Monday, March 5, 2012

இவன் சுட்டி அல்ல கெட்டி


தமிழர் தலைவர் சிறப்பு செய்கிறார்

வெற்றிச்செல்வன். இந்த சிறுவனுக்கு பெற்றோர் சூட்டிய பெயர் இது. வெற்றிகளால் விருதுகளையும், பரிசுகளையும் குவிப்பான் என்று தெரிந்துதான் இந்தப் பெயரைச் சூட்டினார்களோ என்னவோ!
அய்ந்தரை வயதாகிறது வெற்றிச்செல்வனுக்கு. முதலாம் வகுப்பில் அடியெடுத்து வைத்து அ... ஆ... பயின்று வருகிறான்.
எழுதவும், படிக்கவும் இப்போதுதான் கற்கத் தொடங்கியிருந்தாலும், அதற்குள்ளாகவே அம்மா சொல்லித்தர காதில் கேட்ட விஷயங்களை மனனம் செய்து அப்படியே ஒப்புவித்து பார்ப்பவர்களையும், கேட்பவர்களையும் அசத்தி வருகிறான் இவன். சிரிப்புத் துணுக்குகள், சினிமா வசனங்கள், தலைவர்களைப் பற்றிய சொற்பொழிவு, கவிதைகள் என வெற்றிச் செல்வனின் மேடைக் களங்கள் பல. கேடயங்கள், சான்றிதழ்கள், 6 சென்ட் நிலம், லட்சம் ரூபாய் பணமுடிப்பு என அவன் குவித்துள்ள பரிசுகளும் பலப்பல.
வெற்றிச் செல்வனை இந்த வயதிலேயே ஒரு வெற்றியாளராக வளர்த்தெடுத்ததில் அவனது பெற்றோர் சாமுண்டீஸ்வரி - ரவிக்குமாரின் பங்கு அதிகம். ரவிக்குமார் அய்.டி.அய். முடித்தபின், பி.பி.ஏ. படித்து ரியல் எஸ்டேட் பிஸினசில் இறங்கியவர். தாய் சாமுண்டீஸ்வரி, முதுகலை பொருளாதாரம் படித்தவர். இல்லத்தரசியாக இருக்கும் இவர் வெற்றிச்செல்வனின் வெற்றிக்குவித்திட்டவர். அவர் சொல்கிறார்...
"மழலை மொழி பேசத் தொடங்கியதில் இருந்தே அவன் நாங்கள் சொல்வதை அப்படியே திரும்பச் சொல்வான். அவனுக்கு மூன்றரை வயதிருக்கும் போது எங்கள் பகுதியில் (வடசென்னை, பாரதிநகர்) ஒரு போட்டி நடத்தினார்கள். அதற்காக சில திருக்குறள்களை சொல்லிக் கொடுத்து என் மகனை மேடையேற்ற முயற்சி செய்தேன். அவன் நான் சொல்லிக் கொடுத் ததை வெகு சீக்கிரமாக புரிந்து கொண்டு சரியாக திருப்பிச் சொன்னான். எனவே 25 திருக்குறள்களை சொல்லிக் கொடுத்தேன்.
அத்தனை குறள்களையும் அச்சு பிசகாமல் அழகாக நினைவு வைத்து மேடையில் சொல்லி முடித்து எங்களையும், பார்வையாளர்களையும் வியப்பில் ஆழ்த்திவிட்டான். அதன்பிறகு பள்ளி யொன்றில் நடந்த போட்டிக்கு 2 நாட்களுக்கு முன்ன தாக அழைப்பு வந்தது. உடனே பாரதிதாசன் கவிதை ஒன்றை அவனுக்குச் சொல்லிக் கொடுத்தேன். அரை மணி நேரத்திற்குள் அதை மனப்பாடம் செய்து ஒப்பித்தான். அப்போதுதான் எங்கள் மகனுக்கு நிறைய ஞாபகசக்தி இருப்பதை நாங்கள் அறிந்தோம். அதன்பிறகு பல வழிகளிலும் மேடைக்கு தயார் செய்யும் முயற்சியில் இறங்கினேன்'' என்கிறார் சாமுண்டீஸ்வரி.
திருக்குறளும், கவிதையும் வெற்றிச்செல்வனின் திறமையை வெளிக்காட்டினாலும் அவனை பளிச்சிட வைத்தது `பராசக்தி' பட வசன உச்சரிப்புதான். நடிகர் சிவாஜிகணேசன் பேசி புகழ் பெற்ற நீதிமன்ற வசனத்தை ஏற்ற இறக்கத்துடன் மேடையில் முழங்கிய போது அவனுக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தது. அது அவனுக்கு டி.வி. நிகழ்ச்சியில் பங்குபெறும் வாய்ப்பையும் பெற்றுத் தந்தது.
"அவன் மேடையில் பேச ஆரம்பித்த பிறகு புகழ்பெற்ற சினிமா வசனங்களை சொல்லிக் கொடுத் தேன். `வீடியோ' காட்சியை ஓட விட்டுக் கொண்டு அதுபோல் உச்சரிக்க பயிற்சி அளித்ததில், அவன் திருக்குறளைப் போலவே சினிமா வசனத்தையும் ஏற்ற இறக்கத்துடன் அழகாக சொன்னான். பேசி பாராட்டு பெற்றான்'' என்று பெருமிதம் பொங்க சொல்கிறார் இந்தத் தாய்.
தாயின் அரவணைப்பில் வெற்றிச்செல்வன்
குழந்தையை இப்படித்தான் கொண்டு வர வேண்டும் என்று திட்டமிட்டு வளர்த்தீர்களா? என்று கேட்டால், "இல்லவே இல்லை'' என்று மறுக்கிறார் சாமுண்டீஸ்வரி. "அவனது இயல்பான நினைவாற்றல் திறமையைத் தெரிந்து கொண்டு எங்களால் முடிந்த அளவு அதை வெளிக் கொண்டு வந்திருக்கிறோம். எல்.கே.ஜி. படித்துக் கொண்டிருந்தபோதே மேடையேறி அசத்தி விட்டதால் அவன் சீக்கிரமே புகழ் பெற்று விட்டான். எல்.கே.ஜி. படிக்கும்போதே தான் படித்த அதே பள்ளியில் மற்ற மாணவர்கள் முன்பு சிறப்பு விருந்தினராக தன்னம்பிக்கை உரை யாற்றி இருக்கிறான். அதேபோல வேறு சில பள்ளிகளிலும் அவனை அழைத்து, பேச வைத்து கவுரவித்துள்ளனர்''
வெற்றிச் செல்வனின் திறமையைப் பாராட்டி ஞாபகசெம்மல், இளஞ்சாதனையாளர், இளஞ் சுடர், இளம் பேச்சாளர் என பட்டங்களின் பட்டியல் நீள்கிறது. அவன் பெற்ற கேடயங்களால் வீட்டில் ஷோ-கேஸ் நிரம்பி வழிகிறது.
"அவனது திறமையைப் பார்த்து வியந்த இரண்டு `ரியல் எஸ்டேட்' அமைப்பினர் தலா 3 சென்ட் இடம் பரிசாக வழங்கி கவுரவித்துள்ளனர். சமீபத்தில் பேச்சுப் போட்டியில் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வென்றான். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பரிசு வழங்கினார். தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் நடத்திய அந்தப் போட்டியில் 5 சுற்றுகளாக பேச்சுப் போட்டி நடந்தது. 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பிரிவு போட்டியில் யு.கே.ஜி. படிக்கும்போதே கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது''
மகனிடம் உங்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது எது?
"அவனது ஞாபக சக்தி. அதற்காக அவனை கஷ்டப்படுத்துவதில்லை. நாங்கள் நாட்கணக்கில் பயிற்சி செய்வதை அவன் அரை மணி நேரத்தில் மனதில் ஏற்றிக் கொள்வான். அவனது ஞாபக சக்தி எங்களுக்கு பிரமிப்பைத் தரும். அவனுக்காக பயிற்சி கொடுத்து இப்போது எங்கள் நினைவுத்திறனும், புத்துணர்ச்சியும் அதிகரித்து இருக்கிறது''
ஞாபக சக்திக்காக சிறப்பு உணவு கொடுக்கிறீர்களா?
"இல்லை. அவன் சாதாரண குழந்தைகள் போலவே பள்ளிக்குச் சென்று வருவான். மாலையில் விளையாடு வான். பிறகு கொஞ்ச நேரம் `ஹோம் ஒர்க்' செய்துவிட்டு இரவு 9 மணிக்குள்ளாக தூங்கப் போய்விடுவான். காலையில் சீக்கிரம் எழுவான். மேடையில் பேசுவதற்காகவும் நிறைய கஷ்டப்படுவதில்லை. இயற்கையாகவே அவனிடம் அதிக ஞாபக சக்தி உள்ளது. அவனது அறிவுத் திறனுக்கேற்ப விஞ்ஞானியாக வருவான் என்று எதிர்பார்க்கிறோம்'' என்கிறார்.
வெற்றிச் செல்வன் சொல்கிறான்...
"எனக்கு செஸ், சறுக்கு ஆட்டம் ரொம்ப பிடிக்கும். கம்ப்யூட்டரில் சூட்டிங் கேம்ஸ் ஆடுவேன், டி.வி.யில் பொம்மைப்படமும், டிஸ்கவரி சானலில் விலங்குகள் படமும் பார்ப்பேன்'' என்கிறான்.
ஆமாம், உங்களுக்கு அம்மாவைப் பிடிக்குமா, அப்பாவைப் பிடிக்குமா? என்றால் "ரெண்டு பேரையும் பிடிக்கும். அம்மா குளிப்பாட்டி சோறூட்டினால் அப்பா டிரெஸ் மாற்றி, சூ அணிந்து விடுவார். தாத்தா பாட்டியும் என்னை செல்லமாக பார்த்துக் கொள்வார்கள்'' என்கிறான். வெற்றிச் செல்வனுக்காக காத்திருக்கின்றன இன்னும் பல வெற்றிகள்!
- நன்றி: தினத்தந்தி, 4.2.2012

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...