Saturday, January 21, 2012

அறிவைத் தரக்கூடிய புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும்


உலக அறிவை, உருப்படியான காரியத்துக்குப் பயன்படும் அறிவைத் தரக்கூடிய புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும். பழைய முறைகளையும் எண்ணங்களையும் மேலும் ஊட்டக்கூடிய ஏடுகளைச் சேகரித்து அதற்குப் புத்தகச்சாலையென்று பெயரிடுவது; குருடர்களை கூட்டி வைத்து, அவர்கள் உள்ள இடத்துக்கு, வழிகாட்டுவோர் வாழும் இடம் என்று பெயரிடுவது போன்ற கோமாளி கூத்தாக முடியும்.
ஒவ்வோர் வீட்டிலும், வசதி கிடைத்ததும், வசதி ஏற்படுத்திக் கொண்டதும் அமைக்க வேண்டிய புத்தகச் சாலையில், நாட்டு வரலாறு, உலக நாடுகளின் நிலையைக் குறிக்கும் நூல்கள் இவை முதலிடம் பெற வேண்டும். பொதுவாகவே மக்களின் அறிவுக்கு தெளிவும், ஆண்மைக்கு உரமும், ஒழுக்கத்துக்கு வலிவும் தரத்தக்க நூல்கள் இருக்க வேண்டுமெயொழிய வாழும் இடத்தை வகையற்றது என்று கூறி வான வீதிக்கு வழிகாட்டும் நூல்களும், மாயா வாதத்தையும், மனமரூட்சியையும் தரும் ஏடுகளும் தன்னம்பிக்கையைக் கெடுத்து, விதியை அதிகமாக வலியுறுத்திப் பெண்களை இழித்தும் பழித்தும் பேசிடும் நூல்களும் இருத்தலாகாது.
ஞ்சாங்கம் அல்ல, புத்தகச் சாலையில் இருக்க வேண்டியது; அட்லாஸ் - உலகப்படம் இருக்க வேண்டும். இந்த அடிப்படைப் பிரச்சினையிலே நேர்மையான முறையையும், நெஞ்சுரத்தையும் காட்டியாக வேண்டும். அப்போதுதான் வீட்டிற்கோர் புத்தகச்சாலை அமைப்பது என்பது அறிவுத் தெளிவுக்கு வழி செய்யும் - மனவளத்தை உண்டாக்கும்; நாட்டை வழி வைக்கும். புலியை அழைத்து பூமாலைத் தொடுக்கச் சொல்ல முடியாது. சேற்றிலே சந்தனவாடை கிடைக்குமென்று எண்ணக் கூடாது.
நமது பூகோள அறிவு, பதினான்கு லோகத்தைக் காட்டிற்கு. அந்த நாட்களில், நமது மார்க்க அறிவு நரபலியைக் கூடத் தேவை என்று கூறிற்று. அந்த நாட்களில் நமது சரித்திர அறிவு, பதினாயிரம் ஆண்டு ஒரு மன்னன் ஆண்டதாகக் கூறி வைத்தது. நமது பெண் உரிமையைப் பற்றிய அறிவு, காமக்கிழத்தி வீட்டுக்கு நாயகனைக் கூடையில் வைத்துத் தூக்கிச் சென்ற பத்தினியைப் பற்றி அறிவித்தது. நமது விஞ்ஞான அறிவு, நெருப்பிலே ஆறும், அதன் மீது ரோமத்தால் பாலமும் இருப்பதாக அறிவித்தது.
அப்படிப்பட்ட எண்ணங்களுக்கு ஆதாரமாக இருந்த ஏடுகளை இந்த நாள்களிலே நாம் வீட்டில் புத்தகச் சாலையில் சேர்ப்பது, நாட்டு நலனுக்கு நிச்சயமாகக் கேடு செய்யும். பூகோள, சரித, ஏடுகள் இருக்க வேண்டும் - நமக்கு உண்மை உலகைக் காட்ட, நமக்கு ஒழுக்கத்தையும் வாழ்வுக்கான வழிகளையும் காட்ட, வீட்டிற்கோர், திருக்குறள் கட்டாயமாக இருக்க வேண்டும்.
-அறிஞர் அண்ணா

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...