மனிதன் ஒரு ஜீவப்பிராணியே!
உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவராசிகளும் தத்தம் சரீரத்தில் பற்றுக் கொண்டவைகளாகவே இருந்து வருகின்றன. அந்தச் சரீரப்பற்று என்பது, சரீரமானது ஜீவித்திருப்பதற்கு ஆதாரமானது என்கின்ற தத்துவத் தினாலேயே ஏற்பட்டதாகும்.
தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்காத ஜீவன் கிடையவே கிடையாது எனலாம். ஆனால், எல்லா ஜீவராசிகளும் என்றைக் காவது ஒரு நாள் ஜீவிப்பு அற்று செத்தே போகும் என்பது மாத்திரம் அனுபவ சித்தாந்தமாகும்.
உலகிலுள்ள மற்ற எல்லா ஜீவராசிகளைப் போலவே மனித வர்க்கம் என்னும் ஜீவராசியும் ஒன்றாகும். ஒரு மனிதனும், ஒரு யானையும், ஒரு எறும்பும், ஒரு சிறு பேனும், பூதக்கண்ணாடி மூலம் பார்த்தறியத்தக்க அதிநுட்பமான கிருமியும் எல்லாம் ஒரே தத்துவத்தைக் கொண்ட ஜீவராசிகளாகும்.
ஆனால், அவை தோற்றத்திலும் - செயலிலும் வேறுபட்டி ருக்கலாம். அப்படி யானால், மனிதனுக்கும், கழுதைக்கும் வித்தியாசமில்லையா? என்று ஒருவர் கேட்கலாம். ஜீவதத்துவத்தில் வித்தியாசமில்லை என்றுதான் பதில் சொல்லுவேன். ஏதாவது வித்தியாசம் உண்டு என்று சொல்ல வேண்டுமானால், ஒரு நாய் ஜீவனுக்கும் ஒரு கழுதை ஜீவனுக்கும் என்ன விதமான வித்தியாசமோ அந்தவிதமான வித்தியாசந் தான் உண்டு என்று சொல்லலாம். ஆனால், அவ்வித்தியாசம் அளவில் (டிகிரியில்) ஜாஸ்தி யாகவோ, கம்மியாகவோ இருக்கலாம் என்றுதான் சொல்ல வேண்டும்.
இன்னும் பேசப் போனால் தாவர வர்க்கங்களும், ஜீவ வர்க்கங்களுங்கூட தத்துவத்தில், அதாவது உற்பத்தி தத்துவத்திலும், வாழ்வு தத்துவத்திலும், அழிவு தத்துவத்திலும், ஒரே தத்துவத்தை ஆதாரமாய்க் கொண்டு இருந்து வருகின்றன என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.
வித்தின் மூலம் எப்படி மரம், செடிகள், புல், பூண்டுகள் உற்பத்தியாகின்றனவோ, அதுபோல ஆண்- பெண் சேர்க்கை விந்து மூலம் ஜீவப் பிராணிகள் உற்பத்தியாகின்றன. வித்தில்லாமல் எப்படி சில தாவர வர்க்கங்கள் உற்பத்தியாகின்றனவோ, அதுபோல் தான் ஆண் பெண் சேர்க்கையில் லாமல் பல ஜீவவர்க்கங்களும் உற்பத்தியாகின்றன.
தாவர வர்க்கங்களில் ஒன்றுக்கொன்று வித்தி யாசமும், மாறுபட்ட சக்தியும் இருப்பது போலவே ஜீவவர்க்கத்தினிடமும் ஒன்றுக்கொன்று வித்தி யாசமும், மாறுபட்ட சக்தியும் இருந்து வருகின்றது.
மனித ஜீவவர்க்கத்தினிடமுள்ள சில குணங்கள் எப்படி மற்ற ஜீவராசிகளுக்கு இல்லையோ, அதுபோன்றே மற்ற ஜீவராசிகளுக்கு உள்ள சில குணங்கள் மனித ஜீவவர்க்கத்திற்கு இல்லாமல் இருப்பதையும் நாம் பார்க்கின்றோம்.
ஒரு கழுதைக்கும், ஒரு குரங்குக்கும் உள்ள வித்தியாசத்தைக் கணக்குப் பார்த்து, ஒரு குரங் குக்கும், ஒரு மனிதனுக்கும் உள்ள வித்தியாசத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்போமானால் பின்கண்ட வித்தியாசத் தின் அளவு அதிகமாய்க் காண முடியாது.
ஆகவே, மனித ஜீவன் ஜீவப் பிராணிகளிலெல்லாம் மேலானதென்றும் - தனிப்பட்டதென்றும் அதற்கு மாத் திரமே சில தனி தத்துவங்களுண்டு என்றும், கருமம், மதம், மேலுலக வாழ்வு, கடவுள், கடவுள் தண்டனை, மன்னிப்பு, சன்மானம் ஆகியவை சொந்தமென்றும் மனிதனுக்கே சில உயர்ந்த தத்துவங்கள் - கடமைகள், பிரார்த்தனைகள் முதலியவை உண்டென்றும் சொல்லுவதில் ஏதாவது அர்த்தமிருக்க இட முண்டா என்று பார்த்தால் இவை வெறும் கற்பனைகளென்றே விளங்கும். மற்றபடி, கடவுளுக்கும் மனிதனுக்கும் இருக்கும் சம்பந்தமும், பொறுப்பும் மற்ற ஜீவராசி களுக்கு இல்லை என்று சொல்ல முடியுமா என்பதும் விளங்கும். அது போலவே பாவமும் புண்ணியமும் சொர்க்கமும் கடவுள் பதத்தை அடையக் கூடிய தன்மையும் மற்ற ஜீவராசிகளுக்கு இல்லையென்று சொல்ல முடியுமா? என்பதும் விளங்கும்.
ஒரு பூச்சியின் செய்கைக்கு பாவம், புண்ணியம் உண்டா னால்தான் ஒரு மனிதனின் செய்கைக்கும் பாவம் புண்ணியம் உண்டாக முடியும்.
மனிதனுக்குள்ள பகுத்தறிவு என்பது கடவுளால் தனிப்பட்ட காரியத்துக்காகக் கொடுக்கப்பட்டது என்றால், ஒரு யானைக்குள்ள தும்பிக்கையையும், ஒரு நாரைக்குள்ள நீண்ட மூக்கையும், ஒரு முள்ளம் பன்றிக்கிருக்கும் செதில் முள்களையும், தேளுக்குள்ள கொடுக்கையும், பாம்புக்குள்ள விஷத்தையும் போன்றவைகளெல்லாம் கடவுளால் தனிப்பட்ட காரியங் களுக்காகக் கொடுக்கப் பட்டவை என்றுதானே சொல்ல வேண்டும். ஆதலால் ஒரு யானைக்குத் தும்பிக்கை விசேஷ உறுப்பாகவும் நீண்ட அவய வமாகவும் இருப்பது போலவே மனிதனுக்கு பகுத்தறிவுக்குள்ள நரம்புக்கூட்டும் மூளையின் பரிமாண - அதாவது அதிக சிந்தனா சக்திக்குள்ள உறுப்புகள் என்பவை விசேஷ உறுப்பாகவோ, விசேஷ சக்தியாகவோ இருக்கிறதென்பதேயல்லாமல் அதற்கு மாத்திரம் ஒரு தனி விசேஷத்துவம் இல்லை என்பதே எனது அபிப்பிராயம்.
உதாரணமாக ஜீவப்பிராணிகளுடைய இந்திரியங் களில் விசேஷத்தை எடுத்துக் கொள்வோமானால் ஒரு எறும்புக்கு இருக்கும் மூக்கு மோப்ப சக்தி ஒரு மனிதனுக்குக் கிடையாது. உதாரணமாக சர்க்கரை யோ, பிஸ்கோத்தோ ஒரு பெட்டிக்குள் இருக்கு மானால் அதை மனிதனால் மோப்பத்தின் மூலம் கண்டு பிடிக்க முடியாது; அனால், ஒரு சிறு எறும்பு கண்டுபிடித்து விடும். அதுபோலவே பட்சிகளின் (கண்) பார்வை சக்தி ஒரு மனிதனுக்குக் கிடையாது. உதாரணமாக சமீப தூரத்தில் இருந்தும் மனிதனுக்குத் தென்படாத ஒரு வஸ்துவானது பூமிக்கு மேல் ஒரு மைல் இரண்டு மைல் உயரத்தில் பறக்கும் பட்சியின் மிகச் சிறிய கண்களுக்குத் தென்பட்டு அப்பட்சியால் அது தூக்கிச் செல்லப்படுகின்றது. மீனுக்கு இருக்கும் நீந்தும் சக்தி மனிதனுக்கு இல்லை. உடும்புக்கு இருக்கும் பிடித்துக் கொள்ளும் அவயவ சக்தி மனிதனுக்கு இல்லை.
இதுபோலவேதான் ஒரு விஷயத்தில் மனிதனுக் குள்ள மூளை அவயவத்தின் சக்தி மற்ற ஜந்து களுக்கு இல்லை என்று சொல்ல வேண்டும். இந்த வித்தியாசங்க ளெல்லாம் அமைப்பில் ஜீவனுக்கு ஜீவன் மாறுபட்டிருப்பது போன்ற ஒரு வித்தியாசமே தவிர, மனிதனுக்கு மாத்திரம் ஏற்பட்ட ஒரு தனித்துவ குணம் என்று சொல்லிவிட முடியாது. பகுத்தறிவு என்பது மனிதனுக்கு மாத்திரந்தான் உண்டு; அது தனிக் காரியத்திற்காகக் கடவுளால் கொடுக்கப்பட்டது என்று சொல்லப்படுமானால் பகுத்தறிவு இருக் கின்றது என்கிற காரணத்திற்காக மனிதன் எந்த விதத்தில் மேலான நிலையில் உள்ளவனாய் இருக்கிறான் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். மற்ற பகுத்தறிவில்லாத ஜீவனுக்கு உள்ள என்ன குறைகள் பகுத்தறிவுள்ள மனி தனிடம் இல்லாமல் இருக்கிறதைக் காண்கின்றோம்?
ஆகாரம், நித்திரை, ஆண் பெண் சேர்க்கை ஆகிய தேவை களில் மற்ற ஜீவன்களிடமுள்ள தேவைகளே மனிதனிடமும் காணப்படுகின்றன; இன்னும் பேசப் போனால் மற்ற ஜீவன் களைவிட அதிகமாகவும் காணப்படுகின்றன.
ஆகாரம், நித்திரை, ஆண் பெண் சேர்க்கை ஆகிய தேவை களில் மற்ற ஜீவன்களிடமுள்ள தேவைகளே மனிதனிடமும் காணப்படுகின்றன; இன்னும் பேசப் போனால் மற்ற ஜீவன் களைவிட அதிகமாகவும் காணப்படுகின்றன.
ஆசை என்கின்ற ஒரு கெட்ட குணம் மற்ற ஜீவன்களைவிட மனித ஜீவனிடம் அதிகமாகவே காணப்படுகின்றது. அதிருப்தி என்கிற கெட்ட குணம் மனிதனிடமே அதிகமாய் இருக் கின்றது. கவலை என்கின்ற கெட்ட குணமும் மனி தனுக்கே அதிக மாய் உண்டு; தன் இனத்தை அடிமைப்படுத்தி அதைக் கொடுமைப்படுத்தி வாழும் கெட்ட குணம் மனித ஜீவனிடத்திலேயே அதிகமாய் இருந்து வருகின்றது. மற்ற ஜீவன்களுக்கு உள்ளது போன்ற வஞ்சகம், ஏமாற்றம் முதலிய குணங்கள் மனிதனிடத் திலேயே அதிகமாய் இருந்து வருகின்றன. தனக்குத் தெரியாததையும், புரியாததையும் பற்றி நம்புதல், பேசுதல், நம்பச் செய்தல் முதலிய மூடத்தன்மைக் குணம் மனித ஜீவனிடத்திலேயே அதிகமாய் இருந்து வருகின்றது. நம்பிக்கைக்கும், நடவடிக்கைக்கும் சம்பந்தமில்லாத குணம் மனித ஜீவனிடமே இருந்து வருகின்றது. ஒரே விஷயத்தை இரண்டு விதமாய் நம்பும் சுயபுத்தியற்ற தன்மையும் மனிதனிடமே இருந்து வருகின்றது.
இதுபோன்ற எத்தனையோ கெட்ட குணங்கள் மனித ஜீவன் தனது பகுத்தறிவின் பயனாகவே உடையதாயிருக்கின்றது. ஆகையால், பகுத்தறிவின் மேன்மையால் மனித ஜீவன் சிறந்தது என்று எப்படிச் சொல்லிக் கொள்ள முடியும் என்பதே எனது கேள்வியாகும். மேலும், மேற்கண்ட காரணங்களாலும், மற்றும் பல காரணங் களாலும் மனித ஜீவன் களில் பெரும் பான்மை யானவை மற்ற ஜீவராசி களைவிட இழிவுத் தன்மையுடையவை என்பதும் எனது அபிப் பிராயமாகும். ஜாதி யின் பேரால் உயர்வு, தாழ்வு, மதத்தின் பேரால் வேற்றுமை உணர்ச்சி, தேசத்தின் பேரால் குரோதத்தன்மை முதலான இழிகுணங்கள் மனிதனி டமே அதிகமாய்க் காண் கின்றோம். மற்றும் கடவுளின் பேரால் மேல் கீழ் நிலை முதலாகிய அயோக்கியத்தன்மைகள் மனித ஜீவனிடமே உண்டு. பகுத்தறிவின் காரணமாக மனித ஜீவன் உயர்ந்தது என்று சொல்ல வேண்டுமானால், மேற்கண்ட கெட்ட தீய - இழிவான, அயோக்கியத் தனமான குணங்கள் என்பவை எல்லாம் மனிதனிடம் இல்லாமல் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மற்ற பகுத்தறிவில்லா ஜீவராசிகளைவிட மனித ஜீவன் மூளை விசேஷம் முதலிய அவயவத்தை நன்மைக் காகப் பிரயோகித்துக் கொண்ட ஜீவன் என்று சொல்லப்படும். அஃதில்லாத நிலையில் எவ்விதத்திலும் மனித ஜீவன் மற்ற ஜீவப் பிராணிகளைவிட உயர்க்த தல்ல என்பதோடு பல விதத்திலும் தாழ்ந்தது என்றுமே சொல்ல வேண்டி யிருக்கிறது.
எனக்கு விக்கிரக ஆராதனையில் சிறிதும் நம்பிக்கையில்லை. ஜெபம் வேண்டாம்; கோயில் சென்று கும்பிட வேண்டாம்; சாம்பிராணி முதலிய செலவு செய்து பூஜை போட வேண்டாம். தாழ்த்தப்பட்டவர் களையும், தீண்டாதார்கள் என்று கொடுமை செய்யப் பட்டவர்களையும், நெற்றி வேர்வை நிலத்தில் சிந்த சரீரத்தால் வயல்களில் உழைக்கின்ற ஏழைகளையும் பார்! அவர்களைக் கவனிப் பதில் ஈஸ்வரனைக் காண்!
- ரவீந்திரநாத் தாகூர்
சாஸ்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கிச் சூத்திரத்தைக் கண்டு சுகம் பெறுவதெக்காலம்?
சாஸ்திரத்தைச் சுட்டு - மனு தர்ம சாஸ்திரத்தை சுட்டுப் பொசுக்கி சதுர் மறையைப் பொய்யாக்கி - மேல்கண்ட சாஸ்திரத்திற்கு ஆதாரம் என்று சொல்லப்படும் நான்கு வேதங்களையும் சுத்தப் புரட்டு என்று தள்ளி சூத்திரத்தைக் கண்டு பகுத்தறிவின் ஆராய்ச்சியில் இயந்திரங்களைக் கண்டு பிடித்து சுகம் பெறுவதெக்காலம்? அவற்றினால் மனித சமூகம் சுகமடைவது எப்போது வாய்க்கப் போகின்றது.
- (குடிஅரசு 29.11.1947)
No comments:
Post a Comment