Thursday, March 1, 2012

பி.ஜே.பி ஆளும் மத்திய பிரதேசத்தில் அவல நிலை பார்ப்பனர்கள் மட்டுமே படிக்க முடியுமாம்! ஏழு பார்ப்பனர்களை வைத்துத் திருமணம் நடக்க வேண்டுமாம்!


மு.கண்ணன்
- நமது சிறப்புச் செய்தியாளர் - புதுக்கோட்டை,
மார்ச் 1- பி.ஜே.பி. ஆளும் மத்திய பிரதேசத்தில் சமூக அவல நிலைப் பற்றிய தகவல்கள் இங்கே தரப்படுகின்றன. பார்ப்பனர்கள் மட்டும் தான் படிக்க முடியுமாம்.
சமீபத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதி களிலும் உள்ள கடைவீதிகள் மக்கள் கூடுமிடங் களில் அதிரடியாய் இரும்படிக்கும் சத்தம் காதைப் பிளக்கிறது. என்ன ஏது என்று உற்றுப் பார்த்தால் அங்கே திடீரென்று முளைத்திருக்கும் கொல்லுப் பட்டறை. அந்தக் கொல்லுப் பட்டரையில் நீண்ட இரும்பு ராடுகளைத் துண்டுகளாக்கி கோடாரிகள் வாச்சாத்துகள், களைக்கொட்டுகள் போன்ற இரும்புக் கருவிகளை மக்கள் விரும்பும் வண்ணம் வடிவமைத்துக் கொடுக்கிறார்கள். விவசாயிகளும் பொதுமக்களும் ஆர்வமாய் வாங்கிச் செல்கிறார்கள்.
திடீர்க் கொல்லுப் பட்டறைகள்
ஆர்வமாய் வாங்குவதற்குக் காரணம் ஒரு கருவியை வடிவமைக்கவோ சரிசெய்யவோ வேண்டும் என்றால், கொல்லுப்பட்டறையில் மாதக் கணக்கில் அலைய வேண்டியிருக்கும். குறிப்பிட்ட காலத்தில் கிடைப்பதில்லை. இவர்கள் அப்படியல்ல. அதனால் விவசாயிகளுக்கோ பொதுமக்களுக்கோ கிடைக்கும் லாபம் என்று பார்த்தால் உடனே கிடைத்து விடுகிறது. பேரத்திற்கு வேலையில்லை. கிலோ ஒன்று ரூபாய் 150. எந்தக் கருவியை எடுத்தாலும் அதன் எடையைப் பார்த்துக் காசு கொடுத்து வாங்கிவிடுகிறார்கள்.
அவ்வாறு திடீர்க் கொல்லுப்பட்டறை போட் டிருக்கும் அவர்கள் குஜராத்திலிருந்து வந்திருப்பவர் கள். நரசிங்கபுரம், போபால், சாகர், குணால் ஆகிய நான்கு மாவட்டங்களில் இருந்து சுமார் 2500-பேர் தமிழகத்திற்கு வந்து பலஊர்களிலும் இந்தத் தொழிலைச் செய்து வருகிறார்கள்.
அவர்களில் பலரிடமும் இந்தி தெரிந்த நண்பர் களின் உதவியோடு பேசியபோது 'நாங்கள் மன்னர் ராணாபிரதாப் சிங் வம்சா வழியினர். மன்னர் பரம்பரையில் வந்த நாங்கள் இப்போது ஒரு வேளை உணவுக்கே சிரமப்படுகிறோம். ஏற்கெனவே வறட்சி யால் தாக்குதலுக்குள்ளாகி இருந்த போபால் விஷவாயுத் தாக்குதலுக்குப் பின் அங்கிருந்த மக்களின் வாழ்க்கை நிலை மாறிப்போய் விட்டது. அங்கிருந்த மக்கள் அங்கேயும் வாழமுடியவில்லை. அங்கிருந் தும் வெளியேறி எங்கே போய் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கேயே கிடக்க வேண்டிய நிலை. போபால் சம்பவத்திற்குப் பின் விவ சாய நிலங்கள் பெரும் பணக்காரர்களின் ஆக்கிரமிப் புக்குள்ளாகி விட்டது. அபகரித்துக் கொண்டு விட்டார்கள். சாதாரண மக்கள் வசிக்க முடியாத நிலை. அதற்காக நாங்கள் திருடவோ கொள்ளை யடிக்கவோ போக முடியாது.
மன்னர் பரம்பரை?
மன்னர் பரம்பரையில் வந்தாலும் எங்கள் முன்னோர்கள் மன்னருக்கு போர்க்கருவிகள் தயாரித்துக் கொடுக்கும் பணியில் இருந்திருக்கிறார் கள். இப்போது போர்க்கருவிகளா தயாரிக்க முடியும்? அதனால் விவசாயக் கருவிகள் தயாரித்து விற்று வருகிறோம். தேவைப்படுபவர்கள் வாங்கிக் கொள்கிறார்கள். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கருநாடகா, சட்டீஸ்கர், குஜராத், மத்தியப்பிரதேசம் என்று ஊர் ஊராகப் போய்த் தொழில் செய்து வருகிறோம். தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, கோவை மதுரை, சேலம் போன்ற பெரு நகரங்களில் இரும்பு ராடுகளை விலைக்கு வாங்கி வந்து அறுத்து துருத்தி கொண்டு விவசாயக் கருவிகளாகவும் கோடரி போன்றவையும் உருவாக்கி விற்கிறோம். அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு காலத்தை ஓட்டுகிறோம். இதுபோல் ஆண்டில் எட்டு மாதங்கள் ஊர் சுற்றுகிறோம். நான்கு மாதங்கள் ஊரில் போய் தங்கி விடுகிறோம்.
ஏழு பார்ப்பனர்கள்
எங்கள் இனத்தில் யாரும் எளிதில் விரும்பித் திருமணம் செய்து கொள்ள முடியாது. அவ்வாறு ஒருவருக்கொருவர் விருப்பம் இருந்தால் பெரிய வர்களிடம் பேசி திருமணம் செய்து கொள்வோம். அவ்வாறு திருமணம் செய்து கொள்வது எங்கள் சொந்த ஊரில் வைத்து மட்டும்தான். ராமன் பெருமாள், சிவன், காளியம்மன் போன்ற தெய்வங் களை வணங்குகிறோம். திருமணத் தின்போது ஏழு பிராமணர்களை வைத்துத் தான் திருமணம் செய்ய வேண்டும். ஒருவர் குறைந் தாலும் எங்கள் இனத்தில் ஒத்துக் கொள்ள மாட் டார்கள். வீட்டுக்குப் பெரியவராக குடும்பத்தில் அப்பாவோ அண்ணனோதான் இருப் பார்கள். அவர்களில் ஒருவர் சொல்வதைத் தான் கேட்டுக் கொள்வோம். அவர்களின் விருப்பத்திற்கு மாறாக குடும்ப உறுப் பினர்கள் எப்பொழுதும் இருக்க மாட் டோம். அவர்கள் சம்மதமில்லாமல் எந்த ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள முடியாது. அவர்களிடமிருந்து எதிர்ப்பு வந்தால் திருமணமே தடைப்பட்டுப் போய் விடும். மீறித் திருமணம் செய்து கொண்டால் சாதியி லிருந்து விலக்கி வைத்து விடுவோம். நாங்கள் செய்யும் இந்தத் தொழிலை எந்த இடத்திலும் செய்ய முடியாது என்றார்கள்.
படிப்பு உயர் ஜாதியினருக்கே!
மேலும், கல்வி குறித்துக் கேட்டபோது 'எங்கள் தொழிலுக்குக் கல்வி எதற்கு என்று விட்டு விட்டோம். குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும் என்று விட்டு விட்டோம். எங்கள் அரசாங்கம் எங்களுக்குக் கல்வி கற்றுத் தருவதில்லை. அரசுப் பள்ளிகள் ஏதாவது ஓர் ஊரில் இருக்கும். அங்கு போய்ப் பார்த்தால் உயர் சாதியைச் சேர்ந்தவர்களுக் கும், பணக்காரர் வீட்டுப் பிள்ளைகளுக்கும் மட்டும் சொல்லிக் கொடுப் பார்கள். எங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்றால் பல்லாயிரக்கணக்கில் செலவு செய்ய வேண் டும். அல்லது தனியார் கல்வி நிறுவனங் களைத் தேடிப் போயாக வேண்டும். இரும்படித்துப் பிழைக்கிற நாங்கள் கல்விக்குச் செலவு செய்ய எங்கே போவது? அதனால் கணக்குகள் தெரியுமளவிற்கு குடும்பத்தில் ஒருவருக்குத் தெரிந்திருந்தால் போதும். உயர் கல்வி கற்று நாங்கள் ஆட்சிக்கா வரப்போ கிறோம்.
பிழைக்கப் போகிற இடத்தில் மொழி தெரியாத எங்களுக்கு எந்தச் சிக்கலும் சிரமமும் வந்து விடக் கூடாது என்பதற்காக, நாங்கள் தங்கியிருக்கும் இந்தக் கூடாரங்களை விட்டு எந்த இடத்திலும் தங்க மாட்டோம். அருகில் யாராவது எதையாவது திருடி விட்டு பழியை எங்கள் மீது போட்டு விடக் கூடாது என்பதால் மிகவும் நேர்மையாக நடந்து கொள் வோம். அதேபோல் எங்கள் வீட்டுப் பெண்களுக்கும் மற்றவர்களால் எந்தவித தொந்தரவும் வந்து விடக் கூடாது என்பதால் பாதுகாப்பாக இருந்து கொள் வோம். இரும்படிக்கும் இந்தத் தொழிலில் ஆண் களை விட அதிக தைரியமாக சம்மட்டி கொண்டு அடிப்பதில் பெண்கள்தான். அவர்கள்தான் எங்கள் தெய்வம் என்கிறார்கள். இந்துக்கள் என்று சொன் னாலும் தங்கியிருக்கும் ஊரில் உள்ள ஒரு இஸ்லா மியரை அழைத்து வந்து அவர்கள் வேதம் ஓதி அறுத்துக் கொடுக்கும் கோழிக்கறியை மட்டும் எப்போதாவது ஒரு முறை அசைவமாக சமைத்து சாப்பிட்டுக் கொள்கிறார்கள். மற்றபடி கோதுமை மாவில் தயாரிக்கப்பட்ட சுக்கா ரொட்டிதான் அவர்களின் உணவு.
தமிழ்நாட்டைப் பாரீர்!
இந்த நேரத்தில் தமிழ் நாட்டில் தந்தை பெரியாரும் திராவிடர் கழகமும் என்ன செய்திருக் கிறது என்பதை அறியாமல் தான் கற்ற கல்வியால் தான் கற்கவும் அரசுப் பணிகளில் அமரவும் முடிந்திருக் கிறது என்று எண்ணிக் கொண்டும் அதையே சொல்லிக்கொண்டும் இருக்கும் அதிமே தாவிகள் இந்த மக்களின் நிலையைக் கொஞ்சம் எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழகத்தில் நரிக்குறவர் தொடங்கி மனித மலம் அள்ளிக் கொண்டிருக்கும் துப்புரவுப் பணி செய்யும் நம் தமிழக மக்களின் நிலை எங்கே? மன்னர் பரம்பரையில் வந்தும் பிழைக்கவும் வழியில் லாமல் கல்வியும் உரிமைகளும் மறுக்கப்பட்ட நிலையில் சொந்த ஊரில் நிரந்தரமாக வசிக்கவும் முடியாமல் ஊர் ஊராகச் சுற்றி வரும் மக்களின் நிலையையும் எண்ணிப் பார்த்திடல் வேண்டும். எந்த இடத்திலும் தங்க மாட்டோம். ஊர் சுற்றுவதுதான் எங்கள் வேலை என்று சுற்றித்திரிந்த நரிக்குறவர் களையும் கான்கிரீட் வீடுகளில் தங்க வைத்தது கலைஞர் காலத்து அரசாங்கம். தமிழக அளவில் என்றாலும் இந்திய அளவில் என்றாலும் இட ஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு என்று அனைத்து சலுகை களையும் உரிமைகளையும் மக்களுக்குக் கிடைக்கவும், அதனைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளவும் உரிமை களுக்காகப் போராடவும் உரிமைகளை நிலை நாட்டிக் கொள்ளவும் போராடக் கற்றுக் கொடுத் தவர் தந்தை பெரியார் அவர்கள். அவர் தமிழகத்தில் இருந்ததாலும் அவரது தாக்கத்தாலும் இன்றைக்கு திராவிடப் பகுதிகள் முன்னேறியிருக்கின்றன. ஆனால் வட மாநிலத்தில் உள்ள மக்களின் நிலை எப்படி இருக்கிறது என்பதற்கு இந்த இரும்படிக்கும் மன்னர் பரம்பரையே சாட்சி.


.
 4

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...