Sunday, April 22, 2012

மூடநம்பிக்கை வியாபாரிகள்மீது தேவை நடவடிக்கை


தருமபுரி, கிருட்டினகிரி மாவட்டங்களில் உள் கிராமப் பகுதியில் ரத்தக் காட்டேரி புகுந்ததாகப் புரளி கிளப்பப்பட்டது.
அப்பாவி மக்கள் வீட்டுக் கதவுகளில் நாமம் வரைந்தும் இன்று போய் நாளைவா! என்று தமிழில் எழுதியும் ரத்தக் காட்டேரியின் பாதிப்பிலிருந்து தப்பிக்க வழி செய்தார்கள் என்றெல்லாம் வெட்கம் கெட்ட ஊடகங்கள் மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பின.
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் அறிவுறுத்தல்படி, அவ்விரு மாவட் டங்களிலும் திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் பகுத்தறிவு பிரச்சாரம் முடுக்கி விடப்பட்டது.
பேய், பிசாசு, பூதம், மாந்திரிகம் முதலியவைபற்றிய மூடநம்பிக்கைகள் பற்றி கழகப் பிரச்சாரப் படை அக்கக்காக, ஆணி  வேர் வரை சென்று பிய்த்து உதறியது. மூட நம்பிக்கையின் முதுகுத் தோலை  உரித்துத் தோரணமாகத் தொங்க விட்டனர் எமது தோழர்கள். இளைஞர்கள் மத்தியில் இந்தப் பிரச்சாரம் பெரும் ஈர்ப்பைப் பெற்றது. பொது மக்கள்கூட சிந்திக்க ஆரம்பித்தனர். இந்தப் புயல் வேகப் பிரச்சாரத்தின் காரணமாக ரத்தக் காட்டேரி பீதி இருந்தஇடம் தெரியாமல் புஷ்வாணம் ஆயிற்று.
வழக்கத்துக்கு மாறாக டெக்கான் கிரானிக்கல் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில ஏடுகள்கூட கழகப் பிரச்சாரத்தின் வலிமையை முக்கிய இடம் கொடுத்து படங்களுடன் வெளியிட்டன.
அதோடு அடங்கி விடுவார்களா விஷமிகளான - மூடநம்பிக்கையாளர்கள்? இப்பொழுது காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிளப்பி விட்டுள்ளனர்.
வெள்ள குளம், புத்தேரி பகுதிகளில் இது கிளப்பி விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில அரசு கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று.
இந்த மூடநம்பிக்கை விஷம விதையைத் தூவுவோர் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். வதந்திகளைப் பரப்பி மக்களை பீதி அடையச் செய்வது குற்றமான செயலே.
மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டமே கூறுகிறது (51ஹ () அதனைச் செயல்படுத்த வேண்டியது ஓர் அரசின் அடிப்படைக் கடமையாகும்.
பிள்ளையார் பால் குடித்தார் என்று வதந்தியைக் கிளப்பவில்லையா? அதன் முடிவு என்னவாயிற்று? தேர்தல் பிரச்சாரத்துக்காக ஆர்.எஸ்.எஸ். தான் அதனைக் கிளப்பி விட்டது என்பது வெளிச்சத்துக்கு வந்ததே. அதன் பின்னணியில் சந்திரா சாமியார்கள் இருந்தது அம்பலமாகி விடவில்லையா?
தமிழ்நாடு அரசில் சமூகச் சீர்திருத்தத்துறை என்ற ஒன்று உள்ளது. இந்த ஆட்சியில் அதன் நிலைப்பாடு என்ன என்பது மர்மமாகவே உள்ளது.
அந்தத் துறையைச் சார்ந்தவர்களின் குழு ஒன்று இதுபோன்ற இடங்களில் அனுப்பி வைக்கப்பட்டு, ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். அந்தக் குழுவின் சமூக ஆர்வலர்கள், மனநல மருத்துவர் (அவர்களும் பகுத்தறிவுவாதிகளாக இருப்பது அவசியம்) இடம் பெற வழி செய்ய வேண்டும்.
காவல்துறை உளவுப் பிரிவின் மூலமும் இந்தப் பொய்ப் பிரச்சாரத்திற்கான மூலம் எங்கிருந்து கிளப்பப்பட்டது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.
மக்களின் அறிவையும் பொருள்களையும், பொழு தையும் நாசப்படுத்தி, பீதியை உருவாக்குபவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
மதுரை - பேரையூரில் குழி மாற்றுத் திருவிழா என்ற பேரில் குழந்தைகளைக் குழியில் போட்டு மூடும் கொடுமை, மாவட்ட ஆட்சியர் தலையீட்டால் தடுக்கப் படவில்லையா?
கழகம் தன் பிரச்சாரத்தை ஒரு முனையில் செய்து கொண்டுதானிருக்கும்; அதே நேரத்தில் அரசின் செயல்பாடு என்பதும் முக்கியமானதே! அறிவியல் சாதனங்களான ஊடகங்கள் சற்றும் சமூகப் பொறுப் பின்றிப் பீதியைக் கிளப்பலாமா? காசுக்காக கண்டதையும் செய்யலாமோ!
பசிக்காக எதையும் சாப்பிடுவார்களா? கடைசியாக ஒன்று - ரத்தக் காட்டேரி ஒரு ஊருக்குள் புகுந்தால் வைரஸ்  ஜுரம் மாதிரி மூன்று நாள்களில் கலைந்து ஓடி விடுமோ!
கழகத் தோழர்களே, எங்கெங்கெல்லாம் மூட நம்பிக்கை, தன் கொடுக்கை நீட்ட முற்படுகிறதோ, அங்கங்கெல்லாம் அதனை முளையிலேயே கிள்ளி எறிவதில் முனைப்பைக் காட்டுங்கள்!


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...