Saturday, June 16, 2012

அடுத்தகட்ட கிளர்ச்சி!


தொழிற்கல்லூரிகளில் அகில இந்திய நுழைவுத் தேர்வு திணிக்கப்படுவதை எதிர்த்து திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் நேற்று எழுச்சியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நுழைவுத் தேர்வு முடிவைக் கைவிடாவிட்டால் நாடு தழுவிய அளவில் அடுத்தகட்டப் போராட்டம் வெடித்துக் கிளம்பும் என்று எச்சரித்துள்ளார்.
பிடிவாதமாக, தான்தோன்றித்தனமாக நுழைவுத் தேர்வைக் கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
இப்படி ஒரு முடிவை எடுப்பதற்கு இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. அமைச்சரவை முடிவு செய்ததா என்றும் அறிவிக்கப் படவில்லை.
பொதுவாகப் பார்ப்பனர்கள் கண்ணோட்டம் கல்வியைப் பொறுத்தவரையில் ஒன்று உண்டு. அதுதான் பஞ்சம, சூத்திர மக்களுக்கு எந்த வகையிலும் கல்வி வாய்ப்பை அளித்துவிடக் கூடாது என்பதுதான்.
ஆச்சாரியார் (ராஜாஜி) இரண்டு முறை முதலமைச் சராகத் தமிழ்நாட்டில் பதவிக்கு வந்தபோதெல்லாம் பள்ளிக்கூடங்களை இழுத்து மூடுவதில்தானே கவனமும், அக்கறையும் கொண்டார்.
வருணாசிரமத் தன்மைப்படி கல்வி மறுக்கப்பட்ட மக்கள் கோடானுகோடி பேர் வாழும் ஒரு நாட்டில் கல்வித் துறைக்குப் பார்ப்பனர் ஒருவரை அமைச்சராக்குவது அடிப்படையில் குற்றமானது.
பி.ஜே.பி. ஆட்சியில் முரளிமனோகர் ஜோஷி என்ற பார்ப்பனர், மனித வள மேம்பாட்டுத் துறைக்கு அமைச்சராக இருந்தபோதும் கல்வியில் பல வகையான குளறுபடிகளைச் செய்தார்.
ஓர் ஆண்டையே சமஸ்கிருத ஆண்டு என்று அறிவித்தாரே - வேதக் கணிதம் என்றும், ஜோதிடம் என்றும், அறிவியலுக்கு முரண்பட்டவற்றை பாடத் திட்டத்தில் புகுத்தவில்லையா? பாடத் திட்டக் குழுவில் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களையே திணிக்கவில்லையா?
பார்ப்பனர்கள் எங்கிருந்தாலும் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட தன்மையில், மனுதர்ம சிந்தனைவாதி களாகத்தான் இருப்பார்கள். இதற்குக் கபில்சிபல் விதி விலக்கல்ல என்பது வெளிப்படையாகவே தெரிந்து விட்டது.
கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப்பட்டி யலுக்குக் கொண்டு சென்றுவிட்ட காரணத்தால், தானடித்த மூப்பாக மத்திய அமைச்சர் செயல்படுகிறார். கல்வியை மறுபடியும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வந்தால்தான் இதற்கெல்லாம் நிரந்தரத் தீர்வைக் காண முடியும் என்ற முடிவுக்குத்தான் வரவேண்டியுள்ளது.
அகில இந்திய அளவில் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வைக் கொண்டு தகுதியுள்ளவர்களைக் கண்டு பிடித்துக் கொண்டு இருக்கும் மத்திய அமைச்சருக்கு ஒரு கேள்வி.
கிராமப்புறப் பள்ளிகளின் நிலைமை, செய்து கொடுக்கப்பட்ட வசதிகளுக்கும் நகரப்புறங்களில், மாநகரங்களில் அமைந்துள்ள பள்ளிகளில் உள்ள வசதிகளுக்கும், வாய்ப்புக்கும் அடிப்படையில் வேறுபாடு இருக்கிறதா இல்லையா?
இந்த வேறுபாட்டை நீக்கவேண்டியது யார்? அரசுகள்தானே? இதனைச் செய்யாத மத்திய அமைச்சர் சமப் போட்டி நடத்தத் துடிப்பது நேர்மையானதுதானே? சம வாய்ப்புகள் இல்லாத இடத்தில் சமப் போட்டியைக் காண முடியுமா? மெத்தப் படித்த இந்த மேதாவி முதலில் இதற்குப் பதில் சொல்லட்டும் பார்க்கலாம்.
இரண்டாவதாக கபில்சிபல் திணிக்க விரும்பும் நுழைவுத் தேர்வு எந்த மொழியில் எழுதப்படவேண்டு மாம்? இந்தியிலும், இங்கிலீஷிலும்தானே? அப்படி என்றால், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர் களுக்கு வேட்டைதானே?
நான்கரை லட்சம் மாணவர்கள் தமிழ்நாட்டில் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு பிளஸ் டூ படித்து இருக்கிறார்களே - இவர்களின் கதி என்னாவது என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பார்க்கவேண்டாமா?
மூன்றாவதாக தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு சட்டப்படி ஒழிக்கப்பட்டுவிட்டதே! அப்படி இருக்கும்போது அகில இந்திய நுழைவுத் தேர்வு என்ற முகமூடியோடு தமிழ்நாட்டில் நுழைய விரும்புவது சட்ட விரோதம் இல்லையா?
மூன்றாவது தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு வேண்டுகோள்: 2001-2006 காலகட்டத்தில் அ.இ. அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது நுழைவுத் தேர்வை எதிர்த்து ஆணை பிறப்பிக்கப்பட்டதை நினைவு கூர்ந்து, தற்போது மத்திய அரசு திணிக்கும் நுழைவுத் தேர்வை ரத்து செய்யக்கோரி முதலமைச்சர் அவர்கள் அழுத்தம் கொடுக்கவேண்டியது அவசியமாகும்.
நேற்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகத் தோழர்கள் பல்லாயிரக்கணக்கில் ஒன்று திரண்டு கொடுத்திருக்கும் சமூகநீதிக் குரலில் உள்ள நியாயத்தை மத்திய அரசுக்கு முதலமைச்சர் எடுத்துக் கூறுவாராக!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...