தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:
நெப்போலியனின் கேவலமான தோல்வியைக் குறிக்கும் சொல் எது ?நெப்போலியனின் மிகக் கேவலமான தோல்வியைக் குறிக்கும் சொல்லாக விளங்குவது முயல் வேட்டை என்னும் சொல்லாகும்.மீண்டும் தலை தூக்க முடியாதபடி நெப்போலியன் தோல்வி அடைந்த போர் வாட்டர்லூ என்றாலும் கூட, அவருக்கு மிகவும் இழிவு சேர்த்த போர் அதுவல்ல.பிரான்சு, ரஷ்யா மற்றும் ப்ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான அமைதி ஒப்பந்தம் ஒன்று தில்சிட்டில் கையெழுத்திடப்பட்டதை அடுத்து 1807 இல் மிகுந்த மகிழ்ச்சியோடு நெப்போலியன் இருந்தார். இதனைக் கொண்டாட அரசவையினர் ஒரு நாள் பிற்பகல் போதினில் முயல்கள் வேட்டையா டலாம் என்று அவர் ஆலோசனை கூறினார். அவரது மிகுந்த நம்பிக்கைக்கு உரிய தளபதி அலெக்சாண்டர் பெர்த்தியர் என்பவர் இந்த முயல் வேட்டைக்கு ஏற்பாடு செய்தார். நெப்போலியனை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பதற்காக, அரசவையினர் வேட்டையாடுவதற்கு முயல்கள் இல்லாமல் போய்விடக்கூடாது என்று கருதி ஆயிரக்ணக்கான முயல்களை அவர் விலை கொடுத்து வாங்கிவிட்டார்.வேட்டைக் குழு வந்து சேர்ந்த வேட்டை தொடங்கியது. வேட்டைக்காரர்கள் விலைக்கு வாங்கி வந்த முயல்களை அவிழ்த்து விட்டனர். ஆனால் அந்த முயல்கள் தப்பி ஓடும் அளவுக்கு பலம் வாய்ந்தவைகளாக இருக்கவில்லை. காட்டு முயல்களை வாங்குவதற்கு பதிலாக அவர் வீட்டு முயல்களை வாங்கிவிட்டார். வேட்டையாடிக் கொல்வதற்கானவை என்று அவர் கருதாமல், உணவளித்து வளர்ப்பதற்கானவை என்று அவர் தவறாகக் கருதிவிட்டார். தங்களின் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள அந்த முயல்கள் ஓடாமல் நின்றன. பெரிய தொப்பியுடன் நின்று கொண்டிருந்த ஒரு உயரமான மனிதனை, தங்களுக்கு உணவு கொண்டு வரும் தங்களை வளர்ப்பவர் என்று தவறாகக் கருதிவிட்டன. பசியுடன் இருந்த அந்த முயல்கள் மணிக்கு 35 மைல் (56 கி.மீ.) வேகத்தில் நெப்போலியனை நோக்கி ஓடி வந்தன.அவைகளைத் தடுத்து நிறுத்த வேட்டைக் குழுவினரால் எதுவும் செய்ய முடியவில்லை. அவைகளிடமிருந்து தப்பி ஓடுவதைத் தவிர நெப்போலியனுக்கு வேறு வழி இருக்கவில்லை. தன்னைத் துரத்தும் முயல்களைத் தனது வெற்றுக் கைகளால் அடித்து விரட்டிக் கொண்டே அவர் ஓடவேண்டியதாயிற்று. ஆனால் அந்த முயல்கள் இதற்கெல்லாம் அஞ்சாமல் அவர் தனது வண்டியை அடையும் வரை அவரைத் துரத்திக் கொண்டே இருந்தன. அவரது வேலையாட்கள் சாட்டையைக் கொண்டு அம்முயல்களை விரட்ட முயன்றும், முடியாமல் தோல்வி அடைந்தனர். முழுவதுமாக தோற்கடிக்கப்பட்ட பிரான்சு பேரரசர் அவமானம் தாங்காமல் தனது ரதத்தில் ஓடிச் சென்றார் என்று இந்த படுதோல்வியைப் பற்றிக் குறிப்பிடும் சமகால ஆவணங்கள் தெரிவிக்கின்றன.(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)
நெப்போலியனின் கேவலமான தோல்வியைக் குறிக்கும் சொல் எது ?
No comments:
Post a Comment