Sunday, December 18, 2011

பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்று முதன்முதலாகக் கூறியவர் யார்?


கோபர்நிகசுக்கு  1,800 ஆண்டு களுக்கு முன்பு கி.மு.310 இல் பிறந்த சாமோசைச்  சேர்ந்த அரிஸ்டார்சுஸ்  (Aristarchus of Samos) என்பவர் தான் பூமி சூரியனைச் சுற்றி வருவதாக முதன் முதலாகக் கூறியவர் ஆவார்.
பூமியும் மற்ற கோள்களும் சூரி யனைச் சுற்றி வருகின்றன என்பதைக் கூறியது மட்டுமன்றி,  பூமி, சந்திரன், சூரியன் ஆகியற்றின் அளவையும் ஒன்றிலிருந்து மற்றொன்று இருக்கும் தூரத்தையும் கணக்கிட்டு அரிஸ் டார்சுஸ்   கூறினார். அத்துடன் மேல் உலகம் என்பது ஏதோ கோள்களின் உலகம் அல்ல என்றும், பிரபஞ்சம் எல்லையற்ற ஒன்றாகும்  என்றும் அவர் கூறினார்.
கணித இயலாளராகவும், வான இயலாளராகவும் அவரது காலத்தில் மிகுந்த புகழ் பெற்றவராக விளங்கியவர் அரிஸ்டார்சுஸ்.   அலக்சாண்டிரியாவில் உள்ள லைசீயமில் (Lyceum at Alexandria) அவர் பயின்றார் என்பதையும், அறிவியலின் அனைத்துத் துறைகளிலும் மிகுந்த அறிவு படைத்தவர் இவர் என்று ரோம் நாட்டு கட்டடக்கலை வல்லுநர் விட்ருவியசால் (Vitruvius) குறிப்பிடப் பட்டுள்ளதையும்  தவிர அவரைப் பற்றி நாம் அதிகமாக அறிந்திருக்கவில்லை. அரை உருண்டை வடிவிலான சூரிய கடிகாரம் ஒன்றையும் அவர் கண்டுபிடித்திருந்தார்.
அவரது ஒரே ஒரு படைப்பு மட்டும் இன்றளவும் எஞ்சி நிற்கின்றது. சந்திரன், சூரியன் பற்றிய அளவுகளும், அவற்றின் தூரமும் (On the Sizes and Distances of the Sun and Moon)என்ற நூல்தான் அது. ஆனால், அதில்  சூரியனை மற்ற கோள்கள் மய்யமாகக் கொண்டிருக்கின்றன என்ற அவரது கோட்பாடு குறிப்பிடப்படாதது இழப்புக் கேடேயாகும். இதற்கான காரணத்தை நம்மால் அறிய முடியவில்லை. ஆனால், ஆர்க்கிமெடீஸ் தனது நூல்களில் அரிஸ்டார்சுஸ்  பற்றி ஒரே ஒரு இடத்தில் மட்டும் குறிப்பிட்டுள்ளார். அதுவும் அவரது கோட்பாடுகளை மறுத்துதான் குறிப்பிட்டுள்ளார்.
வானில் உள்ள கோள்களின் சுழற்சி பற்றி (on the Revolution of the Heavenly Spheres)  என்ற தனது நூலின் கையெழுத்துப் பிரதியில் கோபர்நிகஸ் அரிஸ்டார்சுக்கு இப்பெருமையை அளித்துள்ளார். என்றாலும், அந்த நூல் 1514 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டபோது, இந்த கிரேக்க ஞானியான அரிஸ்டார்சுஸ் பற்றிய குறிப்புகள் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டன.  இந்த நூலின் புகழை ஒரு வேளை அது குறைத்துவிடுமோ என்று பதிப்பாளர் அச்சம் கொண்டிருந்ததன் காரணமாக அவை நீக்கப்பட்டிருக்கலாம் என்று கருத இடமிருக்கிறது.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...