Friday, February 3, 2012

அண்ணா நினைவு நாள் சிந்தனை!


இன்று அறிஞர் அண்ணா அவர்களின் 43ஆம் ஆண்டு நினைவு நாள். இது ஒன்றும் சடங்காச் சரியமான நாள் அல்ல.

திராவிடர் மக்களின் வரலாற்றில் புதிய தன்மான அத்தியாயத்தை, சமதர்ம சகாப்தத்தை, சமூகநீதி சரித்திரத்தை உருவாக்கிய திராவிடர் இயக்கம் அதன் தன்னிகரில்லாத மிகப் பெரிய புரட்சியாளர் தந்தை பெரியார் அவர்களின் கொள்கை வழி நின்று, புத்தாக்கச் சமூகத்தை உருவாக்க தமது ஆற்றல் வாய்ந்த பேச்சாற்றலையும், எழுத்தாற்றலையும் சுழல விட்ட ஒரு தலைவரின் மறைந்த நாள் இந்நாள்.

அண்ணா அவர்கள் அரசியலில் நுழைந்திருக்க லாம்; சட்டமன்றத்திற்குச் சென்றிருக்கலாம்; இத்துறையில் காலடி பதித்தவர்கள் பகுத்தறிவின் அடிப்படையில், முடை நாற்றமெடுக்கும் மூட நாற்றங் களை எதிர்க்கும் தன்மையில் சிந்திப்பது. இயங்குவது என்பது எளிதிற் காணக் கிடைக்காத ஒன்றாகும்.

அண்ணா அவர்களைப் பொருத்தவரையில், ஆட்சியைக் கருவியாகப் பயன்படுத்தி சமுதாய மாற்றத்திற்கான சட்டங்களை உருவாக்கியவர். இவற்றிற்கு முன்னுரிமை கொடுத்தவர்.

1) அரசுப் பணிமனைகளில் கடவுள், மதப் படங்களை நீக்குதல்.

2) சுயமரியாதைத் திருமணத்துக்குச் சட்ட வடிவம்.

3) சென்னை மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயரிடல்.

4) இந்திக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை - தமிழ், ஆங்கிலத்திற்கு மட்டுமே 
இடம் உண்டு.

மிகக் குறுகிய காலந்தான் முதல் அமைச்சர் பொறுப்பை வகித்தவர் என்றாலும், வரலாற்றில் என்றென்றும் நிலைக்கத்தக்க சாதனைகளை யல்லவா பொறித்துள்ளார்.

ஒருபடி மேலே சென்று இந்த ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கைதான் என்று சட்டப் பேரவையிலேயே பிரகடனப்படுத்தி விட்டாரே!

இந்த அறிவிப்புக்குள் அனைத்தும் அடங்கி விடவில்லையா?

சட்டமன்றத்துக்குச் செல்லாத தமக்காக வாக்குக் கேட்காத ஒரு தலைவருக்குக் காணிக்கை, ஓர் ஆட்சி என்று அறிவிக்கப்பட்டது - இதுவரை எங்கும் கேள்விப்பட்டிராத புதுமையாகும். அந்தப் புதுமையைச் செய்தவர் அறிஞர் அண்ணா அவர்களே ஆவார்.

ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகும்கூட, பெரியார் ஆணையிட்டால் மீண்டும் அந்தச் சமூகப் பணிகளில், பகுத்தறிவுப் பிரச்சாரப் பணியில் ஈடுபடத் தயார் என்று தன் உள்ளத்தைத் திறந்து காட்டிய திராவிடர் இயக்கச் செம்மல் அண்ணா அவர்கள்.

இன்றைக்குப் பெரும்பாலும் அண்ணா ஓர் அரசியல் வாதி என்பது போன்ற தோற்றம் அளிக்கப்பட்டு வருகிறதே தவிர - (இது வெறும் மேலோட்டமான பார்வையே!) அவர்தம் ஆழமான சமூகப் பார்வை  - சிந்தனையோட்டம் குறிப்பிடத்தக்க வகையில் வெளிப்படுத்தப்படவில்லை.

அண்ணாவின் பெயரைக் கட்சியிலும், உருவத்தை கொடியிலும் பறக்கவிட்டுள்ள ஓர் அரசியல் கட்சி தான் தமிழ்நாட்டை இப்பொழுது ஆண்டு கொண் டுள்ளது. ஆனால், அண்ணாவின் அடிப்படைக் கொள்கைக்கு நேர் எதிரான சிந்தனைகள் - செயல் கள்தான் இரண்டு தண்டவாளங்களாக உள்ளன.

எடுத்துக்காட்டாக, தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் பிறப்பு என்ற தமிழ்ப் பண்பாட்டு அடையாளத்தை ஒரு திராவிட இயக்க அரசியல் கட்சி (திமுக) சட்டம் செய்த நிலையில், அண்ணாவின் பெயரைத் தாங்கிய இன்னொரு அரசியல் கட்சி (அ.இ.அ.தி.மு.க.) தனிச் சட்டம் இயற்றி, அதனை ரத்து செய்கிறது என்றால் இது எத்தகைய கேலிக் கூத்து என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

புத்த மார்க்கத்தில் ஏற்பட்ட ஊடுருவல் - இப்பொழுது திராவிடர் என்ற பெயரைத் தாங்கியுள்ள அமைப்பிலும் நடந்திருக்கிறது.

அந்தப் புன்னகை என்று கவுதமப் புத்தரைப்பற்றி அண்ணாவும் எழுதியுள்ளாரே!
அசல் எது, போலி எது என்பதை உணர்ந்து நடந்து கொள்வதுதான் அண்ணா நினைவு நாளுக்குப் பெருமை சேர்ப்பதாகும்.
வாழ்க பெரியார்! வாழ்க அண்ணா!!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...