சபாஷ், சரியான போட்டி!
விடுதலைசந்தா சேர்க்கும் இயக்கம் களை கட்டி நிற்கிறது. மாவட்டங்கள் தோறும் மேற்கொள்ளப்பட்ட சுற்றுப் பயணங்களில், இந்தப் பிரச்சினையை எந்த அளவுக்கு முன்னெடுத்து முன்னேராகச் செல் கின்றனர் என்பதை அறிய முடிந்தது.
மூடத்தனங்களும், பிற்போக்கு அரசியலும், சீரழிவுகளும் கைகோத்துச் செல்லும் ஒரு கால கட்டத்தில் விடுதலையின் தேவை அவசியம் என்று உணர்ந்த நம் கருஞ் சட்டைத் தோழர்கள் சமுதாயப் பொறுப்புணர்ச்சியுடன் களத்தில் இறங்கி விட்டனர்.
விடுதலை ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் விடுதலை ஏட்டின் ஆசிரியராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றியது 50 ஆண்டுகள் என்பதை ஒரு வரலாற்றுக் குறிப்பாகக் கொண்டு, அதனைப் பயனுள்ள வகையில் மக்களின் அறி யாமையைப் போக்கும் பெரும் பணியாக மாற்றும் பிரச்சார நோக்கோடு இந்த முடிவு மேற்கொள்ளப் பட்டுள்ளது.
50 ஆயிரம் விடுதலை சந்தா என்பது தமிழர் களின் மக்கள் தொகையில் ஒரு சதவிகிதம்கூடக் கிடையாது. மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் கூறியதுபோல தமிழன் இல்லம் என்பதற்கு அடையாளம் விடுதலை, அங்கு இடம் பெறுவதுதான் உண்மை என்றாலும் முதற்கட்டமாக 50 ஆயிரம் என்கிற இலக்கினை எட்டுவோம்!
இதற்காக ஒவ்வொரு தமிழன் வீட்டுக் கதவையும் தட்டுவோம். பார்ப்பனர் அல்லாத ஒவ்வொரு தமிழன் வீட்டுக்கும், அலுவலகத்துக்கும் செல்லுவோம் - அரசுப் பணியாளர்களை அணுகுவோம்.
இரகசியக் குறிப்பேடு இரகசியக் குறிப்பேடு என்று ஒன்று இருந்ததே தெரியுமா என்று அரசு அலுவலகங்களில் பணியாற்றும் நம் தமிழர்களிடம் கேட்போம்.
பதவி உயர்வு பெற வேண்டும் என்றால் அந்த இரகசியக் குறிப்பேட்டில் (Confidential File) மேலதிகாரிகள் எழுதுவதைப் பொறுத்ததுதான். அப்பொழுதெல்லாம் மேலதிகாரிகளாகப் பெரும்பாலும் பார்ப்பனர்களே இருந்தனர். அப்படியென்றால் யாருக்குப் பதவி உயர்வு கிடைக்கும்? பார்ப்பனர்களுக்குத் தானே கிடைக்கும்?
அந்த இரகசியக் குறிப்பேடு முறையை நீக்குக நீக்குக! என்று விடுதலை எத்தனை எத்தனைத் தலையங்கங்களை தீட்டியிருக்கும்?
மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் முதல் அமைச்சர் ஆனபோதுதானே விடுதலையின் நீண்ட நாள் குரலுக்கு விடிவு கிடைத்தது!
அப்படி நீக்கியதற்காக அரசு ஊழியர்கள் சங்கத்தினர் (என்.ஜி.ஜி.ஓ. சங்கம்) பாராட்டு விழாவையே நடத்தினார்களே (10.4.1972) முதல் அமைச்சர் கலைஞர்அவர்கள் அவ்விழாவில் பங்கு கொண்டதோடு, தந்தை பெரியார் அவர்களை மறக்காமல் அழைத்து நன்றி தெரிவித்துக் கொண்டார்களே!
ஒவ்வொரு கட்டத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களின் உத்தியோகங்களுக்கான படிக்கட்டுகளை அமைத்துக் கொடுத்த சிற்பியல்லவா விடுதலை?
கல்வி நீரோடையில் ஆரிய முதலைகள் என்பது விடுதலையில் வெளிவரும் புகழ் பூத்த தலைப்பாகும். அந்த முதலைகளை விரட்டி, நம் மக்களை நீராடச் செய்ததில் விடுதலை சிப்பாயாக அல்லவா உழைத் திருக்கிறது!
இலட்சக்கணக்கான பார்ப்பனர் அல்லாத இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக அலைந்து திரிந்து கொண்டிருக்கும் கால கட்டத்தில், அரசுப் பணியாளர்களின் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்த வேண்டும் என்று குரல் எழுப்பும் போதெல்லாம், அதன் மென்னியைப் பிடித்து இறுக்கும் இரும்புக்கரத்துக்குச் சொந்தமானது விடுதலையல்லவா!
விடுதலை சந்தா சேர்ப்புப் பணியில் தமிழின அரசுப் பணியாளர்களைச் சந்திப்பதற்கு முக்கியத் துவம் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எடுத்த எடுப்பிலேயே குன்னூர் மருத்துவர் இரா. கவுதமன் அவர்கள் நூறு விடுதலைக்கான ஆண்டு சந்தா தொகையாக முடி திருத்தகம், சலவையகம், செருப்புத் தைக்கும் கடைகள், தேநீர்க் கடைகளுக்கு விநியோகம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார்.
96 வயதில் அடி எடுத்து வைக்கும் திருவாரூர் மண்டல திராவிடர் கழகத் தலைவர் மானமிகு எஸ்.எஸ். மணியம் அவர்கள் 96 ஆயிரம் ரூபாய் அளித்து சந்தாவின் எண்ணிக்கையை விரிவுபடுத்தி இருக்கிறார்.
தென் மாவட்டங்களின் பிரச்சாரக் குழுத் தலைவர் மானமிகு தே. எடிசன்ராஜா அவர்களின் ஆர்வம் கனிந்த முயற்சியால் ஆயுள் மற்றும் ஆண்டு சந்தாக்களுக்கான தொகையாக விடுதலை ஆசிரியர் அவர்களிடம் மூன்று லட்சத்து 56 ஆயிரம் ரூபாயை அளித்து (30.10.2011) ஒரு பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தி, இதுவரை மதுரை முதல் இடத்தில் நிற்கும்படியான நிலையை ஏற்படுத்தி விட்டார்.
சபாஷ் சரியான போட்டி! இந்த ஆரோக்கியமான, அறிவார்ந்த போட்டிகள் தொடரட்டும்! தொடரட்டும்!!
No comments:
Post a Comment