Sunday, January 29, 2012

பி.ஜே.பி.யின் நப்பாசை!


நாளையே நாடாளுமன்ற தேர்தல் நடந்து, நாளை மறுநாளே பி.ஜே.பி. ஆட்சியைப் பிடிக்க இருப்பது போலவும், இப்பொழுதே பி.ஜே.பி.யில் பிரதமர் யார் என்று பேச ஆரம்பித்து விட்டனர். இந்த நாட்டு ஊடகங்கள் அப்படியொரு மாயையை உருவாக்கி வருகின்றன.
கடந்த தேர்தலில்கூட அத்வானிதான் பிரதமர் என்று கூறி, பதவி ஏற்பு விழா வரைக்கான தடபுடல் திட்டங்களை சட்டைப் பைக்குள் வைத்திருந்தனர்.
நடந்து முடிந்த இரு தேர்தல்களிலுமே இந்திய நாட்டு வாக்காளர்கள் பி.ஜே.பி.யைப் போய் வா என்று விடை கொடுத்து விட்டனர்.
நம் கதை அவ்வளவுதான் என்று கடையைக் கட்டிக் கொண்ட நிலையில், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் சில நடவடிக்கைகள் அவர் களுக்கு மீண்டும் நப்பாசையைக் கொடுத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமலும், விலைவாசியைக் கட்டுப்படுத்தா மலும் அமெரிக்காவின் கண் ஜாடையை பார்த்துப் பார்த்துக் காயை நகர்த்துவது போல நடந்து கொள்கிறார்கள்.
பெரிய பொருளாதார மேதைகள் பிரதமராகவும், திட்டக் குழுவின் துணைத் தலைவராகவும் இருக் கிறார்கள். இவர்களுக்கு அடித்தட்டு மக்களின் பிரச்சினை என்பதைவிட, ஏட்டுச் சுரைக்காய்ப் பொருளாதாரத்தில் மிதந்து கொண்டுள்ளனர்.
சத்தான உணவு கிடைக்காததால் 42 விழுக்காடு குழந்தைகள் எடை குறைவாக பிறப்பது நாட்டுக்கே அவமானம் என்று பிரதமர் பேசுவது எத்தகைய கேலிக்குரியது!
இந்த நிலைக்குக் காரணம் என்ன? இதனைச் சரி செய்ய வேண்டிய நாற்காலியில் வீற்றிருப்பவர், யாரோ அதற்குப் பொறுப்பாளி என்பதுபோலப் பேசுவது வேடிக்கையானது.
இந்திய அளவிலான மத்திய அரசு தீர்க்க வேண் டிய நதி நீர்ப் பிரச்சினை, சமூக நீதிப் பிரச்சினைகளில் யாருக்கோ வந்த விருந்து போல கண்டும் காணாமல் இருப்பதை எந்தப் பட்டியலில் சேர்ப்பது?
லோக்பால் பிரச்சினையைத் தொடக்கத்தில் சரியாகக் கையாளத் தவறிய காரணத்தால் அன்னா ஹசாரே போன்றவர்கள் கோபுரத்தில் ஏறி உட்கார்ந்து கொள்ளும் நிலை. இது தேவைதானா?
லோக்பால் மசோதாவை தன் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்ற துப்பு இல்லாத பிஜேபி ஊழலை ஒழிக்க உன்னதமான - மேலும் அதிகாரம் படைத்த லோக்பால் தேவை என்று தோள் பட்டையை உயர்த்திக் காட்டுகிறது.
லோக்பால் மசோதாவில் பிரதமரைச் சேர்க்கக் கூடாது என்று இவர்கள் ஆட்சியில் இருந்தபோது சொன்னதை சரியான முறையில் இடித்துச் சொல்லி பி.ஜே.பி.யின் முகத் திரையைக் கிழித்துக் காட்டக் கூடவா காங்கிரசுக்குத் திராணி இல்லை?
தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற நிலையில் பி.ஜே.பி. ஆட்டம் போட்டுக் காட்டுகிறது.
அய்க்கிய முற்போக்குக் கூட்டணியோ தன் கூட்டணிக் கட்சியில் உள்ள கட்சிகளைத் தக்க வைத்துக் கொள்வதில் கூடத் தடுமாறிக் கொண்டு இருக்கிறது. கூட்டணியில் உள்ள கட்சிகளைச் சீண்டிப் பார்க்கிறது. மம்தா மாதிரி இருந்தால்தான் காங்கிரஸ் மதிக்கும்போல் தோன்றுகிறது.
எப்படிப்பட்ட சூழ்நிலையிருந்தாலும், இவற்றைப் பயன்படுத்தி பி.ஜே.பி. ஆட்சிக் கட்டிலில் ஏறிட இடம் கொடுத்து விடக் கூடாது. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்மீது அதிருப்திகள் இருக்கலாம். அதற்காக இந்துத்துவா மதவாத ஆட்சியை அதிகாரத்தில் அமர்த்திவிட முடியாதே! கொள்ளிக் கட்டையை எடுத்துத் தலையில் சொறிந்து கொள்வதை யார்தான் விரும்புவார்கள்?
மதவாத திரிசூலத்தை எடுத்துக் கொண்டு திரிபவர்கள் கையில் ஆட்சி போகுமானால் நாளும் மதக் கலவரங்கள்தான் வீதிக்கு வீதிக் காட்சிகளாக பவனி வரும்!
இவர்கள் ஆண்ட குஜராத் ஒன்று போதாதா? அந்த மாநிலத்தின் நாயகர் - வில்லன் நரேந்திரமோடிதான் பிரதமருக்கான முக்கிய வேட்பாளராம்! கிழிந்தது போ என்ற எண்ணம்தான் ஒவ்வொரு வாக்காளர் எண்ணத்திலும் பீறிட்டுக் கிளம்பும்.
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஊழல் என்று சொல்லிக் குற்றம் சுமத்தும் யோக்கியதை பி.ஜே.பி.க்கு அறவே கிடையாது. கருநாடகத்தில் பி.ஜே.பி. ஆட்சியின் ஊழல் கும்பி குடலையே புரட்டிக் கொண்டு இருக்கிறது.
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிமீது இடதுசாரிகளுக்கு அதிருப்தி இருந்தாலும், பி.ஜே.பி.க்கு சாதகமாகப் போய் விடக் கூடாது என்பதில் அவர்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள் என்று நம்புவோமாக!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...