Wednesday, March 14, 2012

வீண்பழி சுமக்கவேண்டாம் இந்தியா!


இங்கிலாந்து நாட்டின் அலைவரிசை 4- 14.11.2011 அன்று ஒளிபரப்பிய தகவல்கள் உலக மக்களின் ரத்த ஓட்டத்தை உறையச் செய்தது. விடுதலைப் போராளி களின் உடைகள் களையப்பட்டு, கைகளும், கண்களும் கட்டப்பட்டு இலங்கை இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சியை இப்பொழுது நினைத்தாலும் பார்த்தவர்களை நிலைகுலையச் செய்யும்!
இராணுவத்தின் கைகளில் சிக்கிய தமிழினத்துப் பெண்கள் எப்படியெல்லாம் குதறப்பட்டார்கள் என்பது அப்பப்பா, சொல்லுந்தரமன்று!
கொத்துக் கொத்தாகப் பச்சிளம் குழந்தைகள் சிதறிக் கிடந்த காட்சியைக் கண்டோர் கதறி அழும் நிலைதான்! அதே இங்கிலாந்தின் 4 ஆம் அலைவரிசை வரும் வியாழனன்று விடியற்காலை மேலும் சில குரூரக்காட்சி களை ஒளிபரப்ப உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
அய்.நா.வின் மனித உரிமைக் குழுவிடம், இலங்கை அரசைக் கண்டிக்கும் வகையில் முன்மொழியப்பட்ட தீர்மானம் விவாதத்துக்கும், வாக்கெடுப்புக்கும் உட்படுத்தப்படும் ஒரு காலகட்டத்தில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது - உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
இலங்கை மட்டுமல்ல - அதன் மனித விரோத நடவடிக்கைகளுக்கு நடை பாவாடை விரிக்கும் நாடுகள் மத்தியிலும் பல அலைகளை எழுப்பிவிட்டன.
இதற்குப் பிறகும்கூட இந்திய அரசு நடந்துகொண்டு வரும் போக்கு - என்றென்றைக்கும் உலக நாடுகள் மத்தியில் கவுரவத்தை இழக்கும் நிலைக்குத்தான் இழுத்துச் செல்லும்.
இந்தியா எடுக்கும் முடிவால் இலங்கையில் அரசுக்கும், தமிழர்களுக்குமிடையே மோதல் போக்கை உருவாக்கி விடக்கூடாது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி புது விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளார். எந்த ஒரு தனிப்பட்ட நாட்டுக்கும் எதிராகக் கொண்டு வரப்படும் இதுபோன்ற தீர்மானத்தை இந்தியா  ஆதரிக்காதாம். அப்படியென்றால் எந்த ஒரு நாடும் சொந்த நாட்டு மக்களைக் கொன்று குவிக்கலாம் - மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கலாம். இந்தியா அதனைக் கண்டுகொள்ளாதோ! அப்படியென்றால், அய்.நா. மன்றம் என்ற ஒரு அமைப்பு எதற்கு? பேன் குத்தவா?
தென்னாப்பிரிக்க நிறவெறிக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டு சென்றதே - நினைவில் இல்லையா?
கிழக்குப் பாகிஸ்தானுக்கும், மேற்குப் பாகிஸ்தானுக் கும் பிரச்சினை என்றால், இந்தியா ஏன் அதில் போய் மூக்கை நுழைக்க வேண்டும்?
தி.மு.க. நாடாளுமன்றக் குழுவின் தலைவர் டி.ஆர். பாலு மக்களவையில் பேசினாரே நினைவிருக்கிறதா? கிழக்குப் பாகிஸ்தானுக்கு, முக்தி வாஹினிப் படையை அனுப்பி பங்களாதேசத்தை உருவாக்கியதுபோல இலங்கையிலும் நடக்கும் என்று எதிர்பார்த்தோம் என்று பேசினாரே. (25.8.2011).
ஆனால், இந்தியா ஒவ்வொரு கட்டத்திலும் எப்படி நடந்துகொண்டு வருகிறது? ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பாக மக்களவையில் விவாதிக்க தி.மு.க. நாடாளு மன்றக் கட்சித் தலைவர் டி.ஆர். பாலு, சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் ஷைலேந்திரகுமார் ஆகியோர் தாக்கீது கொடுத்திருந்தனர். அது மக்களவையில் 11.8.2011 அன்று விவாதிக்கப்படவும் இருந்தது. நிகழ்ச்சி நிரலிலும் சேர்க்கப் பட்டும் இருந்தது. அதன் நகல் நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கு வழங்கவும் பட்டது. ஆனால், திடீரென்று அதில் திருத்தம் செய்யப்பட்டு விட்டது.
என்ன திருத்தம்?
இலங்கைத் தமிழர்களை இராணுவம் கொன்றது குறித்து அய்.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது தொடர் பாக விவாதிக்கப்படும் என்பதைத் தலைகீழாக மாற்றித் திருத்தி, போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிவாரணத் துக்கு இந்திய அரசு வழங்கிய நிவாரணம் குறித்து விவாதிப்பது என்று திருத்தப்பட்டது. இது குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்சினை கிளப்பப்பட்ட போது ஆளும் கட்சித் தரப்பில் தலைகுனிய நேரிட்டதே!
உறுப்பினர்கள் கொடுத்த தலைப்பை மாற்ற யாருக்கு அதிகாரம் உண்டு?
ஈழத் தமிழர் பிரச்சினை என்றால், இந்திய அரசின் நிலைப்பாடு இந்த வகையில்தான் நடந்துகொண்டு வருகிறது.
அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள தி.மு.க., மாநிலத்தில் ஆளும் கட்சி-ஆட்சி, இடதுசாரிகள், தமிழ்நாட்டில் உள்ள அத்தனை அரசியல் கட்சிகள், திரா விடர் கழகம் போன்ற சமூக அமைப்புகள், இந்தியாவின் எதிர்க்கட்சியாக இருக்கக் கூடிய பா.ஜ.க. இப்படி இத்தனை அமைப்புகளும் ஒரு கருத்தைச் சொல்லும் போது, காங்கிரஸ் மட்டும் மனித விரோத செயலில் ஈடு படுகிறது என்றால், இதற்குப் பெயர்தான் மக்களாட்சியா?
வரும் மக்களவைத் தேர்தலில் இது அரசியலாக்கப் படும்பொழுது காங்கிரசின் நிலைமை என்ன?
எச்சரிக்கின்றோம்!
தஞ்சை மாநாட்டிலும் (11.3.2012) இதுகுறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் நினைவூட்டுகிறோம்.


.
 

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...