Saturday, June 16, 2012

கலைஞர் அவர்களின் எச்சரிக்கை!


என்.சி.இ.ஆர்.டி. வெளியிட்ட பாடத் திட்டத்தில் தமிழ்நாட்டின்  இந்தி எதிர்ப்பைக் கேலி செய்து கேலிச் சித்திரம் வெளியிட்டதன் மூலம், தமிழ்நாட்டில் மீண்டும் இந்தி எதிர்ப்புத் தீ கிளர்ந்து எழக்கூடிய ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து திமுக தலைவர் கலைஞர் அவர்கள் வெளியிட்டுள்ள கருத்து மிக முக்கியமானது.
கேள்வி: மத்திய அரசு இந்தியைத் திணிக்கும் முயற்சியில் மீண்டும் ஈடுபடுகிறதா?
கலைஞர்: அரசு அத்தகைய முயற்சிகளில் ஈடுபடா விட்டாலும், ஆங்காங்குள்ள சில அதிகாரி களும், இந்தி வெறியர்களும், இந்தியைத் திணிக்கும் முயற்சியில் மறைமுகமாக தங்களால் இயன்ற அளவிற்கு  ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார் கள். அத்தகைய முயற்சிகளில் ஒன்றுதான் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கிண்டல் செய்து வெளியிட்ட கேலிச் சித்திரம்.
அதுபோலவே தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணிபுரிந்துவரும் அலுவலகங்களில் பதவி உயர்விற்குக் கருத்து கொள்ளப்படும் அம்சங்களில் ஒன்றாக, அவர்கள் ஆட்சி மொழியான இந்தி மொழியின் செயல்பாட்டிற்கு ஆற்றிட்ட பணிகளைக் குறிப்பிட வேண்டுமென்று கேட்டிருப்பதாக எனக்குத் தகவல் சொல்லப்பட்டது.
இந்தி மொழி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான அலுவலர்களைப் பாதித்திடும் இதுபோன்ற செயல்களையெல்லாம் மத்திய அரசு உடனடியாகக் கவனித்து, நேரு கொடுத்த உறுதிமொழியைக் காப்பாற்றிடும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்று கலைஞர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
இது ஏதோ சின்ன விடயம் என்று மத்திய அரசு அலட்சியப்படுத்துமானால், விபரீதத் தீயாக வெடித்துக் கிளம்பும் என்று எச்சரிக்கிறோம்.
மற்ற மற்ற மாநிலங்கள் எப்படியிருந்தாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்தி எதிர்ப்பு என்பது தமிழர்களின் இரத்தவோட்டத்தில் கலந்த ஒன்றாகும்.
இந்தியை ஒரு மொழி திணிப்பாக மட்டும் கருதவில்லை. பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பாகவே கருதுகிறது தமிழ்நாடு!
யாரும் நினைத்துப் பார்க்காத கால கட்டத்திலேயே தந்தை பெரியார் அவர்கள் குடிஅரசு இதழில் (7.2.1926). தமிழிற்குத் துரோகமும், இந்தியின் இரகசியமும் எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றினைத் தீட்டியுள்ளார்கள்.
1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உச்சக்கட்டமாகத்தான் தமிழ்நாடு தமிழருக்கே! என்று  முழக்கமிட்டார் தந்தை பெரியார் என்பதை மறந்துவிடக் கூடாது.
1955 ஆகஸ்டு முதல் தேதியன்று தேசியக் கொடியைக் கொளுத்தும் போராட்டம் தந்தை பெரியார் அவர்களால் அறிவிக்கப்பட்டதும் இந்தித் திணிப்பை மய்யப்படுத்தி தான் என்பதை மறக்க வேண்டாம். பிரதமர் நேரு அவர்கள் சார்பாக முதல் அமைச்சர் காமராசர் அவர்கள் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில்தான் அந்தப் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக தந்தை பெரியார் அவர்கள் அறிவித்தார்கள் என்பது நினைவூட்டத்தக்கதாகும்.
திமுக ஆட்சியைப் பிடித்து, அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராகக் குறைந்த காலமே இருந்தாலும்கூட, அந்தக் கால கட்டத்திலேயே தமிழ்நாட்டில் இரண்டே மொழிகள்தான் - தமிழும் - ஆங்கிலமும்தான் என்று வரையறுத்துச் சட்டம் செய்தார் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
நேர்முகமாக இந்தியைத் திணிக்க முடியா விட்டாலும் சிறிது சிறிதாக இந்தியின் விஷம வால் அவ்வப்போது நீட்டப்பட்டுக் கொண்டு இருக்கிறது.
தேசிய நெடுஞ்சாலைகளில் அறிவிப்புக் கற்களிலும் நுழைத்துப் பார்த்தார்கள். அடுத்த கணமே ஆவேசத்தைக் காட்டியவுடன் வாலை இழுத்துக் கொண்டார்கள்.
இப்பொழுதுகூட அகில இந்தியத் தேர்வுகளை இந்தி, ஆங்கில மொழிகளில் மட்டுமே எழுதிட அனுமதிக்கப்படுகிறது.
மானமிகு கலைஞர் அவர்கள் குறிப்பிட்டுள்ளது போல மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்று வோர் இந்தியைப் படித்தால் பலன் உண்டு என்கிற வகையில் மறைமுக அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
திராவிட இயக்கம் இவற்றையெல்லாம் எந்தக் காரணத்தை முன்னிட்டும் அனுமதிக்காது - அனுமதிக்கவே அனுமதிக்காது - எச்சரிக்கை!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...