Friday, January 27, 2012

பரிகாரப் பூஜையால் பலன் உண்டா?


சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரிகாரப் பூஜை என்ற பெயரால் ஆடுகளையும், கோழிகளையும் வெட்டியுள்ளனர்.
தி.மு.க. ஆட்சியில் மாவட்ட ஆட்சியர் கட்டடம் திறக்கப்பட்டபோது எந்தவித பரிகாரப் பூஜைகளும் செய்யப்படவில்லையாம். அவ்வாறு செய்யாததால், அந்த அலுவலகத்தில் பணியாற்றி வந்த அலு வலர்கள் அடிக்கடி நோய்வாய்ப்பட்டார்களாம். அ.இ.அ.தி.மு.க. ஆட்சி வந்த பிறகு அலுவலர்கள் அடிக்கடி மாற்றப்பட்டனராம்.
இந்த நிலைக்குப் பரிகாரம் தேடத்தான் தை அமாவாசை நாளைத் தேர்ந்தெடுத்து இந்த வேலையைச் செய்துள்ளனர்.
இவ்வளவுக்கும் மாவட்ட ஆட்சியர் ஒரு அய்.ஏ.எஸ். அதிகாரிதான். அவருடைய கவனத் துக்கு வராமலா இது நடந்திருக்க முடியும்?
படித்தவர்களே மூட நம்பிக்கைக்குத் துணை போனால், மற்றவர்களின் கதி என்னாவது? தந்தை பெரியார் அவர்கள் சொன்னதுபோல படிப்புக்கும், பகுத்தறிவுக்கும் சம்பந்தம் இல்லாத கல்விதானே இங்கே ஊட்டப்படுகிறது.
ஆடுகளும், கோழிகளும் வெட்டப்பட்டு விட்டதே இனிமேல் அங்குப் பணியாற்றும் அலுவலர்களுக்கு எந்தவித உடல்நலப் பாதிப்பும் ஏற்படாதா? அதற்கு உத்தரவாதம் கொடுக்க முடியுமா?
இந்து மத தொடர்பான பரிகாரப் பூஜைகளைச் செய்துள்ளனரே - மற்ற மதக்காரர்களுக்கும் இது பயன்படுமா? பயன்படாது என்றால் அவர்கள் பங்குக்குத் தனியே பரிகாரங்கள் செய்யப்படுமா?
எல்லா மதக்காரர்களுக்கும் புத்தறிவை ஊட்ட நாங்கள் பகுத்தறிவுப் பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் செய்ய அனுமதி கிடைக்குமா?
அரசு அலுவலகங்களுக்குள் சரஸ்வதி பூஜை நடத்தலாம் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகளே பச்சைக் கொடி காட்டினால் இதுபோன்ற மூட நம்பிக்கைகள்தான் தலைவிரித்தாடும்.
சரஸ்வதி பூஜையன்று புத்தகங்களை வைத்துப் படைப்பதாலோ, ஆயுதப் பூஜையன்று கருவிகளை வைத்துப் பூஜை போடுவதாலோ என்ன பயன்? அவையெல்லாம் அஃறிணைப் பொருள்கள் அல்லவா!
இதே சேலம் மாவட்டத்தில் ஓமலூர் பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடப்பதாலும், கொலை, கொள்ளைகள் நடப்பதாலும் காவல் நிலையத்தில் ஆட்டைக் காவு கொடுத்ததுண்டு. அதனைக் கண்டித்து அப்பொழுதே விடுதலை எழுதியது முண்டு.
இந்திய அரசமைப்புச் சட்டம் மக்களிடையே விஞ்ஞான மனப்பான்மையைத் தூண்டவேண்டும்- அது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று சொல்லுகிறது.
ஆனால், அய்.ஏ.எஸ்., படித்தவர் ஆட்சித் தலைவராக இருக்கக்கூடிய அரசு அலுவலக வளாகத்திலேயே இப்படி ஆடு வெட்டி, கோழி வெட்டிப் பரிகாரப் பூஜை நடைபெறுகிறது என்றால், அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள இந்த அடிப்படைக் கடமை என்னும் சரத்துக்கு விரோதம் இல்லையா?
அரசு அலுவலர்கள் ஒரு இடத்திலிருந்து மாற்றப்படுவது சாதாரண ஒன்றுதானே! இதற்கும் பரிகாரப் பூஜைக்கும் என்ன சம்பந்தம்?
மருத்துவமனைகளில் பரிகாரப் பூஜைகள் நடத்தப்பட்டால் வியாதிகள் வரவே வராதா? அப்படியே வியாதிகள் வந்தாலும் மருந்துகள், ஊசிகள், அறுவைச் சிகிச்சை இல்லாமலேயே குணமாகி விடுமோ!
தி.மு.க. ஆட்சியில் சமூகச் சீர்திருத்தத் துறை என்ற ஒன்று இருந்தது. அத்தகு கூட்டங்களில் இதுபற்றியெல்லாம் விவாதிக்கப்படும் அ.தி.மு.க. ஆட்சியில் இவற்றையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா?
ண்ணா என்பது வெறும் முத்திரைதானே - மற்றபடி அண்ணாவின் பகுத்தறிவுக் கொள்கைக் கும், இந்தக் கட்சிக்கும், ஆட்சிக்கும் என்ன சம்பந்தம்?
ஆட்சியும் இப்படி - நீதிமன்றமும் கோளாறு. பகுத்தறிவாளர்களுக்குத்தான் வேலை அதிகம்! தீவிரமாக செயல்படுவோம்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...