Monday, November 21, 2011

விலை உயர்வு : அதிமுக அரசு மக்களுக்குத் தரும் பரிசு இதுதானா? - திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி அவர்கள் கேள்வி


அதிமுகவிற்கு வாக்களித்த மக்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா தரும் பரிசு இதுதானா?



விலை ஏற்ற வேண்டுமானால் மது, புகையிலை, சிகரெட் பொருள்களின் விலையை ஏற்றியிருக்கலாமே! என்று திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பினார். அவரது அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் கடந்த ஆறு மாதங்களாக அ.தி.மு.க. ஆட்சி நடைபெறுகிறது. 

சென்ற மே மாதத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது இன்றைய முதல்வரும் அன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள், தான் ஆட்சிக்கு வந்தால், வானத்தில் பறக்கும் அத்தியாவசியப் பொருள்களின் விலைகளை மிகவும் குறைத்து, ஏழை, எளிய மக்களுக்கும் நடுத்தர மக்களுக்கும் ஏற்றமிகு ஆட்சியாக தனது ஆட்சி நடக்கும் என்றெல்லாம் வாக்குறுதிகளை வாரி வாரி வழங்கினார். 

மின்சார வெட்டு அடுத்த சில காலத்திற்குள் நீங்கி விடும் என்றார்.

விளைவு - கொள்ளிக் கட்டையை எடுத்து...

அப்பாவி வாக்காளர்கள் அதனை நம்பினர். சில பகுதி வாக்காளர்களுக்கு முந்தைய ஆட்சியின்மீது கோபம்; இன்னும் சில பகுதியினருக்கு மாற்றம்தான் தேவை என்ற ஆசை. விளைவு  கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையைச் சொறிந்து கொண்டவர்களாகி, வெயில் கொடுமை என்று கருதி நெருப்பில் குதித்தவர்களாகி இன்று அவதியுறுகின்றனர்!

அழுது கண்ணீர் விடும் அவலத்திற்கு ஆளாகியுள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை காத்திருந்து இந்த வரிகளை மக்கள்மீது சுமத்தியுள்ளது.

பெட்ரோலுக்கு கண்டித்தவராயிற்றே

மத்திய அரசு அண்மையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 2.10 காசு ஏற்றியமைக்காக எவ்வளவு கடுமையாக அறிக்கை விட்டார் நமது முதல் அமைச்சர்? நாமும் அந்த விலை ஏற்றத்தைக் கண்டித்தோம். பெட்ரோலைப் பயன்படுத்துகிறவர்கள் வாக்காளர்களில் ஒரு பகுதிதான்; ஆனால் அன்றாட வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பால், பேருந்து கட்டணங்கள் மின்சாரக் கட்டணங்கள் தமிழக அரசால் பல மடங்கு ஏற்றப்பட்டு, நடைமுறைக்கு அமலில் உடனடியாக வரும் என்று அறிவிக்கப்பட்டு விட்டதே.

வரலாறு காணாத அளவுக்கு ஏற்றம்

வரலாறு காணாத அளவுக்கு75 விழுக்காடு பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டு விட்டது!

இதை அடிப்படையாக வைத்து, பல ஊர்களில் ஓடும் தனியார் பேருந்துகளுக்கும் கட்டண உயர்வு வந்துவிட்டது. அ.தி.மு.க.  ஆட்சி வரும்போதெல்லாம் தனியார் பேருந்துகள் மகிழ்ச்சியுடன் வரவேற்று இதுபோன்ற கட்டணங்களை உயர்த்துவது வழமையான நிகழ்வு ஆகும்.

மின்சார கட்டண உயர்வுக்கு..

மின்சாரக் கட்டணத்தை உயர்த்துமாறு மின்வாரியத்திற்குப் பரிந்துரை செய்து அனுமதியளித்துள்ளனர்.

பால், பஸ், மின்சாரம் - இவைகளைப் பயன்படுத்துவோர் அம்பானிகளோ, கிருபானிகளோ, டாடா, பிர்லாக்களோ, ஆலை முதலாளிகளோ, பெரும் மிராசுதாரர்களோ அல்ல. எல்லாம் இந்த ஆட்சிக்கு வாக்களித்த ஏழை, எளிய மக்கள்தான்!

இந்த அரசு தரும் பரிசு இதுதானா?

வாக்களித்தவர்களுக்கு ஆறு மாதத்திற்குள் இந்த அரசு தரும் பரிசு இதுதானா? - இது நம்முடைய கேள்வி அல்ல - மெஜாரிட்டி ஆட்சி என்று மார்தட்டும் முதல் அமைச்சரை அவரது ஆட்சியை நோக்கி மக்கள் எழும்பி குமுறும் குரல்கள் ஆகும்!

ஏற்கெனவே ரூ.4000 கோடிக்கு வரி போட்டவர்

பட்ஜெட் என்ற வரவு செலவு திட்டத்தை சட்டமன்றத்தில் கொண்டு வருவதற்கு முன்பாகவே 4000 கோடி ரூபாய்களுக்கான வரிகள் போடப்பட்டதும் இவ்வாட்சியின் சாதனைகளில் ஒன்று!

பத்திரப் பதிவுக்கான கட்டணம் விரைவில் அதிகரிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. 

இதுவும் ஏழை - எளிய நடுத்தர மக்களை மிகவும் பாதிக்கும்! தனது ஆளுமைத் திறமையினால் நல்ல பொருளாதார ஆலோசகர்களின் கருத்தை அறிந்து திட்டமிட்டு செயல்பட்டால் புது வரிகள் போடாமலேயே, விலைவாசி ஏற்றமில்லாமலேயே ஆட்சியை 5 ஆண்டுகளுக்கு நடத்த முடியுமே! பால் விலை, பஸ் கட்டணம், மின்சார கட்டணம் உயர்ந்துள்ளதே, அதற்குப் பதிலாக டாஸ்மாக்கில் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் பெருகும் குடிப்பொருள்களான மது சரக்குகளுக்கு விலையேற்றம் செய்யலாமே, அதன் மூலம் குடிக்காதவர்கள் எண்ணிக்கை ஓரளவு குறைந்தால் ஒட்டுப் போட்ட மகளிர் வாக்காளர்கள் இந்த ஆட்சியை வாழ்த்துவார்களே,  வருமானம் தேவை என்றால் சிகரெட், புகையிலை ஆகியவற்றின் விலையை உயர்த்தி அதன் மூலம் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளலாமே ஏனோ அப்படிச் செய்யவில்லை? அரசின் செலவுகளைக் கட்டுப்படுத்த சிக்கனக் கோடரியைப் பயன்படுத்தலாமே!

ஏற்கெனவே இருக்கும் கட்டடங்களை சட்டமன்றம் போன்றவைகளை, அண்ணா நூற்றாண்டு நூலகம் போன்றவைகளைப் பயன்படுத்தாமல் மாற்று கட்டடங்கள் ஏற்பாடுகள் செய்வது என்றால் அவை தேவையற்ற கூடுதல் செலவினங்களில் கோடிகளில் ஏற்படுமா - இல்லையா?

அந்தோ வேதனை! வேதனை!!

கலைஞர் - திமுக ஆட்சியில் செய்யப்பட்டதா? தமிழ் இன, மொழி உணர்வுக்கான திராவிட மறுமலர்ச்சி ஏற்பாடுகளா? இவைகளையெல்லாம் ரத்து செய்வேன், செயல்படாமல் தடுப்பேன், கல்வியில் சமச்சீர் போன்றவைகளை அதனை வரவிடாமல் ஒழிப்போம் என்பதா இவ்வாட்சியின் சாதனைகளாக நாளும் மலருவது! அந்தோ வேதனை! வேதனை!!

செம்மொழி நூலகம், செம்மொழிப் பூங்கா, அண்ணா திமுகவுக்கு விரோதம் என்பது போல நடந்து கொள்ளுவது எவ்வகையில் அண்ணா பெயரைக் கட்சி, கொடியில் கொண்டுள்ள ஒரு கட்சிக்கு நியாயம்?

பெரியார் - அண்ணா கொள்கைக்கு எதிரான செயல்பாடுகள்

ஒரு பக்கம் பெரியார், அண்ணா பெயர்கள், மறுபுறம் அவர்களது கொள்கை, லட்சியங்களுக்கு நேர் எதிரிடையான செயல்பாடுகள் அடுக்கடுக்காக. இவைகளுக்கெல்லாம் உச்சக்கட்டமாக 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை வேலை இழக்கச் செய்து நடுத் தெருவில் புலம்பச் செய்துள்ளது மனிதாபிமான மற்ற செயல் அல்ல; ஒவ்வொருவரின் குடும்பமும் குறைந்தது 5 பேர்களாவது இருக்கும் என்றால் 13,000 X  5 = 65000 சுமார் ஒரு லட்சம் பேர்களை வறுமையால் வதைக்கலாமா?

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி

இந்தஅதிர்ச்சிக்கு மேலும் மத்தியில் அதிர்ச்சி தருவது போல் இப்படி வாக்காளர்களின் அன்றாட வாழ்க்கையில் விளையாடலாமா?

ஓட்டுப் போட்டதற்கு இதுதான் பரிசா? மெஜாரிட்டி அதிமுக அரசு, இதற்கெல்லாம் காரணமாக மத்திய அரசையும், மாநிலத்தில் முன்பு நடந்த தி.மு.க. ஆட்சியையும் குறைகூறுவது இன்னும் கொடுமை!

மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே. வாசன் ரூ.23,636 கோடி மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளது. இது 2010-2011ஆம் ஆண்டைக் காட்டிலும் ரூ.3,467 கோடி அதிகம். எனவே, மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று, மத்திய அரசுமீது பழி போடுவதில் எந்தவித நியாயமும் இல்லை என்று தெரிவித்துள்ளாரே.

மத்திய அரசுடன் வாதாடி, போராடி, மேலும் நிதியைப் பெற இவ்வரசு முன் வருமானால் நாமும் அதற்குத் துணை நிற்போம்!

ஆனால் முந்தைய திமுக ஆட்சிமீது எதற்கெடுத்தாலும் பழி போடுவது பொருந்தாத காரணம்.

ஒரே கேள்வி - என்ன பதில் கூறுவீர்!

ஒரே வாக்கியத்தில் அதற்கு தமிழ்நாட்டு மக்கள் பதில் அளிப்பார்கள்; அவ்வாதம் உண்மையாக இருப்பதாகவே வாதத்திற்கு வைத்துக் கொண்டால்கூட அதற்காகத்தானே அவர்களை மாற்றி எதிர்க் கட்சியில் உட்கார வைத்து, உங்களுக்கு மெஜாரிட்டி தந்து ஆட்சியில் அமர வைத்தோம் என்று கேட்டால் என்ன பதில் கூறும் அ.தி.மு.க.?

ஆக்க ரீதியான செயல்களைச் செய்வதில் கவனஞ்செலுத்தி, முந்தைய ஆட்சி செய்தவர்கள் மீது கை வைத்து நீதிமன்றங்களின் கண்டனங்களுக்கும், தீர்ப்புக்கும் ஆளாகாமல் வரும் நான்கரை ஆண்டு கால ஆட்சியை - மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடாமல் - மக்கள் நல ஆட்சியாக நடத்த முன் வரட்டும். தோன்றியுள்ள எதிர்ப்புகளை அலட்சியப்படுத்தாமல் மறுபரிசீலனை செய்யட்டும்! 

கி.வீரமணி
தலைவர் 
திராவிடர் கழகம்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...