Friday, January 20, 2012

நம்ப முடியுமா?


இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா நான்கு நாள் சுற்றுப் பயணம் ஒன்றை இலங்கைத் தீவில் மேற்கொண்டுள்ளார். இத்தனை நாட்கள் வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கையில் மேற்கொண்டது இதுவே முதல் தடவையாகும்.

இதற்கு முன்பு சென்றபோதெல்லாம் ராஜபக்சேவின் விருந்துபசாரத்தில் பங்கு கொண்டு திரும்புவர். இந்தியா வின் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த நிருபமா ராவ், ஓய்வு பெற்றபோது, சிறப்பாக ராஜபக்சேவின் விருந்தினராகச் சென்று, பெரிய அளவில் உபசரிக்கப் பட்டார். இதன் பொருள் பெரிய அளவுக்கு ஈழத் தமிழர் களுக்குத் துரோகம்  என்பதுதான்.

லங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட தலைவர் களுடன் நடத்திய பேச்சு வார்த்தை திருப்தி அளிக் கிறது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாகாணங்களில் அவர்களுக்கு அதிகாரப் பகிர்வளிக்க வகை செய்யும் 13ஆவது சட்ட திருத்த மசோதாவை வெளிப்படை யான முறையில் இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.

இந்த விடயத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப் படுவதை நாங்கள் தொடர்ந்து கவனிப்போம்!! என்று செய்தியாளர்களிடம் எஸ்.எம். கிருஷ்ணா கூறியுள்ளார்.

இலங்கையின் எதிர்க்கட்சியான அய்க்கிய தேசியக் கட்சி - 13ஆவது சட்ட திருத்த மசோதாவை நடைமுறைப் படுத்த மாட்டார் அதிபர் ராஜபக்சே என்று கருத்துத் தெரிவித்துள்ளது.

இப்படி ஒரு கருத்து சொல்லப்பட்டதைக் குறித்தும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கருத்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து இலங்கை அதிபரிடம் மீண்டும் பேசப்பட்டது என்றும், உறுதியாகச் செயல்படுத்து வோம் என்று இலங்கை அதிபர் கூறினார் என்றும் கூறியுள்ளார் எஸ்.எம்.கிருஷ்ணா.

ராஜபக்சே கொடுக்கும் உறுதிமொழிக்கும் நடப்புக்கும் சம்பந்தமில்லாதவர் என்று நன்றாகவே தெரியும். அதைத் தான் இலங்கை எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

இலங்கையில் தமிழ் மொழிக்குரிய இடம் அளிக்கப்பட வில்லை. ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் கூறப்பட்டு இருந்தும் தமிழையும் ஆட்சி மொழிகளுள் ஒன்றாக அறிவிக்கப்பட்டதா?

இப்பொழுது என்ன நிலை? தமிழ்ப் பள்ளிகளில்கூட சிங்கள ஆசிரியர்கள் நியமனம்.

தமிழர்கள் அதிகம் வாழும் மாகாணங்களில் அதிகாரப் பகிர்வு என்று கூறியுள்ளாரே - அதன் உண்மைத் தன்மை என்ன?

தமிழர் பகுதிகளில் சிங்களவர்களை திட்டமிட்ட வகையில் குடியேற்றியதே இலங்கை அரசு தானே. தமிழர்கள் பெரும் பகுதி வாழும் பகுதி என்பது இப்பொழுது எங்கே இருக்கிறது?

தமிழர்களின் ஊர்ப் பெயர்கள், தெருப் பெயர்கள் வரை சிங்களமயமாக்கப்பட்ட நிலையில் தமிழர்கள், தமிழ்ப் பகுதிகள், தமிழ்மொழி என்பனவெல்லாம் திட்டமிட்ட வகையில் சிதைக்கப்பட்டு விட்டதே!

சிங்கள அரசு தான் இப்படியென்றால் - இந்தப் பிரச்சினையில்  இந்திய அரசின் எந்த நடவடிக்கையும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவை என்று நினைப்பதற்கு இடம் இல்லை. காரணம் கடந்த காலக் கட்டங்களில் இந்திய அரசின் நடவடிக்கைகள்தான்.

பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இந்திய இராணுவ உதவியும் முக்கிய காரணம் என்று ஆன நிலையில், இந்திய அரசின் செயல்பாடுகளில் நம்பிக்கை வருவதற்கு மனம் இடம் தருவதில்லையே!

படுகொலைகள் நடந்து முடிந்த நிலையில் படுகொலைக்குக் காரணமான இலங்கை அதிபர் ராஜபக்சே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும் - அவர்மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற ஒரு நிலை உருவான போது இந்திய அரசு எப்படி நடந்து கொண்டது? ராஜபக்சேவைக் காப்பாற்றும் வகையில் தானே இந்தியாவின் செயல்பாடுகள் இருந்து வந்தன - இருந்தும் வருகின்றன.
இதில் என்ன வேடிக்கை என்றால் இலங்கையில் ஆழமாக வேரூன்றிவிட்ட - சீனாவை நினைத்தே இந்தியா காய்களை நகர்த்துவதாகக் கூறப்படுகிறது.

ஆனால் ராஜபக்சேவின் மிகக் கெட்டிக்காரத்தனம் என்னவென்றால் எதிரும் புதிருமான சீனாவையும், இந்தியாவையும் பயன்படுத்திக் கொண்டு ஈழத் தமிழர்களை அழித்தது என்பதுதான். இந்த வகையில் இலங்கையிடம் இந்தியா தோல்வி கண்டதாகவே கருதப்பட வேண்டும்.

ஈழத் தமிழர் பிரச்சினை மட்டுமல்ல; தமிழக மீனவர்கள் விடயத்திலும்கூட இந்தியா பாம்புக்குத் தலையும் மீனுக்கு வாலுமாகத் தானே நடந்து கொண்டு வருகிறது.

ஈழத் தமிழர்களும், உலகத் தமிழர்களும் இந்தியாவின் மீது நன்னம்பிக்கை கொள்ளும் வகையில் இந்தியா சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட முறையில் நடக்க வேண் டியது அதன் முதற்கடமையாகும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...