Thursday, May 31, 2012

பக்தியா? மனச்சிதைவு ‍‍ நோயின் பாதிப்பா?


- பேராசிரியர் ந.வெற்றியழகன்
முப்பால் நோய்கள்:
பொதுவாக, நோய்கள் எனப்படுபவை மூவகையில் அடங்கும். அவை, 1. மனம் சார்ந்தவை, 2. உடல் சார்ந்தவை, 3. மனம்_ உடல் சார்ந்தவை. இவற்றில், மனம் சார்ந்தவை நோய்கள் பற்றி ஆய்வு செய்ய இருக்கிறோம். மனம் மட்டும் தொடர்புடைய நோய் உள நோய் (Psychosis) ஆகும். நரம்புத் தொடர்புடையது உளத்தளர்ச்சி நோய் (Neurosis). இதில் முதலில் கூறப்பெற்ற உளநோயினால் பாதிப்புக்குள்ளானவர்களுள் பெரும்பாலோர் ஸ்கிசோப்ரென்யா (Schizophrenia) எனப்படும் மனச் சிதைவு நோய்க்கு ஆளானவர். மனச்சிதைவு நோயாளர்கள் ஸ்கிசோபரனிக் (Schizophrenics)ஆவர்.
உடைந்துபோன உள்ளம்
இந்த ஸ்கிசோபெரன்யா என்பதன் பொருள் மனம் உடைந்துபோதல் என்பதாகும். மனச்சிதைவு அல்லது ஆளுமைச் சிதைவு (Splitting of Mind or Personality) இதன் விளக்கமாகும். இந்த நோயினை, கிரெப்ளின் என்பவர் 1896ஆம் ஆண்டு டிமென்சியா பிரேகாக்ஸ் (DementiaPraecox) எனக் குறிப்பிட்டார். இதனை புலுலர் (1950) என்பார் ஸ்கிசோபெரன்யா என அழைத்தார்.
நான் யார் தெரியுமா?
இந்த மனச்சிதைவு நோயாளிகள் இயற்கை மீறிய அல்லது இயல்பு நிலை தாழ்ந்த (Abnormal) நிலையில் காணப்படுவர். இவர்கள், உலகெங்கும் அங்கிங்கெனாதபடி, நிறைந்துள்ளனர். இவர்கள், பகுத்தறிவு மனப்பான்மைக்கும், காரண_காரிய விளைவுகளுக்கும், உலகியல் நடைமுறை (Worldliness)க்கும் அப்பாற்பட்ட விந்தை வேடிக்கை மனிதர்கள்!!
இவர்கள், தமக்கு எல்லாம் வல்ல இறையாற்றல் இருக்கிறது; தாங்கள் கடவுளின் அவதாரம்; என்றெல்லாம் எண்ணி அவ்வாறே நடந்துகொள்வர். தங்களை பகவான் என்று அழைத்துக் கொள்வர். பிறரும் அவ்வாறே தம்மை அழைக்க வேண்டும் என் விரும்புவர். இன்றும் பலர், தாங்கள் இறையடியார்கள், கடவுள் பக்தர்கள்; கடவுளோடு உரையாடுபவர்கள் அவரின் அருளுக்குப் பாத்திரமானவர்கள் என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருப்பவர்கள்.
பத்தில் நான்கு:
இந்த மனச்சிதைவு நோய் 10 வகைகளாக மனநோய் மருத்துவ அறிஞர்களால் பாகுபடுத்தப்பட்டுள்ளன. விரிவுஅஞ்சி, அவற்றுள் மிக முதன்மையானதாகக் கருதப்படும் 4 வகைகளை மட்டும இங்கே விளக்க விழைகிறோம். அவை:
1. எளிய இயல்பு நிலை (Simple Sehizophrenia)
2. இளம்பருவ நிலை (Hebe Phrenia)
3. அய்யுறு நிலை (Paranoid Schizophrenia)
4. முதிர்நிலை (Catatonic Schizophrenia)
இனி, ஒவ்வொன்றாக ஆய்வோம்.
1. எளிய இயல்பு நிலை:
மனச்சிதைவு நோயின் தொடக்கநிலை; சொற்கள் சிதைந்து வெளிப்படும்; சிந்தனையில் தெளிவு இராது. இவை இதன் வெளிப்பாடுகளுள் சில.
திரும்பத்திரும்ப
2. இளம்பருவ இயல்பு
பேச்சில் தொடர்பு இராது; இயைபு இராது; இளமைப் பருவத்து உண்டாவது இது. மதக் கோட்பாடுகளில் அழுத்தமான நம்பிக்கைகள்; மதத் தத்துவங்களில் மன ஈடுபாடு; சிறுபிள்ளைத்தனமான பேச்சு; செயற்பாடுகள்; சின்னப்புன்னகை உதிர்ப்பு; இடைவெளி விட்டு வறட்டுத்தனமாகச் சிரிப்பது; ஒரே சொல்லை அல்லது சொற்றொடர்களை திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருப்பது;
ஓம்! ஓம்!! ஓம்!!!
ஹரேராம்! ஹரேகிருஷ்ணா!!
அல்லேலுயா!
அல்லாஹூ அக்பர்!
என்று முழக்கமிடுவது (Steriotyped Repetition of words or sentences)
சந்தேகம் என்னும் ஒரு சரக்கு
3. அய்யுறு நிலை:
யாரைப் பார்த்தாலும் எவற்றைப் பார்த்தாலும் அவர்கள் அல்லது அவை தனக்கு எதிராக, இருக்கிறார்கள், இருக்கின்றன, செயல்படுகின்றன(ர்), என்னைக் கொல்லச் சதி புரிகின்றனர்; என்னைப் பின் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றனர் என்றெல்லாம் அய்யப்படுவது. தன் துணைவியின் ஒழுக்கத்தில் அய்யப்படுவது; சீற்றப்படுவது - முதலியவை தன்மைகள் எல்லாம் இந்நோயாளிகளின் இயல்புகளாம்.
அழைக்கின்றார்! அழைக்கின்றார்!!
இவை எல்லாவற்றையும் விட உச்ச கட்டம் ஒன்று உளது. இதோ! இசைமயமான தேவகானம் என்காதில் விழுகிறது! அதோ! இறைவன் என்னோடு பேசுகிறார்! உரையாடுகிறார்! என்னை, அன்போடு அழைக்கின்றார்! அழைக்கின்றார். இறைவா! நான் உன்னைவிட்டு ஓடிப்போக முடியுமா? முடியுமா? என்றெல்லாம் கூறுவார்.
தன்னந்தனிமையில் பேச்சு
4. முதிர்நிலை
மனச்சிதைவு நோயின் முதிர்ந்த _ முற்றிய கட்டம் இது! தன் எதிரே, எவரும் இல்லாத நிலையில் யாரோ ஒருவர் இருப்பதாகக் கருதி நீண்ட நேரம் உருக்கமாக, கண்ணீர் பெருக்கமாகப் பேசிக்கொண்டிருப்பது; தன் குறையைத் தாழ்மையுடன் கூறி நிவாரணம் கேட்பது. எதிர்முனையில் எவரும் அழைப்பு எடுக்காத நிலையில் ஒருவர் தான்மட்டும் தனி அலைபேசியில் (Cell) தானே பேசுவது; மகிழ்வது வேண்டுவது என்கிற பெயரோடு இந்த முதிர்வுநிலை மனச்சிதைவு நோய் ஒத்துள்ளதல்லவா? இதைத்தான் பிரார்த்தனை (Prayer) என பகுத்தறிவாளர் டாக்டர் ஏ.டி.கோவூர் குறிப்பிட்டுள்ளதை நினைவு கூர்வோமே? இது ஒரு கட்டம்! இதற்கு மேலும் ஒரு கட்டம்.
சோதனை மேல்சோதனை போதுமடா சாமி!
ஆண்டவரே!  ஆண்டவரே! என்னை ஏன் கைவிட்டீர்? உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்! நான் என்ன தவறு செய்தேன்? என்னை நீ கைவிடலாமா? இது தகுமா? இது முறையா? இது தருமம்தானா?
சோதனைமேல் சோதனை போதுமடா சாமி!
என்னை மேலும் சோதனை செய்யலாமா? தாங்கமாட்டேன்! என்று புலம்புவது மற்றொரு நிலை!
மோட்சத்தில் முன்னிருக்கை:
கால்கள் இரண்டையும் மடக்கி, முடக்கி, முழந்தாளிட்டு, வானை நோக்கி இருகை நீட்டி, பகவானே! எனக்கு உன் கடைக்கண் காட்டு! மோட்சத்தில் எனக்கு முதல்வரிசையில் ஒர் இருக்கை இடம் ஒதுக்கி (Reservation of front Seat) வை! இன்னமும் திருவுளமே இரங்காதா? ஏழைக்கருள் செய்ய வாதா? -_ ஜெகன்மாதா? என, குனிந்து, நிமிர்ந்து, மண்டியிட்டு மண்ணிலே நெற்றி இடிபட விழுந்து, உடலுறுப்புகள் நிலத்தில் படிய இருகை குவித்து, தலைகவிழ்த்து பக்தி செய்து வருவது எல்லாம் இந்த கேட்டா டானிக் ஸ்கிகோபெரன்யா என்றும் மனச்சிதைவு நோயின் வெளிப்பாடுகள் என மனச்சிதைவு நோய்பற்றிய மருத்துவ நூல்கள் கூறுகின்றன.
பிரார்த்தனை பேரம்!
மாட்டுப் பட்டியில் உள்ள சாணியை ஒருவன் தன் கையால் எடுத்து உருட்டித் திரட்டி பிடித்துவைத்து அந்தச் சாணி உருண்டையின் எதிரே நின்று பயபக்தியோடு, பவ்யமாக, தலைகுனிந்து, நாத்தழுதழுக்க, பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன்! _ கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு, சங்கத் தமிழ் மூன்றும் தா! என, பிராத்தனை செய்து பேரம் பேசுகிறாரே இதற்கு என்ன பெயர்? மனச்சிதைவு நோயின் ஒருவகையான கேட்டா டானிக் ஸ்கிசோபெரன்யா _ அல்லாமல் வேறு என்னவாம்?
யாவர் இந்த மூவர்?
தமிழ்நாட்டின் மிகப் புகழ்பெற்ற பெரிய கவிஞர் ஒருவர் இந்த கேட்டாடானிக் மனச்சிதைவு நோயாளர்கள் பற்றிக் கூறியுள்ளதை அல்ல _ பாடியுள்ளதைக் கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும். பின் கூறப்போகும் மூவகையினரின் பேச்சில் பொருள் இராது; இயைபு இராது; தெளிவு இராது; அதுமட்டுமல்ல, முன்னுக்குப்பின் முரணாக இருக்கும். தாம் முதலில் சொன்ன கருத்துக்கு மாறாக - முரணாக அடுத்து உடனடியாக அவர்களே மறுத்துப் பேசுவர். அவற்றை, ஒரு பேச்சுக்காகக் கூட எடுத்துக் கொள்ளக்கூடாது. அவற்றை, ஒரு பெருட்டாகவே மதிக்கக் கூடாது என்கிறார் அந்தக் கவிஞர். அவர் கூறும் அந்த மூவர் யாவர்? இவர்கள்தாம் அவர்கள்.
1. பைத்தியக்காரர்கள்
2. முட்டாள்கள்
3. பக்தர்கள்
இக்கருத்தமைந்த பாடலடிகள் கீழே வருகின்றன. பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும் பக்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ? இவ்வண்ணம், பாடிய பாவலர் யார் தெரியுமா? கம்பர்! உண்மைகளை எத்தனை அழகாக - வலிவாக எடுத்துப் பாடியுள்ளார்?
முன்னுக்குப்பின் முரண்
முன்னுக்குப்பின் முரணாகக் கூறுவதும் மனச்சிதைவு நோயாளியின் இயல்பு என்பதற்கு ஒரு வலிவான சான்று ஒன்றையும் பார்ப்போம். கவிஞர் _அவர் சிவனடியார் _ சிவன் மீது பக்திகொண்டவர். பாடிய பாடலின் கருத்துகளைப் பார்ப்போமே? எனது இறைவன், இத்தகையோன், இவ்வடிவினன், இந்தச் செயல்புரிபவன் என உலக மக்கள் எவராலும் தங்கள் மனத்தால்கூட உணர்ந்து அறிந்து வெளியிலே சொல்ல முடியாத அரிய தன்மையன் _ என்ற கருத்தில் தம் பாடலின் முதலடியைப் பின்வருமாறு தொடங்குகிறார்.
உலகுஎலாம் உணர்ந்து ஒதற்கு அரியவன் இப்படிப்பாடிய இந்தக் கவிஞர் தாம் முதலடியில் சொன்ன கருத்தை உடனடியாக அதனோடு முரண்பட்டு, அந்த இறைவன், தலையிலே நிலவை யணிந்தவன்; கங்கையாறு அவன் தலைச்சடாமுடியில் நீர் மலிந்து காணப்படும்; அவன் வரம்பற்ற சுடர் படிவினன்; தில்லைச் சிற்றம்பலத்திலே திருநடனம் செய்து கொண்டிருப்பான்; அவன் தன் திருவடியில் சிலம்பு அணிந்திருப்பான், அவன் தாளை வணங்குவோம்! என இன்ன தன்மையன் என உணர்ந்து கூறமுடியாத சிவன் மேற்சொன்னபடி யெல்லாம் காணப்படுவான் என்று பாடுவது, கம்பர் கூறிய மூன்றாவது வகை மனச்சிதைவு நோயாளிதான் இந்தக் கவிஞர் என்பது தெளிவாகிறதல்லவா? அவரது, இக்கருத்துகள் அமைந்த மற்ற பாடலடிகள் கீழே: நிலவு லாவிய நீர்மலி வேணியன்; அலகில் சோதியன்; அம்பலத்(து) ஆடுவான்; மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்! இந்தக் கவிஞர் யார் தெரியுமா? பெரியபுராணம் பாடிய சேக்கிழார்!
விரிவாக அறிய விரும்பினால்
அமெரிக்க மனநல மருத்துவக் கழகம் (American Pschiatric Association) வெளியிட்டுள்ள லாஸ் ஏன்சல்ஸ் கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியரும் மனநல மருத்துவ வல்லுநரும் ஆன ஜேம்ஸ் சி. கோலமன் (James C. Coleman) எழுதிய, தாழ்நிலை உளவியலும் நவீன வாழ்வியலும் (Abnormal Psychology and Modern Life) என்னும் ஆங்கில நூலில், மேலும் விரிவாக, விளக்கமாக எழுதப்பட்டுள்ளன. விரிவாக அறிய விரும்புவோர் அதனைப் படித்து மேலும் பல உண்மைகளைத் தெரிந்துகொள்ளலாம்.
பக்தி - மனச்சிதைவு நோயின் பாதிப்பா?
இவற்றையெல்லாம்-, நாம் அறிந்து கொள்கிறபோது, பக்தி என்பதும், பிரார்த்தனை என்பதும் மனச்சிதைவு நோயின் - குறிப்பாக கேட்டாடானிக் ஸ்கிசோபெரன்யா (Catatonic Sehizophrenia)-வின் பாதிப்பு என்பதும் தெள்ளத் தெளிவாகப் புலனாகின்றது அல்லவா? மதம், பக்தி என்னும் மனச்சிதைவு நோய் வகைகளின் பாதிப்பு மக்கள் சமுதாயத்தை விட்டு நீங்கப்படும்! உலகின் தலைசிறந்த, சமுதாய மனநல மருத்துவராம் பகுத்தறி(வியல்)வுப் பகலவன் தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பண்பாட்டு மருத்துவம் ஓங்கட்டும்!!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...