு அடித்தளம் இட்டவர் மேக்ஸ்முல்லர். அவர்தான் ஆரியர் இனம் ஆளப்பிறந்த இனம் என்று கூறினார். கீழைநாட்டு வேத நூல்களை இது தொடர்பாக மொழிபெயர்த்தார்.

ஆரிய இனத்திற்கு சில அடிப்படை மரபுகள் உண்டு. ஆரிய இனத்திற்கும் நமக்கும் வேறுபாடுகள் உண்டு. நாம் வெப்ப மண்டலத்திலே வாழ்கிறவர்கள். தமிழர்களும், மலையாளிகளும் நீரைக் கொண்டாடுவார்கள்.
நீர் சார்ந்த சடங்குகள், புனிதங்கள் நமக்கு அதிகம். கங்கைச் சமவெளியில் வாழ்ந்த ஆரியர்களுக்கு நெருப்பு சார்ந்த சடங்குகள் அதிகம். அவர்கள் தந்தை வழிச்சமூகம், நாம் தாய்வழிச் சமூகம். அவர்கள் கிராமப்புற நாகரிகம், நாம் நகர நாகரிகம்.
##########
சாதிப் பேர் இல்லாமல் இருக்கின்ற தைரியம் இந்தியாவிலேயே தமிழர்களுக்கு மட்டும் தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் எந்த வீட்டிலும் யாரும் நீங்கள் எந்த ஜாதி என்று விருந்தினரை விசாரிப்பதில்லை.
இஸ்ரோவின் தலைவர் மாதவன் நாயர், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், மிஸ்ரா, குப்தா என்று சாதிப் பெயர் இல்லாமல் மற்ற மாநிலங்களில் இருப்பதில்லை. நாம்தான் மூன்று தலைமுறைகளாகச் சாதிப் பெயர் துறந்து இருக்கிறோம். இது பெரியாராலேதான் சாத்தியாமாயிற்று.
பெரியார் தலித் மக்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்டார். இதனாலேயே பெரியாரை நிராகரிப்பது பார்ப்பனர்களுக்கு ஒரு நாகரிகமாக மாறிவிட்டது. லால்குடி தாலுகாவில் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்கள் மாநாடு 1925?ல் நடந்தது. அதை நடத்த விடாதபடி செயின்ட் ஜோசப் கல்லூரிப் பேராசிரியர்கள் முயற்சி செய்தார்கள்.
அப்போது திருச்சி கத்தோலிக்கர்களில் பெரும்பான்மையினராக வெள்ளாளர்களும், பார்ப்பனர்களும் இருந்தனர். வெள்ளாளர்களும் பார்ப்பனர்களும் லால்குடி தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவ மாநாடு நடக்க விடாமல் தடுக்க முயற்சி செய்தனர். ஆனால் மாநாடு நடத்த பெரியார் தொடர்ந்து உதவி செய்தார். எதிர்ப்புகளைக் கண்டித்து, தொடர்ந்து குடியரசு இதழில் எழுதினார்.

இப்படியாக பெரியார் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக இயங்குவதைப் பொறுக்க முடியாமல் 1933ல் கத்தோலிக்க மாநாடு கூட்டி பெரியார் இயக்கத்தைத் தடை செய்யவேண்டும் எனத் தீர்மானம் போட்டார்கள்.
அது மட்டுமல்லாமல் பெரியார் கடவுள் மறுப்புக் கொள்கை உள்ளவர், கத்தோலிக்க மதக் கொள்கைக்கு எதிராக செயல்படுகின்றார் என்று, சுதந்திரம் அடைந்ததலிருந்து பெரியாரை கத்தோலிக்கக் கல்லூரிகளில் நுழையவிடாமல் தடை செய்தார்கள். யார் பெரியாரை எதிர்க்கிறார்கள் என்பதை நாம் பார்த்தோமென்றால், பெரியாரின் வெற்றி புலப்படும்.
நன்றி: கீற்று இணையதளம் (keetru.com)

செய்திகளை பகிர்ந்து கொள்ள

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...