Thursday, November 3, 2011

அண்ணா நூற்றாண்டு நூலகம் மருத்துவமனையாக மாற்றமா? மறுபரிசீலனை செய்க!

அண்ணா நூற்றாண்டு நூலகம் மருத்துவமனையாக மாற்றமா? மறுபரிசீலனை செய்க! தமிழக அரசுக்கு கி. வீரமணி வேண்டுகோள்


சென்னை கோட்டூர்புரத்தில் தி.மு.க அரசால் உருவாக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப் போவதாகவும், 

இந்த நூலகம் நுங்கம்பாக்கம் டி.பி.அய். கல்வி வளாகத்திற்கு மாற்றப்படும் என்றும் முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் அறிவித்திருப்பது எவ்வகையிலும், எந்தவித அவசியத்தின் பாற்பட்ட முடிவும் அல்ல, கண்டனத்திற்குரியது!

உலக தரம் வாய்ந்த நூலகம் 127கோடி ரூபாய் செலவில் இந்த நூலகம் முதல் அமைச்சராக இருந்த கலைஞர் அவர்களின் ஆட்சியில் கட்டப்பட்டது; 

அறிஞர் அண்ணாவைப் பெருமைப்படுத்தக்கூடியது;  உலகத்தரம் வாய்ந்த-ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகம் என்ற அளவில், ஒரே நேரத்தில் 5000 பேர்கள் அமர்ந்து படிக்கவும்  வசதிகளைக் கொண்ட- நூலகத்திற்கென்று திட்டமிட்டு,

அதற்கேற்ப நவீன கணினி தொழில்நுட்பங்களைக் கையாண்டும், மாற்றுத்திறனாளிகள் கூட வசதியாக அமர்ந்து படிக்கும் வண்ணமும், தனித்தனிப் பகுதிகளைக் கொண்ட நூலகம் என்ற தனிச்சிறப்புடையது இது!

92 லட்சம் நூல்களைக் கொண்ட தனிவசதிகள் கொண்டது.

92 லட்சம் புத்தகங்களைக் கொண்டதோடு பழைய ஓலைச்சுவடிகளைக்கூட ஆய்வுக்காக சிறப்பாகப் பாதுகாத்துப் பயன்படுத்தும் வசதிகளை உள்ளடக்கி, பிரத்தியேகமாக செயல்படுகின்ற நூலகம் இது.

குழந்தைகள், மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ள தனித்தன்மையான நூலகமும் கூட!

கலைஞர் பெயரில் உள்ளது எல்லாம் மாற்றப்பட வேண்டுமா?

உணவகம்,  மிகச்சிறந்த அரங்குகள் (அரங்குகளைக்கூட முன்பே பிரித்து, அதை கல்வித்துறையிலிருந்து எடுத்து, தகவல் விளம்பரத் துறைக்கு ஏற்கெனவே விட்டு விட்டதாக அறிகிறோம்.) ஆகியவைகளை உள்ளடக்கியது.

இதனை மாற்ற வேண்டிய அவசியம் என்னவென்றே புரியவில்லை. கலைஞர் பெயர் உள்ளதெல்லாம் நேற்றைய தி.மு.க அரசு செய்தது என்பதால் மாற்றப்பட வேண்டும் என்பது தவிர, வேறு எந்த உண்மைக்காரணத்தையும்  இதற்குக் கூறமுடியாது.

நூலகத்திற்கென்று கட்டப்பட்டுள்ளதை மருத்துவமனையாக மாற்ற முடியுமா?

குழந்தைகள் நலமருத்துவமனை கட்ட சென்னையில் இடங்களா அரசுக்கு இல்லை? நூலகத்திற்கென வடிவமைக்கப்பட்டவை மருத்துவமனையாக மாற்றுவதற்கு மக்கள் வரிப்பணம்  பலகோடி செலவாகத்தானே செய்யும்? அது எவ்வகையில் ஏற்கக்கூடிய ஒன்று? அண்ணாவை அவமதிக்கும் செயல்!

இது கலைஞர் மீது காழ்ப்பு, எதிர்ப்பு, வெறுப்பு காரணமாக இருந்தாலும், உண்மையாக  அறிஞர் அண்ணாவையே  அவமதிக்கும் முடிவு இது!  அண்ணாவின் பெருமையை சீர்குலைக்கும் முயற்சி இது! உடனே கைவிடப்பட வேண்டும்.

அண்ணா பெயரில் கட்சி நடத்தி, ஆட்சி நடத்துவோர் இப்படி அண்ணாவின் புகழுக்கும், பெருமைக்கும் களங்கத்தை உருவாக்குவதுபோன்று இந்த செயலில் ஈடுபடலாமா?

மறுபரிசீலனை செய்க!

இதனை தமிழக அரசும் முதல்வரும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்; அண்ணா நூலகம் அதே கட்டடத்தில் தொடரும் வண்ணம் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும்.

எதிர்ப்பு வெடித்து கிளம்பும்!

பொதுநல ஆர்வலர்களின் எதிர்ப்பு வெடித்துக் கிளம்புவது உறுதி! புதிய அரசு மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக இதுபோன்றவற்றில் மக்கள் வரிப்பணத்தை வீணாக்குவது தேவையா?

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...