Monday, March 26, 2012

மண விலக்கு, சொத்துரிமை, தாம்பத்தியம் ஆகியவைபற்றி மத்திய அரசின் புதிய சட்டம் வரவேற்கத்தக்கவை!


மகளிர் உரிமைப் பாட்டையில் புதிய மைல் கல்
மண விலக்கு, சொத்துரிமை, தாம்பத்தியம் ஆகியவைபற்றி மத்திய அரசின் புதிய சட்டம் வரவேற்கத்தக்கவை!
தந்தை பெரியார், அம்பேத்கர் உருவாக்கிய சுயமரியாதை உணர்வுக்கு வெற்றி! தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை
நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற் றப்பட்ட மகளிர் உரிமைக்கான சட்டத்தை வர வேற்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களால்  வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு:
நம் நாட்டுத் திருமண சட்டங்கள் - குறிப்பாக இந்து திருமண சட்டங்கள் திருமணத்தை ஒரு புனிதக்கட்டு - பிரிக்க முடியாத, பிரிக்கக்கூடாத பந்தம் - புனிதம்  (Sacrament) என்று ஆக்கியதன் மூலம் பெண்கள் வெறும் ஜடங்களாக,  பொருள்களாக, மிருகங்களைப் போல நடத்தப்பட்ட நிலையை மாற்றிவிட அன்றைய சட்ட அமைச்சர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பல்வேறு திருத்தங்களைக் கொண்டுவந்து இந்து சட்டத் திருத்த மசோதா(Hindu Code Bill) என்ற அந்த அற்புத உரிமைச் சாசனத்தை நிறைவேற்றிட முயலுகையில், அன்றைய ஆட்சி பீடத்தின் வைதீகத் தலைமை இராஜேந்திரபிரசாத் போன்றவர்களும் பழைமை வாதிகளும் கடும் எதிர்ப்புக் காட்டினார்கள்.
பிரதமர் நேருவால் சமாளிக்க முடியவில்லை; துவக்கத்தில் அம்பேத்கருக்கு அளித்த வாக்கு றுதியை அவரால் காப்பாற்ற இயலவில்லை; விளைவு அமைச்சர் பதவியிலிருந்து - கொள்கைக்காக - அண்ணல் அம்பேத்கர் விலகினார்.
கிடப்பில் போடப்பட்ட பெண்ணுரிமைகள்
சொத்துரிமை, மணவிலக்கு உரிமை, தத்து எடுத்துக் கொள்ளுதல் போன்ற பல்வேறு சீர்திருத்த புரட்சிக் கருத்துக்கள், பெண்களுக்குப் பாலியல், சமூகநீதி வழங்கும் வாய்ப்புள்ளவை கிடப்பில் போடப்பட்டன.
பிறகு காலம் கனிந்தது; நம் இயக்கம் போன்றவை களால் ஏற்பட்ட புயல் வேக பிரச்சாரம், திராவிடர் இயக் கமாம் தி.மு.க. போன்றவை மத்தியில், மாநிலத்தில் ஆளுங் கட்சியானதன் விளைவு - சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பெண்களுக்குச் சொத்துரிமை, சுயமரியாதைத் திருமண உரிமை, பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன் கொடுமை, பாலியல் கொடுமை, பெண்ணை மதிக்காமை - பெண்களிடம் கேவலமாக நடந்து கொள்ளல் எல்லாம்  ஒழிக்கப்படும் வகையில் இன்று சட்ட பூர்வமாக மத்தியில் உள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் புதிய சட்டங்களால் - புதிய திருத்தங்களால் பல்வேறு நல்ல திருப்பங்களைக் கண்டு வருகிறது.
1929இல் தந்தை பெரியார் நிறைவேற்றிய தீர்மானம்
ஆண்களையொத்த சொத்துரிமை பெண்களுக் கும் வேண்டும் என்று அய்யா தந்தை பெரியார் 1929 செங்கற்பட்டு மாநாட்டில் போட்ட தீர்மானம் 2005-2006இல் மத்தியில் சட்டமாகி, நடைமுறைக்கு  வந்துள்ளது. இணைந்து வாழ முடியாத பெண்கள், மண விலக்குப் பெறுவதில் தேவையற்ற சிக்கல்கள், கால தாமதங்களைத் தவிர்த்து அவர்கள் உடனே விலகி, மன நிம்மதியுடன் வாழச் செய்யும் வகையில் அண்மையில் 2010 திருமணச் சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை கடந்த 23.3.2012 அன்று ஒப்புதல் அளித்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது ஆகும்.
தந்தை பெரியார் அவர்கள் வெகு காலமாக சொல்லி வந்த ஒரு கருத்து, மற்ற மேலை நாடுகள் போல மணவிலக்கு - விவாகரத்து - எளிமையாக் கப்பட வேண்டும் என்பதாகும்.
வரவேற்கத்தக்க புதிய சட்டம்
1) சில கணவன்மார்கள் வழக்கை நீட்டி, இழுத்தடித்து - வேண்டுமென்றே - மீண்டும் வாழ விரும்புவதுபோல நாடகம் ஆடுவதை தற்போது உள்ள சட்டம் அனுமதிக்கும் நிலை - புதிய சட்டத் திருத்தம் மூலம் இனி முடியாது. காத்திருக்கும் காலம் என்பது ரத்து செய்யப்பட்டு - இரண்டு பேரும் இணைந்து தந்த மணவிலக்கு மனுவினை நீதிமன்றங்கள் ஏற்று - அனுமதி அளிக்க வழி செய்கிறது!
2)  கணவன் சொத்தில் மனைவிக்கு மணவிலக்கு பெற்ற நிலையிலும் சொத்தில் உரிமை தர வேண்டும் என்பதும் முக்கிய திருப்பமாகும்.
படிப்பறிவில்லாத பல பெண்கள் - மனைவிமார் களுக்கு - இப்படி சொத்தில் உரிமை கோரலாம் என்பதே தெரியாத அறியாமை நிலைதான் நாட்டில் உள்ளது. அதற்கும் இந்தத் திருத்தம் விடியலை ஏற்படுத்துகிறது!
டில்லி உயர்நீதிமன்றம்கூட நேற்று முன்னாள் ஒரு தீர்ப்பில் பாலுறவு - தாம்பத்யம் வைத்துக் கொள்ள மறுப்பதையே ஒரு தகுந்த காரணமாக கொண்டு மணவிலக்குப் பெற வாய்ப்பு உண்டு என்று ஒரு புரட்சிகர தீர்ப்பைத் தந்துள்ளது!
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் எழுப்பிய புயல்
பல மாதங்களாக தாம்பத்திய வாழ்வே நடத்தாது வெறும் அக்னிசாட்சியாக, சப்தபதி  சடங்குகள் செய்து ஊருக்கு, உலகத்தாருக்கு கணவன், மனைவி என்று வாழ்ந்தால் எஜமானன் - அடிமை உறவு தானே? எங்கே தோழமை உள்ளது? அதனையும் சுட்டிக் காட்டியுள்ளது உச்சநீதிமன்றம்.
தந்தை பெரியார் அவர்களின் திராவிடர் இயக்கக் கொள்கைகள், அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் முயற்சிகள் என்னும் சூறாவளி எங்கும் சுழன்றடிக்கிறது!
இது மேலும் நல்ல சமுதாய மாறுதலை உருவாக்கும்.
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்


.
 1

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...