Saturday, February 4, 2012

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள்

மதவாத பா.ஜ.க.வை முறியடிக்க மதச் சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள்க!
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு தாய் மொழியில் நுழைவுத் தேர்வு எழுதிட ஆவன செய்க!
திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள்

சென்னை, சன.4- மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு எழுதிட வேண்டும். இந்தியிலும், ஆங்கிலத்திலும் தான் எழுத வேண்டும் என்ற நடைமுறை - மற்ற மாநில மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இதனை மாற்றி அனைத்துத் தாய் மொழிகளிலும் எழுதிட வாய்ப்பளிக்க வேண்டும் என்று திராவிடர் கழக தலைமைச் செயற் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

4.2.2012 அன்று சென்னை பெரியார் திடலில், துரை.சக்ரவர்த்தி நினைவகத்தில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

(1) இந்திய அரசமைப்புச் சட்டம் மதச் சார்பின்மைக் கொள்கையை வலியுறுத்தும் நிலையில், அதற்கு எதிராக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராமன்கோவில் கட்டுவோம் என்று அதிகார பூர்வமாக தேர்தல் அறிக்கையிலேயே பாரதீய ஜனதா கட்சி பகிரங்கமாக அறிவித்திருப்பது - இந்திய அரசமைப்புச் சாசனத்திற்கு எதிரானதும், சவா லானதும் என்பதால்,  இது குறித்து தேர்தல் ஆணையம் மற்றும் இந்திய அரசின் சட்டத்துறை மற்றும் - நீதிமன்றத் தின் கருத்து வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதோடு, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மையை எதிர்க்கும் ஒரு அமைப்பு - தேர்தலில் போட்டியிடத் தகுதி உடையதுதானா என்பது குறித்தும் தெரிவிக்கப்ப டவேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

இது குறித்து அரசியல் கட்சிகளும் தங்கள் கருத்து களை வெளிப்படுத்தவேண்டும் என்றும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

மற்றபடி சமுதாய ரீதியில்,  பி.ஜே.பி., அதன் பரிவாரங் களின் இந்துத்துவா உள்ளிட்ட பிற்போக்குக் கொள்கை களை மக்கள் மத்தியில் விமர்சிக்கவும், எதிர்த்து முறியடிக் கவும் எப்பொழுதும் போல் திராவிடர் கழகம் பிரச்சாரம் உட்பட அனைத்து வகையிலும் எதிர்கொண்டு முறியடிக் கத் தயாராகவே உள்ளது என்பதை இச்செயற்குழு பிரகடனப்படுத்துகிறது.

(2) பாரதீய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஊழல் பெருக்கமும், நிருவாகச் சீர்கேடுகளும், மதச் சண்டைகளும், சட்ட ஒழுங்குச் சிதைவுகளும்  தலைவிரித் தாடும் சூழ்நிலையில், மத்தியில் உள்ளஅய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி என்பது ஊழல் நிறைந்த ஆட்சி என்று கூறி ஒரு பெரிய பிரச்சாரத்தின் மூடுதிரை யில் மத்தியில் தமது இந்துத்துவா ஆட்சியை நிலை நாட்டும் எண்ணத்தோடு, பாரதீய ஜனதா கட்சி பார்ப் பனர்களின் ஆதிக்கம் நிறைந்த ஊடகங்களின் துணை கொண்டு திட்டமிட்டுச் செயல்பட்டு வரும் நிலையில், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி கட்சிகளும், இடது சாரிக் கட்சிகளும்,  சமூக நீதியாளர்களும், மதச்சார்பற்ற சக்திகளும், சிறுபான்மையினரும் கவனத்தில் கொண்டு நாடு இந்துத்துவா வெறியாளர்களின் அதிகாரத்தின் கைகளில் சிக்கிச் சீரழியாமல் முறியடிக்கும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று இச்செயற்குழு வற்புறுத்துகின்றது.

(3) அய்.அய்.டி., அய்.அய்.எம்., எய்ம்ஸ், ஜிப்மர் மற்றும் இந்தியாவில் உள்ள தேசியப் பல்கலைக் கழகங்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமேதான் எழுத வேண்டும் என்ற நிலை - ஆங்கில வழி படித்தவர்களுக்கும், இந்தியைத் தாய்மொழி யாகக் கொண்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே கூடுதல் சலுகையையும், வாய்ப்பையும் அளிப்பது மட்டுமல்லாமல், மற்ற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு வாய்ப்புக் கேடாகவும் அமைவதால், இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள அனைத்து மொழி களிலும் நுழைவுத் தேர்வினை எழுதிட வாய்ப்பினை உருவாக்கித் தருமாறு மத்திய அரசை இச்செயற்குழு வலி யுறுத்துகிறது. தமிழ்நாடு அரசு இந்த வகையில் அழுத்தம் கொடுக்க வேண்டுமாய் இச்செயற்குழு வற்புறுத்துகிறது.

(4) மதவாத அமைப்புகளும், ஏடுகள், தொலைக்காட்சி போன்ற ஊடகங்களும் மக்கள் மத்தியில் மூடத் தனங்களை மூர்க்கத்தனமாகப் பிரச்சாரம் செய்யும் சூழ்நிலையில்,  தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுக் கருத்துக் களையே முதன்மைப்படுத்தி, நவீன யுக்திகளைப் பயன் படுத்தி மக்கள் மத்தியில் தீவிரமாகப் பரப்புவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

(அ) கிராமப் பிரச்சாரத்திட்டம்:
(ஆ) கீழ்க்கண்ட இடங்களில் சனி, ஞாயிறுகளில் பெரியாரியல் பயிற்சி முகாம்கள் நடத்துதல்.
(1) சிவகங்கை, (2) செயங்கொண்டம்,  (3) ஒகேனக்கல், (4) சாத்தனூர், (5) ஏலகிரி, (6) மதுரை புறநகர், (7) திருமருகல்.
(இ) பெரியார் சமூகக் களப்பபணிப் பயிற்சி முகாம்கள் நடத்துதல்.
(ஈ) கீழ்க்கண்ட இடங்களில் வட்டார மாநடுகள்.
(1) நாகர்கோவில்,  (2)  திருச்செந்தூர், (3) துறையூர், (4) சிதம்பரம், (5)  திருத்துறைப்பூண்டி, (6)  நாமக்கல்

50 ஆயிரம் விடுதலை சந்தா சேர்ப்புக்கான சாதனை விழாவினை அன்னை மணியம்மையார் அவர்களின் பிறந்த நாளையொட்டி 2012 மார்ச் 10 ஆம் தேதி மாலையிலும், மார்ச் 11 ஆம் தேதி மாலையிலும் தஞ்சாவூரில் மாநாடுகள் போல் வெகு சிறப்பாக நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

(உ) அன்னை மணியம்மையார் அவர்களின் பிறந்தநாள் (மார்ச் 10) நினைவுநாள் (மார்ச் 16) களையொட்டி பெரியார் புத்தகச் சந்தைகள் நடத்துதல்.

(ஊ) பகுத்தறிவு - அறிவியல் கண்காட்சிகள் நடத்துதல்.

(எ)  கொள்கை விளக்கப் பிரச்சாரத்தில் இன்னொரு முகமாக நூல்கள் அறிமுக விழாக் கூட்டங்கள் நடத்துதல். ஆகிய பணிகளை முடுக்கி விடுவது என்று தீர்மானிக்கப் படுகிறது.
 
(5) திராவிடர் கழகத் தலைவர் விடுதலை ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் விடுதலை ஆசிரியராகப் பொறுப்பேற்று 50 ஆண்டுகள் ஆகும்  முக்கியமான ஒரு வரலாற்றுக் குறிப்பையொட்டி, 50 ஆயிரம் விடுதலை சந்தாக்கள் சேர்க்கும் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றி, இயக்க வரலாற்றில் இதற்கு முன் கண்டிராத பெரும் சாதனை நிகழ்த்தப்பட்டதற்காக இச்செயற்குழு பெருமிதம் கொள்கிறது;  இதற்காக அரும் பணியாற்றிய அனைத்துக் கழகத் தோழர்களுக்கும் பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

இந்த 50 ஆயிரம் விடுதலை சந்தாக்களின் எண்ணிக் கையை,  எந்த வகையிலும் சரிந்துவிடாமல், அடிப்படை ஆதார சந்தாக்களாகத் தக்க வைத்துக் கொள்வதில்  கழகத் தோழர்கள் அக்கறையுடன் தொடர் பணியாற்ற வேண்டும் என்று இச்செயற்குழு கழகத் தோழர்களைக் கேட்டுக் கொள்கிறது.

விடுதலை சந்தா சேர்ப்புப் பணி என்பதை ஒரு தொடர் பணியாகவே கருதி நமது கழகத் தோழர்கள் செயல்படவேண்டும் என்றும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

சேர்க்கப்பட்ட சந்தாக்களைப் புதுப்பிக்கச் செய்வதில் தான் 50 ஆயிரம் சந்தாக்கள் திரட்டியதன் சிறப்பே அடங்கியிருக்கிறது என்பதை எப்பொழுதுமே மறக்காமல், அந்தக் கண்ணோட்டத்தோடு சந்தாதாரர்களிடம் நெருக்கமாக தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டு, தொடர் பணியை மேற்கொள்ளவேண்டும் என்று மீண்டும் மீண்டும் இச் செயற்குழு வலியுறுத்துகிறது.

(6) 24-12-2011 தந்தை பெரியார் நினைவு நாளன்று சென்னையில் கூடிய திராவிடர் கழகப் பொதுக் குழுவில் நாம் எடுத்த முடிவின்படி விடுதலைக்கு வைப்பு நிதியாக ஒரு கோடி ரூபாய் சேர்ப்பது என்ற திட்டத்தை நிறைவேற்ற நமது கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் முனைப்புடன் செயல்படவேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

காகிதம்  உள்பட அச்சுப் பொருள்களின் விலை நில வரங்களைக் கணக்கிடும்போது ஏற்படும் பொருளாதார இழப்புகளைச் சரிக்கட்ட,  இந்த வைப்பு விதி அவசிய மானது என்பதால், நமது கழகத் தோழர்கள், பலதரப்பட்ட பெருமக்களையும், உணர்வாளர்களையும் அணுகி இதற்கான நன்கொடையைத் திரட்டும் பணியில் உடனே ஈடுபடுவது என்று கழகத் தலைமைச் செயற்குழு தீர்மானிக்கிறது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...