Monday, June 18, 2012

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் பா.ஜ.கட்சியா நாட்டைக் காப்பாற்றப் போகிறது?


இந்தியாவின் அரசியலை நடத்த வேண்டுமா அல்லது பா.ஜ.கட்சி அரசி யலை நடத்த வேண்டுமா என்பதை முதலில் ஆர்.எஸ்.எஸ். முடிவு செய்து கொள்ள வேண்டும் என்று முன்பொரு முறை மூத்த பா.ஜ.க. தலைவர் ஒருவர் கூறினார்.

ஆனால், பா.ஜ.கட்சி அரசியலையும், நாட்டின் அரசியலையும் தனித்தனியான வைகளாக ஆர்.எஸ்.எஸ். கருதவில்லை. பா.ஜ.கட்சியின் மூலமாக, அதனைக் கருவியாகக் கொண்டு இந்திய அரசியலை நடத்துவதுதான் அதன் நோக்கம்.
அண்மையில், உள்ளூர் சங் அமைப் புகளின் யதேச்சதிகாரத்தை எதிர்த்து போர்க்கொடியை ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தராராஜே உயர்த்தினார்.   மொத்தம் உள்ள 79  ராஜஸ்தான் பா.ஜ.க. சட்டமன்ற  உறுப்பினர்களில் 56 பேர் கட்சி யில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு, வசுந்தராராஜே துவங்க இருக்கும் பிராந்தியக் கட்சிக்கு மாறத் தயாராக இருந்தனர். பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநில முன்னாள் உள்துறை அமைச்சருமான குலாப்சந்த் கட்டாரியா, தான் 28 நாள் யாத்திரை செய்யப் போவதாக அறிவித்ததை எதிர்த்துதான் இந்தப் போர்க்கொடியை வசுந்தராராஜே தூக்கினார். பா.ஜ.கட்சி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படும் 2013 டிசம்பரில் நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராகத் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதே கட் டாரியாவின் நோக்கம். ஆனால் இம்மா நிலத்தில் மிகவும் பிரபலமானவரும், 2008 இல் குறைந்த வித்தியாசத்தில் கட்சி வெற்றி பெறத் தவறியதால் முதல்வர் பதவியை இழந்தவருமான வசுந்தரா ராஜேயினால்தான் கட்சியை வரும் சட்ட மன்றத்  தேர்தலில் வெற்றி பெறச் செய்ய முடியும் என்று கட்சியினர் நம்புகின்றனர்.
என்றாலும், உள்ளூர் பா.ஜ.கட்சிக் காரர்கள் சிலர், இரண்டு மூத்த சங் பரிவார அதிகாரிகளின் பக்க பலத்துடன் வசுந்தராராஜே மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். 2009 இல் மக்களவை தேர்தலுக்குப் பின் எதிர்கட்சித் தலைவர் பதவியில் இருந்து வசுந்தரா ராஜே விலக வேண்டும் என்று இந்த கும்பல் கோரியது. அப்போது பா.ஜ.க. தலைவராக இருந்த ரஜ்நாத் சிங்கும் அதற்கு ஆதரவாக இருந்தார். ஆனால், அவருக்குப் பின் தலைவராக வந்த நிதின் கட்காரி பா.ஜ.கட்சிக்கும் வசுந்தரா ராஜேவுக்கும் இடையே சமாதானம் செய்து வைத்தார். என்றாலும் கட்டாரியாவின் முயற்சிகளை முளையிலேயே கிள்ளி எறியாமல் போனதற்காக கட்காரி மீது வசுந்தரா ராஜேயின் ஆதரவாளர்கள் குறை கூறுகின்றனர்.
பின்னர் கட்காரியும், அருண் ஜேட்லியும் வசுந்தரா ராஜேயை சந்தித்து, 2013 சட்டமன்றத் தேர்தலில் அவர்தான் முதல்வர் வேட்பாளர் என்பதை தெரியப் படுத்தி, கட்டாரியா அவருக்குப் போட்டியே இல்லை என்று உறுதி அளித்தனர். கட்சியின் தேசியத் தலைமை அவருக்கு ஆதரவாக இருக்கும் என்றும் அவர்கள் கூறினர். ஆனாலும் கட்சியின் மீது அவ ருக்கு சரியான நம்பிக்கை ஏற்படவில்லை என்பதால், பிராந்தியக் கட்சி  தொடங்கும் எண்ணத்தை அவர் முற்றிலுமாகக் கைவிட்டுவிடவில்லை.
ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. உறவு பற்றி அரசியல்  நோக்கர்களும், ஊடகங்களும் விவாதிக்கும்போது, மிகப் பெரிய கொள்கை விவாதமாக அவர்கள் முன் வைப்பது, பா.ஜ.கட்சியின் கொள்கை என்னவாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றித்தான்.  இந்துத்துவா தற்கால அரசி யலுக்கு ஏற்ற கொள்கையா? நாட்டில் நிலவும் அன்றாட நிதர்சன நிலை இதற்கு நேர்மாறாக உள்ளது. பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும் அல்லது ஒரு சக்தியாக இடம் பெற்றிருக்கும் மாநிலங்களில் சங் அமைப்புகளின் பொறுப்பாளர்கள்  ஆட்சி  நிருவாகத்தில் தேவையின்றி அதிக அளவில் தலையிட்டு அதிகாரம் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஒவ்வொரு மாநில முதலமைச்சரும் ஒவ்வொரு விதத்தில் இப்பிரச்சினையைக் கையாளுகின்றனர். சங் அமைப்பு பொறுப் பாளர்களின் இத்தகைய முயற்சிகளுக்கு மோடி இடமே கொடுப்பதில்லை. மற்ற முதல்வர்கள் சங்பரிவாரத் தலைவர்கள் கேட்பதை ஓரளவுக்குச் செய்து எப்படியோ அவர்களை சமாளித்து வருகின்றனர். வசுந்தராராஜேயும் இது போலத்தான் செய்தார். ஆனால் சங்பரிவாரத் தலைவர்களின் அதிகாரப் பசிக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. சங் பரிவார அமைப்புகள் நன்கு வேர் விட்டுள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு காலத்தில் தங்களைத் தூயவர்கள் என்றும், ஒழுக்கமானவர்கள் என்றும் கூறிக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தான், மாநில அரசிடம் காரியங்கள் செய்து தர இடைத் தரகர்களாக இருந்து பணம் வசூலிக்கின்றனர்.
ஒரு அரசுக்குள் மற்றொரு அரசு செயல்படுவது போல, பா.ஜ.கட்சிக்குள் செயல்படும் மற்றொரு கட்சியைப் போலவே ஆர்.எஸ்.எஸ்.உள்ளது. ஆர்.எஸ்.எஸ். பின்னணி அற்ற ஒரு பா.ஜ.கட்சிக்காரர், பா.ஜ.கட்சியின் முதல் விசுவாசம் சங்கத் துக்குத்தான். ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரருக் கும் - ஆர்.எஸ்.எஸ்.அல்லாத பா.ஜ. கட்சிக்காரருக்கும் நடக்கும் சண்டையில் அவர்கள் ஆர்.எஸ்.எஸ்.காரரைத்தான் ஆதரிப்பார்கள் என்று சொன்னார்.
அமைப்பிடம் காட்டும் இந்த விசுவாசம் பாராட்டத்தக்கது என்றாலும், அது தவறான ஓர் உலகக் கண்ணோட்டத்தை ஏற்படுத்திவிடுகிறது. மக்கள் தலைவர்கள் மற்றும் பிரபலமானவர்களிடம் சந்தேகம் கொண்டதாகவே சங் இருக்கிறது. தனிப் பட்டவரை விட அமைப்புதான் உயர்ந்தது என்ற சமாதானம் பல நேரங்களில் கூறப்பட்டாலும், தன்னம்பிக்கை நிறைந்த, துடிப்பான, நிதர்சன நிலையை உணர்ந்த - சங்கத்தின் கட்டளைகளைப் புறந் தள்ளும் - அரசியல்வாதிகளை சங் விரும்பு வதில்லை.
இந்தியப் புவியியல் எல்லை முழுவதி லும் பரவி இருந்தாலும்,  வெளிப்படையாக அல்லாமல் மறைமுகமாகவே பல ஆண்டு காலம்  செயல்பட்டு வரும் ஒரு வட்டத்தில் குழுவாக சிந்திக்கும் மனப்பான்மை வளர்ந்து விடுகிறது. மோடியும், ஜோஷியும் இடமாற்றம் செய்யப்படத்தக்கவர்களே என்று நம்பும், அதற்கு இணையாக அரசியலை புரிந்து கொள்ள இயன்ற ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தைச் சேர்ந்தவர் களே அவர்கள். இதற் கெல்லாம் காரணம் பல ஆண்டுகளுக்கு முன் அவர்கள் அமைப்பில் இதைப் போன்ற பதவிகளில் பிரச்சாரகர்களாக இருந்ததுதான்.
வசுந்தராராஜேயுக்கும் கட்காரிக்கும் இடையே உள்ள சமன்பாடும் இத்தகைய தோல்வியைத்தான் காட்டுகிறது.  குஜ ராத் முதல்வரைப் பொறுத்தவரை, ஆர்.எஸ்.எஸ். கோட்பாட்டாளர் எனப் படுபவர் அமைப்பின் கோட்பாட்டை மோடி மீறிவிட்டார் என்று குற்றம் சாட்டி சங் பத்திரிகையில் பத்தி பத்தியாக எழுதிக் கொண்டே இருப்பார். உண்மையில், மோடியைப் போன்றே தனது மகனும் எதிர்காலத்தில் ஒரு முதல்வராக வர வேண்டும் என்று விரும்பும் அரசியல் வாதியாகத்தான் அவரும் இருக்கிறார்.
பா.ஜ.கட்சிப் பொறுப்பாளர்கள் இது போன்ற முரண்பாடுகளைப் பற்றி பேசும் போது, சங் தலைவர்கள் அதனைக் கவனிக்காமல் வேறுபக்கம் திரும்பிக் கொள்வார்கள் அல்லது பொருத்தமான ஒரு உபதேசத்தை அவர்களுக்கு வழங்கு வார்கள். இந்த போலித்தனத்துக்கும், மோசடிக்கும் தான் பணிய மறுக்கிறார் வசுந்தராராஜே. நாட்டு நடப்பை நன்கு அறிந்திருக்கும் அவரது சட்டமன்ற உறுப்பினர்களும், பொதுமக்களுக்கு அவர் மீது உள்ள கவர்ச்சியின் காரணமாகவும், தங்களுக்கு அதிகாரத்தை அளிக்கும் அவரது தலைமைப் பண்பின் காரண மாகவும் அவரையே ஆதரிக்கின்றனர். சாதாரண மான பொதுமக்கள் வாக் களிப்பது பற்றி முடிவு செய்யும்போது, சங் பரிவாரத்தின் வித்தைகள் செல்லுபடியாவ தில்லை.
புதுடில்லியில் உள்ள கட்சித் தலைமை தங்களை கைவிட்டு விட்டதாக புகழ் பெற்றுள்ள பிரபல மாநிலத் தலைவர்களும் உணர்கின்றனர். கட்காரியும், ராஜ்நாத் சிங்கும் கட்சித் தலைவர்களாக வந்ததற்கு ஆர்.எஸ்.எஸ்.சுக்குத்தான் கடன்பட்டவர் கள். ரஜ்நாத் சிங்கோ அதற்கு முன் ஒரு மாநில முதல்வராக இருந்துள்ளார். கட்காரியோ மகாராட்டிர மாநிலத்தின் இரண்டாம் நிலைத் தலைவராக மட்டுமே இருந்தவர். ஆனாலும், சங் தலைவரைப் போல அவரும் நாக்பூர் ஆசாமி என்பதால், கட்சித் தலைவராக மோகன் பகவத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இத்தகைய சூழ்நிலைகளில் நியமிக்கப் பட்ட ஒரு தலைவர் கட்சியை விட தன்னை நியமித்த அமைப்புக்கே அதிகம் கட்டுப்பட் டவராக இருப்பார். இந்த வகையில் ரஜ்நாத் சிங்கை விட கட்காரி தனது விசுவாசத்தை நன்றாகவே காட்டினார்.  கட்காரியின் மூன்றாண்டு பதவிக் காலம் இந்த ஆண்டுடன் முடிவடைவதால், இரண்டா வது முறை கட்சித் தலைவராக வருவ தற்காக நாக்பூர் சகோதரர்களை அதிகமாக திருப்திப் படுத்துவதில் அவர் மிகுந்த அக்கறையும், விருப்பமும் கொண்டவராக இருக்கிறார்.
கட்சியிலும் நாடாளுமன்றத்திலும் உள்ள அவரது நம்பிக்கையாளர்கள், உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் தோல்வி மற்றும் ஜார்கண்ட் அனுஷ்மான் மிஸ்ரா விவகாரங்களுக்குப் பிறகும், அவரை இரண்டாவது முறை கட்சித் தலைவராக ஆர்.எஸ்.எஸ். ஆக்கியுள்ளதாக கடந்த வாரம் வெளிப்படையாகத் தகவல் தெரி வித்தனர். பா.ஜ.கட்சியின் தலைவராக இருப்ப தற்குத் தேவையான தகுதி பெற்றவராக கட்காரி இல்லை என்று கட்சியில் பலரும் கருதுகின்றனர். அவரைப் பற்றிய பொதுவான கருத்து கேலிக்குரியதே. என்றாலும், இதுவே சங்கத்துக்கு அவர் அதிகமாகப் பயன்படுவார் என்பதற்கான காரணமாக விளங்கும். தங்களை எதிர்ப் பார் என்ற அச்சமின்றி எப்படி வேண்டுமா னாலும் அவரை திசை திருப்பலாம், தங்கள் கட்டளைக்குக் கீழ்படியச் செய்யலாம் என்று நிச்சயமாக அவர்கள் நம்பலாம். ஒரு திறமை மிகுந்த பிராந்தியத் தலைவருக்கு எதிராக இருக்கும் மக்களால் அடையாளம் தெரியாத ஆர்.எஸ்.எஸ்.காரர் ஒருவரை ஆதரிப்பதுதான் அவர் செய்வது. இந்த சதித் திட்டம் சங் பரிவாரத்துக்கு உதவி செய்வதாகவே உள்ளது. ஆனால் பா.ஜ. கட்சிக்கு இது எவ்வாறு உதவும்? இக் கேள்விக்கான விடையை எதிர்நோக்கிக் காத்திருப்பவர் வசுந்தராராஜே மட்டுமல்ல; மேலும் பலரும் உள்ளனர்.
- அசோக் மாலிக்
(நன்றி: தெகல்கா 2012 மே 19 தமிழில்: த.க.பாலகிருட்டினன்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...