தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:
அதிக அளவு இங்கிலாந்து போர்வீரர்கள் கொல்லப்பட்ட போர் எது ?
ஆங்கிலேயரின் உள்நாட்டுப் போர் அல்லது மூன்று நாடுகளின் போர் என்று வரலாற்றாசிரியர்களால் அழைக்கப் பட்ட போரில்தான் அதிக அளவு இங்கிலாந்து போர் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
1642 மற்றும் 1649-க்கும் இடையேயான ஏழு ஆண்டு காலம் நடந்த இந்தப் போரில், திடுக்கிடச் செய்யும் அளவுக்கு பத்து வயது வந்த ஆண்களில் ஒருவர் இறந்து போனார். முதல் உலகப் போரில் இறந்தவர்களின் விகிதத்தை விட இது : மூன்று மடங்கு அதிகமானது. இரண்டாம் உலகக் போரில் இறந்தவர்களின் விகிதத்தை விட இது அய்ந்து மடங்கு அதிகமானது.
1642 இல் இங்கிலாந்து நாட்டின் மொத்த மக்கள் தொகை 50 லட்சம் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. இவர்களில் ஏறக்குறைய 20 லட்சம் ஆண்கள் போர் செய்யும் வயதில் இருந்தவர்கள் ஆவர். போர்க்களத்தில் 85,000 வீரர்கள் இறந்துபோயினர்; போரில் ஏற்பட்ட காயங்களினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 100,000 ஆகும். இந்தப் போருக்காகத்தான் ஆங்கிலேயர் வரலாறு காணா அளவுக்கு மிக அதிகமான வீரர்களை போர்ப் படைக்குத் திரட்டினர். சண்டையிடத் தகுதி படைத்த ஆண்களில் கால் பகுதியினர் படையில் சேர்க்கப்பட்டனர்.
அயர்லாந்தில் நிலைமைகள் இதனை விட மோசமானவையாக இருந்தன. இதன் காரணம் உள்நாட்டுப் போருடன் விடுதலைக்கான சண்டையும் சேர்ந்து கொண்டதுதான். 1653 இல் கிராம்வெல் படையெடுப்பின் முடிவில் அயர்லாந்து நாட்டின் மக்கள் தொகையில் பாதி அளவு மக்கள் இறந்துபோயினர் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் கணக்கிட்டுள்ளனர்.
பி.பி.சி. என்னும் இங்கிலாந்து நாட்டு ஒலிபரப்பு நிறுவனம் 2004 இல் ஏற்பாடு செய்த ஒரு கருத்துக் கணக்கெடுப்பில், இங்கிலாந்து நாட்டின் உள்நாட்டுப் போரில் நடைபெற்ற ஒரு போர்க்களத்தின் பெயரைக் கூட மக்களில் 90 விழுக்காட்டினரால் பெயர் குறிப்பிட்டுக் கூற முடியவில்லை என்பதும், 1649 இல் நாடாளுமன்றத்தால் எந்த இங்கிலாந்து நாட்டு அரசருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது என்பதை 80 விழுக்காடு மக்களால் கூற முடியவில்லை என்பதும், ஆலிவர் கிராம்வெல் பற்றி 67 விழுக்காடு பள்ளிக் குழந்தைகள் அறிந்திருக்கவில்லை என்பதும் வெளிப்பட்டது.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- பதினெட்டாம் நூற்றாண்டு கடல் போர்களில் அதிக அளவு மாலுமிகள் கொல்லப்பட்டது எதனால் ?
- தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:
- எந்த ஆப்ரிக்க விலங்கு அதிக அளவில் மனிதர்களைக் கொன்றுள்ளது ?
- உலகில் அதிகமாக உள்ள சாதாரணமான பொருள் என்ன?
- நிலநடுக்கங்கள் எவ்வாறு அளக்கப்படுகின்றன?
No comments:
Post a Comment