Tuesday, November 15, 2011

லண்டன் மாநகரப் பெருந் தீவிபத்தில் உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை என்ன?


லண்டன் மாநகரப் பெருந் தீவிபத்தில் உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை என்ன?
இந்த மிகப் பெரிய தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெறும் அய்ந்து பேர் மட்டுமே.

ஆனால், இத் தீவிபத்தில் 13,200 வீடுகள், 87 தேவாலயங்கள், 44 மன்றங்கள் என்று மொத்தமாக லண்டன் மாநகரத்தின் 80 சதவிகித பகுதிகள் நாசமடைந்தன. என்றாலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெறும் அய்ந்து பேர் என்பது வியப்புக்கு உரியதாகும்.

அவ்வாறு இறந்த அய்ந்து பேர்களில் இந்த விபத்துக்குக் காரணமான ஒரு ரொட்டிக் கிடங்கின் பணிப்பெண், பால் லோவெல் என்னும் ஷூ லேன் கடிகார பழுது பார்ப்பவர், ஒரு போர்வையை எடுக்கச் சென்று புகை மூட்டத்தில் சிக்கி உயிர்விட்ட ஒரு முதியவர், தங்கள் வீட்டு கிடங்கு அறைகளில் இருக்கும் பொருள்களை மீட்பதற்காக முயன்று தீயில் சிக்கி மாண்ட இரண்டு பேர் ஆகியோர் அடங்குவர்.

உண்மையில் இறந்தவர்களின் எண்ணிக்கை எப்போதுமே தெரிந்து கொள்ள முடியாது. இறந்தவர்களின் உடல்களில் இருந்து நாற்றம் வந்து கொண்டிருந்ததைப் பற்றி ஜான் எவ்லின் பேசுகிறார். அளவுக்கு அதிகமான வெப்ப நிலையில் இறந்த சிலரது உடல்கள் ஆவியாக மாறிவிட்டிருக்கக்கூடும் என்பதால் பலரின் இறப்பு பதிவாகாமல் இருந்திருக்கலாம் என்று நவீன புலனாய்வு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தீ அய்ந்து நாட்கள் தொடர்ந்து எரிந்தது. இவ்வளவு சாவகாசமாக எரிந்ததன் காரணமாக, மக்கள் தங்கள் வீடுகளைக் காலி செய்து கொள்ள எளிதாக இருந்தது. அதனால் நிச்சயமாக அந்த விபத்தில் இறந்தவர்கள் அய்ந்து பேர்தான் என்று கூறப்படுகிறது.

தீவிபத்து ஏற்பட்டவுடன் அதனை அணைக்க அதிகாரிகள் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வில்லை.  மாநகரத்தின் மேயர் தாமஸ் ப்ளட்வொர்த் பிரபு விபத்தின் முதல் நாளிரவில், ஒரு பெண் சிறுநீர் கழித்தே இந்த தீயை அணைத்துவிடுவார் என்று கூறிவிட்டு,  கவலையின்றித் தூங்கச் சென்றுவிட்டார். சாமுவேல் பெப்பி என்ற அதிகாரி தனது தோட்டத்தில் தன்னிடம் இருந்த மதிப்பு மிகுந்த பொருள்களைப் புதைத்து வைத்துக் காப்பதிலேயே கவனம் செலுத்தினார்.

இதற்கு முன் 1212 இல் லண்டனில் ஏற்பட்ட தீவிபத்தில்  3,000 பேர் இறந்தனர்.தற்போதைய தீவிபத்து ஏற்பட்ட 1666 ஆம் ஆண்டுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பிளேக் நோயில் 65,000 பேர் இறந்தனர். பிளேக் நோய்க்குக் காரணமான எலிகளையும், அவை இனப்பெருக்கம் செய்யும் இடங்களையும் இந்த தீவிபத்து அழித்து பிளேக் நோயை பரவாமல் தடுத்து நிறுத்தியது.

ஆனால் அந்த தீவிபத்தினால் ஏற்பட்ட இழப்பு 1 கோடி பவுண்டுகள் என்று மதிப்பிடப்பட்டது. லண்டன் மாநகரின் மொத்த ஆண்டு வருமானமே 12,000 பவுண்டுகள் என்பதால், இந்த இழப்பை ஈடுகட்ட 800 ஆண்டு வருமானம் தேவைப்படும்.

தற்போதைய தீவிபத்தில் 1,00,000 மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர். சந்தை நகரமான மூர்ஃபீல்டில் பலர் முகாமிட்டுத் தங்கினர். பலர் எரிந்து போன தங்களின் வீட்டுக்கு அருகிலேயே குடில்கள் அமைத்துத் தங்கினர். நகரின் புனர்நிர்மாணப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு, முடிவடைந்து  அனைத்து மக்களுக்கும் முறையான வாழ்விடங்கள் 1672 இல் கிடைத்தன.

தாமஸ் பேரினோர் என்பவரின் ரொட்டிக் கிடங்கில்தான் முதன் முதலாகத் தீப்பற்றியது. இதனை மறுத்த தாமஸ், கடிகாரம் பழுது பார்க்கும் ராபர்ட் ஹூபர்ட்தான் தீவிபத்து ஏற்படக் காரணம் என்று கூறினார். ராபர்ட் அதனைச் செய்திருக்க முடியாது என்று ஜூரிகளும், நீதிபதியும் அறிந்திருந்தபோதும், அவரை எப்படியோ தூக்கில் இட்டுவிட்டனர்.

தீவிபத்தை ஏற்படுத்தி சதி செய்தார் என்ற கோபத்தில் பொதுமக்கள் தூக்கிலிடப்பட்ட ராபர்டின் உடலைக் கிழித்து சின்னாபின்ன மாக்கினர். அந்தத் தீவிபத்து ஏற்பட்டதற்கு பொறுப்பேற்றுக் கொண்டு, வணக்கத்திற்குரிய பேக்கர் கம்பெனி மன்னிப்பு கேட்டுக் கொண்டதன் மூலம் இறுதியில் 1986 இல் நீதி நிலைநாட்டப்பட்டது.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் 
‘The Book of General  Ignorance’ பொதுவான அறியாமைகள் 

தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...