Wednesday, March 21, 2012

அம்புலி 3Dயின் பகுத்தறிவுப் பரிமாணம்


- சமா.இளவரசன்
பகுத்தறிவுப் பரிமாணம்
பிச்சைக்காரன் கையில் தங்கத் தட்டையே கொடுத்தாலும் அதை வைத்துப் பிச்சை தான் எடுப்பான் என்பது போல, எவ்வளவு அரிய கண்டுபிடிப்பாக இருந்தாலும் அது நம் நாட்டில் மூடநம்பிக்கையை வளர்க்கத் தான் பயன்படும். கம்பியூட்டரையே கையில் கொடுத்தாலும் அதை வைத்து கிளி, எலி போல அய்யாவுக்கு ஒரு நல்ல சீட்டா எடுத்துக்குடுடா ராஜா என்று ஜோசியம் பார்க்க நம்மாள் பயன்படுத்துவான்.
கிட்டத்தட்ட இத்தனைக் காலமும் இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்த் திரையுலகில் புதிய தொழில்நுட்பங்களும், வரைகலைக் காட்சிகளும் அம்மனை ஆட வைக்கவும், பத்து ஹீரோவைப் பறக்க வைக்கவும், பேய் திகில் ஊட்டவும் தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் அதைத்தாண்டி அறிவியல் சிந்தனையோடு புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கும் அம்புலி 3டி குழுவினருக்கு முதலில் நமது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவிக்க வேண்டும். ஸ்டீரியோஸ்கோப்பிக் முறையில் தமிழில் எடுக்கப்பட்டிருக்கும் முதல் 3டி (முப்பரிமாணப்) படம் அம்புலி. வழக்கம்போல திகிலூட்டும் வசனங்கள், காட்சித் துணுக்குகள் (), பில்ட்-அப்புகள் இவற்றோடு தான் பத்திரிகை விளம்பரங்களும், காணொளி விளம்பரங்களும் வெளிவந்து கொண்டிருந்தன. ஆனால் அதன் தொடர்ச்சியாக, அனல் தெறிக்கும் பகுத்தறிவு வசனங்கள் என்று வெளிவந்த விளம்பரம் பலரையும் வியக்க வைத்தது - நம்மை உள்பட!
படத்தின் கதை நடப்பது 1978--79 ஆண்டுகளில்! சர். ஆர்தர் வில்லிங்டன் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பார்வேந்தனும், அமுதனும். பக்கத்தில் இருக்கும் பூமாடந்திபுரம் கிராமத்தில் இருக்கும் தன் காதலியைச் சந்திக்க வசதியாக விடுமுறையிலும் கல்லூரியிலேயே தங்குவதற்கு நண்பன் வேந்தனின் தந்தையும், கல்லூரி காவலாளியுமான வேதகிரி (தம்பி ராமையா)விடம் படிப்புக்காக என்று சொல்லி அனுமதி வாங்கிவிடுகிறான் அமுதன். அவளைச் சென்று சந்திக்க கம்புக் காட்டு வழியில் மிதிவண்டியில் சென்று திரும்புகையில், மிரட்சியூட்டும் வினோதமான ஒன்று அமுதனைத் தாக்க வருகிறது. அதிலிருந்து தப்பி வரும் அவன் விசயத்தை வேந்தனிடம் சொல்ல, அது என்ன என்று கண்டுபிடிக்கும் ஆர்வம் இருவருக்கும் ஏற்படுகிறது - குறிப்பாக வேந்தனுக்கு!
இது குறித்து கேள்விப்பட்டு வேந்தனின் தந்தை கவலைப்படுவதோடு, இருவரையும் எச்சரிக்கவும் செய்கிறார். பிறகு அது என்ன அம்புலி? என்று விசாரிக்கும் போது, பூமாடந்திபுரம் என்னும் கிராம மக்கள் அம்புலியால் அடிக்கடி தாக்கப்படுவதும், ஆடு, மாடு, குழந்தைகள் கொலைசெய்யப்பட்டு உண்ணப்படுவதும் தொடர்ந்து நடந்துவருவது தெரிகிறது. இதுபற்றிய தகவல்களைத் தேடி பூமாடந்திபுரம் சென்றால், அங்கே இது குறித்து பகிர்ந்து கொள்ள பொதுமக்கள் தயாராக இல்லை. தனக்குத் தெரிந்தவற்றைச் சொல்ல ஒரு பள்ளி ஆசிரியர் ஒப்புக் கொள்கிறார். ஆனால் இவர்கள் அனைவரின் எண்ணங்களையும் மூடநம்பிக்கை என்று சாடுகிறான் அதே கல்லூரியின் மூன்றாமாண்டு மாணவனும் அக்கிராம்த்தைச் சேர்ந்தவனுமான மருதன். எப்போதும் கருப்புச் சட்டையுடன் தந்தை பெரியாரின் படத்தை வீட்டிம் மாட்டி வைத்துக் கொண்டு, பகுத்தறிவோடு கருத்துகளைப் பகிருபவன் மருதன்.
வேந்தன், அமுதன் ஆகியோர் ஒரு பக்கமும், மருதன் ஒரு பக்கமுமாக அம்புலி குறித்த தேடலில் இருக்கின்றனர். கல்லூரியின் பழைய ஆண்டு மலர் ஒன்றில் கிடைக்கும் தகவலை வைத்து பழைய மாணவர்களைத் தேடி நண்பர்கள் இருவரும் செல்ல, இன்னொரு பக்கம் அம்புலிக்கு பலி கொடுக்கப்படும் ஆடு காணாமல் போன திசையில் சென்று பழைய மாடந்திபுரம் கிராமத்தில் உள்ள கோவில் ஒன்றின் நிலவறைப் பகுதி வரை சென்று பீதியளிக்கும் அம்புலியைக் கண்டு திரும்புகிறான் மருதன். மருதன் தன் பாட்டியும், ஊர் வைத்தியச்சியுமான சீமாட்டி  பாட்டியிடம் விவரம் கேட்கிறான். இன்னொருபுறம் கல்லூரி நூலகம், ஆய்வகம் இவற்றில் கிடைக்கும் துப்புகளைக் கொண்டு தேடலில் இறங்கும் வேந்தனும் அமுதனும், 20 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட கல்லூரியின் நிறுவனர் அறையிலிருந்து அம்புலி குறித்து அறிகின்றனர். அதுவரை அம் புலி என்பது பயங்கர சக்திகள் உடைய பேய், பிசாசு போன்ற ஏதோ ஒன்று என்று போகும் படம் அங்கே அறிவியல் பக்கம் நம் கவனத்தைத் திருப்புகிறது. கதை நடக்கும் 20 ஆண்டுகளுக்கு முன் (1958) அக்கல்லூரியின் நிறுவனரும் முன்னாள் இராணுவ மருத்துவருமான சர். ஆர்தர் வில்லியம் நியாண்டர்தால் மனிதனை உருவாக்கும் தனது ஆராய்ச்சிக்காக மாடந்திபுரத் தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு நியாண்டர்தால் மனிதனின் டி.என்.ஏ-வைச் செலுத்தி கருவுறச் செய்கிறார். அவளுக்குப் பிரசவம் பார்க்கும் வைத்தியச்சி சீமாட்டியின் கையையே பிறந்த நியாண்டர்தால் குழந்தை கடித்துவிடுகிறது. பயந்துபோகும் ஊர் மக்கள் அதை கொல்லத் துணிய, குழந்தையை தப்ப வைத்துவிட்டு தூக்கிட்டு மடிந்துபோகிறாள் அந்தப் பெண். அவளின் மூத்தமகனான செங்கோடன், வெள்ளைக்கார ஆராய்ச்சியாளரைக் கொன்றுவிட்டு சிறைக்குச் சென்றுவிடுகிறான். அந்த நியாண்டர்தால் குழந்தை (மனித உண்ணி) தான் வளர்ந்து அம்புலியாகி ஊரையே ஆட்டிவைக்கிறது. இதற்காக காவல்துறை மூலம் வேந்தன், அமுதன் செய்யும் முயற்சிகளும், மக்களுக்கு விழிப்புணர்வூட்டி, அவர்களைத் திரட்டிக் கொண்டு அம்புலியை எதிர்த்துப் போராட ஊர்மக்களை அழைத்துவரும் மருதனின் செயலும் வெற்றிபெறுகின்றன. செங்கோடன் (பார்த்திபன்) உதவியுடன் ராணுவம் அம்புலியை பிடித்துச் செல்கிறது.
படத்தில் ஊர்மக்கள் திரண்டு கூட்டுப் பிரார்த்தனை செய்வது போன்ற சமாளிப்புகளும் (அது பயன்தராமல் தான் பின்னர் வேட்டைக்கு செல்கின்றனர்), சூரிய கிரகணத்தில் வெளியில் சென்றதால் கர்ப்பிணிப் பெண்ணுக்கு செலுத்திய கருவில் டி.என்.ஏ மாற்றம் நிகழ்ந்ததாகக் கூறுவது போன்ற அறிவியலுக்கு முரணான செய்தியும் ஒன்றிரண்டு இருக்கத் தான் செய்கிறது. (சூரிய கிரகணம் என்பது பூமியின் மீது விழும் நிழல் தானே தவிர, அதற்கும் டி.என்.ஏ மாற்றங்களுக்கும் தொடர்பில்லை. அது இந்தியா போன்ற சில நாடுகளில் உலவும் மூடநம்பிக்கை) ஆனாலும், அவற்றையெல்லாம் விஞ்சி பொறுப்புணர்வோடு இப்படத்தை அறிவியல் நோக்கில் அணுகியிருப்பது பாராட்டுக்குரியது. அதேபோல், பகுத்தறிவாளர் என்ற கதாபாத்திரத்தையும் நேர்மையோடு அணுகியிருப்பதும் முக்கியமானது. கதை நிகழும் 1978_-79 என்பது தந்தை பெரியாரின் நூற்றாண்டு காலம் என்பது இயல்பாக நிகழ்ந்த பொருத்தமாகும்.
தெளிவான ஒளிப்பதிவு, புதிய தொழிநுட்பத்தை சரியாகப் பயன்படுத்திருக்கும் பாங்கு,  நல்ல கலை இயக்கம், இறுதியில் சற்றே வேகம் குறைவது போலத் தோன்றினாலும் தொய்வடையாத திரைக்கதை என்று எடுத்த முயற்சியில் வெற்றிபெற்றிருக் கிறார்கள் இரட்டை இயக்குநர்களான ஹரிசங்கரும், ஹரி நாராயணனும்! தொடர்ந்து இரண்டாம் பாகத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக் கிறார்கள் என்பது இப்படத்தின் வெற்றியை நமக்கு உணர்த்துகிறது. முப்பரிமாணம் என்ற புதுமைத் தொழில்நுட்பத்தோடு நிறைவு கொள்ளாமல், பகுத்தறிவுப் பரிமாணத்தோடு கதை சொல்லியிருப்பதில் புதுமைப்படுத்தியதில் நம் பாராட்டைப் பெறுகிறது அம்புலி!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...