Saturday, February 4, 2012

மாரத்தான் ஓட்டப் பந்தயம் ஏன் 26 மைல் 385 கெஜ தூரம் கொண்டதாக உள்ளது ?



மாரத்தான் ஓட்டப்பந்தய தூரம் 26 மைல் 385 கெஜம் கொண்டதாக இருப்பது பிரிட்டீஷ் அரச குடும்பத்தினரின் வசதிக் காக வைக்கப்பட்டதேயாகும்.
முதல் இரண்டு ஒலிம்பிக் விளை யாட்டுப் போட்டிகளில் மாரத்தான் ஓட்டப் பந்தய தூரம், விளையாட்டுக்கு விளை யாட்டு மாறுபட்ட வகையில்,  42 கி.மீ. (26 மைல்) அளவாகத்தான் இருந்தது. 1908 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் லண்டன் மாநகரில் நடத்தப்பட்டன. அரச குடும்பத்தினரில் பாதி பேர் காணும்படி, மாரத்தான் ஓட்டப் பந்தயத்தின் புறப்படும் இடம்  வின்ஸ்டர் மாளிகையின் ஒரு சாளரத்தின் அருகே நிர்ணயிக்கப்பட்டது.
அரச குடும்பத்தின் மற்ற பாதி பேர் காத்திருக்கும் வெள்ளை நகர விளையாட்டரங்கில் அரச குடும்பத்தினர் அமரும் பகுதிக்கு முன்பக்கத்தில் மாரத்தான் ஓட்டப் பந்தயம் முடியும் இடம் நிர்ணயிக்கப்பட்டது. இந்த தூரம் 26 மைல் 385 கெஜங்களாகும். இதுவே பின்னர் ஒலிம்பிக் மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் நிரந்தரமான தூரமாக ஆகியது. கிரேக்க நாட்டு தகவல் கொண்டு செல்பவராக (messenger)   இருந்த பெய்டிபிடிஸ் (Pheidippides) என்பவர்  கி.மு. 490 இல் மாரத்தானிலிருந்து ஏதென்ஸ்  நகருக்கு 26 மைல் தொலைவு ஓடிச் சென்று பெர்சியர்களை ஏதென்ஸ் மக்கள் வெற்றி கொண்ட செய்தியைக் கூறிய நிகழ்ச்சியிலிருந்து இந்த மாரத்தான் ஓட்டப்பந்தயம் தோற்றம் பெற்றது. அவர் வெற்றிச் செய்தியை அறிவித்துவிட்டு இறந்து கீழே விழுந்துவிட்டார் என்று அந்தப் புராணக்கதை கூறுகிறது.
இது வீரம் செறிந்த கதையாக இருந்தாலும், அதனை உண்மை எனக் கொள்ள முடியாது. மாரத்தான் ஓட்டப் பந்தயங்களில் கலந்து கொண்டு ஓடியவர்களில்  ஓடிமுடித்தவுடன் இறந்து போனவர் எவருமில்லை. தகவல் கொண்டு செல்வதைத் தொழிலாகக் கொண்டிருந்த பண்டைய கிரேக்கர்கள், இதனைப் போன்று இரு மடங்கு தூரம் ஓடவேண்டியவர்களாக இருந்தவர்கள் ஆகும். இந்தக் கதை முதன் முதலாக ரோம் வரலாற்றாசிரியர் ப்ளூடார்ச்  (கி.பி. 45-125) என்பவரின் நூலில்,  நிகழ்ச்சி நடந்ததாகக் கூறப்படுவதிலிருந்து 500 ஆண்டுகளுக்கு மேல் கடந்த பிறகு இடம் பெற்றது. அவர் அவ்வாறு ஓடிவயரை யூகலஸ் (Eucles)   என்று அழைத்தார்.
ஹெரோடோடஸ் (Herodotus) பதிவு செய்த பழைய பெய்டிபிடிஸ் கதையுடன் இது குழப்பிக் கொள்ளப் பட்டதாகவே தோன்றுகிறது;  அந்தப் போர் நடந்து முடிந்து ஆறு ஆண்டுகள் கழிந்த பிறகே பெய்டிபிடிஸ் பிறந்தார்.  யார் கூறுவது உண்மை என்று அறிவதற்கு சமகால நிகழ்வு ஒன்றைப் பார்க்க வேண்டும்.
பெர்சியர்களின் தாக்குதலை முறியடிக்க உதவி கோருவதற்காக பெய்டிபிடிஸ் மாரதானிலிருந்து ஸ்பார்டா வரை 246 கி.மீ. (153 மைல்) ஓடினார் என்று அவர் கூறுகிறார். ஒரு மத திருவிழாக் கொண்டாட்டங்களில் ஸ்பார்டான் மக்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்ததால், பெய்டிபிடிஸ் மறுபடியும் அங்கிருந்து தான் வந்த வழியே திரும்ப ஓடிச் சென்ற பிறகுதான், ஏதென்ஸ் மக்கள் பெர்சியர்களுடன் எவர் உதவியுமின்றி போரிட்டனர். அப்போரில் ஏதென்ஸ் மக்கள் பெருவெற்றி பெற்றனர்; 6,400 பெர்சியர்கள் இறந்து போன நிலையில் 192 ஏதென்ஸ் மக்கள் மட்டுமே இறந்திருந்தனர்.
மாரத்தான் தூரத்தை விட அதிக தொலைவு கொண்ட அனைத்து ஓட்டப் பந்தயங்களும் அல்ட்ரா-ரன்னிங் (Ultra-running)   எனப்படும். கிரேக்க அறிஞர்கள் அவை ஒப்புக் கொண்டவாறு பெய்டிபிடிஸ் எந்த வழியில் ஓடிச் சென்றாரோ, அதே வழியில் ஓடும் அல்ட்ரா-ரன்னிங் ஓட்டத்தை 1982 இல் அமெரிக்க அல்ட்ரா-ரன்னிங் சங்கம் நடத்தியதுடன், அதை சர்வதேச ஸ்பார்த்தலான் (spartathlon) ஓட்டம் என்று 1983 இல் நிறுவியது. இந்த ஓட்டப் பந்தயத்தில் முதன் முதலாக வெற்றி பெற்றவர்,  புகழ்பெற்ற நெடுந்தொலைவு ஓட இயன்ற கிரேக்கரான யான்னிஸ் கூரோஸ் (Yannis Kouros)ஆவார். 200 முதல் 1,600 கி.மீ. (125 முதல் 1,000 மைல்) வரையிலான அனைத்து ஓட்டப் பந்தய சாதனைகளையும் இதுவரை நிகழ்த்தியிருப்பவர் இவர் ஒருவரேயாவார்.  2005 ஆம் ஆண்டில் பெய்டிபிடிஸ் எவ்வாறு ஓடினாரோ அதே போல் ஏதென்சிலிருந்து ஸ்பார்டாவுக்கும், பின்னர் அங்கிருந்து ஏதென்சுக்கும் அவர் ஓடினார்.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...