Monday, March 5, 2012

கும்பாபிஷேகம் அம்பிகளுக்கு வம்பானதானம்


- மா. பால்ராசேந்திரம்

கைலாயத்தில் கடவுள் சிவனின் கலியாணக் கதையை முன்னுரையாக்கி,
அகத்தியக் குள்ளன் ஆரியர் கொள்கையைப் புகுத்தினான் செந்தமிழ்ப் பொன்னா டதனில்
என்று புரட்சிக் கவிஞர் சொல்லி யதைப் போல அகத்தியன் கதையை ஆங்கே உலவச் செய்து, கோவில் பட்டியில் செண்பகவல்லியம்மை வந்திறங்கினாள் எனக் கிளப்பி விட்டுக் கட்டுரை தீட்டியிருக்கிறது தினமலர் நாளிதழ்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியில் அமைந்துள்ள செண்பக வல்லியம்மன் கோவிலின் குடமுழுக்கு விழா 29.-1.-2012 ஞாயிறன்று நடைபெற்றது. இந்திய நாட்டின் சட்டம் இந்தியாவை ஒரு மதசார்பற்ற நாடாகச் சொல்கிறது. ஆனால், மதசார்பான இவ்விழாவிலோ தமிழக அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் உட்பட அரசு அலுவலர் பலர் கலந்து கொண்டு நாட்டின் மதசார்பற்ற தன்மையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளனர்!
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு
என்கிறது திருக்குறள். ஆட்சி முறைக்குரிய அறத்தில் (சட்ட நெறிமுறையில்) தவறாது நின்று நல்லாட்சி நடத்துவதே மானமுடைய அரசுக்குரிய இலக்கணமென்கிறார் திருவள்ளுவர்.
பொதுவாக ஒரு கும்பாபி ஷேகத்தைப் பார்த்தால் பல நூறு ஆண்டுகள் கோவிலுக்குச் சென்று வந்த பலன் கிடைக்கும் என்கிறது தினமலர் 30-1-2012 ஏடு. அதுவென்ன பல நூறு ஆண்டுகள் பலன்? பலநூறு ஆண்டு கள் கோவிலுக்குச் சென்று பலன் பெற்று வாழ்கின்றோர் யார் உளர்? பட்டியல் தருமா?
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்          -குறள் 1037
ஒருபலம் புழுதி, கால் பலம் ஆகுமாறு உழுது, காயவிட்டுப் பிடித்த எருவும் இட்டால் கழனியாவது எண்ணிய பலனைப் பயிர் வழித் தந்திடும். முறையோடு தொழில் புரிந்தால் போட்ட முதல் வருவாயாய்ப் பலன் தரும். திட்டமிட்டுக் கற்று வந்தால் தேர்ச்சியெனும் பலனைத் தேர்வில் பெறலாம். கவிழ்த்து வைத்த குடத்தின் மேல் தண்ணீரை ஊற்று வதும், தள்ளி நின்று பலபேர் தன்னை மறந்து அம்மா, அப்பாவெனக் கத்து வதையும் பாவையாட்டு ஆடிடும் குழந் தைகள் பார்த்தால் என்ன சொல்லிடும்? இவ்வாறு நாம் ஊற்றினால் உனக் கென்ன பயித்தியமா? குடத்தைக்  குப்புறப் போட்டுத் தண்ணீர் ஊற்று கிறாயே என்பார்கள். அப்படியென்றால் இவர்கள் யாரோ? எனத்தானே சொல்லும்.
அதுவும் ராஜகோபுரத்துடன் கூடிய கும்பாபிஷேகத்தைக் கண்டால் கோடி புண்ணியம் கிடைக்கும் என்கிறது இனமலர்க் கட்டுரை. புண்ணியம் என்றால் அறம், திவ்யம் (மேன்மை), நல்வினை, நீர்த்தொட்டி, தருமம், நல்வினைப் பயன், தெய்வதன்மை என்கிறது தமிழ் அகராதி. ராஜகோபுரக் குடமுழுக்கால் இப்பண்பெல்லாம் கிட்டுமென்றால் ஆண்டுதோறும் நடத்திடலாமே. பல்லாண்டுகளாகப் பல கோவில்களில் நடந்து முடிந்திட்ட குடமுழுக்குகளைப் பார்த்திட்ட பக்தர்களிடம் அறம் வளர்ந்திருக்கும், பகையோரில்லா நிலையினை நாடு எய்தியிருக்கும். தெய்வத்தன்மையினை மக்கள் (பக்தர்கள்) பெற்றிருந்தால் மதப் பகையே இல்லாது நாடு உயர்ந்திருக் குமே! உலகிற்கே கடன் வழங்கும் வங்கியாய் இந்தியா விளங்கியிருக்குமே. இலஞ்சம், ஊழல் என்ற முழக்கங்களே தேவையற்ற சொற்களாய் விலக்கப் பட்டிருக்குமே. ஆன்மீக வளர்ச்சி கண்டநாடு அறிவியல் வளர்ச்சி இன்னும் பெறவில்லையே. இதுதான் கைக்கெட்டிய புண்ணியமா?
இன்னொரு வேடிக்கை. மன்னனின் பெயரைத்தான் கடவுளச்சிக்கே சூட்டினராம். சொல்கிறது தினமலர். முன்னால் பிறந்த பாட்டன் பெயரைச் சூட்டிப் பெயரனைக் கொஞ்சுவர். அகிலத்தையும் முன்னமே படைத்து இருந்திட்ட கடவுளர், கடவுளச்சி களுக்குப் பின்னால்; பிறந்த மனிதரின் பெயரா? வியப்பாகவிருக்கிறதல்லவா? அதனால்தான் தந்தை சொன்னார் கடவுள் கற்பிக்கப் பட்டதென்று. ஆரியப் பார்ப்பனர் தம் வாழ்விற்காக, திராவிடரைச் சுரண்டிப் பிழைப்ப தற்காக ஏற்படுத்திய மோசடிப் பித்த லாட்டக் கருவிதான் கடவுளென்பது. அதனால்தான் செண்பக மன்னனின் பெயரைச் சூட்டி, மன்னனைக் குளிரச் செய்து சுருட்டியது எத்தனைக் கோடிப் பொன்களோ;? நிலபுலன்களோ?
இராஜகோபுரத்திற்காகக் கல்லெடுத் தோர், மரமெடுத்தோர், வண்ணம் தீட்டியோர், சிற்பமெல்லாம் செய்திட் டோர் எல்லாம் ஏமாந்த நம் திராவி டர்த் தமிழர்கள். நாயுடுகார், கம்மவார், நாடார்வாள், தேவர்வாள், செட்டியார், பள்ளர், பறையர், அருந்ததியர் எனத் தமிழினச் சாதியார் பலர் பல இலட் சங்களை நிதியாகத் தந்துள்ளனர். தமிழர் ஸ்தபதிகளோ தம் கலைத் திறமையினால் கைவண்ணமாய் அல்லும் பகலும் சோர்வறியாது கோபுரத்தில் காட்டியுள்ளனர். குருதி வற்றிடப் பாடுபட்டோரைத் தொடக் கூடாதவராய்த் தொலைவில் விலக்கி விட்டு யாகசாலைக் குண்டங்களில் வேத விற்பன்னர்கள் யாகம்.
அழிவேதம் ஒப்பாதாரை
அரக்கரென் றேசொல்லிப்  பழிபோட்டுத் தலைவாங்கினார் -_ சகியே
பழிபோட்டுத் தலைவாங்கினார் புரட்சிக் கவிஞர்
தீ வளர்த்து, மந்திரங்களை உச்சரித் தனராம். யாரிந்த   விற்பன்னர் ? தமிழர்க்குத் தெரியாத வடமொழிப் பாடல்களை உளறியவர்கள். அவ்வளவுதான். தெரியாத மொழி மறைமொழி, மந்திரமொழி. இன்று வடமொழி (மந்திர மொழி) தெரிந்த திராவிடர் ஏராளமுண்டே. அனுமதிப்பரா ஆரியப் பார்ப்பனர், அவர்களை யாகத்திற்கு. எத்தனை யுகங்களாகத் தீண்டாதார் என்பீர் எம்மவரை? எனக் கேட்கும் திராணி, திமிர் எத்தனைத் திராவிடர் பக்தர்களுக்கு வந்துள்ளது? இல்லையே. இளிச்ச வாயராய், நெடுமரமாய், கைகட்டி நிற்கின்றனரே!
செண்பகவல்லியின் ஆம்படையானே, சிவனே
மற்றுநீ வன்மை பேசி வன்தொண்டன் என்னும் நாமம்
பெற்றனை; நமக்கும் அன்பின் பெருகிய சிறப்பின் மிக்க
அருச்சனை பாட்டே ஆகும்; ஆதலால் மண்மேல் நம்மைச்
சொற்றமிழ் பாடு கென்கிறார் தூமறை பாடும் வாயார்.
செந்தமிழால் எம்மைப் பாடுக வென்று கூறியபின் ஏனிந்த வடமொழி வெறித்தனம்? மந்திரங்காட்டித் தமிழரை மயக்கிடத்தானே. ஆரியப் பார்ப்பனரின் ஆட்டத்தை ஆட்டங்காணச் செய்திட வேண்டாமா?
பார்ப்பான் மறையைப் பைந்தமிழ் மக்கள்  மாய்ப்பது தீதோ வளர்ப்பது கடனோ? என்றார் புரட்சிக் கவிஞர். நம்பிய கவிஞருக்கு நன்றி கூறிட வேண் டாமா நற்றமிழர்கள். ஆரியத்தை  வளர்ப்பதா தமிழர் கடமை? செய் யலாமா? திராவிடர்த் திண்மைபெறு தமிழ்ப் பக்தர்களே,
பொங்கி வரும் ஆரியத்தின் பொய்க் கதைகள் ஒப்பாதீர்
ஏமாற்றி மற்றவரை ஏட்டால் அதை மறைத்துத்
தாமட்டும் வாழச் சதைநாணா ஆரியம்  என்ற பாவேந்தரின் எச்சரிக்கைக் கல்வெட்டுப் போன்றதாகும் தமிழர்க்கு.
பல இலட்சங்களைக் கொட்டி உச்சியைக் குளிர வைத்த போதிலும் அம்மையின் கடைக்கண் பார்வை கூடக் கோவில்பட்டி நகருக்குக் கிட்ட வில்லையே! குடமுழுக்கு அன்றைக்கே எஸ்.பி.சிலம்பரசன் தலைமையில் 750காவல் துறையினர் பாதுகாப்பு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டிட. ஆனாலும் பொதுமக்கள் விழாவைப் பார்க்க ஒரே இடத்தில் குவிந்தனர். இந்தக் கூட்ட நெரிசலைப் பயன் படுத்திக் கொண்ட திருடர்கள் பல பெண்களின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்த சம்பவம் நடந்தது இதுவும் தினமலர் அம்பியின் செய்தி தான். உண்மைதானே ஒரு திருடன் பூணூலுடன் கூட்டத்தைக் கூட்டி ஆண் பக்தனின் மடியை உருவிக் கொள்ளையடிக்கிறான். பசியால் வாடும் இன்னொருவனோ பக்தையின் கழுத்தைச் சரி பார்க்கிறான். பூவனா தனின் பாரியாளோ கண்ணை மூடிக் கனாக் காண்கிறாள். திருட்டு நடக்கலாமா? ஞானக் கண் கொண்ட பதியை இணையாகக் கொண்ட இ மயவன் சந்நிதியில்? பக்தர்களே எந்த ஒழுக்கம் உங்கள் கொண்டாட்டத்தால் நிலை நிறுத்தப்பட்டது? சொல்லுங்கள்.
சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே  வேத்திரைப்பு வந்தபோது வேதம்வந் துதவுமோ?
என்றாரே சிவவாக்கியர். மெய் தானே. கோவில் அருகில் புறக்காவல் நிலையம்- ஒழுக்கத்தைக் காத்திட. முதலு தவிச் சிகிச்சை மய்யம் - சாவின்றிக் காத்திட. தீத்தடுப்பு ஏற்பாடுகள் - உயிர், உடைமைகள் அழிவின்றிக் காத்திட. ஓதிய மந்திரங்கள் செய்த பணியென்ன?  ஒன்றுமில்லையே. வீண்தானே. அப்படியென்றால், மண்ணாங்கட் டிக்குப் பெயர்தானே மந்திரம். மண்ணாங்கட்டி கூட சட்டியாகும், பானையாகும். தின்னும் இழிந்தது தானே பூசுரரின் புரியாத வடமொழி மந்த்ரம். குடமுழுக்கால் கோவில்பட்டி நகர மக்களுக்குத் தினமும் பிரியாணி கிடைக்குமா? பேருந்து நிலையங்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்டுமா? கொலை, கொள்ளை, திருட்டு இனி மேல் நடக்கவே நடக்காதா? வெகு மக்களின் வயிற்றுப் பிரச்சினையாம் தீப்பெட்டித் தொழில் இலாபத்திலேயே இடையூறின்றித் தொடருமா? மானாவாரி பூமியாகிய இந்நகரின் வேளாண்மை சிறக்குமா? குடிக்கத் தண்ணீர் கிட்டாத இப்பகுதியில் நாளும் குடிதண்ணீர் கிடைப்பதற் காகவாவது உத்திரவாதம் உண்டுமா? எதற்காக? இந்த குடமுழுக்கு? நேரம், பணம், உழைப்பு விரயம். துயரச்சுமை இறங்கியதா? நிம்மதியடைந்தனரா பொதுமக்கள்? இல்லையே. பெப்ருவரி 1 தினமலரே பிரச்சினையை வெளிப்படுத்துகிறதே! சட்ட விரோத ஆக்கிரமிப்பை அகற்றாத அரசு அதிகாரிகளைக் கண்டித்து அய்ந்தாவது தூண் அமைப்பினர் காலவரையற்ற உண்ணாவிரதம். வக்கீல்கள் ஆர்ப் பாட்டம் கோவில்பட்டியில். அரசு பஸ் மீது, மணல் லாரி மோதி ஒருவர் படுகாயம் தினமலர் பிப்ருவரி 3. சொத்து வரி, தொழில் வரி கட்டாதவர் மீது வழக்குத் தொடுத்து நகராட்சி ஜப்தி நடவடிக்கை எடுக்கும். கடைவாடகை செலுத்தாதவர் கடை பறிமுதல் செய்யப்படும் (தினமலர்- பிப் 7). மூல நோயால் செக்கடித் தெருவில் தண்ட பாணி என்பவர் தூக்குப் போட்டுச் சாவு. கோவில்பட்டியில் தரமற்ற விதைகள் விற்பனை. கோவில்பட்டிப் புழுதியில் காஸ் சிலிண்டர் தட்டுப் பாடு. இவையெல்லாம்தான் குட முழுக் குக்குப் பின் உடனடியாக மக்களுக்குக் கிடைத்த கைமேல் பலன்கள்; கோடி புண்ணியங்கள். பக்தர்களே சிந்தியுங்கள்.
ஆரியத்தின் அழியாச் சின்னங்களாக இருந்து வரும் குழவிக்கல் சாமிகள் அத்தனையும், இந்நாட்டில் மடமையை வளர்க்கும் பொக்கிஷங்களாக இருந்து வரும் வேதங்கள், உபநிஷத்துகள், மனுநீதி நூல்கள், இராமாயணங்கள், கீதைகள், பாரதங்கள் அத்தனையும் இந்நாட்டின் எல்லைக்கப்பால் துரத்தியடிப்போம் என்றார் அய்யா பெரியார். அதை முற்றும் செய்யாததால் தங்கள் குடல் நிரப்பிக் கொள்வதற் காகக் கும்பி வற்றிடத் தமிழரை ஏமாற்றிப் பணம் பறித்துத் திரிகின்றனர் ஆரியப் பார்ப்பனர். வஞ்சனையால் பொருட்கவரும் போக்கிரிகளை அடையாளம் காண்பீர். தமிழர்களே, தமிழர்களே, திராவிடர்த் தமிழர்களே பகுத்தறிவு, தன்மானமே தமிழர்க்கு முதன்மையானது. தன்மானமிழந்து ஆரியத்தின் சூழ்ச்சி வலையில் சிக்கிச் சீரழிய வேண்டா. சுயமரியாதை தந்தை தந்த அறிவாயுதம் நிரம்பவே இங்குண்டு.  நாளும் நாம் படிக்கும் விடுதலை நாளேடு எதிர் கால வாழ்விற்கு நல்வழி காட்டிடும் திசைக் கருவி. தமிழர் நலனில் அக்கறையோடு கவனம் செலுத்திடும் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவரை, தி.மு.க. தலைவர் தமிழினத் தலைவரை, அவர்களின் பணியினை டவுட்டாகத் தனபால் இழித்தாலும் தம்மினம் வாழ்ந்திடத் தடைபோட முயல்கிறது. இனமலராம் தினமலர் என்பதனைப் புரிந்து வேகங்கொள்வீர் வீரத்தமிழர் இளைஞர்களே. கும்பாபிஷேகம் அம்பிகளுக்கு நம்மினத்தார் பக்திப் போதையில் வாரி வழங்கிடும் வம்பான தானமே. விளக்கெண்ணெய்க்கும் கேடே தவிர பிள்ளை பிழைக்கவில்லை யென்ற முதுமொழிதான் ஈண்டும். புரிந்திடுவீர். அய்யா தந்தை பெரியாரும், அண்ணாவும், தமிழர் தலைவரும் ஆற்றிய, ஆற்றிவரும் இனமானப் பணியைப் போற்றிடுவோம். ஆரியத்தை அடியோடு அகற்றிடுவோமெனச் சூளுரைத்து எழுவோம் வீறுகொண்டு.


.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...