Wednesday, April 4, 2012

தலைமைச் செயற்குழு தீர்மானம்


  • சேது சமுத்திரத் திட்டம்
  • ஈழத் தமிழர் வாழ்வுரிமை
  • காவிரி நீர்ப் பிரச்சினைகளை வலியுறுத்தி
ஏப்ரல் 11 அன்று அரசு மாவட்டங்களில் திராவிடர் கழகம் போராட்டம்!
தலைமைச் செயற்குழு தீர்மானம்


சென்னை, ஏப்.3 - தமிழ்நாட்டின் முக்கிய உரிமைப் பிரச்சினைகளை வலியுறுத்தி வரும் 11ஆம் தேதியன்று தமிழ்நாட்டில் அனைத்து அரசு மாவட்டங்களிலும் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப் பட்டது.
இன்று காலை சென்னை - பெரியார் திடல் துரை. சக்ரவர்த்தி நிலையத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தீர்மானங்கள்:
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
இரங்கல் தீர்மானம் ( 3ஆம் பக்கம் காண்க)
தீர்மானம் (2) : தொடர் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டோருக்கும், ஏற்பாட்டாளர்களுக்கும் பாராட்டு
வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு - உரிமைக் காப்புத் தொடர்ப் பிரச்சாரப் பயணத்தில் பங்கு கொண்டு சிறப் பாகப் பேசி தம் கடமையை பாராட்டும் வகையில் ஆற்றிய கழகச் சொற்பொழிவாளர்கள், மந்திரமா, தந்திரமா கலைஞர்கள் ஆகியோருக்கும் - இக்கூட்டங்களை அரும்பாடுபட்டு நேர்த்தியாக ஏற்பாடுகளைச் செய்த கழகப் பொறுப்பாளர்களுக்கும், பேராதரவு காட்டிய பொது மக்களுக்கும் இச்செயற்குழு தமது பாராட்டுதலையும், நன்றியறிதலையும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் (3) : தனி ஈழமே தீர்வு
ஜெனிவாவில் நடைபெற்ற அய்.நா.வின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில்  24 நாடுகள் அளித்த ஆதரவின் அடிப்படையில், இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிங்கள இனவாத  அரசால் திட்டமிட்ட வகையில் நடத்தப்பட்ட இனப்படுகொலைகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், அதற்கு எந்தவித ஒத்துழைப்பையும் அளிக்கப்போவதில்லை என்று இறுமாப்புடன் கருத்துத் தெரிவித்து வருவதோடு உலக நாடுகளை அவமதிக்கும் வகையில் ஆணவமாகப் பேசி வரும் இலங்கை அதிபர் ராஜபக்சே மற்றும் இலங்கை அரசு அமைப்புக்கும் இச்செயற்குழு தம் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.
இந்த  நிலையில் தனி ஈழம் ஒன்றுதான் நிலையான இறுதித் தீர்வு என்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த (24-3-2012) திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் கருத் துகளை வரவேற்று, இப் பிரச்சினையில் அடுத்த கட்ட நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கழகத் தலை வர் அவர்களை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் (4) :  சேதுசமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்துக
தமிழர்களின் நீண்ட கால கனவுத் திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டதைச் செயல்படுத்த வேண்டும் என்று திராவிடர் கழகம் நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வந்துள்ளது; பல போராட்டங்களையும், தொடர் பிரச்சாரத்தையும் நடத்தியும் உள்ளது.
கடந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது,  உரிய தொழில்நுட்ப வல்லுநர்களின் திட்டங் களையும், கருத்தினையும், வழிகாட்டுதலையும் ஏற்று நல்வாய்ப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மாண்புமிகு டி.ஆர். பாலு அவர்கள் (தி.மு.க.) கப்பல் துறை அமைச்சராக இருந்த  நிலையில், பணிகள் விரைவாக மேற்கொள்ளப் பட்டும், இன்னும் 22 கி.மீட்டர் தூரம் அளவுக்கே மணல் வாரும் பணி முடிக்கப்பட வேண்டிய கால கட்டத்தில், அஇஅதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா, சுப்பிரமணிய சாமி ஆகியோர் உச்சநீதி மன்றம் சென்று திட்டத்தின் செயல்பாட்டுக்கு இடைக்காலத் தடை யினைப் பெற்று, தமிழின விரோதப் பணியில் ஈடுபட் டுள்ளனர்.
ஏற்கெனவே ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு, பெரும்பாலான அளவு பணிகள் முடிக்கப்பட்ட நிலையில்,  வேறு மார்க்கத்தில் இத் திட்டத்தை நிறைவேற்றுவது பற்றி சிந்திக்குமாறு உச்ச நீதி மன்றம் வழி காட்டுவதும், மத்திய அரசும் அதற்கேற்ற வகையில் செயல்பட முயற்சிப்பதும், சரியான செயல்பாடாக இருக்க முடியாது என்பதை இச்செயற்குழு திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த நிலையில், அறிவியல் அடிப்படையிலான தொழில் நுட்ப முறையில் பி.ஜே.பி. ஆட்சியின் போதே முடிவு செய்யப்பட்ட வழித்தடத்தைத் தவிர்த்து, புராண இதிகாச மூடநம்பிக்கைக் காரணங்களின் அடிப்படையில் மக்கள் நலம் சார்ந்த ஒரு திட்டத்தை முடக்குவது, அரசு ஏற்றுக் கொண்டுள்ள மதச்சார்பற்ற தன்மைக்கும், விஞ்ஞான மனப்பான்மைக்கும்  51 ஹ- () விரோதமானது என்பதை செயற்குழு சுட்டிக்காட்டுகிறது. மேலும் அண்ணாவின் பெயரையும், திராவிட என்ற இனக் கலாச்சாரப் பெயரையும் கட்சியில் வைத்துக் கொண்டுள்ள அனைத்து இந்திய அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளரும் தமிழ்நாடு முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா அவர்கள்,  அண்ணாவின் கொள்கைக்கு எதிராக, ராமன் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம் கண்டிக்கப் படத்தக்கதாகும். பெரியார், அண்ணா மற்றும் திராவிடர் இயக்கக் கொள்கைக்கு விரோதமானதும் ஆகும்.
திராவிடர்  இயக்க சிந்தனையாளர்களும், முற்போக்கு எண்ணம் கொண்டவர்களும்,  மதச் சார்பற்ற கொள்கை யில் நம்பிக்கை உள்ளவர்களும் இதனைக் கண்டிக்க வேண்டும் என்றும், இத்திசையில் பிரதமருக்குத் தந்திகளை அனுப்ப வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் விடுத்த அறிக்கை (28-3-2012) காலத் தால் மேற்கொள்ளப்பட்ட கடமை உணர்வு மிகுந்த ஒன்றாகும்.
மதச்சார்பின்மையை வலியுறுத்தும் வகையிலும் அஇ அதிமுக பொதுச்செயலாளர் மேற்கொண்டுள்ள முடிவு அண்ணா அவர்களின் கொள்கைக்கு எதிராகப் போவதை சுட்டிக் காட்டும் தன்மையிலும், சேது சமுத்திரக்கால்வாய்த் திட்டத்தை ஏற்கெனவே நீரி நிறுவனம் தொழில்நுட்ப ரீதியில் உருவாக்கிக்கொடுத்த அந்த 6 ஆவது நீர்வழித் தடத்திலேயே விரைந்து முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும்,  முதற் கட்டமாக மாவட்டத்தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்து வது என்றும், அடுத்தகட்ட நடவடிக்கையை கழகப்பொதுக் குழுவைக்கூட்டி முடிவு எடுப்பது என்றும் இச்செயற்குழு தீர்மானிக்கிறது. சேது சமுத்திரத்திட்டம் அமலாக்கம், ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கு உத்தரவாதம் காவிரி நீரில் தமிழர் களுக்குரிய உரிமை மீட்பு (காவிரி நடுவர் மன்ற இடைக்கால ஆணையை அரசு கெசட்டில் வெளியிடுவது) இவற்றை வலியுறுத்தி 11.4.2012 அன்று அரசு மாவட்ட தலை நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் (5) : விலைவாசி உயர்வுக்குக் காரணமான கட்டண உயர்வுகளை ரத்து செய்க!
பேருந்துக்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு இவற்றின் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ள நிலையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல மக் களின் அடிப்படைத்தேவையான மின்சாரத்தின் கட்டணத் தையும் உயர்த்தியதன் மூலம் விலைவாசி உயர்வு என்னும் கடும் தாக்குதலுக்குப் பொதுமக்கள் ஆளாகி யுள்ளனர். மின் கட்டண உயர்வால், அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் எல்லாம் மிகக் கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையிலிருந்து பொதுமக்கள் காப்பாற்றப்பட, ஏற்றப்பட்ட கட்டணங்களை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழ்நாடு அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. அதே போல பெட்ரோல், டீசல் விலைகளை அடிக்கடி உயர்த்துவதன் மூலம், பொது மக்களின் அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனைத் தவிர்க்கும் வகையில்  நிரந்தரத் தீர்வைக் காணுமாறு மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் (6) : (அ)  வேலூர் பெண்கள் மாநாடு
வேலூரில் புத்துலகப் பெண்கள் மாநாட்டினை வரும் மே மாதம் 19 ஆம் தேதி முழுக்க முழுக்க பெண்களே கலந்து கொள்ளும் வகையில் எழுச்சியுடன் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
27-4-2012 அன்று நாகர்கோவிலிலும், மே 7ஆம் தேதி சிதம்பரத்திலும் வட்டார மாநாட்டினை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
(ஆ) பெரியாரியல் பயிற்சி முகாம்
ஏப்ரல் 7,8 ஆகிய நாட்களில் ஜெயங்கொண்டத்திலும், மே 5,6 ஆகிய நாள்களில் திருமருகலிலும் மே 12,13 ஆகிய நாள் களில் சிவகங்கையிலும், பெரியாரியல் பயிற்சி முகாம்களை  நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.


இரங்கல் தீர்மானம்
(1) சேலம் மாநகர திராவிடர் கழகச் செயலாளர்  எஸ்.முனுசாமி (வயது 83 - மறைவு: 4-1-2012)
(2) முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சிதம்பரம் என்.வி.இராமசாமி (வயது 103 - மறைவு  8-1-2012)
(3) மலேசிய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் பாலா என்று அழைக்கப்பட்ட பாலகிருஷ்ணன் (வயது 59- மறைவு 11-2-2012)
(4) முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் நெடுவாக்கோட்டை வை.குப்புசாமி (வயது 98 -  மறைவு  24-2-2012)
(5) திருவண்ணாமலை நகர திராவிடர் கழகத் தலைவர். தி.அ.துரைசாமி, (வயது 76 - மறைவு  22-3-2012)
(6) காரைக்கால் வட்டம் - செல்லூர் கழக பொதுக் குழு உறுப்பினர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மா.சண்முகவேலு (வயது 85- மறைவு 23-3-2012) ஆகியோரின் மறைவிற்கும்,
(7) பெரியார் அறக்கட்டளைகளின் ஆடிட்டராக நீண்டகாலம் இருந்து மிகவும் உதவி புரிந்த ஆடிட்டர் சுரேந்தர் (வயது 74 - மறைவு 4-3-2012)
(8) அறிவியல் அறிஞரும், திராவிடர் இயக்கப் பற்றாளருமான கொண்டல் சு.மகாதேவன் (வயது 86 - மறைவு  4-1-2012)
(9) முன்னாள் அமைச்சர் கே.என். நேரு அவர்களின் தம்பி கே.என்.ராமஜெயம் அவர்களின் அகால  மறைவு - 29-3-2012)
(10) புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் மூத்த மகள் சரசுவதி கண்ணப்பன் (வயது 92- மறைவு 30-1-2012)
(11) இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்த சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.முத்துக்குமரன் (வயது 44 - மறைவு 1-4-2012)
ஆகியோரின் மறைவிற்கும் கழகத் தலைமைச் செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், இவர்களின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்களுக்கும், தோழர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறது.



பொறுப்பாளர்கள் அறிவிப்பு
கோவை மாநகர் மாவட்டம்
தலைவர் : பிரகஸ்பதி
செயலாளர் : இரகுநாத்
அமைப்பாளர் : தமிழ்ச்செல்வன்
துணைத் தலைவர் : ஆனந்தராசு
துணைச் செயலாளர் : ஜோதிபாசு (கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி குறிச்சி, சுந்தராபுரம் நீங்கலாக)
பொதுக்குழு : ஆடிட்டர் இராஜா, சிங்கை ஆறுமுகம், சாரதாமணி ஆசான், பழ.அன்பரசு.
மேட்டுப்பாளையம் கழக மாவட்டம்
தலைவர் : வேலுச்சாமி
செயலாளர் : வெள்ளிங்கிரி
பகுதிகள் : மேட்டுப்பாளையம், காரமடை, பெரியநாயக் கன்பாளையம், அன்னூர், சூலூர், தொண்டாமுத்தூர், சர்க்கார் சாமக்குளம்.
பொள்ளாச்சி கழக மாவட்டம்
தலைவர் : பொறியாளர் தி.பரமசிவம்
செயலாளர் : ஆனந்தசாமி
அமைப்பாளர் : தமிழ்முரசு, குறிச்சி
பொதுக்குழு : தி.க. செந்தில்நாதன் மாரிமுத்து
பகுதிகள் : பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு, வால்பாறை, ஆனைமலை, சுல்தான்பேட்டை, கிணத்துக் கடவு, குறிச்சி - சுந்தராபுரம் பகுதிகள்.
திருச்சி மாவட்டம்
தலைவர் : மு.சேகர், திருவெறும்பூர் செயலாளர் : கணேசன் விமான நிலையம், திருச்சி
திருச்சி மாநகரம்
நகர தலைவர் : நற்குணன்
நகர செயலாளர் : செயராஜ்
மேற்கண்ட பொறுப்பாளர்கள் தலைமைச் செயற்குழுவில் (3.4.2012) கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களால் அறிவிக்கப்பட்டது.
வருகை தந்தோர்
கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்ற தலைமைச் செயற்குழு கூட்டத்திற்கு வருகை தந்தோர் :
பொருளாளர் கோ.சாமிதுரை, பொதுச்செயலாளர் கள் கலி.பூங்குன்றன், சு.அறிவுக்கரசு, தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ், துணைப்பொதுச் செயலாளர்கள் இரா.குணசேகரன், துரை.சந்திரசேகரன், டாக்டர் பிறைநுதல் செல்வி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் க.பார்வதி, பழனி.புள்ளையண்ணன், சாமி.திராவிடமணி, தே.எடிசன்ராஜா, ச.இன்பலாதன், சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் திருமகள் ஆகியோரும், சிறப்பு அழைப் பாளர்களாக மாநில இளைஞரணி செயலாளர் இரா.செயக் குமார், மாநில மாணவரணி செயலாளர் ம.திராவிட எழில் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...