Sunday, April 22, 2012

மனப்பான்மையில் மாற்றம் தேவை!


மத்திய அரசு இயற்றிய 2009 இலவச கட்டாயக் கல்வி சட்டம் அரசமைப்புச் சட்டப்படி செல்லத்தக்கதே என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துவிட்ட நிலையில் அது பற்றி ஏடுகள் சில சர்ச்சைகளைக் கிளப்பி யுள்ளன.
இதுபற்றி இந்து ஏட்டில் (14.4.2012) வெளி வந்துள்ள செய்திக் கட்டுரையில் குறிப்பிடப் பட்டுள்ளவை - சமுதாயப்பார்வை எந்த நிலையில் உள்ளது என்பதற்கான கண்கண்ட எடுத்துக் காட்டாகும்.
ஏழை எளிய மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் 25 விழுக்காடு தனியார் பள்ளிகளில் சேரும்பொழுது ஏதேதோ பிரச்சினைகள் ஏற்படுமாம்.
காரில் வந்து பள்ளியில் இறங்கும் பிள்ளைகளுடன் பள்ளிக்கு நடந்து வரும் பிள்ளைகள் இணக்கமான வகையில் பழகுவதற்குக் கடினமாக இருக்குமாம்.
பள்ளி மாணவர்களிடத்தில் இதுபற்றி கருத்துக் கேட்டு மிகுந்த அக்கறையுடன் அதனை வெளியிட்டும் உள்ளது இந்து ஏடு.
(1) மாணவர்களும், ஆசிரியர்களும் புதிய சூழலுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ள வேண்டி யிருக்கும். (2) ஆசிரியர்களின் பணிச்சுமை அதிகரிக்கும். (3) மாணவர்களிடையே நிலவக் கூடிய தகவல் பரிமாற்ற இடைவெளி அதிகமாகப் பாதிக்கும். (4) புதிய மாணவர்களுக்கு ஆசிரியர்கள் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொடுக்க நேரிடும். ஏற்கெனவே நாங்கள் அறிந்தவற்றை திருப்பிக் கேட்க, நாங்கள் ஏன் பள்ளிக்குச் செல்லவேண்டும்? என்று மாணவர் கள் கேட்கிறார்கள்! (5) புதிய மாணவர்களுக்கான கூடுதல் வகுப்புகள், கூடுதல் இருக்கைகள், கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப் படவேண்டும். அவற்றைப் பள்ளி நிருவாகம் எப்படி சமாளிக்கும்?
(6) எங்கள் பள்ளிக்கென்று சில கலாச்சாரம் இருக்கிறது. அதுபோன்ற கலாச்சாரம் உடைய மாணவர்கள் மட்டுமே வருவார்கள் என்று நம்பி எங்கள் பெற்றோர்கள், எங்களை பள்ளிக்கு அனுப்புகின்றனர், அது கெட்டுப் போய்விடும்.
என்பது போன்ற உயர்ஜாதி, மேல்தட்டு மனப் பான்மையைத்தான் முன்னிலைப்படுத்துகிறார்கள் என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.
பச்சையாகச் சொல்ல வேண்டுமானால் மேல்ஜாதி பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் கீழ்ஜாதிக்காரர்கள் வரக்கூடாது! பணக்காரர்கள் படிக்கும் பள்ளிகளில், ஏழை மாணவர்கள் வந்து கலக்கக்கூடாது.
கலாச்சாரம், தகவல் பரிமாற்றம், ஆசிரியர் களுக்குக் கூடுதல் சுமை என்பதெல்லாம் இந்தக் காரணங்களுக்காகச் சொல்லப்படும் வெவ்வேறு வார்த்தைகள், அவ்வளவே! புதிதாகச் சேர்க்கப்பட்ட அத்தகைய இருபால் மாணவர்களுக்குரிய கட்டணத் தொகையை அரசு செலுத்தும் என்று சொன்ன பிறகு நிருவாகத்திற்கு என்ன கூடுதல் சுமை?
தலைமுறை தலைமுறையாகப் படித்த கூட்டம் ஒன்று; புதிய தலைமுறையாகப் பள்ளியில் அடி எடுத்து வைப்பவர்கள் இன்னொரு பிரிவினர்- இந்நிலைக்கு யார் காரணம்? உயர்ஜாதி மேல்தட்டு மக்கள்தானே காரணம்? அவர்கள்தானே இந்தப் பிரச்சினைக்கான தீர்வுக்கும் ஒத்துழைக்க முன்வரவேண்டும்?
மாணவர்களுக்குச் சீருடை என்பதுகூட மாணவர் கள் மத்தியில் வேறுபாட்டு உணர்ச்சி வந்து விடக் கூடாது என்பதற்காகத்தானே!  அதே கண்ணோட்டம் இந்தப் பிரச்சினையில் மட்டும் வேண்டாமா?
இவர்கள் சொல்லும் அந்தக் கலாச்சாரமோ, தகவல் பரிமாற்ற சிக்கலோ எப்பொழுது அகலும்? அவர்களுக்கும் இதுபோன்ற வாய்ப்பைக் கொடுத்தால் தானே மாறும்? மாறாமலே போகுமானால்  ஒரு கட்டத்தில், மாற்றத்திற்கான மனப்பான்மை வெடிக்க ஆரம்பித்துவிடுமே!  அத்தகையவர்கள் பெரும்பான் மையினரும் ஆயிற்றே!  அந்தப் பூகம்பத்தை மேல்தட்டு மாந்தர்கள் தாங்குவார்களா? அரசியல் ஜனநாயகம் என்பதை விட இந்த சமூக ஜனநாயகமே முக்கிய மானது - முதன்மையானது என்பதை மறக்க வேண்டாம்!


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...