Thursday, February 9, 2012

பி.ஜே.பி.யின் வக்கிரம்!


பாரதிய ஜனதா என்றால் அது தார்மீகப் பண்புகளின் பெட்டகம் என்றெல்லாம், உச்சி  குளிர இந்த நாட்டில் பிரச்சாரம் செய்வதற்குப் பார்ப்பன ஊடகங்கள் நிரம்பவேயிருக்கின்றன.
இந்துத்துவா என்றால் மிக உயர்ந்த புனிதம் என்று போற்றிப்பா பாடப்படவில்லையா?
ஆர்.எஸ்.எஸ். என்றால் கட்டுப்பாடான கட்சி என்று கதைக்கப்படுவதில்லையா? ஆனால், உண்மை என்பது யதார்த்தத்தில் வேறுவிதமாக இருக்கிறது என்பதுதான் அழுத்தமான உண்மை.
குறிப்பாக கருநாடக சட்டப் பேரவையில் பி.ஜே.பி.யைச் சேர்ந்த மூன்று அமைச்சர்கள் நடந்து கொண்டு இருக்கும் விதம் கேவலத் தின் எல்லைக்கே சென்று, நாடே வெட்கப்படும் நிலைக்கு, தலைகுனியும் தன்மைக்குத் தள்ளப்பட்டு விட்டது.
சட்டப் பேரவையில் சிந்தகி வட்டத்தில் பாகிஸ்தான் கொடியேற்றப்பட்டது தொடர்பாக காரசாரமாக விவாதம் நடந்து கொண்டிருந்த போது,  ஆளும் பி.ஜே.பி. அமைச்சர்கள் மூவர் கைப்பேசியில் ஆபாச காட்சிகளைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர் என்பது அதிர்ச்சிக்குரியதே! இது இந்தியா முழுமையும் பெரும் அதிர்வினை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக, வேறு வழியின்றி அந்த மூன்று பி.ஜே.பி.  - அமைச்சர்களும் பதவி விலக வேண்டிய இடத்துக்குத் தள்ளப் பட்டுள்ளனர்.
ஏற்கெனவே கருநாடக மாநிலம் பி.ஜே.பி. ஆட்சியில் ஊழல் முடை நாற்றத்தில் மூச்சுத் திணறிக் கொண்டு இருக்கிறது. ராம்சேனா போன்ற அமைப்புகள் அம்மாநிலத்தில் வன் முறை மதவாத நடவடிக்கைகளில் கோரத் தாண்டவம் ஆடுகின்றன.
இவை போதாதற்கு இந்த ஆபாச நடவடிக் கைகளால் பி.ஜே.பி.மீது மக்களின் பொது நம்பிக்கை மிகவும்  தாழ்ந்து போய் விட்டது என்பதை மறுக்க முடியாது.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர் பாபுபாய்கடா என்பவர் என்ன செய்தார்? தன் மனைவி, மகன் ஆகியோரின் பாஸ்போர்ட்டில் வேறொரு பெண்ணையும் அந்தப் பெண்ணின் மகனையும் அழைத்துச் சென்ற குட்டு உடைபட்டு, பி.ஜே.பி.யின் மோசடி முகத்திரை கிழிந்து தொங்கியது.
முதலாளிகளிடம் பணம் பெற்று அவர் களுக்காக நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்டதிலும் பி.ஜே.பி. உறுப்பினர்களுக்குத் தான் முதல் பரிசு!
அடுத்த பி.ஜே.பி பிரதமர்கள் என்னும் வரிசையில் உள்ள அக்கட்சியின் மூத்த தலை வர்களுள் ஒருவரான எல்.கே. அத்வானி பற்றி, அவரின் மருமகள் பிரதமர் வாஜ்பேயிக்கு எழுதிய கடிதம் மிக விரசமானது. தன்னிடம் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நடந்து கொண்டார் என்று எழுதவில்லையா?
பி.ஜே.பி; சங்பரிவார்க் கும்பலின் ஆதர்ஷ புருஷரான காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியின் தனி ஒழுக்கம், பொது ஒழுக்கம் என்பதுபற்றி நாடே கைகொட்டி எக்கலித்தது.
2014இல் நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் நாங்கள்தான் வெற்றி பெறப் போகிறோம் என்று மார்தட்டும் பி.ஜே.பி. எல்லா வகையிலும் கீழ்த்தர நிலையில் இருப்பதை வாக்காளர்கள் உணர வேண்டும்.
மதச்சார்பின்மைக்கு விரோதம், தனி ஒழுக்கம், பொது ஒழுக்கச் சிதைவு இவற்றின் ஒட்டு மொத்த வடிவமான பி.ஜே.பி. - அதன் பரிவாரங்களை சமுதாயத்தின் மத்தியிலிருந்து தூக்கி எறிய வெகுண்ட மக்கள் முன் வருவார்களாக!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...