Thursday, November 24, 2011

ரவாண்டாவிடமிருந்து இந்தியா கற்றுக் கொள்ளவேண்டிய பாடம்

- அனாஹிதா முகர்ஜி

இந்தியா அல்லது பாகிஸ்தான் நாடுகளில் எந்த நாட்டில் ஒரு பெண் ணாகப் பிறக்க நீங்கள் விரும்புவீர்கள்? இதற்கான விடை நீங்கள் கற்பனை செய்வதைப் போல் இருக்காது. பாகிஸ் தான், பங்களாதேசம், மற்றும் ரவாண்டா, ஜிம்பாவே போன்ற ஆப்பிரிக்க நாடுகள் மற்ற விஷயங்களில் இந்தியாவுக்கு முன்மாதிரியாக இல்லாமல் இருக்கலாம்; ஆனால் அய்க்கிய நாடுகளின் முன் னேற்றத் திட்டத்தின் கீழ் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள பாலியல் சமத் துவமின்மை பற்றிய புள்ளி விவரங் களின்படி  இந்த நாடுகள் இந்தியாவை விட மேம்பட்டவையாக உள்ளன.

அப்படியானால், இந்தியாவில் ஏற்படும் முன்னேற்றப் பயன்கள் பெண் களுக்குக் கிடைக்கவில்லையா? மக்கள் பட்டினியால் இறப்பது போன்ற தோற் றத்தைப் பெற்றுள்ள இந்த ஆப்பிரிக்க நாடுகள், தங்களின் பெண்களை மட்டும் எவ்வாறு நன்றாகப் பார்த்துக் கொள் கின்றன. பெண்கள் பற்றிய ஆய்வுக் களத்தில் உள்ள நிபுணர்கள் இந்திய சமூகத்தில் நிலவும் படிப்படியாகக் கட்டமைக்கப்பட்டுள்ள சமத்துவ மின்மையைச் சுட்டிக் காட்டுகின்றனர்.

இந்தியாவை விட பொருளாதார நிலை யில் வறிய நிலையில் உள்ள நாடுகள் பல நம்மைப் போல் பெண்களுக்கு சமத் துவம் அளிக்காதவை அல்ல. பெண் களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் இந்தியாவை விட அந்த நாடுகளில் குறைவாகவே உள்ளன என்று மும்பை எஸ்.என்.டி.டி. பெண்கள் பல்கலைக் கழகப் பேராசிரியரும் பிரபல பெண்ணிய ஆதரவாளருமான விபூதி படேல் கூறுகிறார்.  இந்தியாவிலும் பஞ்சாப் போன்ற முன்னேற்றம் அடைந்த பகுதி களிலும் பெண்கள் மீது அதிக வன் முறை காட்டப் படுகிறது.

முடிவெடுக்கும் பெண்களின் ஆற்றலைப் பெரிதும் குறைத்துக் காட்டும் குழந்தைகள் திருமணம் மற்றும் பெண்கருக்கலைப்பு போன்றவை ஆப்பிரிக்காவை விட இந்தியாவிலேயே அதிகமாக இருக்கிறது  என்று சமூக  ஆர்வலர்கள் நம்புகின்றனர். வாஷிங்டனில் உள்ள மக்கள் தொகைக் குறிப்பு நிறுவனம் இந்த ஆண்டில் வெளியிட்டுள்ள பெண்கள் பற்றிய புள்ளிவிவரங்களின்படி 20_24 வயதுக்குட்பட்ட 47 சதவிகித இந்தியப் பெண்களுக்கு அவர்கள் 18 வயதை எட்டியவுடனேயே திருமணம் செய்து வைக்கப்படுகிறது என்று தெரிவிக்கிறது. பாகிஸ்தானில் கூட 18 வயதுக்கு திரு மணம் செய்யப்படும் பெண்கள்  24%  மட்டுமே.

இந்தியாவை விட பல ஆப்பிரிக்க நாடுகளில் குடும்ப வருமானத்தின் மீது அதிக கட்டுப்பாடு கொண்டிருக்கும் பெண்கள் ஓர் உயர்ந்த நிலையையே அனுபவித்து வருவதாக படேல் கூறுகிறார். ஆப்பிரிக்காவில் பட்டினி என்னும் நிலை ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாகவே உள்ளது. இந்தியாவிலோ பாரம்பரியமாக ஆண்களுக்கும் பையன்களுக்கும் முதலில் அதிக சத்துள்ள உணவு வழங்கப்பட்டு, பெண்களுக்கு இறுதியில் குறைந்த உணவு அளிக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறுகிறார்.

பெண்கள் கல்வியறிவு நிலை என்று எடுத்துக் கொண்டால் இரான், லிபியா நாடுகளை விட இந்தியாவின் நிலை மோச மானதாக விளங்குகிறது. 15-_24 வயதுப் பிரிவில் 2005--_2008 இல் நிலவிய பெண் களின் படிப்பறிவு  நிலை: இந்தியாவில்  74%, ஈரானில் 96%, பங்களாதேசத்தில் 76%, சிறிலங்காவில் 99%  லிபியாவில் 100% துனிஷியாவில் 96%, கென்யாவில் 93%  என உள்ளது.

வறிய குடும்பங்களில் வீட்டு செலவுக்குத் தேவையான வருவாய் இல்லாமல் போகும்போது, பெண்களைப் பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்திவிடுவதே வழக்கமாக உள்ளது என்று டில்லி பெண் கல்வி முன்னேற்ற மய்ய முன்னாள் இயக்குநர் பேரா.மாலாசிறீலால் கூறுகிறார்.  இந்தியாவில் தனியார் பள்ளிகளில் அதிகப் படியாக பையன்கள் சேர்க்கப்படும்போது, அரசு பள்ளிகளில் அதிகப்படியான பெண்கள் சேர்க்கப்படுவதாகத் தெரிவித் துள்ள பிரதான் என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் சமீபத்திய கல்வி நிலை பற்றிய ஆண்டு அறிக்கை தெரி விப்பது இத்துடன் ஒத்துப் போகிறது.

இந்தியப் பெண்கள் அதிகமாகக் காணப்படும் ஒரு களம் என்னவென்றால், வேலை செய்யும் பகுதிதான். இதிலும் ஒரு முரண்பாடும் உள்ளது. நடுத்தரக் குடும்பப் பெண்களின் வீட்டு வேலை களை அவர்களுக்காக வறிய குடும்பப் பெண்கள் பார்த்துக் கொள்வதால், நடுத்தரக் குடும்பப் பெண்கள் வெளியே வேலைக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத் துள்ளது என்பதை அம்பேத்கர் பல்கலைக் கழகத் துணை வேந்தர் பேரா.சியாம் மேனன் சுட்டிக் காட்டுகிறார்.

இதனை உண்மையான பெண்களின் அதிகார வளர்ச்சி என்று நம்மால் கூற முடியுமா? அல்லது வீட்டு வேலைகளை நடுத்தரக் குடும்பப் பெண்களுக்கு பதிலாக வறிய குடும்பப் பெண்கள் செய்வதாக எடுத்துக் கொள்வதா? என்று அவர் கேட்கிறார்.

தங்களின் வீட்டு வேலைகளையும் செய்து கொள்ள நேரம் அளிப்பதால் பல பெண்கள் ஆசிரியர், செவிலியர், விருந்தோம்பல் போன்ற தொழில்களில் தங்களை ஈடு படுத்திக் கொள்கின்றனர். வீட்டு குடும்ப வேலையே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியது என்று பார்க் கப்படுகிறது. பெண்கள் மற்றும் ஆசிரியர் போன்ற தொழில் செய்பவர்களையே இழிவுபடுத்தும் இரண்டு பக்கமும் கூரான முனை கொண்ட கத்தியாகும் இது என்று மேனன் கருதுகிறார்.

தற்போதுள்ள வளர்ச்சியின் மாதிரியே பாலியல் சமத்துவமின்மைக்குக் காரணம் என்று அகிய இந்திய பெண்கள் ஜனநாயக சங்கத்தின் சோன்யா கில் குறை கூறு கிறார். சுகாதாரம், கல்வி, உணவுப்பொருள் வினியோகம் போன்ற சமூகநலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை அரசு குறைத்துக் கொண்டு வருகிறது. இது ஒதுக்கப்பட்ட மக்களை, குறிப்பாக பெண்களை பெரிதும் பாதிக்கிறது என்று அவர் கூறுகிறார். பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவை நாடாளு மன்றத்தில் நிறைவேற்ற அரசு மறுப் பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களா தேசத்தை விட இந்திய நாடாளு மன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது. இந்தியாவில் 11%  பாகிஸ்தானில்  22% ஆப்பானிஸ்தானில்  27%  பங்களாதேசத்தில் 19%  நேபாளத் தில்  33% என்ற விகிதத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் உள்ளது.

இந்தியாவில் பெண்கள் மேம்பாட் டிற்கான கொள்களிலோ, சட்டங்களிலோ குறையேதுமில்லை; ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதில்தான் குறை உள்ளது. எடுத்துக்காட்டாக பெண்களுக்கு சொத்துரிமை உள்ளதென்றாலும், அந்த உரிமையைக் கோரக் கூடாது என்று பெண்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

வீடுகளில் பெண்களுக்கு எதிரான வன் முறைத் தடுப்பு சட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். உண்மையில் இதனால் எந்த ஒரு சிறு மாற்றமும் சமூகத்தில் நேர்ந்ததாகத் தெரியவில்லை. 28 மாநிலங் களிலும், தலைநகரிலும் ஆய்வுக்காக சந்தித்த 1.25 லட்சம் பெண்களில் 40% பேர் வீடுகளில் தாங்கள் வன்முறையை அனுபவிப்பதாகக் கூறினர் என்று மூன்றாவது தேசிய குடும்பநல ஆய்வு தெரிவிக்கிறது. இதில் மிகுந்த அதிர்ச்சி அளிப்பது என்னவென்றால், இத்தகைய வன்முறைகளை 54%  பெண்களும், 51%  ஆண்களும் நியாயப்படுத்துகின்றனர் என்பதுதான்.

இந்தியாவின் மாநகரங்களில் வளர்ந்து வரும் நவீனத்துவம், இந்திய சமூகத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் இழிந்த நிலைக்கு முரண்பட்டதாகவே தோன்று கிறது. நவீனத்துவம் பாரம்பரியமான நம்பிக்கைகளையே மேலும் வலுப் படுத்துகிறது என்று பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் அக்சரா என்ற அமைப்பின் இணை இயக்குநர் நந்திதா ஷா கூறுகிறார்.

நடை, உடை, பாவனை, அலங்காரம், பயன்பாட்டுப் பொருள்கள் ஆகியவற்றில் மட்டும்தான் நவீனத்துவம் இருக்கிறது. ஆனால் உலகத்தைப் பற்றிய நமது கண்ணோட் டத்திலோ அல்லது உறவுமுறைகளை நாம் பார்க்கும் பார்வையிலோ எந்த நவீனத்துவமும் இல்லை என்று அவர் கூறுகிறார். இந்த விஷயங்களில் ஒன்றிரண்டிலாவது மற்ற நம்மை விட ஏழ்மையான நாடுகளிடமிருந்து இந்தியா பாடம் கற்றுக் கொள்ளலாம்.

(நன்றி: தி டைம்ஸ் ஆப் இந்தியா  13-.11.-2011

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...