Tuesday, May 29, 2012

ஏழை மக்களின் தலைகள்தான் கிடைத்ததா?


திருடன் கையில் சாவி கொடுப்பது என்பார்கள். அந்த நிலைதான் - பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் முடிவை பெட்ரோல் நிறுவனத்தின் கையில் விட்டு வைப்பதாகும். கடந்த 8 ஆண்டு ஆண்டுகளில் 39 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 17 முறை  விலை உயர்த்தப்பட்டுள்ளது.
உலகில் கச்சாப் பொருள்களின் விலையேற்றத் திற்கு ஏற்ப பெட்ரோல் விலையில் மாற்றம் ஏற்படும் என்று சொன்னால்கூட எத்தனை முறை பெட்ரோல் விலையைக் குறைத்திருக்கிறார்கள்?
இதில் இன்னொரு விடயமும் - கவனிக்கத் தக்கது. உலகம் தழுவிய இந்தப் பிரச்சினையில் மற்ற மற்ற நாடுகளில் பெட்ரோல் விலையை ஒப்பிடும் பொழுது இந்தியாவில் அதிகமாக இருப்பது ஏன் என்ற வினாவும் எழுகிறது. பாகிஸ்தானில் ஒரு லிட்டரின் விலை ரூ.59 வங்கதேசத்தில் ரூ.43.40, இலங்கையில் ரூ.69.70, அமெரிக்காவில் ரூ.39.60 இந்த நிலையில் இந்தியாவில் மட்டும் ரூ.77 என்ற நிலை ஏன்?
பெட்ரோல் விலை இந்த அளவு உயர்வுக்குக் காரணம் அதற்குள் திணிக்கப்படும் வரிதான் என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும். அதைக் குறைப்பது குறித்து ஏன் யோசிக்கக் கூடாது? எண்ணெய் நிறுவனங்களுக்கு நட்டம் நட்டம் என்று கூறுகிறார்களே அதாவது உண்மையா? எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு காலாண் டிலும் தெரிவிக்கும் அறிக்கை கவனிக்கத் தக்கதாகும்.
எடுத்துக்காட்டாக 2010-2011ஆம் ஆண்டின் IOC நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டில் (4 மாதத்தில்) நிகர லாபம் ரூ.5294 கோடி, அரசுக்குச் செலுத்தியுள்ள வரி ரூ.832.27 கோடியாகும். HPCL என்று கூறப்படும் நிறுவனத்தின் லாபம் ரூ.2142.22 கோடியாகும். அரசுக்குச் செலுத்திய வரி ரூ.90.90 கோடியாகும். BPCL நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.2142.22 கோடியாகும் அரசுக்குச் செலுத்திய வரி ரூ.198 கோடியாகும்.
இந்த மூன்று நிறுவனங்களின் நான்கு மாத லாபம் ரூ.10,699.61 கோடியாகும்.
உண்மை நிலவரம் இவ்வாறு இருக்க, பெட்ரோல் நிறுவனங்கள் நட்டம் அடைவதாகக் கூறுவதில் கூட அய்யவினா எழுகிறதே!
அப்படி  லாபம் ஈட்டப்பட்ட அந்தக் கால கட்டத் தில் பெட்ரோல் விலை குறைக்கப்படவில்லையே! இப்பொழுதைக்கு உடனடியாக டீசல் விலை, மண்ணெண்ணெய் விலை, சமையல் எரிவாயு விலை ஏற்றப்படாவிட்டாலும் அடுத்த கட்டமாக ஏற்றபடக் கூடிய அபாயம் தலைக்குமேல் கூரிய கத்தியாகத் தொங்குகிறது என்றே கணிக்கப் படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டால், அதன் விளைவு - எல்லா மட்டங்களிலும் விலை உயர்வு இறக்கை கட்டிக் கொண்டு பறக்க ஆரம்பித்துவிடுமே!
ஏழை, நடுத்தர மக்கள், அன்றாடம் கூலிக்காரர்கள், மாதாந்திரச் சம்பளக்காரர்கள் இந்தத் திடீர்க் கூடுதல் விலையை எப்படி சமாளிப்பார்கள்? திடீர் பெட்ரோல் விலை உயர்வு போல திடீர் வருமானம் எங்கிருந்து இம்மக்களின் வீட்டில் கொட்டப் போகிறது?
போதும் போதாதற்கு தமிழ்நாடு அரசோ அதன் பங்குக்கு மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, பேருந்துக் கட்டண உயர்வு என்று மக்களின் தலையில் ஆணி அடித்து விட்டது.
கல்வி நிறுவனங்கள் திறுக்கப்படும் நேரம் - குடும்ப வருமானத்தில் அதற்காகவும் பணம் தேவைப்படும் ஒரு சூழல்! விலைவாசி உயர்வு என்பது சமூக அமைப்பின் முகத்தையே மாற்றக் கூடியதாயிற்றே!
பெரிய பெரிய தொழிலதிபர்களுக்கு வரிச் சலுகை, வரி தள்ளுபடி, வாராக்கடன், வெளி நாடுகளில் கறுப்புப்பணம் என்று பல லட்சக் கணக்கான கோடிகளை இந்தியாவின் வரவுக்குள் கொண்டு வர இயலாமல், ஏழை எளிய மக்களின் தலைகளில் மிளகாய் அரைப்பது ஈவு இரக்கமற்ற செயலாகும்.
கூட்டணி கட்சியான திமுக உட்படப் போர்க் கொடி தூக்கி இருப்பதை மத்திய அரசு உணர வேண்டும்; செயல்பட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!
தனியார் நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்யும் முறையும் மாற்றப்பட்டாக வேண்டும் இது மிக மிக முக்கியமாகும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...