Monday, July 16, 2012

பெருந்தலைவர் காமராஜர்! வெளிவராத தகவல்கள்


ஜூலை 15: பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள்
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள். அதற்காக, குக்கிராமங்களிலும் கல்விக் கூட்டங்களை நிறுவச் செய்து தமிழக மக்களின் கல்விக் கண் திறந்த காமராஜரை கறுப்புக் கடவுள் என அழைத்துவிடலாமா? முகத்துக்கு நேரே சிலர் இப்படி துதி பாடியதை உயிரோடு இருந்த காலத்திலேயே அவர் ஏற்றுக் கொண்டதில்லை. கோயில் களுக்குச் செல்வார். பிரசாதத்தைப் பெற்றுக் கொள்வார். விபூதியெல்லாம் பூசிக் கொள் வார். ஆனாலும், சராசரி மனிதர்களைப் போல கடவுள் நம்பிக்கை அவரிடமிருந்து வெளிப்பட்டதில்லை.
விஞ்ஞான ஆராய்ச்சி வளராத காலத் தில் அறிவுக்கு எட்டாத விஷயங்களைக் கடவுள் செயல் என்று மனிதன் நம்பினான். இப்போது மனிதன், தானே சிந்தித்து பகுத்தறிவுடன் செயல்படும்போது ஏன் இன்னும் அந்த மூடநம்பிக்கை? கடவுளை நம்புகிறவர்களை விட நம்பாதவர்கள் எந்த வகையில் தாழ்ந்தவர்கள்? தந்தை பெரியாரைப் போல இப்படி பகுத்தறிவுப் பிரச்சாரத்தில் காமராஜர் ஈடுபட்டதில்லை. அதே நேரத்தில் கடவுள் குறித்து அவருக் கென்று ஒரு பார்வை இருந்திருக்கிறது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின்  முன்னணித் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மேலவை உறுப்பினருமான சீர்காழி பெ.எத்திராஜ் பெருந்தலைவருடனான இதுவரை பெரிய அளவில் வெளிவராத தகவல்கள் அடங்கிய தனது அனுபவத்தை இங்கே விவரிக்கிறார். அவர் நேரடியாக காமராஜரிடம் கேட்ட கேள்விகளும், கிடைத்த பதில்களும் இதோ:
தலைவர் காமராஜர் தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் வந்த நேரத்தில் நானும் அவரோடு பயணம் செய்தேன். கடவுள் பற்றி காமராஜர் என்ன நினைக்கிறார் என்று எண்ணி நான் தலைவரிடம் மெல்ல ஆரம்பித்தேன்.
கடவுள்னு ஒருத்தர் இருக்கார்னு உங்களுக்கு நம்பிக்கை உண்டா?
இருக்கு, இல்லைங்கிறதைப் பத்தி எனக்கு எந்தக் கவலையும் கிடையாதுன் னேன். நாம செய்யறது நல்ல காரியமாக இருந்தா போதும். பக்தனா இருக்கிறதை விட யோக்யனா இருக்கணும். அயோக்கியத்தனம் ஆயிரம் பண்ணிகிட்டு கோயிலுக்குக் கும்பாபிஷேகம் பண்ணிட்டா சரியாப் போச்சா? என்று ஆரம்பிக்கவும்,
நேருவை அதிஸ்டு (Atheist) ன்னு சொல்றியா? அவரு ரெண்டப் பத்தியும் கவலைப்படாதவர்தான். ஆனா மனிதனை முன்னேற்றணும், சமூகம் வளரணும்கிறதுலே அவர் கவனமாயிருந்தார். அதுக்கு மதமோ, கடவுளோ தடையாயிருந்தா அதைத் தூக்கிக் குப்பையிலே போடணும்கிற அளவுக்கு அவர் தீவிரவாதி. எப்படி யோசிச்சிப் பார்த்தாலும், சாதாரண மனிதனைக் கைதூக்கி விடணும் கிறதத்தானே எல்லா மதமும் சொல்லுது. சமுதாயத்துல பேதம் போகணும், ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாதுங்கிறததானே மகான்கள் சொல்றாங்க. ஆனா, இன்னிக்கு நம்ம மதங்கள் அதப்பத்திக் கவலைப் படுதான்னேன்? எவன் தலையைத் தடவி யாவது, எவனை அழிச்சாவது, தான் முன்னேறணும்னுதானே ஒவ்வொரு மடாதி பதியும் நினைக்கிறான். இதுக்குக் கடவுள் சம்மதப் படுவாரா? என்று கேட்டார்.
நான் உடனே, அப்படியானா ஆண்ட வன்னு ஒருத்தர் இருந்திருந்தா, இந்த அயோக்கியத்தனத்தையெல்லாம் ஒழிச்சி ருப்பாரே? தன்னோட எல்லா பிள்ளைகளை யும் மேல் ஜாதி, கீழ் ஜாதின்னு படைச்சிருக்க மாட்டாரே? என்று கேட்டேன்.
மேல் ஜாதி, கீழ் ஜாதியெல்லாம் இடை யிலே வந்த திருட்டுப் பயலுக பண்ணின துன்னேன். சுரண்டித் திங்கிறதுக்காகச் சோம்பேறிப் பசங்க பண்ணின ஏற் பாடுன்னேன். எல்லாரும் ஆயா வவுத்துல பத்து மாசம் இருந்துதானே பொறக்கிறான்.  அதிலே என்ன பிராமணன், சூத்திரன்? ரொம்ப அயோக்கியத்தனம் என்றார் காமராஜர்.
காமராஜரைக் கட்டிப் பிடித்து ஆலிங் கனம் செய்ய வேண்டும் போலிருந்தது. இவருக்குள் இவ்வளவு சிந்தனை ஊற்றா? இத்தனை கம்பீரமா? அடங்காத சீற்றமா? ஆத்திர நெருப்பா? அவர் பேசப்பேச நான் வானுக்கும், பூமிக்குமாய் குதித்தேன்.
நீங்கள் ஏன் உங்களை ஒரு முழு நாத்திகராய் அறிவித்துக் கொள்ளவில்லை என்றேன்.
நான் ஒரு சமுதாயத் தொண்டன். நாத்திகவாதி - ஆத்திகவாதி எல்லோருக்கும் சேவை செய்றவன். எனக்கு எதிரே வர்றவனை மனுஷன்னுதான் பாக்குறேனே தவிர, அவனை பிராமணன், சூத்திரன்னு பாக்குறதில்லே. அப்படி எவனும் என்கிட்டே பேசிகிட்டு வரவும் முடியாது. நாத்திக வாதங்கிறது ஒரு தனி மனிதக் கொள்கை. அரசியல்வாதி பொதுவானவன். ஒரு கோயிலை நிர்வாகம் பண்ண நிதி கொடுக்க வேண்டியது அரசியல்வாதியோட கடமை. அந்தக் கோயில்ல ஆறுகால பூஜை ஒழுங்கா நடக்குதா, விளக்கு எரியுதான்னு பார்க்க வேண்டியது, கவர்ன் (Atheist) பன்றவனோட வேலை
நான் நாத்திகவாதி. எனவே கோயிலை இடிப் பேன்னு எவனும் சொல்ல முடியாது. கம்யூனிச சமு தாயத்திலேயே கோயிலும், பூஜையும் இருக்கே? தனிப் பட்ட முறையில நான் கோயில், பூஜை, புனஸ் காரம்னு பைத்தியம் பிடிச்சி அலையிறதில்ல. மனித னோட அன்றாடக் கடமை கள்தான் முக்கியம்னு நெனைக் கிறவன் என்று மிகத் தெளிவாகப் பேசினார்.
அப்படியானா, நீங்க பூஜை, பிரார்த் தனையெல்லாம் பண்றதில்லையா? எனக் கேட்டேன்.
அதெல்லாம் வேலை வெட்டியில்லாத வன் பண்றதுன்னேன். அடுத்த வேளை சோத்துக்கில்லாதவன், கடன் வாங்கி ஊர், ஊரா க்ஷேத்திராடனம் போறான் . . எந்தக் கடவுள் வந்து நீ ஏண்டா என்னப் பாக்க வரலைன்னு இவன்கிட்டே கோவிச்சு கிட்டான்? அபிஷேகம் பண்றதுக்காக கொடம் கொடமாப் பாலை வாங்கி வீணாக் குறானே மடையன். அந்தப் பாலை நாலு பிள்ளைங்க கிட்டே கொடுத்தா, அதுங்க புஷ்டியாவாவது வளருமால்லியா? பதினெட்டு வருஷமா மலைக்குப் போறேன்னு பெரு மையா சொல்றான். அதுக்காக அவனுக்கு பி.ஹெச்.டியாக கொடுக்கறாங்க? 18 வரு ஷமா கடன்காரனா இருக்கான்னு அர்த்தம். பணம் படைச்சவன் போடுற பக்தி வேஷம், சோஷியல் ஸ்டேட்டஸ்க்காக நாலு பேர் தன்னைப் பக்திமான், பெரிய மனுஷன்னு பாராட்டணும்ங்கிறதுக்காக ஒரு அனாதை இல்லத்துக்கோ, முதியோர் இல்லத்துக்கோ கொடுக்கலாமில்லையா? நாட்டுல வேலை யில்லாத் திண்டாட்டம் - வறுமை - சுகா தாரக் கேடு - ஏற்றத்தாழ்வு இத்தனையையும் வச்சிகிட்டு பூஜை என்ன வேண்டிக் கிடக்கு, பூஜைன்னேன்? ஆயிரக்கணக்கான இந்த சாமிகள் இதப்பாத்துகிட்டு ஏன் பேசாம இருக்குன்னேன்? தலைவர் போடு போடு என்று போட்டுக் கொண்டு வந்தார்.
அப்படியானா, நீங்க பல தெய்வ வழி பாட்ட வெறுக்கிறீங்களா?. . இல்ல, தெய்வ வழிபாட்டையே வெறுக்கிறீங்களா? என்று கேட்டேன்.
அவர் கொஞ்சம் கூட தாமதிக்காமல், லட்சுமி, சரஸ்வதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிற தெல்லாம் யாரோ ஓவியர்கள் வரைஞ்சி வச்ச சித்திரங்கள். அதையெல்லாம் ஆண்டவன்னு நம்மாளு கும்பிட ஆரம்பிச்சிட்டான்.  சுடலைமாடன், காத்தவராயன்ங்கிற பேர்ல அந்த வட்டாரத் துல யாராவது பிரபலமான ஆசாமி இருந் திருப்பான். அவன் செத்ததும் கடவுளாக் கிட்டான் நம்மாளு. கடவுள்ங்கிறவரு கண்ண உருட்டிகிட்டு, நாக்கை நீட்டி கிட்டுதான் இருப்பாரா? அரேபியாவிலே இருக்கிறவன் அல்லான்னான். ஜெருசலத் தல இருக்கிறவன் கர்த்தார்ன்னான். அதி லேயும் சில பேரு மேரிய கும்பிடாதேன்னான். கிறிஸ்தவ மதத்திலேயே ஏழு, எட்டு டெனாமினேஷன் உண்டாக்கிட்டான். மத்திய ஆசியாவிலிருந்து வந்தவன் அக்கினி பகவான், ருத்ரன், வாயு பகவான்னு நூறு சாமியச் சொன்னான். நம்மநாட்டு பூர்வீகக் குடி மக்களான திராவிடர்கள், காத்தவ ராயன், கழுவடையான், முனியன், வீரன்னு கும்பிட்டான். எந்தக் கடவுள் வந்து இவன் கிட்டே என்பேரு இதுதான்னு சொன் னான்? அவனவனும் அவனவன் இஷ்டத் துக்கு ஒரு சாமிய உருவாக்கினான். ஒவ் வொரு வட்டாரத்துல உருவான ஒவ்வொரு மகானும் ஒரு கடவுள உண்டாக்கி, எல்லாரும் தன் கட்சியில (மதத்தில்) சேரும்படியா செஞ்சான். காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் - தி.மு.க. மாதிரி ஒவ்வொரு மதமும் ஒரு கட்சி. யார் யாருக்கு எதிலே லாபமிருக்கோ அதுல சேந்துக்குறான். மதம் மனிதனுக்குச் சோறு போடுமா? அவன் கஷ்டங்களைப் போக் குமா? இந்தக் குறைந்தபட்ச அறிவு கூட வேண்டாமா மனுஷனுக்கு? உலகத்துல இருக்கிற ஒவ்வொரு மதமும், நீ பெரிசா, நான் பெரிசான்னு மோதிகிட்டு ரத்தம் சிந்துதே? நாட்டுக்கு நாடு யுத்தமே வருதே? இப்படியெல்லாம் அடிச்சிகிட்டு சாகச் சொல்லி எந்த ஆண்டவன் சொன்னான்? தலைவர் தெளிந்த நீரோடை  மாதிரி பேசிக்கொண்டே வந்தார். ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் ஒரு அழுத்தமான முடிவை அவர் வைத்திருப்பதைப் பார்த்து நான் வியந்தேன்.
நீங்க சொல்றதப் பாத்தா ராமன், கிருஷ் ணனை யெல்லாம் கடவுளாக்கிட்டானே . . .  அதை ஏத்துகிறீங்க போலிருக்கே? என்று வினா தொடுத்தேன்.
நன்றி: நக்கீரன் 2012 ஜூலை 11-13
(தொடரும்)

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
அடுத்து >>


1 comment:

Snekha Darshini said...

Its so nice to know more about Kamarajar.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...