Friday, May 4, 2012

டெசோவின் தேவை!


மார்ச் 24 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தனியீழக் கோரிக்கை மீண்டும் வலியுறுத்தப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. கலைஞர் அவர்கள் தலைமையில் உருவாக்கப்பட்டிருந்த டெசோ  என்ற அமைப்பினை மீண்டும் தொடங்குவோம் என்று குறிப்பிட்டார்கள்.
தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்களும் தனியீழம் குறித்துத் தொடர்ந்து தம் கருத்தினை வலிமையுடன் பதிவு செய்து வந்தார். கலைஞர் கடிதம் வாயிலாகவும், பொதுக் கூட்டங்கள் மூலமாகவும் இந்தக் கருத்தினை வெளிப்படுத்தி வந்தார்.
அதற்கு வடிவம் கொடுக்கும் வகையில்தான் கடந்த 30ஆம் தேதியன்று சென்னை அண்ணா அறிவால யத்தில் இதற்கான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்று மீண்டும் டெசோவை செயல்படுத்துவது என்ற முடிவுக்கு வரப்பட்டது.
அந்த முடிவின்படி தன்னிலை விளக்கம் கொண்ட ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் அவசியம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கும் டெசோவின் தலைவர் கலைஞர் அவர்கள் ஆணித்தரமாகப் பதிலும் சொன்னார்.
விடுதலைப்புலிகள் இயக்கம்தான் ஒடுக்கப்பட்டு விட்டதே - பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டு விட்டார்களே - இப்பொழுது டெசோவால் என்ன பிரயோசனம்? என்று வினா எழுப்பக் கூடிய, சில அதிபுத்திசாலிகளும் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் முன்பு எப்பொழுதையும்விட இந்த அமைப்பு இப்பொழுது மிகவும் தேவைப்படுகிறது.
ஈழத் தமிழர்களுக்காகப் போராடக் கூடிய போராளி அமைப்புகள் அரச பயங்கரவாதத்தினால் ஒடுக்கப் பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள ஈழத் தமிழர் களுக்கும் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் அதிக பாதுகாப்புகள் தேவைப்படும் கால கட்டம் இது!  அவர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய முக்கிய தருணமும்கூட!
2009 படுகொலைக்குப் பிறகு 2012இல் அய்.நா. தலையிடுகிறது; ஜெனிவாவில் மனித உரிமைக் கழகத்தால் இலங்கையில் நடைபெற்று இருக்கிற இனப் படுகொலை (Genocide) வெளி உலகத்திற்கு அதிகார பூர்வமாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடைசி வரை அந்தத் தீர்மானத்தை ஆதரிக்கும் பிரச்சினையில் இந்திய அரசு தள்ளாடிக் கொண்டு தானிருந்தது. தமிழ்நாட்டில் தமிழர்கள் கொடுத்த அழுத்தமும், மத்திய ஆட்சியில் அங்கம் வகிக்கும் தி.மு.க. கொடுத்த அழுத்தமும்தான் இந்தியாவை கடைசி நேரத்திலாவது, இலங்கைக்கு எதிராக ஜெனிவா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் இடத்திற்கு நகர்த்தியது.
இந்தத் தீர்மானத்தின்மீது தொடர் செயல்கள் நடந்தேறவும் கூட, இந்த டெசோ அமைப்பு தேவைதான்! ஈழத் தமிழர்களுக்கு இனி நாதியில்லை என்று எவரும் கருதிவிட முடியாது. இதோ டெசோ என்ற அமைப்பு மக்கள் மத்தியில் இந்தப் பிரச்சினையை எடுத்துச் சென்று மக்கள் ஆதரவை - பலத்தை திரட்டிட முனைந்துவிட்டது என்கிறபோது, அது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று அல்லவா?
இதன் மூலம் இந்திய மத்திய அரசுக்கும் அழுத்தம் கொடுக்கப்படவில்லையா? உலகத் தமிழர்கள் மத்தியிலும் இந்த அதிர்வு ஏற்படத்தானே செய்யும். ஈழத் தமிழர்கள் மத்தியிலும் ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்துமே.
முக்கியமாகக் கவனிக்கத்தக்கது - இனி சிங்களவர்களோடு ஈழத் தமிழர்கள் இணைந்து வாழ முடியாது என்பது உறுதிபட்ட நிலையில், தனியீழம் தான் இறுதித் தீர்வு என்பதை உலக நாடுகள் பல இப்பொழுது உணரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த உணர்வுகளையெல்லாம் ஒன்று திரட்ட ஒருங்கிணைக்கத் தேவைப்படும் காலத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் அமைப்பு இது.
வீண் விதண்டாவாதக் கேள்விகளை எழுப்பிக் குட்டையைக் குழப்பாமல், முடிந்தால் இணைந்து செயல்பட முன் வரட்டும்; முடியா விட்டால் - மனப் பக்குவம் இல்லாவிட்டால் தொல்லை கொடுக்காமல் ஒதுங்கியாவது இருந்து தொலையட்டும் என்பதே நமது கனிவான வேண்டுகோளாகும்.


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...