Friday, March 2, 2012

இந்திய அரசே, இலங்கைக்கு எதிராக செயல்படுக! சென்னையில் மார்ச் 6 ஆம் தேதி திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!




சென்னையில் மார்ச் 6ஆம் தேதி ஆர்ப்பாட்டம்! இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டு வரப்பட உள்ள தீர்மானத்திற்கு ஆதரவாக இந்திய அரசு செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி திராவிடர் கழகத்தின் சார்பில் வரும் 6ஆம் தேதியன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஈழத்தில் பயங்கரவாதத்தை ஒடுக்குகிறோம்; விடுதலைப்புலிகளுக்கு எதிராகத் தான் எங்களது இராணுவ நடவடிக்கை என்று பாசாங்கு வேஷக் குரல் கொடுத்துக் கொண்டே, அந்நாட்டின் மண்ணின் மைந்தர்களாம் குடிமக்களான தமிழர்களின் வாழ்வுரிமையை அறவே நசுக்கியது கொடுங்கோலன் சிங்கள இராஜபக்சே ஆட்சி!

மருத்துவமனைகள், பள்ளிகள்மீதுகூட குண்டு வீச்சு!


இளந்தளிர்களான பச்சைக் குழந்தைகளைப் பராமரிக்கும் கூடமான செஞ்சோலை முதல், மக்களின் வழிபாட்டு நிலையங்களான சர்ச், பள்ளி வாசல்கள் மீதும், கல்விக்கூடங்கள்மீதும் (சர்வதேச நியதிக்கு முற்றிலும் விரோதமாக) மருத்துவமனை உள்பட பலவற்றின்மீதும் சொந்த நாட்டின் மக்கள்மீதே குண்டுவீசிய கொடுமை உலக வரலாறு காணாத ஒன்றாகும்.

அங்கு கடைசிக் கட்டத்தில் நடந்த போரில், ஈழத் தமிழர்கள் - 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்; ஒரு லட்சத்து 40 ஆயிரம் தமிழர்களைக் காணவில்லை. 25 ஆயிரம் குழந்தைகள் - அந்தோ - ஆதரவற்றவர்களாகி விட்டனர்!

அதற்கு இரண்டரை ஆண்டுகளுக்குமுன் சிங்கள இராணுவத்தினரால் கடத்தப்பட்ட சுமார் 12 ஆயிரம் பெண்களையும் காணவில்லை.

இன்னும் எத்தனையோ இரத்த ஆற்று வெள்ளத்திலும், கண்ணீர்க் கடலிலும் மனிதநேயம் படைத்தோரை நீந்த வைக்கும் கோரத் தாண்டவ சோக சுனாமிகள்!

அய்.நா. அறிக்கை என்ன கூறுகிறது?

அய்.நா. பொதுச் செயலாளர் அமைத்த குழு (கமிட்டி) கொடுத்த அறிக்கையில், இராணுவ நடவடிக்கை என்ற போர்வையில் போர்க் குற்றங்களை ஏராளம் புரிந்துள்ளது இராஜபக்சே அரசு - ஹிட்லரையும் மிஞ்சிய கொடுங்கோல் ஆட்சி என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

இன்னமும்  இலங்கையில் ஈழப் பகுதியில் முள்வேலிகள் அகற்றப்படவில்லை; வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் குடியிருந்த - அவர்களுக்குச் சொந்தக் காணிகளையெல்லாம் சிங்கள குடியேற்றங்களாக மாற்றிட ராஜபக்சே அரசு - மெல்ல மெல்ல ஆனால், உறுதியாக - செய்து கொண்டே உள்ளது - நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்!

மத்திய அரசின் கடமை என்ன?

ஜெனிவாவில் கூடும் அய்.நா. உலக அமைப்பின் விசாரணைக்குமுன் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படவிருக்கும் இலங்கை அரசைக் கண்டித்து, தண்டிக்க உலகத்தின் மனிதாபிமான முறையில் - அமெரிக்க, அய்ரோப்பிய நாடுகள் முனையும்போது, தொப்புள் கொடி உறவுள்ள தமிழ்நாட்டுத் தமிழர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிப் பீடம் ஏறி அமர்ந்துள்ள காங்கிரஸ் தலைமையில் அமைந்துள்ள ஆட்சியின் கடமை என்ன?

வழமைபோல் இலங்கையைக் காப்பாற்றப் போகிறதா? அல்லது நியாயத்தின் பக்கம், நீதியின்பக்கம், நேர்மையோடு நின்று மனிதநேயத்தை மறக்க மாட்டோம் என்று காட்டப் போகிறதா? என்பதே இப்போதுள்ள அவசர அவசிய கேள்வியாகும்!

தி.மு.க. - அ.தி.மு.க. ஒரே நிலை!

தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியின் தலைவரான முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் இலங்கையைக் கண்டிக்க வேண்டும்; காப்பாற்ற முனையக் கூடாது - மத்திய அரசு என்று நேற்று உறுதியான அறிக்கையைத் தந்து விட்டார்! வரவேற்கிறோம் நாம்.

மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சியான தி.மு.க.வின் தலைவர் கலைஞர் அவர்களும் அதற்கு முதல் நாள்  உறுதிபட மத்திய அரசு இலங்கையைக் காப்பாற்ற முனையக் கூடாது இப்பிரச்சினையில் என்று வலியுறுத்திக் கூறி விட்டார்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஒன்றைத் தவிர, (அதில் உள்ள தமிழ் இன உணர்வாளர்களும்கூட இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தால் அது காங்கிரஸ் கட்சிக்கே கேடு என்ற உணர்வினைத்தான் கொண்டுள்ளனர்) மற்ற அத்துணைக் கட்சிகளும் - இடதுசாரிகள் உள்பட இதில் ஒரே கருத்துடன் மத்திய அரசினை வற்புறுத்துகின்றனர்!

மார்ச்சு 6ஆம் தேதி ஆர்ப்பாட்டம்!

திராவிடர் கழகத்தின் சார்பில் நாம் 21.2.2012 அன்றே விரிவான அறிக்கையைத் தந்துள்ளோம்!
இதனை வலியுறுத்திட சென்னையில் பனகல் மாளிகை அருகில் வருகின்ற மார்ச் 6ஆம் தேதி செவ்வாயன்று (6.3.2012)   மத்திய அரசை வற்புறுத்தும் ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடைபெறும். இதில் மத்திய அரசு இலங்கை அரசினைக் காப்பாற்ற முனைந்தால், இனி காங்கிரஸை எவராலும்   இங்கு காப்பாற்றப்பட முடியாது என்பது சுவர் எழுத்துக்களாக பளிச்செனத் தெரியும் உண்மையாகும்!
கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்


.
 3

தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...