Monday, November 7, 2011

நுழைவுத் தேர்வு அறிவிப்பு!


நுழைவுத் தேர்வு அறிவிப்பு!


2013-ஆம் ஆண்டு மே 13-இல் அகில இந்திய அளவில் எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இத்தகைய நுழைவுத் தேர்வு கூடாது என்று தி.மு.க. ஆட்சிக் காலத்திலேயே தெளிவாக அறிவிக்கப்பட்டு விட்டது. உச்சநீதிமன்றம் வரை அதனை எதிர்த்துச் சென்றவர்கள் தோல்வியைத்தான் சுமந்தார்கள்.

இந்தியா முழுமையும் 35,000 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். வகுப்பில் சேர்க்கப்படுகின்றனர். 11 ஆயிரம் மருத்துவ முதுநிலைப் படிப்புக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 300 மருத்துவக் கல்லூரிகள் இந்தியா முழுமையும் இருக்கின்றன.

பாடத் திட்டங்களில்கூட மாநிலத்தைக்கு மாநிலம் மாறுபட்டுதான் உள்ளது. +2 தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப் பட்டு வருவதால் என்ன கேடு வந்து புகுந்து விட்டது.

கட் ஆஃப் மார்க் என்பது தமிழ்நாட்டில் அதிகபட்சமாகவே இருக்கிறது. 2011-2012ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டவர்களுள் 69 பேர் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றவர்கள்; 199.75 - 198 கட்அப் பெற்றவர்கள் 1099 பேர்கள். 197.97-195 கட்ஆஃப் பெற்றவர்கள் 2007 பேர்கள் 194.75-190 கட்ஆஃப் பெற்றவர்கள் 3180 பேர்கள்.

இந்த மதிப்பெண்கள் போதுமானவையாக இல்லை என்று அகில இந்திய மருத்துவக் கவுன்சில் கூறுவதன் பின்னணி என்ன?

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி இடங்கள் தமிழ்நாட்டு மாணவர்களுக்குப் போதும். அகில இந்திய நுழைவுத் தேர்வு என்று கூறி பிற மாநிலத்துக்காரர்களை தமிழ்நாட்டுக்குள் திணிக்கும் ஏற்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது.

இது ஒருபுறம் இருந்தாலும், இதில் முக்கியமாகப் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள்தான். வெளி மாநிலங்களில் அவர்கள் சென்று படிப்பதற்கான சூழல் கிடையாது. வெளிமாநிலப் பெண்கள் தமிழ்நாட்டில் தங்கிப் படிப்பது எளிதாகிறது. அதே நேரத்தில் தமிழ்நாட்டுப் பெண்களும், பிற மாநிலப் பெண்களும் வடமாநிலங்களில் சென்று படிப்பது என்பது குதிரைக் கொம்பே! வடமாநிலங்களில் நிலவிவரும் மனப்பான்மையே வேறு!

கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவ - மாணவிகள் +2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கே அல்லாடிக் கொண்டுள்ள நிலையில், அகில இந்திய நுழைவுத் தேர்வை எழுதுவது எப்படி? அதற்காகத் தனியார் பயிற்சியகத்தை நாடிச் சென்று கிராமத்து இருபால் மாணவர்கள் படிக்கக் கூடிய சூழல் இருக்கிறதா?

அகில இந்திய மருத்துவக் கவுன்சில் என்ற உயர்தட்டு அமைப்புக்குச் சமூகநீதிப் பார்வையே கிடையாதா? இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள சமூகநீதி (Social Justice) என்பதை அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கடமைப்பட்டு இருக்கவில்லையா?

ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தால்  அங்கீகரிக்கப் பட்ட தமிழ்நாட்டில் ஏற்றுக் கொள்ளப்படாத - நுழைவுத் தேர்வை எப்படி தமிழ்நாட்டில் திணிக்கலாம்?  திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் (30.7.2011) தமிழ்நாட்டின் முதல் அமைச்சரின் நிலைப் பாடு என்ன என்ற வினாவை எழுப்பினார்; முதல் அமைச்சரும் அதன் அடிப்படையில், நுழைவுத் தேர்வைத் தமிழ்நாடு அரசு ஏற்காது என்று திட்ட வட்டமாக அறிவித்து விட்டார்.

இந்தப் பிரச்சினையில் மாநில அரசுகளின் கருத் துக் கேட்கப்படும் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத் தில்  தெரிவித்ததே - அதன்படி மாநில அரசுகளின் கருத்தினை மத்திய அரசு கேட்டு அறிந்ததா?

எந்தெந்த மாநிலங்கள் ஏற்றுக் கொண்டன? எந்தெந்த மாநிலங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை? அந்த விவரத்தை மத்திய அரசு இதுவரை ஏன் வெளியிடவில்லை?

அகில இந்திய மருத்துவக் கவுன்சிலும், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபலும் சேர்ந்து இப்படி ஒரு சமூக அநீதியை அரங்கேற்று கிறார்கள் என்றே கருத வேண்டியுள்ளது.

கல்வி எப்பொழுதும் உயர் ஜாதிக்காரர்களின் அதிகாரத்தில் இருக்கக் கூடாது என்பதுதான் திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு! ஒடுக்கப்பட்ட மக்களே, விழித்தெழுவீர்!








.
 

உங்கள் கருத்துக்கள்

 
 
1000 எழுத்துகள் மீதமுள்ளன

 
Security code
Refresh

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...