Sunday, January 29, 2012

மீனவர்களுக்கென தனியே பாதுகாப்புப் படை, மத்திய அரசு உருவாக்கிட வேண்டும்


தமிழக மீனவர்களின் உரிமை காத்திட
நிரந்தர தீர்வு  கண்டிட ஒன்றுபட்டு நிற்போம்!


சென்னை, ஜன.29- கடலோரக் காவல்படையில் மீனவர் பாதுகாப்பு படைப் பிரிவு ஒன்றை தனியே 24 மணி நேரமும் கண்காணிக்கும்படியாக மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழக மீனவர்களின் உரிமைகளை காத்திட நிரந்தர தீர்வு கண்டிட ஒன்றுபட்டு தீர்வு காண்போம் என்று திராவிடர் கழகத் தலைவர்  கி.வீரமணி அவர்கள் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

அன்றாடம் ஆபத்து
தமிழ்நாட்டு மீனவ சகோதரர்களின் வாழ்வாதாரம் மீன்பிடித் தொழிலிலேதான் உள்ளது. அத்தொழிலைத் தவிர அவர்களுக்கு வேறு தொழில் ஏதும் தெரியவே தெரியாது. தங்கள் வாழ்க்கையை அன்றாடம் ஆபத்துக்குரியதாகவும், இயற்கையின் கொடுமைகளால் பாதிக்கப்படக் கூடியதாகவும் இருந்தாலும் துணிந்து கடல் மேல் வாழ்கிறார்கள் அவர்கள்!
டில்லி அரசின் பல்லவி!
அத்தகைய வீரர்களுக்கு இலங்கை அரசு, நாளொருமேனியும் பொழுதொருவண்ணமும் கொடுக்கும் தொல்லைகள் எழுதி முடியாத ஒன்று!
ஏடுகளை எடுத்தால், ஊடகங்களைப் பார்த்தால், தமிழ்நாட்டு மீனவர்கள், இலங்கைக் கடற்படையால் கைது, சிங்களவர்கள் தாக்குதல், சிறைப்பிடித்தல் - இப்படித்தான் அன்றாட அவலங்கள்.
மத்தியில் உள்ள டில்லி அரசோ கவலைப்படுகிறோம்! (We are Concerned) என்ற பல்லவியையே மாறி மாறிப் பாடிக் கொண்டிருக்கிறார்கள்!
தமிழக மீனவர்களுக்கு தொல்லையோ தொடர் கதை
நமது வெளியுறவு அதிகாரிகள், வெளியுறவுத்துறை அமைச்சர், இலங்கை அதிபர் ராஜபக்சே மற்றும் அவரது ஆட்சி சகாக்களைச் சந்தித்துப் பேசி உறுதிமொழி பெற்றுத் திரும்புகிறார்கள்!
ஆனால், தமிழ்நாட்டு மீனவர்களுக்கு வரும் தொல்லைகளோ தொடர்கதை!
இதற்கு மத்திய அரசு ஏன் ஒரு நிரந்தரத் தீர்வைக் காணக் கூடாது?
தமிழ்நாட்டு முதல் அமைச்சர் அவர்களும், எதிர்க்கட்சித் தலைவர்களும்அந்தரங்க சுத்தியோடு இந்த நிலையை மாற்றிட எடுக்கும் அத்தனை முயற்சிகளும், பயன் தரும் அளவில் இல்லாததற்கு முக்கிய காரணங்களாவன. கச்சத் தீவினை இந்திய அரசு இலங்கை அரசுக்குத் தாரை வார்த்துக் கொடுத்து, அங்கு நமது மீனவர்கள் மீன்பிடி உரிமையையும் விட்டுக் கொடுத்து, யாருக்கும் தெரியாத ஒரு ஒப்பந்தம் போட்ட கொடுமைதான்.
இதனை மீட்கவும், தமிழ்நாட்டு மீனவர்களுக்குரிய தொழில் அடிப்படை உரிமையைக் காப்பாற்ற போதிய ஏற்பாடுகளையும் அசட்டையின்றி செய்ய மத்திய அரசு முன் வருதல் வேண்டும்.
திராவிடர் கழகம் போட்ட ரிட் மனு
கச்சத் தீவை இலங்கைக்குத் தாரை வார்த்து தந்தது சட்டப்படி செல்லாது என்ற சட்டப் பிரச்சனை அடிப்படையில் திராவிடர் கழகம் போட்ட ரிட் மனு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்னமும் நிலுவையில் உள்ளது.
நமது முதல் அமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள கச்சத்தீவு வழக்கும் நிலுவையில் - முழுமையான விசாரணைக்கு வராமல் - உள்ளது.
சட்டப்படி, மீனவர்களுக்குப் போதிய பாதுகாப்புத் தர வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை - அமர்வு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பும் சில சில நேரங்களில்தான் இந்தியக் கடலோரப் பாதுகாப்புப் படையினரால் செயல்படுத்தப்படுகிறது!
மீனவர் பாதுகாப்பு படைப்பிரிவு
இது மேலும் பலப்படுத்தப்பட்டு கடலோரக்  காவல் படையில் மீனவர் பாதுகாப்புப் படைப் பிரிவு என்றே ஒன்று தனியே அமைத்து நாளும் 24 மணி நேரமும் - ரோந்திலேயே இருக்கும்படி கண்காணிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் மத்திய அரசு.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் - அமைப்புகளும் - முதல் அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் இணைந்து ஒன்றுபட்டு ஒரு அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி, அதில் குறுக்குசால் ஓட்டப்படாத ஒருமித்த தீர்மானம் - முடிவு ஏற்பட வேண்டும்.
அனைவரும் ஒரே குரலில்
அனைவரும் ஒரே குரலில், ஒரே அணியில், மனிதாபிமானமற்ற முறையில் மீனவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் - திட்டமிட்டே இலங்கையில் சிறைப்பிடித்து வைத்தல், மீன் வலைகளைப் பறிமுதல் செய்வது, படகுகளை இழுத்துச் செல்லுதல் போன்றவைகளுக்கு தடுப்பு முறைகளை உருவாக்க நாம், மத்திய அரசை வற்புறுத்திட வேண்டும்.
ஒன்றுபட்டால் உண்டு தீர்வு. இன்றேல் இந்த அவலங்கள் நீங்காதவைகளாகி விடக் கூடும்!
கி. வீரமணி 
தலைவர்,
திராவிடர் கழகம்


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...