Friday, June 1, 2012

குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஏ.பி.ஜே.அப்துல் கலாமை நிறுத்த வேண்டும்


திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை
இந்திய நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் பற்றிய விவாதம் அரசியல் களத்தில் சூடு பிடித்திருக்கும் நிலையில், முன்னாள் குடியரசுத் தலைவர் உயர்திரு ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களையே இரண்டாவது முறையாக குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கலாம் என்ற கருத்தை வெளியிட்டு திராவிடர் கழகத் தலைவர்  கி.வீரமணி அவர்கள் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அடுத்த குடியரசுத் தலைவர் வேட்பாளரை எதிர் அணியாக இருக்கும் ஒரு தரப்பு அறிவித்துவிட்ட நிலையில் (முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா) ஆளும் கூட்டணியாகிய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) இன்னும் தனது வேட்பாளரை ஆய்வு செய்து கொண்டிருக்கும் நிலையே தொடர்கிறது.

பா.ஜ.க. வின் உட்கட்சி சண்டையும், பூசல்களும் கோஷ்டி கானங்களும் அது தனது செல்வாக்கினை கொஞ்சம் கொஞ்சமாக பற்பல மாநிலங்களிலும் இழந்து வருகின்ற நிலையே நீடிக்கிறது.

அயக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக பிரபல விஞ்ஞானியும், இளைஞர்களின் உள்ளங்களையெல்லாம் கொள்ளை கொண்ட பொறியாளர், மேனாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களையே தமது வேட்பாளராக அறிவிக்கலாமே. அதனை பல எதிர்க் கட்சி வட்டாரங்களும்  கூடி வரவேற்று ஆதரவு தருவதற்கு முன்வரக்கூடும்.

தமிழ்நாட்டுக்காரருக்கு முன்பு வட மாநிலத்தவர் ஒரு பெண்மணி - அம்மையார் பதவி வாய்ப்பைப் பெற்றார். தமிழ்நாட்டின் தி.மு.க.வின் - பங்கு அதன் தலைவர் கலைஞர் அவர்களின் செயலாக்கம் மிகவும் குறிப்பிடத் தக்கதாக அமைந்தது.

பிரச்சினை ஏதும் இல்லாமல் அவரது பதவிக் காலம் முடிவடையும் நிலையில், இப்போது தேவைப்படுவது ஒரு பொதுநிலையில் பல கட்சியினராலும், கட்சிக்கு அப்பாற்பட்டவராகவும் இருப்பதோடு, மனசாட்சியை அடகு வைத்துவிடாதவராக, ஓர்ந்து கண்ணோடாது, தேர்ந்து முடிவு செய்யும் சமன் செய்து சீர்தூக்கும் துலாக்கோல் போன்றவரே முழுத் தகுதியானவர் ஆவார்!

அவருடைய கனிந்த அனுபவ அடிப்படையில் உலகத்தின் பார்வையை வெகுவாக ஈர்த்த சர்வதேசப் புகழ் பெற்றவர், ஒரு சிறுபான்மைச் சமூகத்தவரானவர்; அனைத்துத் தரப்புடனும் அன்போடு, பண்போடு பழகும் பான்மையர் மேதகு ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள் ஆவார்கள்!

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமைக்குரிய நாடான நமது நாட்டின் மக்களால் விரும்பப் படுபவர் என்ற முத்திரை பெற்றவர். ஆளும் கூட்டணியின் பொது வேட்பாளராகவே அறிவித்தால், வெற்றியும் எளிது; விவேகமான பொதுமை நிறைந்த முடிவாக அமையவும் கூடும்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணியும் அதன் தலைமையும், தோழமைக் கட்சிகளும் இவரை வேட்பாளராக்க முயற்சித்தல் சிறப்பானதாக அமையும்.

வேண்டுகோளாக இதனை விடுக்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்


தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...